Monday, March 14, 2016

பேக்கர் என்றொருவர் - விஜய் பிரசாந்த்

பேக்கர் என்றொருவர் - விஜய் பிரசாந்த்.

நான் ஒரு போதும் நினைவஞ்சலிகளை எழுதியதில்லை. இப்போதும் அப்படி ஒன்றை எழுதப்போவதில்லை. காலஞ்சென்ற ஓர் மனிதனைப் பற்றிப் பேசுவதற்கு எனக்கெந்த அதிகாரமும் இல்லை. நான் செய்யும் தொழிலிற்கும், அவருக்கும் கூட எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர் என் மீது தாக்கம் செலுத்தியவரும் அல்ல, இங்கே தாக்கம் என்பது அடிக்கோடிட வேண்டிய ஒன்று. ஆதலால், தனிநபருடனான நெருக்கத்தினால் வரும் செறிவானது என் எழுத்தில் குறையலாம். இருந்தும் நான் ஏன் அவரைப் பற்றி எழுத வேண்டும் என நினைக்கிறேன்? அதற்கான பதில் – நான் போற்றும் உண்மையென உணரக்கூடிய விழுமியங்களை வாழ்வாகக் கொண்ட சிலரில் அவரும் ஒருவர்.

ஓர் மென்பொறியாளன் தன்னைவிட இரண்டு தலைமுறை மூத்த ஓரு கட்டிடக்கலைஞரால் கவரப்படுவது இதை வாசிக்கும் வாசகர்களுக்கு வியப்பை அளிக்கலாம். சிறு வயது முதலே கட்டிடங்கள் என்னை வசீகரித்துக் கொண்டே இருந்தன. நான் மென்பொறியாளனாக வர விரும்பியதில்லை – மிக முக்கியமாக காரணம் - பள்ளியில் தலைவலியை ஏற்படுத்தும் நீண்ட நேரக் கணினி ஆய்வக வகுப்புகள்தான். நான் கட்டிடப் பொறியாளனாகவே விரும்பினேன். எங்களுக்கு முன்பாக, நாங்கள் குடியிருந்த வீட்டில் தங்கியிருந்த கட்டிடக் கலைஞர் பெயருக்கு வந்து கொண்டிருந்த வரைபடக்கட்டிடக்கலைப் புத்தகங்கள்தான் என்னைத் தூண்டியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் நான் பெரும்பாலான நேரம் கட்டிடம் கட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டோ, கட்டிடம் தொடர்பான கட்டுரைகளை வாசித்துக் கொண்டோ இருப்பேன். அந்நாட்களில் மலையாள செய்தித்தாளான மாத்ருபூமி குறைவான செலவில் கட்டிடம் கட்டுவது தொடர்பான தொடர்களை வெளியிட்டு வந்தது. அவற்றை இன்று வரை  நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். நான் கட்டிடவியலுக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றாலும், வரையத் தெரியாதவர்கள் நல்ல கட்டிடவியலாலர்களாக வர முடியாதென்ற பொதுக்கருத்தின் அடிப்படையில், எல்லோரையும் போல இளநிலைத் தொழில்நுட்பவியல் படித்து மென்பொருளியல் வேலையில் சேர வேண்டியதானது. அதனால் இப்போதும் தலைவலி எப்போதாவது வரத்தான் செய்கிறது.

நான் கட்டிடக்கலை மீது கொண்ட காதல் மட்டுமே என்னை பேக்கரை நோக்கி செலுத்தவில்லை. உண்மை என்னவென்றால் அவர் வெறும் கட்டிடக்கலை வல்லுநர் மட்டுமல்ல. அதை நாம் எளிதாக விளக்கிவிடலாம். அவர் தன் வாழ்நாளில், மயக்கமருந்தாளுநர், மதபோதகர், தோட்டவேலைக்காரர், சமையல்காரர், விவசாயி, விலங்கு மருத்துவர், காயமுற்றோரை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டி, தச்சர், கொத்தனார், பறவைகளைக் கவனிப்பவர், கவிஞர், கேலிச்சித்திரக்காரர்... என வெவ்வேறு பணிகளைச் செய்துள்ளார். மிக முக்கியமாக, அவர் தான் செய்த எல்லா வேலைகளிலும் நிபுணத்துவம் கொண்டவராக இருந்தார். எனக்குத் தெரிந்து இதே போல் பல வேலைகளை செய்யும் நிபுணத்துவம் கொண்டவராக இருந்தவர் – புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் – வைக்கம் முகம்மது பஷீர். என் பார்வையில் பேக்கர், பஷீரைப் போலவே ஓர் முழுமையான மனிதரும் கூட.

