Thursday, April 14, 2016

அம்பேத்கர் பிறந்தநாள்

இன்று அம்பேத்கர் பிறந்தநாள்.
என் அம்மா மார்க்ஸ்-ஐயும் பெரியாரையும் அறிமுகப்படுத்திய அதே காலக்கட்டத்தில்தான் அம்பேத்கரையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் என்னுடைய டீன்ஏஜ் காலத்தில் என்னுடன் விவாதிப்பதற்கும், என் கருத்துக்களுடன் முரண்படுவதற்கும், கருப்புச்சட்டைக்காரர்கள் அல்லது செஞ்சட்டைத் தோழர்கள் மட்டுமே இருந்தார்கள். தமிழகத்தில் அம்பேத்கரிய- தலித்தியச் சிந்தனை வலுவாக வேரூன்றாத காலம்(90கள்) அது. அப்போதுதான் சில செடிகள் முளைவிட்டன. இப்போதும் ஒற்றை மரமாக மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன். அது பெரும் ஆலமரமாக ஆகும் என்றும் நம்புகிறேன். பின் ஒரு காடாக.
கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே நான் அம்பேத்கரைப் பயில்கிறேன். அதற்கான போதாமைகள் என்னிடம் உண்டு. இருந்தாலும் கற்றுக்கொண்டுவிடலாம் என்றே நம்புகிறேன். நான் என் ஆழமான புரிதலுக்காக Annihilation of Caste - ஐ மறுபடி மறுபடி படிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
கடந்த சிலநாட்களாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் - முக்கியமாகத் தனித்தொகுதிகளின் வேட்பாளர்களை - பார்த்துக்கொண்டிருக்கிறேன். உதாரணமாக நேற்றைய தி.மு.கவின் தனித்தொகுதி வேட்பாளர்களில் பெரும்பாலோர் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மேலாண்மை பயின்றவர்கள். வெகு சிலருக்கே கல்வித் தகுதி குறிப்பிடப்படவில்லை. அவர்களில் சிலர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். வெகு சிலரே பட்டம் பெறாதோராக இருக்கலாம்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திய விஷயம் இது. நான் இதைக் கல்வி அளித்த விடுதலையிலிருந்து அதிகாரத்தை நோக்கிய நகர்வு என்றே நினைக்கிறேன்.


