Sunday, April 3, 2016

ப்ரசெல்ஸ், பாரிஸ் - நினைவுகள் பகுதி ஒன்று


        என்னோட நிறுவனத்துல ஒருமுறை பாரிஸ் (கார்னர் இல்ல) போகச் சொன்னாங்க. இந்த விஷயம் எனக்கு சொல்லப்பட்டது எப்போன்னா - சாயங்காலம் 3.30க்கு. சென்னைக்கு மிக அருகில் இருக்கிற மகிந்திரா சிட்டில வேலை. என்னோட ரூம் சூளைமேடுல. இடைப்பட்ட தூரம் – 45 கி.மீ. ப்ளைட் டிக்கெட் மற்றும் எக்ஸ்சேன்ஜ் வர கொஞ்சம் நேரமாகும் அதை நேரா உங்க ரூம்லேயே குடுக்க சொல்றோம், கெளம்புங்க அப்படின்னு ட்ராவல் டெஸ்க் மக்கள் சொன்னப்போ மணி சாயங்காலம் 6. அங்கே இருந்து கிளம்பி ரூமுக்கு வந்தப்போ மணி 8.30. சாப்பிட்டுட்டு, ரிலையன்ஸ் பிரெஷ்ல 3 கிலோ அரிசியும், கொஞ்சம் தொக்கும் வாங்கிட்டு வரும்போது மணி 9.30. 10 மணிவரை ஒரு சத்தத்தையும் காணோம். நானும் இருக்குற நாலு சட்டை, பேன்டையும் எடுத்து என்னோட பெட்டில வச்சுட்டு வழிமேல விழி வைச்சுக் காத்துக்கிட்டு இருந்தேன். தம்பி சதீஸ் வந்தான், என்னண்ணே மறுபடி பாரிஸ் கெளம்பியாச்சா அப்பிடின்னு நக்கலா சொன்னான். அப்போவே நான் சுதாரிச்சு இருக்கணும்.
மணி 10.15 – ஒரு போன்கால். சார் நான் எழும்பூர் மணி எக்ஸ்சேன்ஜ் ரெப் பேசுறேன், எங்க சார் வரணும் அப்பிடின்னாப்ள. வழி சொல்லிட்டு விட்டத்த பார்த்துகிட்டு இருந்தேன். என்னோட வர்ர இன்னும் ரெண்டு துரோகிகளோட டிக்கெட், காசு எல்லாம் நான்தான் வாங்கிட்டு வரணும்.
இதுக்கு இடைல அவங்க வேற கால் பண்ணி ஜி நாங்க ரெடி ஆயிட்டோம்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான் .
வேளச்சேரில இருந்து கேளம்பிட்டோம்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான்.
போர்டிங் அட் பாஸ்ட் ட்ராக்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான்.
வி ஆர் மூவிங்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான்.
ஆன் தி வே டு ஏர்போர்ட்டு.
டே உங்களுக்கு ஆன்சைட்டே இருக்குமான்னு தெரியல, ஏண்டா இவ்வளவு அவசரம்? வீட்டுக்குத் திரும்பி போங்கடா அப்பிடின்னேன்.
ஜி, பொண்டாட்டி, மாமனார், மாமியார், மச்சினிச்சி, மச்சான் சகிதமா சைலோ கார்ல போறோம் ஜி. இப்பிடில்லாம் சொல்லாதீங்க அப்படின்னு கதறுனாப்ள. போங்கடா போக்கத்தவனுகளா.
மணி பதினொன்னு இருபது. ஒரு வழியா டிக்கெட், ட்ராவல் கார்ட் கெடைச்சுது. சென்னையிலிருந்து ப்ருசெல்ஸ் ஜெட் ஏர்வேஸ் கிளம்பும் நேரம் அதிகாலை 1.50 அப்படின்னு போட்டு இருந்துச்சு.
