Thursday, April 14, 2016

அம்பேத்கர் பிறந்தநாள்

இன்று அம்பேத்கர் பிறந்தநாள்.
என் அம்மா மார்க்ஸ்-ஐயும் பெரியாரையும் அறிமுகப்படுத்திய அதே காலக்கட்டத்தில்தான் அம்பேத்கரையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் என்னுடைய டீன்ஏஜ் காலத்தில் என்னுடன் விவாதிப்பதற்கும், என் கருத்துக்களுடன் முரண்படுவதற்கும், கருப்புச்சட்டைக்காரர்கள் அல்லது செஞ்சட்டைத் தோழர்கள் மட்டுமே இருந்தார்கள். தமிழகத்தில் அம்பேத்கரிய- தலித்தியச் சிந்தனை வலுவாக வேரூன்றாத காலம்(90கள்) அது. அப்போதுதான் சில செடிகள் முளைவிட்டன. இப்போதும் ஒற்றை மரமாக மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன். அது பெரும் ஆலமரமாக ஆகும் என்றும் நம்புகிறேன். பின் ஒரு காடாக.
கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே நான் அம்பேத்கரைப் பயில்கிறேன். அதற்கான போதாமைகள் என்னிடம் உண்டு. இருந்தாலும் கற்றுக்கொண்டுவிடலாம் என்றே நம்புகிறேன். நான் என் ஆழமான புரிதலுக்காக Annihilation of Caste - ஐ மறுபடி மறுபடி படிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
கடந்த சிலநாட்களாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் - முக்கியமாகத் தனித்தொகுதிகளின் வேட்பாளர்களை - பார்த்துக்கொண்டிருக்கிறேன். உதாரணமாக நேற்றைய தி.மு.கவின் தனித்தொகுதி வேட்பாளர்களில் பெரும்பாலோர் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மேலாண்மை பயின்றவர்கள். வெகு சிலருக்கே கல்வித் தகுதி குறிப்பிடப்படவில்லை. அவர்களில் சிலர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். வெகு சிலரே பட்டம் பெறாதோராக இருக்கலாம்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திய விஷயம் இது. நான் இதைக் கல்வி அளித்த விடுதலையிலிருந்து அதிகாரத்தை நோக்கிய நகர்வு என்றே நினைக்கிறேன்.


அம்பேத்கர் சொன்ன - கற்பி ! ஒன்று சேர் ! புரட்சி செய் ! என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்வோம். இப்போது கற்கிறோம், கற்பிக்கிறோம், ஒன்று சேர்கிறோம், அடுத்து வரும் காலங்களில் புரட்சி செய்யலாம். ஆயுதப்போராட்ட நிலைப்பாடுகள் எப்போதுமே உலகெங்கும் அழித்தொழிக்கப்பட்டே வந்திருக்கின்றன. எனவே நிகழவிருப்பது சமூக, பொருளாதார, அதிகாரப் புரட்சியாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் அரசியல் புரட்சி என்பது படிப்படியாக அதிகாரத்தை அடைவதாகவே இருக்கும். அதற்கான களம் பறந்து கிடக்கிறது. ஆனால் செயல்பாட்டாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இப்போதைய தேவை களச்செயல்பாட்டாளர்கள்.
மார்க்சியத்தை அம்பேத்கர் விமர்சித்தார். அவர் முன்வைத்த அமைப்பு திறந்த பொருளாதார அமைப்புடன் நெருக்கமானது. பொருளாதார விடுதலை மூலம் சாதிய விடுதலையை முன்னெடுக்கும் முயற்சி. பெரியாரும் கூட ஒரு திறந்த பொருளாதார அமைப்பையே ஆதரித்தார். அதற்குக் காரணம் - அவர் ஒரு வெற்றிகரமான வியாபாரி என்பதுதான். அவர் எந்த ஒரு பொருளியல் அறிஞரையும் விட மிகுந்த அறிவு கொண்ட நடைமுறைப் பொருளாதாரவாதியும் கூட. பொருளாதார விடுதலை எப்படிப்பட்ட சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தரும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். பெரியார், மார்க்சியத்திலிருந்து ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் வழிகளையும், திறந்த பொருளாதார அமைப்பின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளையும் இணைத்து ஒரு புதுப்பாதையை உருவாக்கினார்.
இன்றைய தி.மு.க அல்லது வி.சி.க கொண்டிருக்கும் பொருளாதாரப் பார்வை அங்கே இருந்துதான் பெறப்பட்டது. ஒருபுறம் பொது விநியோகம், விவசாய சலுகைகள், கல்வி மற்றும் வேலையில் இடப்பங்கீடு இருக்கும் அதே நேரத்தில் மென்பொருள் நிறுவனங்கள், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து வேலைவாய்ப்பைப் பெருக்குவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் - வாய்ப்புகளை மறுக்காதே.
அம்பேத்கர் தன் கல்வியின் வழியேயும், மேற்கத்திய –முக்கியமாக அமெரிக்க – அனுபவங்கள் மூலமும் பெற்ற அறிவின் வழியே அதே இடத்தை நோக்கி வந்தார். பௌத்த பொருளாதாரக் கூறுகளை-மரபார்ந்த இந்தியப் பொருளாதாரக் கூறுகளுடன் கலந்து, தான் கற்ற மேற்கத்திய திறந்த பொருளாதாரக் கொள்கைகளையும் அதனுடன் இணைத்துப் புதிய பொருளாதாரக் கோட்பாடுகளை முன் வைத்தார். அவர் ஒரு கல்விப்புலம் சார்ந்த ஆராய்ச்சியாளர் என்பதால் இரு கூறுகளை இணைப்பதிலும், அதன் மூலம் புதிய ஒரு தத்துவத்தை முன்வைப்பதிலும் சிரமங்களைச் சந்திக்கவில்லை. ஆனால் தத்துவங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலமும், அவர் கருத்துகளை உள்வாங்கும் அளவுக்குக் கல்வியறிவு கொண்ட மக்கள் திரளும் அவருக்குக் கிடைக்கவில்லை. பெரியாரின் நீண்ட ஆயுளும், காமராஜர், கருணாநிதி போன்ற அரசதிகாரச் செயல்பாட்டாளர்களும் அம்பேத்கருக்கு அமைந்திருந்தால் தலித்திய விடுதலை இன்னும் விரைவில் நிகழ்ந்திருக்கும். அப்போது, மார்க்சியத்தின் பொருளாதாரக் கூறுகளைத் தாண்டியும் சமூக விடுதலை என்ற பகுதியை அவர் கவனத்தில் கொள்ள வேண்டியதிருந்திருக்கும். “நடந்திருந்தால்” என்ற வார்த்தைக்கு வரலாற்றில் எந்த மரியாதையும் இல்லை. அம்பேத்கர் கனவுகண்ட சூழலுக்கு நெருக்கமாக வந்திருக்கிறோம். ஆனால், ஒடுக்கப்பட்டோர் இன்னும் முழுமையாகக் விடுதலை அடையவில்லை. அதை நோக்கிய பயணத்தில், நாம் -பெரியார் தனக்கென நிருபிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்காதது, அம்பேத்கர் - கம்யுனிசத்தோடு சேர்த்து மார்க்சியத்தின் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் கோட்பாடுகளையும் ஒதுக்கியது போன்று - அவர்கள் தவறவிட்ட இடங்களைக் கவனிப்போம். கற்றுக்கொள்வோம், கற்பிப்போம், சரி செய்வோம், முன்னேறுவோம்.
நமக்கு முன், மார்க்சியம் சமூக விடுதலையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. திறந்த பொருளாதாரம் சமூக விடுதலையை விடத் தனி நபர் விடுதலையை முன்வைக்கிறது. நமக்குத் தேவை சமூக-தனிநபர் விடுதலைதான். இது அல்லது அது என்ற இருமையைத் தவிர்த்து அவரவருக்கான மானுட, சமூகத் தேவைகளைக் கவனிப்போம். எது சரி என்பதைவிட, எது தேவை என்பதையே ஓர் ஒடுக்கப்பட்ட சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறிய பின், சரி என்ற நிலைக்கு எதிர்காலத்தில் நகரலாம்.


