Monday, May 23, 2016

மடை - எழுத்தாளர் ஜெயமோகனுக்குக் கடிதம்

index
அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் எழுதி இருக்கும் – யாகவா ஆயினும் நாகாக்க! என்ற கட்டுரையிலுள்ள கருத்துகளை மறுக்கிறேன்.
பனையில் வைரம் பாயாது என்று திரு.ஒத்திசைவு ராமசாமி சொல்லியிருப்பதையே எடுத்துக்கொள்வோம். ஏதேனும் ஒரு கத்துக்குட்டி ஆசாரியிடமாவது போய் கேட்டாலே, அவர்கள் பனையில் வைரம் உண்டு என்று சொல்வார்கள். ஆனால் வைரம் நடுமரத்தில் அல்ல புற மரத்தில் இருக்கும். வலிமையான அதன் வெளிப்புறத்தை மட்டுமே நம்மால் எதற்கும் பயன்படுத்த முடியும். அதற்கு மரவேலை செய்பவர்கள் வைக்கும் பெயர் வைரம். வேலைக்கு ஆகாத உட்புறத்தைக் குறிப்பதல்ல அது. உட்புறத்தின் பெயர் – சோறு. (தின்பதற்கானது அல்ல). நல்ல வேளை, வைரம் என்றால் நகை செய்ய முடியுமா என்று திரு.ராமசாமி கேட்கவில்லை.
இருபது வருடம் முன்புவரை பெரும்பாலான கிராமங்களில் வீடு கட்டுவதற்கு பனையே அடிப்படை. அவரவர் வயல்களில் வளர்ந்து நிற்கும் பனைகளை வெட்டி மூன்று மாதம் வரை ஆறப்போட்டு, பதம் கொண்ட பின் பிளக்கப்பட்டு கைமரம் என்ற வடிவத்தை அடையும். வீடு கட்டும் எண்ணம் வந்தவுடனேயே, ஆசாரிகள் அழைக்கப்படுவார்கள். அவர்கள் மூலம் நம்முடைய நிலங்களில் நிற்கும் பனையில் வயதில் மூத்த, அதே சமயம் வைரம் கொண்ட மரங்கள் அடையாளம் காணப்படும். பின் அவை அறுக்கப்பட்டு மேல் சொன்னபடி கைமரமாகும். சில மரங்கள் உச்சியில் நைந்து போய் இருக்கும். அவை ஒட்டுமொத்தமாகச் சுண்ணாம்புக் காளவாசலுக்கு அனுப்பப்படும். செட்டிநாட்டின் அத்தனை வீடுகளுக்கும் கடைசிக்கட்டு என்பது சமையலறை மற்றும் கூடம். அவை இந்த வைரம் பாய்ந்த பனைகளால் கூரை வேயப்பட்டவை. என் அம்மாவின் பரம்பரை வீடு 180 வருடம் பழைமையானது, இன்னும் இடியாமல் இருக்கிறது. அவ்வீட்டின் சமையலறையில் இன்னும் பனங்கை நிற்கிறது. சரியான பராமரிப்பில் அதன் ஆயுள் நாம் நினைப்பதைவிட அதிகம். நூறு வருடம் வரைகூட நிலைக்கும். தண்ணீரில் 5 முதல் 10 வருடம் நிலைக்கும். ஒரே எதிரி – கரையான்.
சரி. அடுத்து பனையைக் குடைந்து தண்ணீரைப் பாய்ச்ச முடியுமா என்ற கேள்வி. அப்படி அமைக்கப்பட்ட தூம்பில் நானே தண்ணீர் பாய்ச்சி இருக்கிறேன். அதில் அரைத்தூம்பு, முழுத்தூம்பு என இரண்டு வகை உண்டு. சுமார் பத்து வருடங்கள் வரை அது தாக்குப்பிடிக்கும். இன்றைய பிளாஸ்டிக் நீர்க்குழாய்கள் வருவதற்கு முன் பனைத்தூம்புகள்தான் பயன்பாட்டில் இருந்தன. நீர் வற்றிய கண்மாய்களில் இருக்கும் பள்ளங்களில் இருந்து நீரை வெளியேற்றி அதில் பத்தை என்ற மீன்பிடிக் கருவியைப் பயன்படுத்தி மீன் பிடிக்கலாம். அப்போதும் கூட இந்த பனைத்தூம்புகளே பயன்படுத்தப்படுகின்றன(பட்டன). ஆகவே ஆதியில் நீர்பாய்ச்ச பனைத்தூம்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதில் சந்தேகமே கொள்ளத்தேவையில்லை.