அம்பேத்கர் சொன்ன - கற்பி ! ஒன்று சேர் ! புரட்சி செய் ! என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்வோம். இப்போது கற்கிறோம், கற்பிக்கிறோம், ஒன்று சேர்கிறோம், அடுத்து வரும் காலங்களில் புரட்சி செய்யலாம். ஆயுதப்போராட்ட நிலைப்பாடுகள் எப்போதுமே உலகெங்கும் அழித்தொழிக்கப்பட்டே வந்திருக்கின்றன. எனவே நிகழவிருப்பது சமூக, பொருளாதார, அதிகாரப் புரட்சியாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் அரசியல் புரட்சி என்பது படிப்படியாக அதிகாரத்தை அடைவதாகவே இருக்கும். அதற்கான களம் பறந்து கிடக்கிறது. ஆனால் செயல்பாட்டாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இப்போதைய தேவை களச்செயல்பாட்டாளர்கள்.
மார்க்சியத்தை அம்பேத்கர் விமர்சித்தார். அவர் முன்வைத்த அமைப்பு திறந்த பொருளாதார அமைப்புடன் நெருக்கமானது. பொருளாதார விடுதலை மூலம் சாதிய விடுதலையை முன்னெடுக்கும் முயற்சி. பெரியாரும் கூட ஒரு திறந்த பொருளாதார அமைப்பையே ஆதரித்தார். அதற்குக் காரணம் - அவர் ஒரு வெற்றிகரமான வியாபாரி என்பதுதான். அவர் எந்த ஒரு பொருளியல் அறிஞரையும் விட மிகுந்த அறிவு கொண்ட நடைமுறைப் பொருளாதாரவாதியும் கூட. பொருளாதார விடுதலை எப்படிப்பட்ட சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தரும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். பெரியார், மார்க்சியத்திலிருந்து ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் வழிகளையும், திறந்த பொருளாதார அமைப்பின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளையும் இணைத்து ஒரு புதுப்பாதையை உருவாக்கினார்.
இன்றைய தி.மு.க அல்லது வி.சி.க கொண்டிருக்கும் பொருளாதாரப் பார்வை அங்கே இருந்துதான் பெறப்பட்டது. ஒருபுறம் பொது விநியோகம், விவசாய சலுகைகள், கல்வி மற்றும் வேலையில் இடப்பங்கீடு இருக்கும் அதே நேரத்தில் மென்பொருள் நிறுவனங்கள், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து வேலைவாய்ப்பைப் பெருக்குவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் - வாய்ப்புகளை மறுக்காதே.
அம்பேத்கர் தன் கல்வியின் வழியேயும், மேற்கத்திய –முக்கியமாக அமெரிக்க – அனுபவங்கள் மூலமும் பெற்ற அறிவின் வழியே அதே இடத்தை நோக்கி வந்தார். பௌத்த பொருளாதாரக் கூறுகளை-மரபார்ந்த இந்தியப் பொருளாதாரக் கூறுகளுடன் கலந்து, தான் கற்ற மேற்கத்திய திறந்த பொருளாதாரக் கொள்கைகளையும் அதனுடன் இணைத்துப் புதிய பொருளாதாரக் கோட்பாடுகளை முன் வைத்தார். அவர் ஒரு கல்விப்புலம் சார்ந்த ஆராய்ச்சியாளர் என்பதால் இரு கூறுகளை இணைப்பதிலும், அதன் மூலம் புதிய ஒரு தத்துவத்தை முன்வைப்பதிலும் சிரமங்களைச் சந்திக்கவில்லை. ஆனால் தத்துவங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலமும், அவர் கருத்துகளை உள்வாங்கும் அளவுக்குக் கல்வியறிவு கொண்ட மக்கள் திரளும் அவருக்குக் கிடைக்கவில்லை. பெரியாரின் நீண்ட ஆயுளும், காமராஜர், கருணாநிதி போன்ற அரசதிகாரச் செயல்பாட்டாளர்களும் அம்பேத்கருக்கு அமைந்திருந்தால் தலித்திய விடுதலை இன்னும் விரைவில் நிகழ்ந்திருக்கும். அப்போது, மார்க்சியத்தின் பொருளாதாரக் கூறுகளைத் தாண்டியும் சமூக விடுதலை என்ற பகுதியை அவர் கவனத்தில் கொள்ள வேண்டியதிருந்திருக்கும். “நடந்திருந்தால்” என்ற வார்த்தைக்கு வரலாற்றில் எந்த மரியாதையும் இல்லை. அம்பேத்கர் கனவுகண்ட சூழலுக்கு நெருக்கமாக வந்திருக்கிறோம். ஆனால், ஒடுக்கப்பட்டோர் இன்னும் முழுமையாகக் விடுதலை அடையவில்லை. அதை நோக்கிய பயணத்தில், நாம் -பெரியார் தனக்கென நிருபிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்காதது, அம்பேத்கர் - கம்யுனிசத்தோடு சேர்த்து மார்க்சியத்தின் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் கோட்பாடுகளையும் ஒதுக்கியது போன்று - அவர்கள் தவறவிட்ட இடங்களைக் கவனிப்போம். கற்றுக்கொள்வோம், கற்பிப்போம், சரி செய்வோம், முன்னேறுவோம்.
நமக்கு முன், மார்க்சியம் சமூக விடுதலையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. திறந்த பொருளாதாரம் சமூக விடுதலையை விடத் தனி நபர் விடுதலையை முன்வைக்கிறது. நமக்குத் தேவை சமூக-தனிநபர் விடுதலைதான். இது அல்லது அது என்ற இருமையைத் தவிர்த்து அவரவருக்கான மானுட, சமூகத் தேவைகளைக் கவனிப்போம். எது சரி என்பதைவிட, எது தேவை என்பதையே ஓர் ஒடுக்கப்பட்ட சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறிய பின், சரி என்ற நிலைக்கு எதிர்காலத்தில் நகரலாம்.


இந்தப் படங்களைப் பாருங்கள் நண்பர்களே.
அம்பேத்கர் – மம்முட்டி நடித்த படம் -https://www.youtube.com/watch?v=yv6aU-_9xQ0
அம்பேத்கர் பற்றிய டாகுமெண்டரி -https://www.youtube.com/watch?v=uRbmGJrkbYs

No comments:

Post a Comment