கால் டாக்ஸி புடிச்சு ஏர்போர்ட் போனேன் மணி நள்ளிரவு 12.15. அந்த ரெண்டு ஆடுகளும், ஆடுகளின் சொந்தங்களும் என்னைய வெறிகொண்டு பார்த்துக்கிட்டு இருந்தாய்ங்க. தம்பி உங்களுக்கு பொறுப்பே கிடையாதா? சரியான நேரத்துக்கு கொண்டாந்து குடுத்துட்டு நீங்க லேட்டா வர வேண்டியதுதானே அப்படின்னு ஒரு ஆடோட மாமனார் கேட்டாரு.
எடை போடுற வரிசைல நின்னு எங்க முறை வந்தப்போ மணி 12.40. ஜெட் ஏர்வேஸ் கவுன்ட்டர் போனா, அனுமதிக்க முடியாது நீங்க ஒரு மணிநேரம் முன்னாடி வந்திருக்கணும்னு சொன்னாய்ங்க. நான் அவங்க வாட்ச காட்டி இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு, அனுமதிக்கலைனா நான் வழக்குப் போடுவேன்னு சொன்னேன். சரின்னு ஓகே பண்ணுனாங்க. யாருகிட்ட?
இப்போ இமிக்ரேசன். எனக்கு முன்னாடி ஜோஸ்னா சின்னப்பா அஞ்சு ஆறு பாஸ்போர்ட் வச்சுக்கிட்டு நின்னாங்க. கூடவே, ரெண்டு மூணு பசங்க, ஒவ்வொருத்தன் கையிலயும் அஞ்சு பாஸ்போர்ட். நுனி நாக்கு ஆங்கிலம் கசகசன்னு பேச்சு. சரிதான்.
ஒருவழியா எல்லாம் முடிச்சு, உள்ளார போனப்போ மணி 1.30. வராண்டால போகும்போதே எங்கள கூட்டிட்டுப் போய் கிட்டத்தட்ட உள்ள தள்ளுனாங்க. விமானம் எங்களால பத்து நிமிஷம் தாமதமா கிளம்பியது
ப்ரசெல்ஸ் ஏர்போர்ட் பியர் –B ல இறங்கியாச்சு. அங்கே இருந்து பியர் –A போனோம். அங்கே இருந்து ப்ரசெல்ஸ் ஏர்லைன்சோட லோக்கல் பிளைட்ல பாரிஸ் போகணும். பிளைட்டுக்குள்ள போனா நம்மூரு டவுன் பஸ் மாதிரி ஒரே கூட்டம். ஒரு 200 மில்லி தண்ணி பாட்டிலும், ஒரே ஒரு பெல்ஜியம் சாக்லேட் குடுத்தாங்க. ஒரே கடில சாக்லேட் காலி, ஒருமடக்குல தண்ணி காலி. அதுக்குள்ளே பாரிஸ் வந்திருச்சு.
மெதுவா இறங்கி வந்தோம். மூணு கன்வேயர். எல்லாரும் அடிச்சு பிடிச்சு எடுப்பாங்கன்றதுனால நான் எப்போவுமே, கடைசியாத்தான் அந்தப்பக்கம் போறது. ஓரமா நின்னுக்கிட்டு இருந்தேன். வேற வழியில்லாம நண்பரும் என் கூட நின்னுக்கிட்டு இருந்தார். ஒரு வழியா கூட்டம் முழுசும் காலியானதுக்கு அப்புறமும் எங்க பெட்டி ஒன்னு கூட வரல. அப்போ எனக்கு மட்டும் சாரண பரதசாரி அப்படின்னு மைக்-ல கூப்பிடுறதுமாதிரி இருந்துச்சு. பக்கத்துல இருந்த நண்பர் எஸ்- கிட்ட என்னைய யாரோ கூப்பிடுறாங்கனு நினைக்கிறேன்னு சொன்னேன். அவரு உங்கள இங்க யாருக்கும் தெரியாது அதுனால கூப்பிட மாட்டாங்க அப்படின்னார். ஆச்சா, நான் அமைதியாயிட்டேன்.