இந்தப் படங்களைப் பாருங்கள் நண்பர்களே.
அம்பேத்கர் – மம்முட்டி நடித்த படம் -https://www.youtube.com/watch?v=yv6aU-_9xQ0
அம்பேத்கர் பற்றிய டாகுமெண்டரி -https://www.youtube.com/watch?v=uRbmGJrkbYs

Saturday, April 9, 2016

குடியம் பயணம் - தொல்குடிகள் இருந்த குகைகள்


இந்த வாரத்துக்குனு(ஏப்ரல் முதல் வாரம் 2016) ஏற்கனவே வச்சுருந்த பிளான் சொதப்பிருச்சு. செல்வபிரபு திடீர்னு குடியம் போவோம்னு சொன்னப்போ சரின்னு கெளம்பியாச்சு. வழக்கம் போல குருநாதர் செந்தில்வேல் ஓகே சொல்லிட்டார். கூடவே சுரேஷ்.


காலைல இளநியோட ஆரம்பிச்ச நாள் – வரும்போது இளநியோட முடிஞ்சது. சென்னைல இருந்து திருவள்ளூர், அங்கே இருந்து பூண்டி, அப்புறம் குடியம். போற வழில குடியம் எங்கே இருக்குனு கேட்டா யாருக்கும் தெரியல. பழைய கால குகை இருக்காமே அப்படின்னு கேட்டோம். ஓ.. கூடியமா அப்படின்னு கேட்டு வழி சொன்னாங்க. குடியம் கிராமவிலக்கிலிருந்து உள்ளே செல்ல மண் பாதை. இதுக்கு மேல் பைக் போகாது என்ற நிலைமைல நிறுத்திவிட்டு, நடக்க ஆரம்பித்தோம். அதைத் தாண்டிப் போகலாம்தான், ஆனால் பைக் காணமல் போக வாய்ப்பிருக்கு.
இந்த இடத்தில் ஒரு விஷயம், அந்த பகுதியில் சுத்தமா சிக்னல் இல்ல. அதுனால மேப்பும் வேலை செய்யாது.. குகை எங்க இருக்கு, எவ்வளவு தூரம் எதுவும் தெரியாது. என்ன ஆனா நமக்கு என்னனு நடக்க ஆரம்பிச்சோம். போற வழில ஒரு பள்ளம் தோண்டி வச்சிருந்தாய்ங்க. அதைத் தாண்டினா ஒரு வாட்ச் டவர். அதுல வலது பக்கம் திரும்பினோம். கொஞ்ச தூரம் போன உடனே, மலை இடது பக்கமா இருந்தது. அதுனால இடது பக்கம் திரும்பி நடக்க ஆரம்பிச்சோம். ஒத்தையடிப் பாதை. அது போய் முட்டிட்டா திரும்பி வந்து வேற பாதை. இப்படியே போயிட்டு இருந்தோம்.
அப்போ வழவழப்பான கற்கள் பரவிக் கெடக்கிறதப் பார்த்தோம். எடுறா கேமராவனு நிறைய போட்டோ எடுத்தோம். கருப்பா, வெள்ளையா, மஞ்சளா, வேற வேற அளவுல கற்கள் ஒவ்வொன்னும் அழகு. இந்தக் கற்களெல்லாம் குடியங்கிற இந்த ஊரைச் சுத்திக் கெடக்கு. நானும் செல்வாவும் கொஞ்சம் கற்களை எடுத்துக்கிட்டோம்.
1867ல ராபர்ட் ப்ருஷ்னு ஒரு வெள்ளைகார நிலவியலாளர் இந்தக் குகைகள கண்டு பிடிச்சு அறிவிச்சாராம். சில லட்சம் வருடங்களுக்கு முன்னாடி மனுஷன் இந்த மலைல வாழ்ந்திருக்கான். மனிதன் உணவுக்காக விலங்குக்களை வேட்டையாடத் தேவையான கற்கருவிகள் செய்ய ஏத்தது மாதிரி நிறையக் கற்கள் இங்கே இருந்ததுனால மனுஷன் இங்க தங்கி இருந்ததா சொல்றாங்க. அவங்க வாழ்ந்த குகையத்தான் நாங்க பார்க்கப் போயிருந்தோம்.


பொதுவா காட்டுக்குள்ள போகும்போது இடது பக்கமா போற பாதையத் தேர்ந்தெடுத்துப் போயிட்டே இருந்தா, முடிவுல ஏதாவது இடத்துக்கோ (?????) அல்லது கிளம்பின இடத்துக்கோ வந்துடலாம். அதுனால நாங்க போய்க்கிட்டே இருந்தோம். அப்போ ஒரு வண்டிப்பாதைல வந்து சேர்ந்தோம். அதுல நிறைய காலடித் தடம் இருந்தது. சரி நாம சரியாதான் போயிட்டு இருக்கோம்னு முடிவு பண்ணுனோம்.
கொஞ்ச தூரம் போன பின்னாடி, மூணு பேரு சரக்கைப் போட்டுட்டு இருந்தாங்க. இதே பாதைல 1.5 கி.மீ போங்க குகை வரும்னு சொன்னாங்க. போனோம். வந்தது.
அகலமான குகை. குளிர்ச்சியாக இருந்தது. மொத்த மலையுமே கடற்பாறைகளைப் போன்றே இருந்தது. நிறைய தேன் கூடுகள். இது சில கோடி வருசத்துக்கு முன்னாடி கடலாக இருந்து, நிலமாக ஆனது என்று செல்வா சொன்னார். அருமையான கற்கள். உருளைக் கற்கள் ஆற்றின் நீரோட்டத்தினால் வழவழப்பாக ஆவதாக நினைத்திருந்தேன். இயற்கையிலேயே அப்படி இருந்து எரிமலைக் குழம்பினால் வெளியே வந்து அப்படியே உறைந்து நிற்கும் கற்களைக் காண முடிந்தது.


இந்திய நிலப்பகுதிக்கு ஐந்தாயிரம் வருடம் என்பதெல்லாம் குறுகிய காலமே. ஆனால் இரண்டு லட்சம் வருடம் என்பது நீண்ட காலம். குடி-யம் என்ற வார்த்தையே குடி – கூடம் – கூட்டம் – மக்கள் திரள் என்ற பொருளில்தான் இருக்கிறது. குடியமர்வு என்ற வார்த்தையில் இருக்கும் குடியம் அதுதான் என்று நினைக்கிறேன். மக்கள் குடியமர்ந்த இடம். தமிழ் மொழி – என் அருமைத் தமிழ் மொழி. தொல்நிலம், தொல்மாந்தர் வாழ்ந்த இந்த இடத்தை ஒவ்வொரு மனிதரும் பார்க்கவேண்டும். முக்கியமா, இப்பகுதியில் ஏதேனும் தனிமம், கனிமம் கிடைப்பதாகத் தெரியும் முன்னாடிப் பார்த்துவிட வேண்டும். இல்லைனா, மதுரையின் சமணப்படுகைகள் காணாமப் போனது மாதிரி இதுவும் காணாமப் போயிடும். அப்புறம் நாம நினைச்சாலும் பார்க்க முடியாது.தனியாகப் பயணம் போக ஏற்ற பகுதி அல்ல. குறைந்தது நான்குபேராகச் செல்வது நல்லது. பெண்கள் போவதாக இருந்தால் மிகக்கவனம் தேவை. தண்ணீர் நிறைய எடுத்துட்டுப் போங்க. பிளாஸ்டிக் பைகளை அல்லது பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள். கொண்டு சென்றால் திரும்பி எடுத்து வந்துவிடுங்கள். உள்ளே நுழையும் போதே வாட்ச் டவர் இருக்கும். அங்கேயே இடதுபுறம் திரும்பினால் நல்ல பாதையில் சீக்கிரம் குகையை அடையலாம். வலது புறம் திரும்பினால் கற்கள் நிரம்பிய இடங்களைப் பார்க்கலாம். நிறையப் படங்கள் எடுக்கலாம். நினைவிற்காக கொஞ்சம் கற்களை எடுத்து வரலாம். ஆனால் இந்தப் பாதை சாகச விரும்பிகளுக்கானது.