1937ஆம் ஆண்டு லாரன்ஸ் வில்ஃப்ரெட் பேக்கர் பிர்மின்ஹாம் கட்டிடக்கலைக் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். 1940களில் இந்தியாவில் தொழுநோயாளிகளுக்கான சேவையில் ஈடுபட்டிருந்த பேக்கருக்கு மகாத்மா காந்தியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது, அது அவர் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. கிழிந்த துணியாலான காலணிகளை அணிந்த அந்த இளைஞன் காந்தியைக் கவர்ந்தான். பேக்கர் என்ற அந்த இளைஞன் இந்தியாவிலேயே தங்கிவிடுவதற்கு காந்தியுடனான அந்தச் சந்திப்பே போதுமானதாய் இருந்தது. பின்னாளில் அவர் கேரளாவைச் சேர்ந்த முனைவர் எலிசபெத் சாண்டியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த இணையர்கள் 16 வருடங்கள் இமயமலையில் வாழ்ந்தனர் – அந்நாட்களில் பேக்கர், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பொதுநலக்கூடங்கள், வழிபாட்டுக்கூடங்கள் ஆகியவற்றை நிர்மாணிக்கும் பொறுப்பில் இருந்தார். பின் அந்த இணையர்கள் கேரளாவிற்கு இடம் பெயர்ந்தனர். பிந்தைய எழுபதுகளில், திருவனந்தபுரத்தில் வளர்ச்சி ஆய்வு மையத்தைக் கட்டியமைத்த பின் பேக்கர் தன் முத்திரையை கேரளத்திலும் பதிக்கத் தொடங்கினார்.

பேக்கரின் உள்ளே இருந்த காந்திதான் என்னைக் கவர்ந்தார் என்று உணர்கிறேன். என் தலைமுறையில் காந்தி புத்தகங்களுக்குள் அடைபட்டவராகவே இருந்தார். லாரி பேக்கர் காந்தியத்தின் அழகியலை நிகழ்த்திக் காட்டினார் – அது, அதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நடைமுறைக்கு நெருக்கமாகவும், தினசரி வாழ்வில் விரவிப் பரவுவதாகவும் இருக்கும்.
அடிப்படையில் பேக்கரின் தத்துவம் என்பது இயற்கைக்கு மதிப்பளிப்பது. இயற்கையின் அலகுகளைத் தேவையின்றித் தொந்தரவு செய்யக்கூடாது என்பதை பேக்கர் ஒரு விதியாகவே பின்பற்றினார். இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த அவருடைய நினைவஞ்சலியின் தலைப்பு – அவரைப் பொருத்தவரை “இல்லம் என்பது நிலத்தின் நீட்சி.” கட்டிடம் கட்டப் பட வேண்டிய இடத்தின் நிலஅமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த அவர், அதை எந்தக் காரணத்திற்காகவும் மாற்றியமைக்காதவர். அவர் ஒருபோதும் மலைப்பாங்கான இடத்தை மட்டப்படுத்தியதோ, பள்ளக்காடான இடத்தை வேறெங்கிருந்தோ கொண்டு வந்த மண்ணால் நிரவியதோ கிடையாது. அதற்குப் பதிலாக அவர் அமைத்த கட்டிடங்கள் இயற்கையான சரிவுகளையும் கணக்கில் கொண்டு அவற்றை அனுசரிக்கும் விதமாகவே இருந்தன. ஒரு மரம் இருந்தால் அம்மரத்தைப் பிடுங்கிவிட்டு கட்டிடம் கட்டுவதற்குப் பதிலாக, அந்த மரத்தைச் சுற்றியே பேக்கரின் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதன் மூலம் அவருடைய ஒவ்வொரு கட்டிடமும் சூழ்ந்துள்ள இயற்கைக்கு அளிக்கப்பட்ட காணிக்கைகளாகவே இருந்தன.

மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் அவருடைய வழிமுறை மிகச் சிறப்பானது. பெரும்பாலோர் ஒத்துக்கொள்ளாத ஆனால் பேக்கர் பயன்படுத்திய காந்திய வழிமுறையானது – எந்த ஒரு கட்டிடமும் ஐந்து மைல் சுற்றளவில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே கட்டப்பட வேண்டும்- என்பது. பாறாங்கற்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அவர் அவைகளைக் கொண்டே வீடுகளை அமைத்தார். இதன் மூலம் செலவு குறைவதுடன், சுற்றி இருக்கும் சூழலுடனும், நிறத்துடனும் பொருந்திய, ஆனால் விசித்திரமான தோற்றமளிக்காத கட்டிடங்கள் கிடைத்தன. சிமெண்ட்டும், கண்ணாடியும் உற்பத்தியாக எடுத்துக் கொள்ளும் கூடுதலான சக்தியைக் காரணமாக வைத்து அவர் அவற்றைக் கூடுமானவரை மிகக் குறைவாகவே பயன்படுத்தினார்.

லாரி பேக்கர் கட்டிடக் கலையின் உண்மைத் தன்மையை உறுதி செய்தார். கட்டிடத்தில் எதைச் செய்தாலும் அதற்கொரு நோக்கம் இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். செங்கற்களால் கட்டிடம் கட்டி, அதன் மேல் சிமென்ட் பூசிய பின், செங்கற்களைப் போல தொற்றமளிக்கும் வகையில் வர்ணத்தால் வரையும் வேலையின் பின்னுள்ள காரணகாரியங்களை அவர் அறியாததில் வியப்பொன்றும் இல்லை. பேக்கரின் கட்டிடங்கள் நம்மை ஒருபோதும் ஏமாற்றாது. அவை இவற்றால்தான் கட்டப்பட்டவை என்பதை மறைக்காதவை (பொதுவாக பேக்கருக்குப் பிடித்த செங்கற்கள்). அவை புதிதாய்ப் பிறந்த குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பை உங்களுக்குத் தருபவை. அவை செங்கற்களுக்கேயான சிவப்பு நிறத்தில் மட்டுமல்லாது, வெவ்வேறு நிறத்தில் அமைந்து வித்தியாசமான காட்சிகளையும் விளைவுகளையும் உருவாக்குபவை. அருகிலிருக்கும் கறையாலும் அழுக்கினாலும் பாதிக்கப்படும் (மேற்பூச்சுப் பூசியும் வண்ணம் பூசப்பட்டும் இருக்கும்) கட்டிடங்களுடன் பேக்கரின் கட்டிடங்களை ஒப்பிட்டால், நாட்பட இயற்கைத் தாக்கங்களைத் தாங்குவதில் பேக்கரின் கட்டிடங்கள் சிறப்பானவை.