அடுத்து மடை – சோழர்கள், பாண்டியர்கள் மடைகளில் சில வேறுபாடுகள் உண்டு. பாண்டிய நாட்டின் மடைகள் பெரும்பாலும் இரு பகுதி கொண்டவை. ஒன்று கண்மாய்க்குள் இருக்கும் உள்மடை – இன்னொன்று கரைக்கு வெளியே இருக்கும் வெளிமடை. இரண்டையும் இணைக்கும் கல் தூம்பு (குழாய் – பாதை). நிச்சயமாக இந்தக் கல்தூம்பு பின்னால் வந்தது. வெகுகாலம் முன்பு இவை எப்படி இருந்திருக்கும்? – பனைத்தூம்புகளாக இருந்திருக்கலாம். ஏனென்றால் உள்மடை என்ற அமைப்பு உருவாகும் முன், கண்மாயின் உள்பகுதியில் இருந்து வெளிமடையை இணைக்க 25 அல்லது 30 அடி நீளக் குழாய் தேவை. அதற்கு பனையைத் தவிர சுலபமான வேறெந்த வாய்ப்பும் நம்முன்னோரிடம் இருந்திருக்காது. (இன்னொரு வாய்ப்பு சுட்ட களிமண் குழாய்கள்) ஆகவே பேராசிரியரின் கூற்று உண்மையாய் இருக்கலாம்(லாம்தான் – உறுதியாக அல்ல). பின்னாளில் கல்லால் அடித்து இருபக்கங்களையும் இணைத்து, உள்மடை – வெளிமடை என்று மடை அமைப்பை மேம்படுத்தி இருக்கலாம் (மரக்கோயில்கள் கற்றளிகள் ஆனது போல). உறுதியாகத் தெரியவில்லை. அந்த அப்ஸ்ட்ராக்ட்-ல் இருக்கும் குறைகளை முன்வைத்து அவருடைய கூற்றை மறுக்கலாம் அல்லது காஞ்சி-மாமண்டூரில் இருக்கும் ஆயிரம் ஆண்டு பழைமையான மடையை முன்வைத்தும் அவரை மறுக்கலாம். ஆனால், பனைத்தூம்பே இல்லை, மூழ்கி நீர் திறப்பது என்ற வழக்கமே இல்லை என்பதெல்லாம் ஆய்வுக்கட்டுரைக்கான பதில்கள் அல்ல.