Sunday, April 3, 2016

ப்ரசெல்ஸ், பாரிஸ் நினைவுகள் பகுதி இரண்டு

                அடுத்த ஐந்து நாட்களும் ஆபீஸ். வெள்ளி ராத்திரி நேரா கர்ட் து நார்ட் ஸ்டேஷன் போயாச்சு. அங்கே இருந்து உக்கார்ந்துகிட்டே பயணம் – நம்ம ஊர் முதல் வகுப்பு ஏ.சி சிட்டிங் மாதிரி. ஒரு ரூம் மாதிரி இடத்துல மொத்தம் ஆறு சீட் இருக்கும். எனக்கு ஜன்னல் சீட்டைக் கேட்டு வாங்கிருந்தேன். அதுதான் வெளிலே வேடிக்கை பார்க்க வசதி. இன்னொன்னு சைடுல தலைய சாய்ச்சுக்கிட்டு படுத்துக்கிட்டே போயிடலாம். ஆறு பேர்ல – எனக்கு எதிரே இருந்த ஒரு சீட் காலி. மிச்சம் நாலு சீட்லயும் காலேஜ் பொண்ணுங்க. யுரோ ரயில் - குரூப் பாஸ் வச்சிருந்தாங்க. ஒரே வகுப்பில் படிக்கிற பொண்ணுங்க. என்கிட்ட சகஜமா பேசிட்டு வந்தாங்க.
நான் அவங்க படிப்பைப் பத்தியும்பொதுவான விஷயங்களைப் பத்தியும் கேட்டுட்டுத் தூங்கிட்டேன். நடுராத்திரில முழிப்பு வந்துருச்சு. பார்த்தாஎன்னோட மடில தலை வச்சு ஒரு பொண்ணு தூங்கிட்டு இருக்கு. இன்னொரு பொண்ணு என்னோட கால்ல தலைய வச்சபடித் தரைலயும்எதிர்த்த மாதிரி இருந்த சீட்ல ஒரு பொண்ணு என்னை மாதிரி தூங்கிட்டு இருக்குஅதோட மடில இன்னொரு பொண்ணு தலை வச்சுத் தூங்கிட்டு இருக்கு. நான் எழுந்தா எல்லாரும் எழுந்திருக்க வேண்டியதுதான். கண்ணை மூடுனேன் – தூங்கினேன்.
காலைல ஜெர்மனி அன்புடன் வரவேற்றது. நேர அக்கா வீடுகுட்டிப் பசங்க கூட அடுத்த ரெண்டு நாள் ஒரே ஆட்டம். இடைல வீட்டுல செஞ்ச மான்கறிஎலும்பு சூப். சோறு+ரசம்+மான்கறி வறுவல். ஜெர்மனில மான்கறி ரெண்டு விதமா கிடைக்கும் – ஒன்னு டின்ல வருவது. இன்னொன்னு பச்சைக்கறி. பச்சைக்கறில ரெண்டு வகை இருக்கு. ஒன்னு – வளர்த்து வெட்டுனது. இன்னொன்னு – காட்ல திரியுறதச் சுட்டு அதைக் கறியாக்குறது. இந்த ரெண்டாவது ஐட்டத்தோட ரெண்டாவது ஐட்டம் இருக்குல்லஅதுதான் நான் விரும்பிச் சாப்பிடுறது.
அருமையான சூழல்லரெண்டு நாளும் மான்கறி சாப்பாடு. ஏன் இந்தியால மான்கறியத் தடை பண்ணி வச்சுருக்காங்கன்னு தெரியணும்னா அத நீங்க சாப்பிட்டுப் பார்த்திருக்கணும். அங்கே இருந்து கிளம்பும் போது இந்தியாவுக்குக் கொண்டுபோக மான்கறி டின்பன்னிக்கறி டின் வாங்கிக்கிட்டேன். ஏன்னாபிரான்ஸ்லயும் மான்கறி கிடைக்கிறது அபூர்வம் – அதுவும் காட்டு மான்கறி கிடைக்கிறது வாய்ப்பேயில்லை. ஆனா பாரிஸ்ல பச்சையான குதிரைக்கறி ரெண்டு இடத்தில கிடைக்கும். வாங்கி சமைக்கலாம். அதுவும் நல்லா இருக்கும். டேஸ்ட் என்னவோ மாட்டுக்கறி மாதிரித்தான் இருக்கும்.
ஞாயிற்றுகிழமை ராத்திரி 10 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்தேன். என்னோட ட்ரைன் நம்பர்ஆம்ஸ்டர்டாம் ட்ரைன் நம்பர் ரெண்டும் ஒரே நேரம்ஒரே பிளாட்பார்ம்ல வரும்னு ஸ்க்ரால் ஓட்டிட்டு இருந்துச்சு. நான் அது எப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். வண்டி வந்து நின்னது. யூரோ ரயில்ல TTR மாதிரி சில பேர் இருப்பாங்க. ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி திருப்பி உள்ள ஏறி வருவாங்க. அவர்கிட்டப் போய் பாரிஸ் ட்ரைன் இதுவான்னு கேட்டேன். முதல் பெட்டி ஆம்ஸ்டர்டாம்அடுத்த ஆறு பாரிஸ் போகும்னு சொன்னாப்ள. என்னோட பொட்டிய தூக்கிட்டு பின்னாடிப் பெட்டிக்கு ஓடுனேன். சரியா உள்ள போறேன் கதவு மூடிருச்சு. என்னோட இடத்துக்குப் போய் படுத்துட்டேன்.
காலைல மணிக்கு எழுந்தேன். TTR வந்தார்பத்து வருசத்துக்கு ஒரு தடவை நடக்குற மெயின்டனன்ஸ் வேலையால பாரிஸ் போக 10 மணியாகும்னு சொன்னாப்ள. அய்யயோ நான் பத்துமணிக்கு ஆபிஸ்ல இருக்கணுமே அப்படின்னேன். மன்னிச்சுக்கோங்க அப்பிடின்னு பலமுறை சொன்னார். அவர் ரூம்ல இருந்து கொஞ்சம் பிஸ்கட்சாக்லேட் குடுத்தாரு. தின்னுட்டு, 200 யூரோ மிச்சம் பண்றேன்னு என்னைய இந்தச் சிக்கல்ல மாட்டிவிட்டானே அந்த டிக்கெட் விக்கிற தம்பி அவனத் திட்டிட்டுமறுபடி தூங்கிட்டேன். வேறென்ன செய்யுறது.

பத்துமணிக்கு கர்ட் டு நார்ட். மெத்ரோவை புடிச்சு சேட்டியோன் மன்ரோக் போய்பஸ் புடிச்சு ரூம் போய் அப்புறம் ஆபிஸ் போனப்போ மணி 11. நண்பர் எஸ்நான் காணாமப் போயிட்டேன்னு கதிகலங்கிப் போய்ட்டாப்ள. 

