Wednesday, January 6, 2016

புது வருடம் – புது மனிதர்கள்

புது வருடம் – புது மனிதர்கள்
இவ்வருடத்தின் முதல் நாள், நான் பாரிஸ் கார்னர் பகுதியில் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன். உயர்நீதிமன்றத்தின் எதிரே உள்ள நடைபாதையில் ஓரு கோயிலும் அங்கே மஞ்சள் நிறஅம்மன் சிலையும் இருக்கிறது. நான் அதை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு திருநங்கை – அந்த அம்மனைப் போலவே அழுத்தமான மஞ்சள் நிறத்தில் புடவை அணிந்திருந்தவர் -என்னிடம்- சாமி கிட்டப் போயி போட்டோ எடு சார் என்றார். நான் என் செருப்பை நடை பாதையில் விட்டுவிட்டு சிலைக்கு இன்னும் பக்கத்தில் சென்று போட்டோ எடுக்கத் தொடங்கினேன். அந்தக் கோயிலின் ஒருபகுதியிலேயே இயேசுவின் படமும் மாட்டப்பட்டிருந்தது. நான் அதையும் போட்டோ எடுத்துவிட்டு, அந்தப் படம் அங்கேயிருப்பதைப் பற்றி அவரிடம் கேட்டேன். ஆமா சார் எல்லாம் நம்ம சாமிதான், ஏசுவும் அம்மனும் அல்லாவும் எங்களுக்கு ஒன்னுதான். அல்லாவுக்கு உருவங்கிடையாது, அதுனால படம் வைக்கல. சாமில இதுவேற அதுவேறையா சார்? என்று கேட்டார். நான் அவருடைய பெயரைக் கேட்க மறந்துவிட்டேன் – பெயரா முக்கியம்?



அங்கிருந்து சென்ரல் ரயில் நிலையம் போனேன். நடைபாதையில் கடை போட்டிருக்கும் குறவர் ஒருவர், என்னுடைய கேமராவைப் பார்த்தவுடனே தயவு செய்து எங்களைப் போட்டோ எடுக்காதீங்க என்றார். ஏன் என்று கேட்டேன், உங்கள மாதிரி ஒருத்தர் போட்டோ எடுத்து பேப்பர்ல போட்டுட்டார், அன்னைக்கே கடைய போலிஸ் காலி பண்ணிட்டாங்க. பொழைப்பு போயிரும் வேணாங்க என்றார். படமெடுப்பதை விரும்பாதவர்களை நான் படம் எடுப்பதில்லை என்பதால் கிளம்பினேன்.
இரவு பத்துமணிக்கு, விஜயநகர் சிக்னலில் ஒரு புறமிருந்து இன்னொரு புறம் நானும் இன்னும் சிலரும் கடந்தோம் எங்களுடன் ஒரு போலிஸ்காரரும், ஒரு தெரு நாயும். அந்த நாய் மனிதர்களைப் போலவே சிக்னலைக் கவனித்து, எங்களை ஒட்டி நடந்து வந்தது. நடுவில் இருக்கும் ரவுண்டானா அருகே வந்தவுடன் அந்த போலிஸ்காரர் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய நின்றுவிட, நாயும் நின்றுவிட்டது. நாய் உங்களதா சார் என்று கேட்டேன், அவர் இல்ல சார், கொஞ்ச வருஷம் முன்னாடி எங்கிருந்தோ அதுவா வந்து போலீஸ் கூண்டுக்கு கீழ தங்கிட்டு இருக்கு. நடு ரோடுனாலும் சரி, கூண்டு பக்கத்துலயும் சரி, நாங்க எங்க நிக்கிறமோ அங்க அதுவும் நிக்கும். அது மழைனாலும் வெயில்னாலும் வேற எங்கயும் போகாது என்றார்.

இரண்டாம் நாள், பார்த்தசாரதி கோயிலுக்குப் போனேன். நீண்ட நேரம் வெளியிலேயே நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன். வெளிமண்டபத்தில், மந்திரங்கள் முழங்க உற்சவம் நடந்து கொண்டிருந்தது. என் செருப்பை ஓரமாக விட்டுவிட்டு, உள்ளே செல்ல முயன்றபோது நுழைவாயிலில் இருந்த ஒருவர் என்னைக் கோயிலுக்குள் போகக்கூடாது என்று தடுத்தார். காரணம் – கேமரா. ஏதேனும் ஆகம விதி இருக்கும். J என் கேமரா கடவுளின் சக்தியைத் திருடிவிடும் என்பதால் நானும் வந்துவிட்டேன்.