செட்டிநாட்டில் மடை ”திறக்க” அனுமதிப்பதற்கு என்றே அதிகாரம் கொண்ட ஒரு குடும்பம் இருக்கும் – எங்கள் ஊரில் அம்பலங்கள் (கள்ளர்கள்). மடையாணி “பிடுங்க” என்றே எங்கள் ஊரில் ஒரு குடும்பம் உண்டு. அவர்கள் பெரும்பாலும் தேவேந்திரகுல வெள்ளாளர்கள். பெரிய கண்மாய்கள் அருகே அய்யனார் கோயில் இருக்கும் – அதன் பூசாரிகள் – குயவர்கள். மடைக்கு அருகில் மடமுனி (மடைமுனி) என்று எந்த ஒரு உருவம் இல்லாத சூலம் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். அய்யனாருக்குப் பூசை செய்யும் வேளார் (குயவர்)-க்கு மடமுனியைப் பூசிக்கும் உரிமை கிடையாது. மடை திறக்கும் நாள், அவ்வுரிமை கொண்ட தேவேந்திர குல வெள்ளாளர் குடும்பத்தின் தலைமகன் மடமுனிக்கு பூசை செய்து உள்/வெளிமடைகளுக்கும் பூசை செய்வார். பின் அவர் வெளிமடைக்குள் இறங்கி மடையாணி (வலுத்த கட்டை) பிடுங்கிவிட நீர் பாயும். மேலேறும் போது அரை மடைக்கு நீர் சுழித்துக் கொண்டிருக்கும். மடையாணி பிடுங்கும் அந்த உரிமை வேறெந்த இனத்தவருக்கும் கிடையாது. பெரும்பாலும் அவர்களே போகம் முழுவதும் எல்லோருக்கும் முறை வைத்து நீர் பாய்ச்சுவார்கள். என் ஐயா(அப்பாவின் அப்பா – தீவிர காந்தியவாதி – சுதந்திர இந்தியாவின் பொதுப்பணித்துறையில் அதிகாரி – மடை திறக்க அனுமதிக்கும் குடும்பத்தில் பிறந்தவர் – பொய் சொல்ல வேண்டிய தேவையற்றவர்)விடம் மடமுனியின் கதை என்ன என்று நான் கேட்டிருக்கிறேன். சில நூறு ஆண்டுகள் முன், எங்கள் முன்னோர் அனுமதியின் பேரில் மடையாணி பிடுங்கப்போய், இறந்துப்போன (தேவேந்திர குல வெள்ளாளர்) ஒருவரின் கல்லறை அது என்று சொல்லி, அவரின் குடும்பமே இன்றுவரை மடையாணி பிடுங்கும் உரிமை கொண்டது என்று சொன்னார்.
கண்மாய்களில் நீர் பெருகி, மறுகால் போகும்போது வெளிமடையில் மடையாணி பிடுங்குவது இன்றும் ஆபத்துதான். சற்றே கவனம் பிசகினாலும், அதீத அழுத்தம் கொண்ட நீர் மனிதனை உள்ளிழுக்கும் சாத்தியம் உண்டு – ஒப்பீட்டளவில் மேம்பட்ட மடை அமைப்பு என்பதால் இறப்பு நிகழாது, ஆனால் கைகால் உடையும் வாய்ப்பு உண்டு. இது தொன்னூறுகள் வரையிலான நிலை. இன்று அப்படி அல்ல. உள்மடையிலும் கூட அடைக்கவும் திறக்கவும் முடியும். ஆனால் எனக்கு விபரம் தெரிந்து உள்மடை அடைக்கும் வழக்கம் இப்போது இல்லை. ஏனென்றால் இன்று நீர் நிரம்பிய உள்மடையில் இறங்கி நீர் திறக்கும்/அடைக்கும் வலிமை கொண்டவர்கள் யாருமில்லை. அப்படி யாராவது இறங்கினால் நானே, சரியான மடையனாக இருப்பான் போல என்றுதான் சொல்வேன். இன்று கண்மாய்களில் நீரே இல்லை, மடைகள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் இரும்பு ஷட்டர் போடப்பட்டு, அவை துருப்பிடித்து நகர்வதே இல்லை. கண்மாய்க்கு மடைதிறக்கும் அளவிற்கு தண்ணீர் வந்து பத்து வருடம் இருக்கும். இன்னும் கொஞ்ச நாளில் மடை என்பதே கற்பனை என்றுகூட யாரேனும் சொன்னால் ஆச்சர்யம் இல்லை.
