Thursday, August 1, 2013

கதிரேசன் செட்டியாரின் காதல் - மா.கிருஷ்ணன்மா. கிருஷ்ணன் ஒரு சூழலியலாளர். காலச்சுவடின் வெளியீடான மழைக்காலமும் குயிலோசையும்  (தொகுப்பாளர்: தியடோர் பாஸ்கரன்). பறவைகளும் வேடந்தாங்கலும் (பதிப்பாசிரியர்: பெருமாள் முருகன்) ஆகிய புத்தகங்களைப் படித்தபோதே இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் இருந்தது. மற்ற இரண்டு புத்தகங்களும் தமிழில் இருக்கும் மிக முக்கியமான சூழலியல் புத்தகங்கள்.

சூழலியல் புத்தகங்கள் இரண்டு வகையாக எழுதப்படுகின்றன. ஒன்று வெறும் புத்தக அறிவுடன் எழுதப்படும் Desk Work . மற்றொன்று சூழலியல் செயல்பாட்டாளர்களால் எழுதப்படுபவை.

மா.கிருஷ்ணன் இரண்டாம் வகையை சேர்ந்தவர். புத்தகம் எழுதுவது, உயிரினங்களைப் படம் எடுத்தல், படங்களை வரைதல், இலக்கியங்களில் இருந்து பெயர்களை மறு உபயோகப் படுத்துவது என்று அவர் நேரடி அனுபவங்களை எழுதக்கூடியவர்.

இப்போது கதிரேசன் செட்டியாரின் காதலுக்கு வருவோம்.இது ஒரு துப்பறியும் கதை.

கதிரேசன் செட்டியாரின் தோட்டவீட்டில் அவரின் வேலைக்காரன் கொலை செய்யப்படுகிறான். காவலுக்கு இருக்கும் கொம்பை நாயும் கொல்லப்படுகிறது. அதே நேரம் கோவில் நகை திருடு போகிறது. போலீஸ் வருகிறது, அவர்களுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்த விசாரணை முடிவில் யார் குற்றவாளி என்று தெரிகிறது.

பொதுவாக துப்பறியும் நாவல்களுக்கு என்று ஒரு வரை முறை இருக்கிறது.

-நேரடியான கதை.
-குற்றம் தெளிவானதாக அதே சமயம் எல்லாக் கதைமாந்தர் மேலும் வாசகனுக்கு சந்தேகம் வரவேண்டும்.
-Detail - மிக முக்கியம்.
-கதை உள்ளே செல்லச் செல்ல சந்தேகம் எல்லோர் மேலும் வர வேண்டும்.
-முடிவை நெருங்க நெருங்க சந்தேகம் ஒரு குறிப்பிட்ட நபரை நோக்கியோ அல்லது குழுவை நோக்கியோ திரும்ப வேண்டும்.
-இறுதியில் குற்றவாளி பற்றிய - யாரும் எதிர்பாராத ஒரு முடிவு வேண்டும். (ஆனால் அதற்கான குறிப்பு நாவலில் முதலிலேயே - முடிந்தால் முதல் அத்தியாயத்திலேயே இருக்க வேண்டும்.)

இந்த நாவல் மேற்கொண்ட விசயங்கள் அனைத்தும் கொண்ட ஒன்று.

வழக்கமான துப்பறியும் கதைகளில் விசேச நுண்ணுணர்வு கொண்ட ஒருவர் எல்லாவற்றையும்  தீர்த்து வைப்பார் . அதுதான் இருப்பதிலேயே மோசமான அணுகுமுறை. (sherlock holmes போல).

இதில் கொம்பை நாயின் படம் ஒன்று அட்டையில் உள்ளது, அது மா.கிருஷ்ணனே வரைந்தது. அதே போல கொம்பைக் குட்டியை வளர்க்கும் முறை, உணவு முறை, நாய் இறந்தால் கிடக்கும் நிலை இவற்றை சரியாகச் சொல்லி இருப்பார். இது இங்கே இப்போது கதை/ இலக்கியம் எழுதும் பலரும் செய்யாதது. மற்றொன்று கதையில் இறுதி வரியில் தான் கதையே இருக்கிறது. நாவலின் தலைப்பும் கூட அங்கே தான் ஆரம்பிக்கிறது. அது வாசகனை கதையின் முடிவுக்குப் பிறகும் உள்ள கதையை யோசிக்கச் செய்கிறது. அது ஒரு நல்ல துப்பறியும் நாவலின் இலக்கணம்.