பேக்கரின் கட்டிடங்கள் ஸ்டுடியோக்களில் வடிவமைக்கப்பட்டவை அல்ல – அவர் அப்படிப்பட்ட ஸ்டுடியோ ஒன்றைச் சொந்தமாகக் கொண்டிருந்தவரும் அல்ல. அவர் எப்போதுமே கட்டிட வரைபடங்களை வரைவதற்கு முன்பு, மனை இடங்களுக்குச் சென்று, அதன் நிலவமைப்பு குறித்தும், இயற்கையமைப்பு குறித்தும் அறிந்து, அவற்றையும் கணக்கில் கொள்வார். மேலும்  ஒவ்வொரு  வாடிக்கையாளரிடம் அவர்களின் உணவு, தூங்கும் முறைகள், வேலை மற்றும் பொழுதுபோக்கு குறித்து நீண்ட உரையாடல்களை நிகழ்த்தக் கூடியவர். எனவே அவரால் ஓர் கவிஞருக்கென கட்டப்பட்ட வீட்டிற்கும், படைப்பூக்கம் ஏதுமற்ற ஓர் அரசூழியருக்கென கட்டப்பட்ட வீட்டிற்கும் பெரும் வேறுபாடுகள் இருக்கும். எனவேதான், கார்டூனிஸ்ட் அபு ஆப்ரகாமின் வீடு பாடகர் ஏசுதாஸ் வசிக்கப் பொருத்தமற்றதாக மாறிவிடுகிறது. ஒரே வகையான இரு படைப்புகளில் கூட ஒவ்வொன்றுக்குமான தனித்தன்மையைக் காப்பாற்றும் இயற்கையின் படைப்புத்திறன்பால் பேக்கர் கவரப்பட்டதே இதற்குக் காரணம்.

திருவனந்தபுரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றின் அருகிலிருக்கும் தம்பனூர் இந்தியன் காபி ஹவுசிற்கு அடிக்கடி நான் செல்வதற்கு ஒரு முக்கிய கரணம் – அது ஓர் பேக்கர் கட்டிடம் என்பதால்தான் (மற்றொரு காரணம், அங்கே கிடைக்கும் மசாலா தோசை – முக்கியமாக உள்ளிருக்கும் செந்நிற மசாலா). நீங்கள் இவ்வளவு சிறப்பான மற்றொரு காபி ஹவுஸ் கட்டிடத்தைத் திருவனந்தபுரத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. படிக்கட்டுகளே இல்லாத வட்ட வடிவிலான மூன்று மாடி உயரக் கட்டிடம் அது. மேல் செல்லும் வழி சரிவான வளைவுப் பாதையாக இருப்பது உங்களைப் பயமுறுத்தலாம், ஆனால் நான் இதுவரை அந்தப் பாதையில் யாரும் சறுக்கி விழுந்து பார்த்ததில்லை. அங்கே பணியாளர்கள் இரு கைகளிலும் அடுக்கப்பட்ட தட்டுக்களை வைத்துக் கொண்டு விரைவாக மேலும் கீழுமாகச் செல்வது வெகுஇயல்பாகக் காணக்கிடைக்கும் காட்சி. இதைத்தான் நாம் அழகும் துல்லியமும் ஒன்றிணைவது என்று சொல்கிறோம். சிலை முனையத்தில் இருக்கும் காபி ஹவுஸ் கட்டிடம் ஏன் அழகான ஓர் கட்டிடமாக இல்லை என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஓரு காலத்தில்  அதே இடத்தில் அழகான கட்டிடம் இருந்தது என்பதைக் கடந்தவாரம்தான் தெரிந்து கொண்டேன். பேக்கர் வரைந்த அந்தப் பழைய கட்டிடத்தின் வரைபடத்தைக் கூட நான் பார்த்திருக்கிறேன். இப்போதிருக்கும் பகட்டான கட்டிடத்தைக் கட்டுவதற்காக அந்தப் பழைய கட்டிடம் இடிக்கப் பட்டபோது பேக்கர் மிகவும் வருந்தியிருக்கிறார்.