அப்புறம் வேலைதான். தினசரி சாயங்காலம் பாரிஸச் சுத்துறது. மறுபடி வேலை.
நாங்க இந்தியா கிளம்புற நாள் வந்தது. நான்நண்பர் எஸ் அப்புறம் நண்பர் எம் மூணுபேரும் பாரிஸ்ல இருந்து ப்ரசெல்ஸ்அங்கேயிருந்து சென்னை வரணும். சனிக்கிழமைக் காலைல சாப்பிட்டு கிளம்பினோம். எடை செக் பண்ற இடத்துல ஆரம்பிச்சது சனி. என்னோடது ஆறு கிலோ அதிகம். போதுவா நான் சும்மா போயிட்டு சும்மா வாரதுதான் பழக்கம். ஆனால்ஏதோ ஒரு ஞாபகத்துல 5+3 லிட்டர் போர்டோ ஒயின். கிலோ பாதாம், 3 கிலோ சாக்லேட்மான் பன்றிக்கறினு வாங்கிக் குமிச்சுட்டேன். இது போக கிப்டா வந்த சாக்லேட் வேற பணம் 600 யூரோ கட்டணும்னு சொன்னதா ஞாபகம். இப்போ என்ன பண்றது?
மான்பன்றிக்கறிஒயின்கிப்ட் சாக்லேட் தவிர எதைவேனா இழக்கலாம். ஏன்னா இதெல்லாத்தையும் கொண்டு போயே ஆக ஒரு காரணம் இருந்தது. சாக்லேட் பாதி, 3 லிட்டர் ஒயின், 1 கிலோ பாதாம் எல்லாத்தையும் தூக்கிக் குப்பைக்கூடைல போட்டேன். இதையெல்லாம் வெளில எடுக்கும் போது என்னோட புத்தம் புது ஷூவ எடுத்து ஓரமா வச்சேன். நான் பொருளெல்லாம் எடுத்துக் குப்பைல போட்ட அடுத்த நிமிஷம் ஒரு ஆப்பிரிக்கர் எல்லாத்தையும் ஒரு தள்ளுவண்டில எடுத்து வச்சுக்கிட்டுப் போயிட்டே இருந்தாப்ள. திரும்பிப் பார்க்குறேன் ஷூவக் காணோம். எவனோ ஆட்டையப் போட்டுட்டான். ஆஹா அஹஆகஹா. போகட்டும்னு எடையைப் போட்டுபொட்டிய உள்ளார தள்ளிட்டு ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் கௌண்டர் போனா நிக்கிறாய்ங்க ஒரு பெரிய க்யு.
மணி ஏழரை. எங்க ப்ளைட் 8.30க்கு. அதைப் பிடிச்சு வந்து ப்ரசெல்ஸ் ஏர்போர்ட்ல ஜெட் ஏர்வேஸ 10.45 க்குப் பிடிக்கணும். நிக்கிறவங்கள்ள பெரும்பாலும் கருப்பர்கள். எனக்கு ஏற்கனவே இதுபோல ஒரு அனுபவம் இருக்கு. ஆனா எஸ் மற்றும் எம்-க்குக் கிடையாது. என்னான்னா கருப்பர்கள் செக்யூரிட்டி முடிக்க வழக்கமா ஆகிறத விட மூணு மடங்கு நேரம் ஆகும். அவங்களோட உருவம் நம்மளைப்போல மடங்குஅதுனால உடை மூணு மடங்கு இருக்கும். ஒவ்வொருத்தரும் கிலோ இரும்பு நகையப் போட்ருப்பாய்ங்கஅது மெட்டல் டிடெக்டர்ல கத்திகிட்டே இருக்கும்ஒவ்வொரு கத்துக்கும் உடம்போட எதோ ஒரு பகுதில இருந்து ஒவ்வொரு நகையா கழட்டுவாய்ங்கஒவ்வொருத்தரும் கைல எவ்வளவு எடை எடுத்துட்டுப் போகலாமோ அதுமாதிரி ரெண்டுமடங்கு கொண்டுட்டு வருவாய்ங்கஅதைக் கீழ போட சொன்னாசண்டைதான் போடுவாய்ங்ககடைசியா ஒன்னு – ஒவ்வொரு அம்மாவும் கொறஞ்சது ரெண்டு பிள்ளையாவது வச்சுருக்கும் – அந்தப் பிள்ளைகள் மேல உயிரையே வச்சுருப்பாய்ங்க. ஆனா அந்தப் பிள்ளைங்க சுத்திலும் இருக்க எல்லாரையும் உயிர வாங்கும். வெள்ளைக்காரப் பயவுள்ளைக மண்ணு மாதிரி இருக்கும்.
அடுத்து என்ன செய்யுறது - வரிசைல நிக்க வேண்டியதுதான். நாங்க போக வேண்டிய ப்ளைட் எங்க கண்ணு முன்னாடிப் பறந்து போயுடுச்சு. அதோ போகுதுல்ல அதுதான் நாம போகவேண்டிய ப்ளைட்னு சொன்னேன். அவ்வளவுதான். நம்ம மக்களோட புலம்பல் ஆரம்பிச்சது. ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் பாரிஸ்ல இருந்து தொடர்ந்து டவுன்பஸ் மாதிரி வண்டி விட்டுக்கிட்டே இருப்பாய்ங்க. அடுத்த வண்டில ஏத்தி ப்ரசெல்ஸ்ல இறக்குனாய்ங்க. மணி 11.15 AM. பியர்- ல இருந்து பியர்-வந்தப்போ மணி 11.30 AM. நேர ஜெட் ஏர்வேஸ் கவுன்ட்டர் போனோம், 10.45 AMக்கே வண்டி போயிடுச்சு. நீங்க எங்க பேசெஞ்ஜர் இல்ல தம்பிகளாபோயி ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபிசரப் பாருங்கன்னாங்க.
அங்கிருத்து ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபிஸ். ஒரே ஒரு பொண்ணு சிவனேன்னு உட்கார்ந்து இருந்தது. இது எங்களோட தப்பு இல்லநீங்க சரியான நேரத்துக்கு பாரிஸ்ல எங்கள ஏத்திஇங்க கொண்டு வரல. அதுனால வேற ஏற்பாடு பண்ணும்மா அப்படின்னேன். அந்தப் புள்ளைக்குக் கொஞ்சோண்டு இங்கிலீஷ்தான் தெரியும் போல. தந்தி அடிச்சுக்கிட்டு இருந்துச்சு. சரின்னு சொல்லி நாளைக்குத்தான் உங்களை அனுப்ப முடியும். லண்டன் போயிட்டு அங்கேருந்து சென்னை போற மாதிரி ஏற்பாடு பண்றேன்னு என்கிட்ட சொன்னுச்சு. இங்கபாரு ஆத்தாநாங்க காமன்வெல்த் சிட்டிசைங்கஎன்கிட்ட செங்கன்தான் இருக்குபிரிட்டிஷ் விசாவோ, USA விசாவோ கிடையாது. அதுனால எங்கள நீ அங்க அனுப்பி ட்ரான்சிட் பண்ணுறது சாத்தியம் இல்லைன்னு சொன்னேன். அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். மூடிட்டு சொன்னத செய்யினு சொல்லுச்சு. அந்த புள்ளைக்கு என்கூட வந்த பயலுக சப்போர்ட். ஏங்க அவிங்களே போக சொல்றாய்ங்க நீங்க என் வில்லங்கம் பேசுறீங்கசீக்கிரம் சென்னை போகணும்மாமனார்மாமியார்பொண்டாட்டியெல்லாம் ஏர்போர்ட் வந்துருவாங்கஎன்ன செய்யிறது? blablabla.....