நாவலில் குறை என்றால், எல்லோரும் பிராமண பாஷையைப் பேசுவது. அதிலிருந்து நடைமுறைத் தமிழுக்கு மாறுவது, மீண்டும் பிராமண பாஷைக்கு மாறுவது. இனிவரும் பதிப்புகளில்(?) யாரேனும் இந்தக் குறையைச் சரி செய்தால், இன்னும் பலரால் வாசிக்கப்பட வாய்ப்புள்ளது.

அடுத்து கதை நடக்கும் காலம்: அது நிச்சயமாக 1989 அல்ல. அதை 1940-1950 க்குள் என்று வைத்து இருக்கலாம். கதை மாந்தர் மொழி,களம், வாகன வசதிகள் எல்லாம் அதையே சொல்கின்றன. இது ஒரு மிகப் பெரிய குறை.

நிச்சயமாக இது தமிழில் இருக்கும் சரியான (!) துப்பறியும் நாவல்.

வெளியீடு: மதுரை பிரஸ்

"ஸ்கூப்" - குல்தீப் நய்யார்


குல்தீப் நய்யார் எழுதிய "ஸ்கூப்" புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகம் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து, பாகிஸ்தான் பிரிவினை, சுதந்திரம், காந்தியின் மரணம், நேருவின் ஆட்சி - மரணம், லால் பகதூர் சாஸ்த்ரி ஆட்சி - மரணம், இந்திரா - காமராஜ் மோதல், எமர்ஜென்சி, பாகிஸ்தான் அணு ஆயுத உற்பத்தி, புலிகள் மீதான இந்திய அரசின் பார்வை, வாஜ்பாய் ஆட்சி வரை துண்டு துண்டாக விவரிக்கிறது. இதில் பெரும்பாலும் சுவாரஸ்யமான விஷயங்கள் ஏதும் இல்லை. அதே போல பொது மக்களுக்குத் தெரியாத விசயங்களை எண்ணிவிடலாம்.

எல்லா பெரிய ஆளுமைகளும் சாதாரண மக்களைப் போல குழம்பித்தான் இருப்பார்கள், நம்புவார்கள், துரோகம் செய்வார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இதை வாசிக்கலாம். மற்றபடி வரலாறு, ரகசியம், உண்மைகளை (!!!!) எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் ஏற்படும். சம்பவங்கள் நடைபெற்ற போது கூட, இவை ஸ்கூப் ஆக இருந்து இருக்குமா? என்று நான் பல இடங்களில் யோசித்தேன். ஏனென்றால் பல விஷயங்கள் - மொக்கையானவை.


அவரவருக்கு தெரிந்த ஆனால் சொல்லப்படாத விசயங்களை, வரலாற்றை வயதான பிறகாவது சொல்லலாம். ஆனால் இங்கே குல்தீப் நய்யார் சொல்லி இருப்பது எதுவும் அப்படிப் பட்டவை அல்ல. இதில் இருக்கும் நிகழ்வுகளால் யாருக்கும் பலனில்லை. உதாரணமாக சாஸ்த்ரியின் மரணம், சுற்றி வளைத்து அவர் இயற்கையாகவே மறைந்தார் என்று சொல்லி இருக்கிறார். அதுதான் எங்களுக்குத் தெரியுமே. அதில் புதுசாக ஏதேனும் சொல்ல நினைத்தால் சொல்லி இருக்கலாம். இல்லாவிட்டால் அந்த சம்பவத்தை ஒற்றை வரியில் சொல்லிவிட்டுச் செல்லலாம். பத்துப் பக்கம் அதே அரசாங்கம் சொன்ன ரிப்போர்ட் -ஐச்   சொல்வதில் என்ன ஸ்கூப் என்று எனக்குப் புரியவே இல்லை. இது மாதிரி பல விஷயங்கள் உள்ள புத்தகம் இது. ஒன்று மட்டும் உறுதி - இது உண்மையான வரலாறும் இல்லை - ஸ்கூப்பும் இல்லை.

நேரம் இருந்தால் 1.5 மணி நேரத்தில் வாசிக்கலாம். இல்லை என்றால் அதே நேரத்தில் நீங்கள் இன்னும் உண்மைக்கு நெருக்கமான வரலாற்றை இணையத்திலேயே வாசிக்கலாம்.வெளியீடு: ஸ்கூப் - மதுரை பிரஸ், மாம்பலம்.