நாங்கள் எங்கள் வீட்டைக் கட்ட முடிவு செய்தபோது, அதை ஓரு பேக்கர் வகை வீடாகக் கட்ட என் பெற்றோரைச் சம்மதிக்கச் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இன்றும் இருக்கிறது. என் பெற்றோரும் பெரும்பாலான பிற மலையாளிகளைப் போலவே வழக்கமான பாணியிலான – சதுர அல்லது செவ்வக வடிவிலான அறைகளையும், முழுவதும் பூசப்பட்டு வர்ணங்கள் அடிக்கப்பட்ட வீட்டையே கட்ட விரும்பினார்கள். ஏகப்பட்ட சிமெண்டும், கம்பிகளும் உபயோகித்தே அவ்வீடு கட்டப்பட்டது, இருந்தும், இன்று நிறையச் சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. பெரும் எண்ணிகையிலான ஜன்னல்களும், கதவுகளும் தரமான மரச்சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளன. அப்படியும் எனக்கு வியர்க்கவே செய்கிறது. இதை எழுதிகொண்டிருக்கும் இந்நேரத்திலும் கூட வர்ணம் பூசும் வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.(கடந்த பத்து வருடத்தில் மூன்றாம் முறை) அதற்க்குச் செலவிடும் தொகையைக் கொண்டு பேக்கர் ஓர் சிறு வீட்டையே கட்டிவிடுவார்.
இன்னும் கூட எனக்கு பேக்கர் வீடொன்றில் வாழும் கனவு உண்டு – அது வெளிவெப்பத்திலிருந்து காக்கும் வகையிலான எலிவளை இணைப்பு மூலம் இணைக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டதாக, குளிர்ந்த காற்றை அனுமதிக்கும் காற்றிடைச் சுவர்களால் சூழப்பட்டதாக, வெப்பத்தை வெளியேற்றும் மேற்கூரைக் காற்றுத் திறப்பான்கள் கொண்டதாக, வட்டமும், அறுங்கோணமுமாக இருக்கும் அறைகளைக் கொண்டதாக, சுவற்றில் பதிக்கப்பட்ட (உபயோகமற்ற) போத்தல்கள் வழியாக வரும் ஒளி உருவாக்கும் கலைடாஸ்கோப் ஓவியங்கள் விழும் களிமண் ஓடுகளைக் கொண்டதாகவும் இருக்கும் அந்த வீடானது உண்மையிலேயே இயற்கையின் நீட்சியாக இருக்கும்.

பேக்கர் பேருயரம் கொண்ட கட்டிடங்களை அமைத்தவரில்லை (விதிவிலக்காக CDS Complex  போன்றவை இருக்கலாம்). அவர் அவருடைய கட்டிடங்கள் ஒரு பொதும் ஓர் தென்னை மரத்தின் உயரத்தைத் தாண்டுவதை விரும்பாதவர். ல கற்பூசியேகள் அல்லது லட்யன்கள் போன்ற மேல்த்தட்டு அறிவாளிகளிடையே அவருக்கு இடமின்றி இருக்கலாம். ஆனாலும் கூட ஆயிரக்கணக்கான ஏழைகள் தங்களுக்கென ஓர் கூரைக்குடிசைகள் அமைத்துக் கொள்ள உதவியதால், எல்லாக் கட்டிடவடிவமைப்பாளர்களையும் விட மேலான இடத்திலேயே அவர் இருக்கிறார். நீங்கள் திருவனந்தபுரத்தின் சேரிப்பகுதியான செங்கச்சூலயில் இருக்கும் அழகான கட்டிடங்களைப் பார்க்கும் போது தெரியும் – அவை வெறும் கூரைக்குடிசைகள் அல்ல என்று.
பேக்கரின் வழிமுறைகள் பெருமளவிலான கேரளா மக்களைக் கவராததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மக்கள் முன்முடிவுகளோடும், பழகிப்போன நடைமுறைகளோடுமே பேக்கரை அணுகுகின்றனர். பேக்கர் மாதிரி கட்டிடங்கள் புகழ் உச்சியில் இருந்தபோது வந்த நகைச்சுவைத் துணுக்கு ஒன்றில் – எனக்கு குறைந்த விலை (பேக்கர் மாதிரி) வீடு ஒன்று வேண்டும், அதற்காக எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று ஒருவர் சொல்வதாக இருந்தது. நாம் பொதுவாகவே ஒரு விசயத்தின் ஆன்மாவை அறிவதற்குப் பதில், குருட்டுத்தனமாகப் பொதுப்போக்கிலேயே செல்கிறோம். ஒருவேளை பேக்கர் வீடுகள் கேரளாவில் பரவலாகி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிப்பேன். விலைமிகுந்த ஆனால் நாகரிகமற்ற பல விஷயங்களைப் பார்க்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்காது. முக்கியமாக,தொலைக்காட்சி இடைவேளைகளில் பார்க்கும் சிமென்ட், வர்ணங்கள் குறித்த விளம்பரங்களையாவது பார்க்காமல் இருந்திருப்போம். இன்றைய நுகர்கலாசாரத்தில் இப்படியெல்லாம் நடக்குமென்று கனவேனும் காணலாமா?