ஆள விடுங்கடா சாமிகளா. எனக்கு அம்மாஅப்பாவ விட்டா ஒருத்தரும் இல்லைஆனா ஒரு நாளைக்கு ரெண்டு தடவபோன்ல நான் பேசலைன்னா எங்கம்மா கெளம்பி இங்கேயே வந்துருவாங்க. அதுனால நான் எப்போ போனாலும் ஒண்ணுதான்னு சொல்லிட்டேன். ஏர்போர்ட்-உள்ளேயே இருக்குற ஷெரட்டன் ஹோட்டல்ல ஆளுக்கொரு ரூம் குடுத்தாங்க. மறுபடி இமிக்ரேஷன் டு ஐரோப்பா – அந்த ஆபிசர் ஏன் வெளில போறீங்கனு கேட்டார். நாங்க எங்க கதைய சொன்ன உடனேநான் இந்த ஏர்போர்ட்ல 20 வருசமா வேலை பார்க்குறேன்இதுவரை ஷெரட்டன் ஹோட்டல்ல தங்கினது கிடையாது. வாழ்த்துகள் அப்படின்னு சொன்னாப்ள. மிச்ச ஏர்போர்ட் ஆபீசர்களை ஒப்பிட்டாப்ரசெல்ஸ் ஆபீசர்கள் அருமையான நபர்கள் – ரிலாக்ஸா இருப்பாங்க. (அங்கே எதுக்குக் குண்டு வச்சானுக?  )
ஷெரட்டன் – அருமையான ஹோட்டல். அன்னைக்கு நிலைமைல ரூம் இல்லாததால 650 யூரோ ரூம் ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியா. சாப்பாடு வேற தனி. எல்லாம் ப்ரீ. நான் அப்படியே ஒரு ரவுண்டு ப்ரசெல்ஸ் போகலாம்னு சொன்னேன். எஸ்எம்மும் என்னைப் பார்த்த பார்வைல- வேணாம்னு முடிவு பண்ணினேன். ஏர்போர்ட் முழுக்க சுத்துனேன். அப்புறம் ராத்திரி ஒரு முறை ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபீஸ் போய் உறுதி பண்ணினேன். காலைல எட்டு மணிக்கு நண்பர் எம் ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் மூலம் லண்டன்ஒன்பது மணிக்கு நானும்நண்பர் எஸ்சும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மூலம் லண்டன். அப்படித்தான் அவங்க ரிசெர்வ் பண்ணி வச்சு இருந்தாங்க.
காலைல நண்பர் எம் முதல்ல கிளம்பினார். டிக்கெட் வாங்கினார்உள்ளே போனார்காணாமலானார். அடுத்த அரை மணியில்நாங்கள் டிக்கெட் வாங்கினோம்பிரிட்டிஷ் ஏர்வேஸ் கவுன்ட்டர் போனோம்பாஸ்போர்ட்-விசா செக் பண்ணினார்கள்பொடனியில் அடித்து விரட்டினார்கள். நான் நேற்றுச் சொன்ன அதே காரணம். கலங்கிய கண்களுடன்பாவமன்னிப்பு சிவாஜி மாதிரி நண்பர் எஸ் ஒரு நடை நடந்து என்னுடன் ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் கவுன்ட்டர் வந்தார். ஊருக்குத் திரும்பிப் போகும் வாய்ப்பேயில்லைனு வேற என்கிட்டச் சொன்னார். கவலைப்படாதீங்க நம்மள மாதிரி ஆளையெல்லாம் இங்க வச்சுக்க மாட்டாய்ங்க - எப்படியும் வெரட்டி அடிசுருவாய்ங்க. கொஞ்சம் பொறுங்கனு சொன்னேன்.
நேரே பிசினெஸ் கிளாஸ் கவுன்ட்டர் போனேன் – அங்கே ஒரு பய நிற்கமாட்டான். என்னுடைய ஒட்டு மொத்தக் கோபத்தையும் காட்டினேன். நேற்றே இப்படித்தான் நடக்கும் என்று நான் சொன்னதையும்அதை மீறி நீங்க வெட்டி வேலை செஞ்சு வச்சிங்க. இருந்தாலும் எங்களைச் சென்னை அனுப்ப இன்னும் ஒரு வாய்ப்புத் தரேன்அதுலயும் சொதப்பினா கடுமையான சட்ட நடவடிக்கையை எடுப்பேன்னு சொன்னேன். அடுத்த அரைமணி நேரத்துல அபுதாபி போறதுக்கு என் கையில இரண்டு டிக்கெட் கொடுத்தாய்ங்க. உள்ள போன நண்பர் எம்க்கு ஏதாவது ஆச்சுன்னாலும் நீங்க சட்டப்படி எங்களைச் சந்திக்க வேண்டியது வரும்னு சொன்னேன். அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. அவர் இந்நேரம் லண்டன் போயிட்டு இருப்பார்னு சொன்னாய்ங்க. எங்க ப்ளைட் இன்னும் 40 நிமிசத்துல கெளம்பும்சீக்கிரம் போங்கனு சொன்னாய்ங்க.
எங்க கைல எதுவும் பொருள் இல்லஅதுனால எல்லாம் உடனே கிளியர் பண்ணி உள்ள போனாநாங்க போற வழில நண்பர் எம் - உள்ளார இருக்க ப்ரசெல்ஸ் கவுன்ட்டர்ல கதறிக்கிட்டு இருந்தாப்ள. ப்ளைட் உள்ளார இருந்து பொடனில அடிச்சு எறக்கி இருக்காய்ங்க. ஆப்பிரிக்கா ட்ரான்சிட் வராத மாதிரி ப்ளைட்ல கெளம்பி வாயான்னு சொல்லிட்டு நாங்க ப்ளைட் ஏறுனோம். அபுதாபி வந்தோம். அங்கே ஒரு பிரியாணி சாப்பிட்டதுக்கு அப்புறம் நம்ம ஊருக்கு வந்துட்டோம்னு தோணுச்சு.
அங்கே இருந்து சென்னை வந்தோம். நண்பர் எம் ப்ரசெல்ஸ்ல இருந்து நாலுமணிநேரம் கழிச்சுக் கிளம்பிம்யுனிக்அங்கே மணிநேரம் ட்ரான்சிட். அங்கே இருந்து டெல்லி. டெல்லி ஏர்போர்ட்ல பொட்டிய அவங்களே சென்னை அனுப்புவாய்ங்கனு நெனைச்சு டொமஸ்டிக் வந்துஅவிங்ககிட்டக் கேட்டுட்டுஅவிங்க நீதான்யா எடுத்துக்கிட்டு வரணுனு சொல்லிவண்டியப் புடிச்சு மறுபடி திரும்பப் போய் எடுத்துக்கிட்டு வந்து அதுனால ப்ளைட்ட விட்டுஅடுத்த ப்ளைட்ட புடிச்சு சென்னை வரும் போது ரெண்டு நாள் ஆயிடுச்சு.
ஒரு பயணத்துல எல்லாமே தப்பா நடக்க வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சுக்க இன்னொரு விஷயமும் நடந்தது.
இதெல்லாம் நடந்து ரெண்டு நாள்லஎன்னோட போட்டோ எல்லாத்தையும் ஸ்டோர் பண்ணி வச்சுருந்த என்னோட கம்ப்யூட்டர்பேக்கப் எடுத்து வச்சுருந்த கார்த்தியோட கம்ப்யூட்டர் எல்லாம் ஒரே நேரத்துல பார்மேட் ஆகி என்கிட்ட ஒரு போட்டோ கூட இல்லாம போச்சு. அதுனால என்னவேறெந்தப் பயணத்தை விடவும் இதோட நினைவு மட்டும் அப்படியே இருக்குவேறென்ன வேணும்?