ஆய்வாளன் தன் அனைத்து ஆய்வுகளிலும் சரியான முடிவுகளை அடைய முடியாது. அது ஒரு முயற்சி. அது தவறான முடிவே என்றாலும், அதிலிருந்து சரியை நோக்கி நாம் பயணப்பட முடியும். ஓர் ஆய்வுக்கட்டுரைக்கு எதிர்வினை மற்றொரு ஆய்வுக்கட்டுரையாகவே இருக்க வேண்டும். அவதூறுகள், நக்கல், கலாய்ப்பது ஆகியவை அல்ல என்று நீங்களே பலமுறை கூறி இருக்கிறீர்கள். தெங்கு குறித்த நாஞ்சிலின் கட்டுரையையே தொ.ப.விற்கான எதிர்வினை என்று நினைக்கிறேன். நீங்கள் மடை-மடையன் பற்றி அப்படி ஒன்றை எழுதினால் இதுபற்றி இன்னும் சில கருத்துகளை நாங்கள் அறிவோம். உங்கள் மீதும், தொ.ப மீதும் எனக்குள்ள மரியாதையாலேயே இதை எழுதினேன். என்ன இருந்தாலும் உங்களைப் போலவே தொ.ப எங்களுக்கும் ஆசிரியர் அல்லவா? நன்றி.
இதுவும் என் ஊரின் அருகில் உள்ள ஊர்தான்.
அன்புடன்,
பா.சரவணன்
***
அன்புள்ள சரவணன்
விவசாயம் சார்ந்த செயல்களுக்கு எனக்கு ‘செவிவழி’ தகவல்களை நம்பியிருக்கவேண்டியதில்லை. நானே அவற்றையெல்லாம் செய்திருப்பேன்.
பனைமரத்தை மடையாக குறைந்தது ஐம்பது முறையேனும் நானே அமைத்திருக்கிறேன். எங்களூரில் வயலில் இருந்து நீரை வெளியேற்ற பனை மடை பயன்படும்
பனையை இரண்டாகப்பிளந்து உள்ளிருக்கும் பாரை சுரண்டி எடுத்துவிட்டு இரண்டையும் சேர்த்துப்பொருத்தினால் மடையாக ஆகும். அதை வரப்பிலோ கரையிலோ புதைத்து வைப்போம். ஒரு பனைமரத்துக்குள் உள்ள மடையின் அகலம் அதிகபட்சம் தொடக்கத்தில் இரண்டு சாண். நுனியில் ஒரு சாண். அதில் ஆள் எல்லாம் நுழையமுடியாது
பனைத்தடி கழுக்கோலாக ஆகும். ஆனால் மெல்லிய பலகை எல்லாம் ஆகாது. அதன் சுற்றுவட்டத்தின் கரியபரப்புடன் கனமான பாரும் கலந்திருந்தால் மட்டுமே வலு. அதன் பட்டைப் பொருக்கில் வலிமை கிடையாது.
பனைமடை எதற்கு என்றால் மிக அகலமான கரைகள் மற்றும் வரப்புகளுக்குத்தான். நீளமான குழாய். மண்ணிலும் ஈரத்திலும் இருந்தால் அது கூடிப்போனால் பத்து வருடம் மட்காமலிருக்கும்.
எரிகள் குளங்களுக்கு கல்லால் ஆன மடைகள் சோழர்காலத்திலேயே வந்துவிட்டன. சோழர்காலத்தைய, நாயக்கர் காலத்தைய நீர் மட்டம் காட்டும் கிடைக்கல் மற்றும் கல்மடைகள் இன்றும் உள்ளன. குமரிமாவட்ட ஏரிகள் பற்றி அ.கா.பெருமாள் ஆய்வுசெய்திருக்கிறார்
ஏரிக்காவலர், மடைப்பொறுப்பாளர் எல்லா ஊரிலும் உண்டு. மடைதிறப்பதில் இறப்புகள் நிகழ்ந்திருக்கவுகூடும். ஆனால் அவர்கள்தான் மடையர்கள், அவர்கள் ஒருவகை தற்கொலைப்படை, அவர்களை வெற்றித்திலகமிட்டு அனுப்புவர் என்றெல்லாம் சொல்ல மேலதிகத் தரவுகள் தேவை. அம்முடிவுகளுக்கு வர ஆய்வு முறைமை தேவை. முன்னுதாரணங்கள் தேவை.