கொஞ்ச நேரத்துல அந்த ஏரியா-லையே யாரும் இல்ல. ஒரு ஆள் (பாண்டிச்சேரி) எங்ககிட்ட வந்து, யாருங்க சரவணன்னு கேட்டாப்ள. நான்தான் அப்படின்னு சொன்னேன். உங்களையும் உங்க கூட வந்த எஸ்-யும்தாங்க இவ்வளவு நேரமா கூப்பிட்டாயங்க. உங்களுக்குக் கேக்கலையா அப்படின்னாப்ள. உடனே நண்பர் எஸ் என்னைய பார்த்து கண்ணுல தண்ணி வச்சுண்டார். இனி எல்லாம் இப்படித்தான். வெல்கம் டு பாரிஸ்னு சொன்னேன்.
ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் ஆபீஸ் ஒரு பாட்டி உங்க பெட்டி எல்லாம் ப்ரசெல்ஸ்ல இருக்கு. இந்த பார்ம நிரப்பிக் குடுத்துட்டு திரும்பிப் பார்க்காம ஹோட்டலுக்கு ஓடிருங்க, கர்த்தர் கிருபை இருந்தா பொட்டி நாளைக்குக் கெடைக்கும்னு சொல்லுச்சு. பக்கத்துல இருந்த எஸ் டஸ் ஆயிட்டாப்ள.
சரிங்க அம்மணி, மானத்த மறைக்கக்கூட மாத்துத் துணி இல்லைங்க, போட்டுட்டு இருக்கிற இந்த டிரஸ் கேவலமா நாறுது. தயவு செய்து ஏதாவது செய்யிங்க அப்படின்னு சொன்னேன். கெழவி டக்குனு திரும்பி நடத்ததெல்லாம் மறந்துட்டு இத எடுத்துக்கிட்டுப் போங்கய்யா பேராண்டிகளான்னு ஆளுக்கொரு கிப்ட் குடுத்துச்சு. அதுக்கு உள்ளார, ஒரு தேனீர் சட்டை, பல்பொடி, தண்ணி சோப்பு, ஷாம்பு, நாறாம இருக்க பூச்சி மருந்து எல்லாம் விரல்கட்டை சைஸ்ல அடைச்சு வச்சு இருந்துச்சு. பார்ம நிரப்பிக் குடுத்துட்டு எஸ்கேப் ஆனோம். எஸ் எதுவுமே பேசல. லைட்டா வெளிறிப்போய் இருந்தாப்ல.
டாக்ஸிய புடிச்சு ஹோட்டலுக்கு வந்து, குளிச்சுட்டு நான் உடனே வெளிலே கெளம்பினேன். எஸ் அவரு ரூம விட்டு வெளிய வரல. நானும் கூப்பிடல. ஒரே ஒரு பிரச்சனை அந்த தேநீர் சட்டை என் முழங்கால் அளவு வரை கவர் செய்தது. கெழவி என் மானம் போயிடக் கூடாதுனு நெனைச்சு கீழவரைக்கும் கவர் பண்றமாதிரி சட்டைய குடுத்துடுச்சு போல. மானத்தைக் காப்பாத்துன மாசாத்தியாரே வாழ்க அப்படின்னு சொல்லிட்டு பாரிஸ் உள்ள புகுந்திட்டேன். பாரிஸ் நகரம் என்னை எப்போதும் போல வாவா என்றது.
கோமாளிச் சட்டைய நாம போட்டாலும் பாரிஸ்ல ஒரு பயலும் கிண்டல் பண்ண மாட்டாய்ங்க. அம்புட்டு நல்லவைங்க. எதோ புது பேஷன் போலன்னு நெனைச்சு நமக்கிட்டயே யார் உங்க டிசைனர்னு கேப்பாய்ங்க மாசாத்திக்கிழவி, கேர் ஆப் ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ்னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்கலாம். யார் கண்டது கெழவி பேமஸ் ஆகி ரேம்ப் வாக் போனாலும் போகும்.