ப்ரசெல்ஸ், பாரிஸ் - நினைவுகள் பகுதி ஒன்று


        என்னோட நிறுவனத்துல ஒருமுறை பாரிஸ் (கார்னர் இல்ல) போகச் சொன்னாங்க. இந்த விஷயம் எனக்கு சொல்லப்பட்டது எப்போன்னா - சாயங்காலம் 3.30க்கு. சென்னைக்கு மிக அருகில் இருக்கிற மகிந்திரா சிட்டில வேலை. என்னோட ரூம் சூளைமேடுல. இடைப்பட்ட தூரம் – 45 கி.மீ. ப்ளைட் டிக்கெட் மற்றும் எக்ஸ்சேன்ஜ் வர கொஞ்சம் நேரமாகும் அதை நேரா உங்க ரூம்லேயே குடுக்க சொல்றோம், கெளம்புங்க அப்படின்னு ட்ராவல் டெஸ்க் மக்கள் சொன்னப்போ மணி சாயங்காலம் 6. அங்கே இருந்து கிளம்பி ரூமுக்கு வந்தப்போ மணி 8.30. சாப்பிட்டுட்டு, ரிலையன்ஸ் பிரெஷ்ல 3 கிலோ அரிசியும், கொஞ்சம் தொக்கும் வாங்கிட்டு வரும்போது மணி 9.30. 10 மணிவரை ஒரு சத்தத்தையும் காணோம். நானும் இருக்குற நாலு சட்டை, பேன்டையும் எடுத்து என்னோட பெட்டில வச்சுட்டு வழிமேல விழி வைச்சுக் காத்துக்கிட்டு இருந்தேன். தம்பி சதீஸ் வந்தான், என்னண்ணே மறுபடி பாரிஸ் கெளம்பியாச்சா அப்பிடின்னு நக்கலா சொன்னான். அப்போவே நான் சுதாரிச்சு இருக்கணும்.
மணி 10.15 – ஒரு போன்கால். சார் நான் எழும்பூர் மணி எக்ஸ்சேன்ஜ் ரெப் பேசுறேன், எங்க சார் வரணும் அப்பிடின்னாப்ள. வழி சொல்லிட்டு விட்டத்த பார்த்துகிட்டு இருந்தேன். என்னோட வர்ர இன்னும் ரெண்டு துரோகிகளோட டிக்கெட், காசு எல்லாம் நான்தான் வாங்கிட்டு வரணும்.
இதுக்கு இடைல அவங்க வேற கால் பண்ணி ஜி நாங்க ரெடி ஆயிட்டோம்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான் .
வேளச்சேரில இருந்து கேளம்பிட்டோம்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான்.
போர்டிங் அட் பாஸ்ட் ட்ராக்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான்.
வி ஆர் மூவிங்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான்.
ஆன் தி வே டு ஏர்போர்ட்டு.
டே உங்களுக்கு ஆன்சைட்டே இருக்குமான்னு தெரியல, ஏண்டா இவ்வளவு அவசரம்? வீட்டுக்குத் திரும்பி போங்கடா அப்பிடின்னேன்.
ஜி, பொண்டாட்டி, மாமனார், மாமியார், மச்சினிச்சி, மச்சான் சகிதமா சைலோ கார்ல போறோம் ஜி. இப்பிடில்லாம் சொல்லாதீங்க அப்படின்னு கதறுனாப்ள. போங்கடா போக்கத்தவனுகளா.
மணி பதினொன்னு இருபது. ஒரு வழியா டிக்கெட், ட்ராவல் கார்ட் கெடைச்சுது. சென்னையிலிருந்து ப்ருசெல்ஸ் ஜெட் ஏர்வேஸ் கிளம்பும் நேரம் அதிகாலை 1.50 அப்படின்னு போட்டு இருந்துச்சு.
கால் டாக்ஸி புடிச்சு ஏர்போர்ட் போனேன் மணி நள்ளிரவு 12.15. அந்த ரெண்டு ஆடுகளும், ஆடுகளின் சொந்தங்களும் என்னைய வெறிகொண்டு பார்த்துக்கிட்டு இருந்தாய்ங்க. தம்பி உங்களுக்கு பொறுப்பே கிடையாதா? சரியான நேரத்துக்கு கொண்டாந்து குடுத்துட்டு நீங்க லேட்டா வர வேண்டியதுதானே அப்படின்னு ஒரு ஆடோட மாமனார் கேட்டாரு.
எடை போடுற வரிசைல நின்னு எங்க முறை வந்தப்போ மணி 12.40. ஜெட் ஏர்வேஸ் கவுன்ட்டர் போனா, அனுமதிக்க முடியாது நீங்க ஒரு மணிநேரம் முன்னாடி வந்திருக்கணும்னு சொன்னாய்ங்க. நான் அவங்க வாட்ச காட்டி இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு, அனுமதிக்கலைனா நான் வழக்குப் போடுவேன்னு சொன்னேன். சரின்னு ஓகே பண்ணுனாங்க. யாருகிட்ட?
இப்போ இமிக்ரேசன். எனக்கு முன்னாடி ஜோஸ்னா சின்னப்பா அஞ்சு ஆறு பாஸ்போர்ட் வச்சுக்கிட்டு நின்னாங்க. கூடவே, ரெண்டு மூணு பசங்க, ஒவ்வொருத்தன் கையிலயும் அஞ்சு பாஸ்போர்ட். நுனி நாக்கு ஆங்கிலம் கசகசன்னு பேச்சு. சரிதான்.
ஒருவழியா எல்லாம் முடிச்சு, உள்ளார போனப்போ மணி 1.30. வராண்டால போகும்போதே எங்கள கூட்டிட்டுப் போய் கிட்டத்தட்ட உள்ள தள்ளுனாங்க. விமானம் எங்களால பத்து நிமிஷம் தாமதமா கிளம்பியது
ப்ரசெல்ஸ் ஏர்போர்ட் பியர் –B ல இறங்கியாச்சு. அங்கே இருந்து பியர் –A போனோம். அங்கே இருந்து ப்ரசெல்ஸ் ஏர்லைன்சோட லோக்கல் பிளைட்ல பாரிஸ் போகணும். பிளைட்டுக்குள்ள போனா நம்மூரு டவுன் பஸ் மாதிரி ஒரே கூட்டம். ஒரு 200 மில்லி தண்ணி பாட்டிலும், ஒரே ஒரு பெல்ஜியம் சாக்லேட் குடுத்தாங்க. ஒரே கடில சாக்லேட் காலி, ஒருமடக்குல தண்ணி காலி. அதுக்குள்ளே பாரிஸ் வந்திருச்சு.