இவை நாட்டாரியல் சார்ந்த தரவுகள். ஏதேனும் ஒரு தகவலாளி அதைச் சொல்லியிருக்கவும் கூடும். இவற்றைக்கொண்டு நேரடியாக வரலாற்று முடிவுகளுக்கு செல்வதும், அம்முடிவுகளை அருள்வாக்கு போல அறிவிப்பதும் எல்லாம் ஆய்வு அல்ல. அத்துடன் அந்த ஆய்வுமுடிவுகளுடன் இனம், மொழி என அபாயகரமான உணர்வுகளையும் காழ்ப்புகளையும் கலந்துவிடுவதும் சரி, விவாதத்திலிருந்து எதிர்தரப்பை விலக்குவதும் சரி எவ்வகையிலும் ஏற்றுக்கொள்வதற்குரியதல்ல.
ஆய்வுகளின் முடிவுகள் ஆய்வால் எதிர்கொள்ளப்படவேண்டியவை. ஆனால் இத்தகைய ‘அடிச்சுவிடல்கள்’ ஆய்வாக விவாதிக்கப்படும்போது சமூகவியல், நாட்டாரியல் போன்ற துறைகளின் நம்பகத்தன்மையே இல்லாமலாகிறது. நாட்டாரியல்தகவல்கள் 1. முதன்மைத் தகவலாளியின் இடம், பெயர், காலம் ஆகியவற்றுடன் இணைந்தால் மட்டுமே தரவாக ஆகமுடியும் 2 அவை முதன்மைத்தரவுகள் அல்ல. அவை பல்வேறு சமானமான தரவுகள் வழியாக மீண்டும் மீண்டும் நிறுவப்படவேண்டும். 3 அவற்றுடன் இணையும் தொன்மையான மொழிஆதாரங்கள் இருக்கவேண்டும். 4 தொல்பொருள் சான்றுகள் இருக்கவேண்டும் 5 மேலும் அவை பிறநாட்டாரியலாளர்களால் விவாதிக்கப்பட்டு பொது ஒப்புதல் பெறப்படவேண்டும்
இம்முறைப்படி அன்றி எழும் கருத்துக்கள் வெறும் கருத்துக்களே. அவற்றைச் சொல்லிச்சொல்லி நம்பிக்கைகளாக ஆக்குதலும், மிகையான உணர்வுக்கொந்தளிப்புகளும், சொந்த சரக்குகளை ஊடாக கலந்துவிடுதலும் பெரும்பிழைகள் அவை உரியமுறையில் இவை புறக்கணிக்கப்படவேண்டும் என்றே நினைக்கிறேன்
இத்தகைய ஊகங்களை மேடைகளை நம்பி உருவாக்குகிறார்கள். மேடைகளில் இவை அழியாது வாழ்கின்றன. நம் அறியாமை, இன மொழி மேன்மைக்காக எதையும் நம்பும் அப்பாவித்தனம் ஆகியவற்றின் சான்றுகளாக நீடிக்கின்றன
இத்தகைய அனைத்து கூற்றுக்களையும் நான் எதிர்த்து, நகையாடி, வருகிறேன் என்பதைக் காணலாம். தலைவர்களைப்பற்றி, ஊர்களைப்பற்றி  இப்படியெல்லாம் உருவாக்கப்பட்டு மேடைகளில் உலவும் அசட்டுக்கதைகளை கடந்துசெல்வதே அறிவியக்கத்தின் அடிப்படை
இதை ஒரு கதையாக, நம்பிக்கையாக தொ.ப முன்வைத்திருந்தால், ஒரு நாவலில் இது வந்திருந்தால் அது வேறு.ஆய்வு என ஒன்று முன்வைக்கப்படும் என்றால் முதலில் தரவு, இரண்டாவதாக முறைமை தேவை. நம் ஆய்வுத்துறைகள் அனைத்துமே பாமரத்தனமான நம்பிக்கைகளாலும் சவடால்களாலும் நிறைந்துள்ளன. நாம் அதை மீட்டாகவேண்டும் என்னும் நிலையில் இன்றிருக்கிறோம்.
ஜெ