பேக்கர் ஓரு கேலிச்சித்திரக்காரர் – அதில் மிகுதிறன் மிக்கவரும் கூட. அவர் மரணத்திற்குப் பின் அவர்குறித்து நிறையக் கட்டுரைகள் வந்திருந்தாலும் கூட, அவருடைய கேலிச்சித்திரத் தொடரான மலையாளியுட முண்டு (மலையாளியின் வேட்டி) குறித்து எங்கும் குறிப்பிடப்படவே இல்லை. அந்தத் தொடரை வார இதழான மாத்ருபூமி வெளியிட்டு வந்தது. (எண்பதுகளில் இருக்கலாம் – உறுதியாகத் தெரியவில்லை. என் சொந்த ஊரில் என்னிடமிருக்கும் பழைய இதழ்களில் பார்த்திருக்கிறேன்) அந்தத் தொடர் பேக்கரின் சாராம்சத்தை முழுமையாக வெளிப்படுத்துபவை. அவர் ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் எவ்வளவு தூரம் கவனித்திருக்கிறார் என்பதை அவர் வரைந்துள்ள எளிய கோடுகளின் வழியே உணரலாம். "Rubbish by Baker" மற்றும் "Baker’s Mud" போன்ற புத்தகங்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாய் இருக்கும். முன்னது கழிவுப்பொருட்களை அகற்றுவது தொடர்பானது, பிந்தையது களிமண்ணில் இருந்து கட்டிடம் கட்டத் தேவையான பொருட்களைப் பெறுவது தொடர்பானது. களிமண்ணைப் பயன்படுத்தி கட்டிடம் கட்டுவதை முழுமையாக, படங்களுடன் விளக்கிவிட்டு பேக்கர் கேட்பது – யார் உங்களுடைய மண் வீட்டைக் கட்டுவார்கள்? விருப்பமும் நேரமும் இருக்குமென்றால் நீங்களே கட்டுங்கள். இதைவிடத் தன்னிறைவைப் பற்றி உங்களால் சொல்லமுடியுமா?

பேக்கரைப் புரிந்துகொள்ளாத என் தலைமுறை, நம் காலத்தில் வாழ்ந்த ஓரு காந்தியைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தானாகவே இழக்கிறது. முக்கியமாக, சமீபத்தில் வேறெவரும் காந்தியத்தை இவ்வளவு அழுத்தம்திருத்தமாகக் கண்டவர்களில்லை. அவர் சொல்லொன்றும் செயலொன்றுமாக வாழ்ந்தவரில்லை. அவர் எந்த முறைகளை அடுத்தவர்களுக்குச் சொன்னாரோ அதே முறையில்தான் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஹேம்லெட் என்று பெயரிடப்பட்ட அவருடைய வீட்டையும் கட்டினார். ஆகையால் அவர் என் வாழ்வே என் செய்தி என்று சொல்லிக்கொள்ள முழுத்தகுதி கொண்டவராகிறார்.

ஹாம்லெட்டைக் கட்டி சொந்தம்மாக்கிக் கொண்டவரான அவருடைய நம்பிக்கையின் அடிப்படையில், அவர் ஒருபோதும் “இருப்பதா அல்லது இறப்பதா” என்று குழம்பியதில்லை. அவர் மறைந்த இந்நேரத்தில் நான் ஷேக்ஸ்பியரின் ஆண்டணியைப் போல சொல்கிறேன் பேக்கர் என்றொருவர் இங்கிருந்தார், மீண்டும் அவரைப் போல் இன்னொருவர் எப்போது வருவார்?