மெதுவா இறங்கி வந்தோம். மூணு கன்வேயர். எல்லாரும் அடிச்சு பிடிச்சு எடுப்பாங்கன்றதுனால நான் எப்போவுமே, கடைசியாத்தான் அந்தப்பக்கம் போறது. ஓரமா நின்னுக்கிட்டு இருந்தேன். வேற வழியில்லாம நண்பரும் என் கூட நின்னுக்கிட்டு இருந்தார். ஒரு வழியா கூட்டம் முழுசும் காலியானதுக்கு அப்புறமும் எங்க பெட்டி ஒன்னு கூட வரல. அப்போ எனக்கு மட்டும் சாரண பரதசாரி அப்படின்னு மைக்-ல கூப்பிடுறதுமாதிரி இருந்துச்சு. பக்கத்துல இருந்த நண்பர் எஸ்- கிட்ட என்னைய யாரோ கூப்பிடுறாங்கனு நினைக்கிறேன்னு சொன்னேன். அவரு உங்கள இங்க யாருக்கும் தெரியாது அதுனால கூப்பிட மாட்டாங்க அப்படின்னார். ஆச்சா, நான் அமைதியாயிட்டேன்.
கொஞ்ச நேரத்துல அந்த ஏரியா-லையே யாரும் இல்ல. ஒரு ஆள் (பாண்டிச்சேரி) எங்ககிட்ட வந்து, யாருங்க சரவணன்னு கேட்டாப்ள. நான்தான் அப்படின்னு சொன்னேன். உங்களையும் உங்க கூட வந்த எஸ்-யும்தாங்க இவ்வளவு நேரமா கூப்பிட்டாயங்க. உங்களுக்குக் கேக்கலையா அப்படின்னாப்ள. உடனே நண்பர் எஸ் என்னைய பார்த்து கண்ணுல தண்ணி வச்சுண்டார். இனி எல்லாம் இப்படித்தான். வெல்கம் டு பாரிஸ்னு சொன்னேன்.
ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் ஆபீஸ் ஒரு பாட்டி உங்க பெட்டி எல்லாம் ப்ரசெல்ஸ்ல இருக்கு. இந்த பார்ம நிரப்பிக் குடுத்துட்டு திரும்பிப் பார்க்காம ஹோட்டலுக்கு ஓடிருங்க, கர்த்தர் கிருபை இருந்தா பொட்டி நாளைக்குக் கெடைக்கும்னு சொல்லுச்சு. பக்கத்துல இருந்த எஸ் டஸ் ஆயிட்டாப்ள.
சரிங்க அம்மணி, மானத்த மறைக்கக்கூட மாத்துத் துணி இல்லைங்க, போட்டுட்டு இருக்கிற இந்த டிரஸ் கேவலமா நாறுது. தயவு செய்து ஏதாவது செய்யிங்க அப்படின்னு சொன்னேன். கெழவி டக்குனு திரும்பி நடத்ததெல்லாம் மறந்துட்டு இத எடுத்துக்கிட்டுப் போங்கய்யா பேராண்டிகளான்னு ஆளுக்கொரு கிப்ட் குடுத்துச்சு. அதுக்கு உள்ளார, ஒரு தேனீர் சட்டை, பல்பொடி, தண்ணி சோப்பு, ஷாம்பு, நாறாம இருக்க பூச்சி மருந்து எல்லாம் விரல்கட்டை சைஸ்ல அடைச்சு வச்சு இருந்துச்சு. பார்ம நிரப்பிக் குடுத்துட்டு எஸ்கேப் ஆனோம். எஸ் எதுவுமே பேசல. லைட்டா வெளிறிப்போய் இருந்தாப்ல.
டாக்ஸிய புடிச்சு ஹோட்டலுக்கு வந்து, குளிச்சுட்டு நான் உடனே வெளிலே கெளம்பினேன். எஸ் அவரு ரூம விட்டு வெளிய வரல. நானும் கூப்பிடல. ஒரே ஒரு பிரச்சனை அந்த தேநீர் சட்டை என் முழங்கால் அளவு வரை கவர் செய்தது. கெழவி என் மானம் போயிடக் கூடாதுனு நெனைச்சு கீழவரைக்கும் கவர் பண்றமாதிரி சட்டைய குடுத்துடுச்சு போல. மானத்தைக் காப்பாத்துன மாசாத்தியாரே வாழ்க அப்படின்னு சொல்லிட்டு பாரிஸ் உள்ள புகுந்திட்டேன். பாரிஸ் நகரம் என்னை எப்போதும் போல வாவா என்றது.
கோமாளிச் சட்டைய நாம போட்டாலும் பாரிஸ்ல ஒரு பயலும் கிண்டல் பண்ண மாட்டாய்ங்க. அம்புட்டு நல்லவைங்க. எதோ புது பேஷன் போலன்னு நெனைச்சு நமக்கிட்டயே யார் உங்க டிசைனர்னு கேப்பாய்ங்க மாசாத்திக்கிழவி, கேர் ஆப் ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ்னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்கலாம். யார் கண்டது கெழவி பேமஸ் ஆகி ரேம்ப் வாக் போனாலும் போகும்.
நேர கர் து நார்ட் ஸ்டேசன் போய், அடுத்தவாரம் ஜெர்மனி போக ட்ரைன் டிக்கெட் எடுத்தேன். எப்போவும், வெள்ளி ராத்திரிக் கெளம்பிப் போயிட்டு ஞாயிறு மத்தியானம் அங்கே இருந்து கெளம்பிருவேன். கண்ணாடிப் பெட்டிக்குள்ள இருந்த டிக்கெட் விக்கிற தம்பி ரெண்டு ராத்திரி ரெண்டு பகல் ஆப்ஷன் எடுத்துகோங்க மொத்தமே 200 யூரோல முடிஞ்சுரும். நீங்க சொல்ற மாதிரிப் போனா இன்னும் 400 யூரோ மேல செலவாகும்னு சொன்னுச்சு. திங்கள் அன்னைக்கு வர லேட் ஆயிடாதானு கேட்டேன். காலைல எட்டு மணிக்கு பாரிஸ் வந்துரலாம்னு சொன்னாப்ல. நமக்கு பத்து மணிக்குத்தானே ஆபிஸ் சூப்பர். சென்னைல இருந்து கெளம்பினதுக்கு அப்புறம் எனக்கு நடக்குற நல்ல விஷயம் இதுதான்யா. நீ வாழ்கன்னு சொல்லி டிக்கெட் வாங்கிட்டு, அதைக் கொண்டாட தேசதுரோகியா மாறி பிக் மாக் பீப் பர்கர் ஒன்னத் தின்னுகிட்டே ஊர சுத்தப் போயிட்டேன்.
ராத்திரி ரூமுக்குத் திரும்பிப் போகும்போது மணி 12. நண்பர் எஸ் எனக்காகக் காத்துக்கிட்டு இருந்தாப்ள. சாப்பிட்டாச்சானு கேட்டேன், எங்க போய் சாப்பிடனும்னு கேட்டாப்ள. வேற வழி நாடு ராத்திரில சமைத்துக் கொடுத்தேன். பாவம் நாள் பூரா ஜெட் லாக், தூக்கம், பசி, தனிமைனு ஒரே நாள்ல டரியல் ஆயிட்டாப்ள. அடுத்தநாள் ஞாயிறு. என்னோட பிளான் என்னனு சொன்னேன் வேறென்ன காலைல மோண்ட்பானாஸ் கல்லறைத் தோட்டம் போயிட்டு சார்த்ர்- ஸிமோன் தெ வுவா சமாதிக்குப் போறது. சமைச்சு வச்சுட்டு எந்த எழவுக்கு வேணா போங்கனு சொல்லிட்டு போயிட்டார்.