நேர கர் து நார்ட் ஸ்டேசன் போய், அடுத்தவாரம் ஜெர்மனி போக ட்ரைன் டிக்கெட் எடுத்தேன். எப்போவும், வெள்ளி ராத்திரிக் கெளம்பிப் போயிட்டு ஞாயிறு மத்தியானம் அங்கே இருந்து கெளம்பிருவேன். கண்ணாடிப் பெட்டிக்குள்ள இருந்த டிக்கெட் விக்கிற தம்பி ரெண்டு ராத்திரி ரெண்டு பகல் ஆப்ஷன் எடுத்துகோங்க மொத்தமே 200 யூரோல முடிஞ்சுரும். நீங்க சொல்ற மாதிரிப் போனா இன்னும் 400 யூரோ மேல செலவாகும்னு சொன்னுச்சு. திங்கள் அன்னைக்கு வர லேட் ஆயிடாதானு கேட்டேன். காலைல எட்டு மணிக்கு பாரிஸ் வந்துரலாம்னு சொன்னாப்ல. நமக்கு பத்து மணிக்குத்தானே ஆபிஸ் சூப்பர். சென்னைல இருந்து கெளம்பினதுக்கு அப்புறம் எனக்கு நடக்குற நல்ல விஷயம் இதுதான்யா. நீ வாழ்கன்னு சொல்லி டிக்கெட் வாங்கிட்டு, அதைக் கொண்டாட தேசதுரோகியா மாறி பிக் மாக் பீப் பர்கர் ஒன்னத் தின்னுகிட்டே ஊர சுத்தப் போயிட்டேன்.
ராத்திரி ரூமுக்குத் திரும்பிப் போகும்போது மணி 12. நண்பர் எஸ் எனக்காகக் காத்துக்கிட்டு இருந்தாப்ள. சாப்பிட்டாச்சானு கேட்டேன், எங்க போய் சாப்பிடனும்னு கேட்டாப்ள. வேற வழி நாடு ராத்திரில சமைத்துக் கொடுத்தேன். பாவம் நாள் பூரா ஜெட் லாக், தூக்கம், பசி, தனிமைனு ஒரே நாள்ல டரியல் ஆயிட்டாப்ள. அடுத்தநாள் ஞாயிறு. என்னோட பிளான் என்னனு சொன்னேன் வேறென்ன காலைல மோண்ட்பானாஸ் கல்லறைத் தோட்டம் போயிட்டு சார்த்ர்- ஸிமோன் தெ வுவா சமாதிக்குப் போறது. சமைச்சு வச்சுட்டு எந்த எழவுக்கு வேணா போங்கனு சொல்லிட்டு போயிட்டார்.

அடுத்த நாள் சீக்கிரமா எழுந்து, சமைச்சு வச்சுட்டு நேரே மோண்ட்பானாஸ் கல்லறைத் தோட்டம். அதுக்குக் கொஞ்சம் முன்னாடி தெருவுல படம் வரைஞ்சு விற்பாங்க. நெறைய தள்ளுவண்டிங்க நிக்கும். அதுல படமா தொங்கும். வேடிக்கை பார்த்துட்டு, கல்லறைத் தோட்டத்துக்குள்ள போனேன்.
மார்க்சியத்தின் ஒரு பகுதியாக இருத்தலியத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவிய ஆசிரியர்னு நான் நினைக்கிற ஜ(ன்) ப(ல்) சார்த்ர் கல்லறை அங்கேதான் இருக்கு. கூடவே புதைக்கப்பட்டுள்ள நபர் சார்த்ரின் இணையர்- பெண்ணியப்போராளி - ஸிமோன் தெ (ப்)வுவா.