அடுத்த நாள் சீக்கிரமா எழுந்து, சமைச்சு வச்சுட்டு நேரே மோண்ட்பானாஸ் கல்லறைத் தோட்டம். அதுக்குக் கொஞ்சம் முன்னாடி தெருவுல படம் வரைஞ்சு விற்பாங்க. நெறைய தள்ளுவண்டிங்க நிக்கும். அதுல படமா தொங்கும். வேடிக்கை பார்த்துட்டு, கல்லறைத் தோட்டத்துக்குள்ள போனேன்.
மார்க்சியத்தின் ஒரு பகுதியாக இருத்தலியத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவிய ஆசிரியர்னு நான் நினைக்கிற ஜ(ன்) ப(ல்) சார்த்ர் கல்லறை அங்கேதான் இருக்கு. கூடவே புதைக்கப்பட்டுள்ள நபர் சார்த்ரின் இணையர்- பெண்ணியப்போராளி - ஸிமோன் தெ (ப்)வுவா.
அவங்களோட கல்லறை கொஞ்சம் வெளிறிய மஞ்சள் கலர்ல இருக்கும். கல்லறை மேல, ஏகப்பட்ட காகிதங்கள் சின்னச் சின்ன அளவுல ஆரம்பிச்சு, 10 பக்கம் அளவுக்குக் கூட. அதெல்லாம் பறக்காம இருக்கிறதுக்கு அதுமேல சில்லறைக் காசு இல்லைனா ரோஜாபூவை வச்சுருப்பாங்க. பெரிய பேப்பருக்கு சின்ன பூந்தொட்டியே வச்சுருப்பாங்க. சில தாள்கள ஒவ்வொன்னா படிச்சுப் பார்த்தேன். பெரும்பாலும் பிரெஞ்ச். கொஞ்சம் இங்கிலீஷ். என்ன எழுதி இருக்குனா லவ் லெட்டர்ஸ். காதலுக்கு ஆசிர்வாதம் கேட்டு லெட்டர்ஸ். அப்புறம் சார்த்ர், (ப்)வுவா இவங்களோட வரிகள். சிலது, பிரான்ஸ்/உலகத்துக்கு ஏன் அவர்கள் முக்கியம் அப்பிடிங்கிற மாதிரி கடிதங்கள். முக்கியமா கல்லறை முழுக்க முத்தங்கள் லிப்ஸ்டிக் கரையால் நிறைஞ்சு போயிருக்கும் கல்லறை அது.
நான் அதை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கைல, ஒரு வெள்ளைக்காரத் தம்பி வந்து ஹாய், வி ஆர் பிரம் அமேரிக்கானு சொல்லிட்டு, கேமராவைக் கொடுத்து அவங்கள போட்டோ எடுக்கச் சொன்னாப்ள. அப்போத்தாம் பார்க்குறேன் - அவர் கூட ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு. ரெண்டுபேரும் கல்லறைல அவிங்க எழுதிக்கிட்டு வந்திருந்த பேப்பர வைக்கிறமாதிரி, அப்புறம் முன்னாடி உக்கார்ந்து, ரெண்டு பெரும் கல்லறைய பார்குற மாதிரி இது வரை நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு.
டக்குனு அந்த பையன் லிப்ஸ்டிக்க எடுத்தான், வாயில அப்பிக்கிட்டான், அப்புறம் அந்தப் பொண்ணும் அப்பிக்கிச்சு. முத்தம் குடுத்தாய்ங்க எங்கேன்றீங்க - கல்லறைக்கு. சரிதான் நம்ம வேலை போட்டோ எடுக்குறது. நானும் வளைச்சு, வளைச்சு போட்டோ எடுத்தேன். டபக்குனு அவைங்களுக்குள்ள பிரெஞ்ச் முத்தம். நான் விடலையே மறுபடி போட்டோ. கல்லறைக்கு இங்கிட்டும், அங்கிட்டும் நின்னுக்கிட்டு குறுக்கால சார்தரும் (ப்)வுவாவும் கெடக்காய்ங்க எதுத்தாப்ல நான் கெடக்கேன் அதப்பத்திக் கவலையே இல்லாம அவிங்க அப்பிடியே கட்டிப் பிடிச்ச மாதிரி போட்டோ பிரெஞ்ச் முத்தம் குடுத்துக்கிட்டேதான். போட்ருந்த லிப்ஸ்டிக் எல்லாம் கரைஞ்சு அவிங்க உதடு நார்மல் கலருக்கு வந்துருச்சு.
என்னைய ஒரு போட்டோ எடுங்கடான்னு என் கேமராவ குடுத்தேன். நான் முத்தம் குடுக்குறதுக்கு யாரும் இல்லையா, அதுனால கல்லறைல சாஞ்ச மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டேன். வேற வழி.
அந்தப் பயவுள்ளையும், பயலும் அமெரிக்காக்காரைங்க. ரெண்டு பெரும் ஒரே காலேஜ்ல நுண்கலை படிக்கிறாய்ங்க. ரெண்டு பேருக்கும் சார்த்ர் - ஸிமோன் தெ (ப்)வுவாவை புடிக்கும். அதுனால லவ் ஆமா அவிங்க அப்படித்தான் சொன்னாய்ங்க. ரெண்டு பேரும், ரெண்டு வருஷம் வேலை பார்த்து, பத்தாததுக்கு அப்பா- அம்மா கிட்ட காசு வாங்கி சார்த்ர் – (ப்)வுவா வாழ்ந்த, பேசுன இடங்கள பார்க்க வந்துருக்காய்ங்க. நான் இந்தியால இருந்து வந்துருக்கேன்னு சொன்ன உடனே, ஓரமா இருந்த பென்ச்ல ஒக்காந்து பேசலாமானு கேட்டாய்ங்க. ஒரு மணிநேரம் கதறக் கதற எக்சிஸ்டென்ஷியலிசம், ஃபெமினிசம், மார்க்சியம் பேசுனோம். கல்லறைகளுக்கும், இருத்தலியத்துக்குமான தொடர்பை ரெண்டுபேருமே ஆழமான சிந்தனையோட பேசினாய்ங்க. அந்தப் பொண்ணு, செகண்ட் செக்ஸ் பத்தி பேசினப்போ, பதிலுக்கு நான் பெண் ஏன் அடிமையானாள் பத்திப் பேசுனேன். ரெண்டையும் ஒப்பிட்டு பேசிட்டு - பெரியாரைப் பத்திச் சொன்னேன், அவர் போராட்டங்களைப் பத்தியும் அனார்கிசம் பத்தியும். அவிங்க சே குவேராவ அனார்கிஸ்ட்னு சொல்லலாம் இல்லையா அப்படின்னு பேசுனாய்ங்க.
அன்னைக்கு முழுக்க நாங்க மூணு பேரும் மோண்ட்பானாஸ் கல்லறைத் தோட்டத்தை முழுசா சுத்திப் பார்த்தோம். பேச்சு பேச்சு பேச்சு. முழுக்க முழுக்க சார்த்ர் – (ப்)வுவா காம்யு நீட்சே இறுதியா சேகுவேரா. நாங்க பேசுனதுல பொதைச்ச பொணமெல்லாம் எந்திரிச்சுடுமோன்னு நெனைச்சு கெளம்பிட்டோம். அவங்களோட காண்டாக்ட் எதையும் நான் வாங்கல அவங்களும் என்கிட்ட வாங்கல. எக்சிஸ்டென்ஷியலிச மனுசைங்க வேறென்ன செய்வாய்ங்க? ஆனா, என்கிட்ட நூத்துக்கணக்கான போட்டோக்கள், நினைவுகள் இருந்தது.
அங்கே இருந்து லக்ஸம்பெர்க் தோட்டம் போய் அங்கே ஒரு நடை. மக்கள் கொழந்தைகளோட குடும்பம் குடும்பமா நடக்கவும் ஆடவும் பாடவும்னு செம ஜாலியா இருப்பாங்க. மரங்கள் நடப்பட்டுள்ள விதம் அற்புதம். அந்தத் தோட்டத்தோட ஓரத்துல இருக்கிற திறந்த மண்டபத்துல இசைக்கச்சேரிங்க நடக்கும். செமையா இருக்கும். இதுக்கு எதுத்தாப்லதான் பாந்தியன் சர்ச் அங்கேதான் வால்தருடைய கல்லறை இருக்கு.
நெறைய தமிழ் படத்துல ஹீரோ ஹீரோயின் டான்ஸ் ஆடுறது இந்த சர்ச் வாசல்லதான். இன்னொரு இடம் நோட்ர டாம் சர்ச். எங்கேயும் காதல் படம் பார்த்திருக்கீங்களா? அப்போ நீங்களும் பாந்தியன், நோட்ர டாம் சர்ச் பார்த்துட்டீங்கனு வைங்க.
ராத்திரி பத்து மணிக்கே ரூமுக்கு வந்துட்டேன். நண்பர் எஸ் மலர்ந்த முகமும் சிரிப்பும் கொண்டு பூரிப்பில் இருந்தார். எங்கயாவது பக்கத்துல போயிட்டு வந்துட்டாரு போலனு நெனச்சேன். இல்லை பொட்டி எல்லாம் கரக்டா வந்து செர்ந்திருச்சாம். அப்படியானு கேட்டுட்டு சமைக்க ஆரம்பிச்சேன். கடுப்பாயிட்டாப்ள. பொருளெல்லாம் கெடைக்கும்னு நான் நினைக்கவே இல்லைனார். அப்படியானேன். அதுக்கப்புறம், சாப்பிட மட்டும்தான் வாயைத்திறந்தார்.