அவங்களோட கல்லறை கொஞ்சம் வெளிறிய மஞ்சள் கலர்ல இருக்கும். கல்லறை மேல, ஏகப்பட்ட காகிதங்கள் சின்னச் சின்ன அளவுல ஆரம்பிச்சு, 10 பக்கம் அளவுக்குக் கூட. அதெல்லாம் பறக்காம இருக்கிறதுக்கு அதுமேல சில்லறைக் காசு இல்லைனா ரோஜாபூவை வச்சுருப்பாங்க. பெரிய பேப்பருக்கு சின்ன பூந்தொட்டியே வச்சுருப்பாங்க. சில தாள்கள ஒவ்வொன்னா படிச்சுப் பார்த்தேன். பெரும்பாலும் பிரெஞ்ச். கொஞ்சம் இங்கிலீஷ். என்ன எழுதி இருக்குனா லவ் லெட்டர்ஸ். காதலுக்கு ஆசிர்வாதம் கேட்டு லெட்டர்ஸ். அப்புறம் சார்த்ர், (ப்)வுவா இவங்களோட வரிகள். சிலது, பிரான்ஸ்/உலகத்துக்கு ஏன் அவர்கள் முக்கியம் அப்பிடிங்கிற மாதிரி கடிதங்கள். முக்கியமா கல்லறை முழுக்க முத்தங்கள் லிப்ஸ்டிக் கரையால் நிறைஞ்சு போயிருக்கும் கல்லறை அது.
நான் அதை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கைல, ஒரு வெள்ளைக்காரத் தம்பி வந்து ஹாய், வி ஆர் பிரம் அமேரிக்கானு சொல்லிட்டு, கேமராவைக் கொடுத்து அவங்கள போட்டோ எடுக்கச் சொன்னாப்ள. அப்போத்தாம் பார்க்குறேன் - அவர் கூட ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு. ரெண்டுபேரும் கல்லறைல அவிங்க எழுதிக்கிட்டு வந்திருந்த பேப்பர வைக்கிறமாதிரி, அப்புறம் முன்னாடி உக்கார்ந்து, ரெண்டு பெரும் கல்லறைய பார்குற மாதிரி இது வரை நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு.
டக்குனு அந்த பையன் லிப்ஸ்டிக்க எடுத்தான், வாயில அப்பிக்கிட்டான், அப்புறம் அந்தப் பொண்ணும் அப்பிக்கிச்சு. முத்தம் குடுத்தாய்ங்க எங்கேன்றீங்க - கல்லறைக்கு. சரிதான் நம்ம வேலை போட்டோ எடுக்குறது. நானும் வளைச்சு, வளைச்சு போட்டோ எடுத்தேன். டபக்குனு அவைங்களுக்குள்ள பிரெஞ்ச் முத்தம். நான் விடலையே மறுபடி போட்டோ. கல்லறைக்கு இங்கிட்டும், அங்கிட்டும் நின்னுக்கிட்டு குறுக்கால சார்தரும் (ப்)வுவாவும் கெடக்காய்ங்க எதுத்தாப்ல நான் கெடக்கேன் அதப்பத்திக் கவலையே இல்லாம அவிங்க அப்பிடியே கட்டிப் பிடிச்ச மாதிரி போட்டோ பிரெஞ்ச் முத்தம் குடுத்துக்கிட்டேதான். போட்ருந்த லிப்ஸ்டிக் எல்லாம் கரைஞ்சு அவிங்க உதடு நார்மல் கலருக்கு வந்துருச்சு.
என்னைய ஒரு போட்டோ எடுங்கடான்னு என் கேமராவ குடுத்தேன். நான் முத்தம் குடுக்குறதுக்கு யாரும் இல்லையா, அதுனால கல்லறைல சாஞ்ச மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டேன். வேற வழி.
அந்தப் பயவுள்ளையும், பயலும் அமெரிக்காக்காரைங்க. ரெண்டு பெரும் ஒரே காலேஜ்ல நுண்கலை படிக்கிறாய்ங்க. ரெண்டு பேருக்கும் சார்த்ர் - ஸிமோன் தெ (ப்)வுவாவை புடிக்கும். அதுனால லவ் ஆமா அவிங்க அப்படித்தான் சொன்னாய்ங்க. ரெண்டு பேரும், ரெண்டு வருஷம் வேலை பார்த்து, பத்தாததுக்கு அப்பா- அம்மா கிட்ட காசு வாங்கி சார்த்ர் – (ப்)வுவா வாழ்ந்த, பேசுன இடங்கள பார்க்க வந்துருக்காய்ங்க. நான் இந்தியால இருந்து வந்துருக்கேன்னு சொன்ன உடனே, ஓரமா இருந்த பென்ச்ல ஒக்காந்து பேசலாமானு கேட்டாய்ங்க. ஒரு மணிநேரம் கதறக் கதற எக்சிஸ்டென்ஷியலிசம், ஃபெமினிசம், மார்க்சியம் பேசுனோம். கல்லறைகளுக்கும், இருத்தலியத்துக்குமான தொடர்பை ரெண்டுபேருமே ஆழமான சிந்தனையோட பேசினாய்ங்க. அந்தப் பொண்ணு, செகண்ட் செக்ஸ் பத்தி பேசினப்போ, பதிலுக்கு நான் பெண் ஏன் அடிமையானாள் பத்திப் பேசுனேன். ரெண்டையும் ஒப்பிட்டு பேசிட்டு - பெரியாரைப் பத்திச் சொன்னேன், அவர் போராட்டங்களைப் பத்தியும் அனார்கிசம் பத்தியும். அவிங்க சே குவேராவ அனார்கிஸ்ட்னு சொல்லலாம் இல்லையா அப்படின்னு பேசுனாய்ங்க.
அன்னைக்கு முழுக்க நாங்க மூணு பேரும் மோண்ட்பானாஸ் கல்லறைத் தோட்டத்தை முழுசா சுத்திப் பார்த்தோம். பேச்சு பேச்சு பேச்சு. முழுக்க முழுக்க சார்த்ர் – (ப்)வுவா காம்யு நீட்சே இறுதியா சேகுவேரா. நாங்க பேசுனதுல பொதைச்ச பொணமெல்லாம் எந்திரிச்சுடுமோன்னு நெனைச்சு கெளம்பிட்டோம். அவங்களோட காண்டாக்ட் எதையும் நான் வாங்கல அவங்களும் என்கிட்ட வாங்கல. எக்சிஸ்டென்ஷியலிச மனுசைங்க வேறென்ன செய்வாய்ங்க? ஆனா, என்கிட்ட நூத்துக்கணக்கான போட்டோக்கள், நினைவுகள் இருந்தது.
அங்கே இருந்து லக்ஸம்பெர்க் தோட்டம் போய் அங்கே ஒரு நடை. மக்கள் கொழந்தைகளோட குடும்பம் குடும்பமா நடக்கவும் ஆடவும் பாடவும்னு செம ஜாலியா இருப்பாங்க. மரங்கள் நடப்பட்டுள்ள விதம் அற்புதம். அந்தத் தோட்டத்தோட ஓரத்துல இருக்கிற திறந்த மண்டபத்துல இசைக்கச்சேரிங்க நடக்கும். செமையா இருக்கும். இதுக்கு எதுத்தாப்லதான் பாந்தியன் சர்ச் அங்கேதான் வால்தருடைய கல்லறை இருக்கு.
நெறைய தமிழ் படத்துல ஹீரோ ஹீரோயின் டான்ஸ் ஆடுறது இந்த சர்ச் வாசல்லதான். இன்னொரு இடம் நோட்ர டாம் சர்ச். எங்கேயும் காதல் படம் பார்த்திருக்கீங்களா? அப்போ நீங்களும் பாந்தியன், நோட்ர டாம் சர்ச் பார்த்துட்டீங்கனு வைங்க.
ராத்திரி பத்து மணிக்கே ரூமுக்கு வந்துட்டேன். நண்பர் எஸ் மலர்ந்த முகமும் சிரிப்பும் கொண்டு பூரிப்பில் இருந்தார். எங்கயாவது பக்கத்துல போயிட்டு வந்துட்டாரு போலனு நெனச்சேன். இல்லை பொட்டி எல்லாம் கரக்டா வந்து செர்ந்திருச்சாம். அப்படியானு கேட்டுட்டு சமைக்க ஆரம்பிச்சேன். கடுப்பாயிட்டாப்ள. பொருளெல்லாம் கெடைக்கும்னு நான் நினைக்கவே இல்லைனார். அப்படியானேன். அதுக்கப்புறம், சாப்பிட மட்டும்தான் வாயைத்திறந்தார்.


No comments:

Post a Comment