Thursday, August 18, 2016

சிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்


அண்ணன் பாலபாரதி புத்தகக்கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுத்து கண்டிப்பாகப் படிக்குமாறு சொன்னார். அவருக்கு நன்றி.

சிக்கவீர ராஜேந்திரன் நாவல் பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்டது. இங்கே நான் பேசப்போவது ஒரு வாசகனாக என்னுடைய பார்வையை மட்டுமே.

இந்த நாவலின் பாராட்டத்தக்க அம்சமாக நான் கருதுவது - அதன் களம் – முக்கியமாக அழிவின் ஆரம்பத்தில் இருக்கும் குடகு ஜமீன் – ஆங்கிலேயப் படையெடுப்பின் ஆரம்ப காலம் – மன்னர், மந்திரிகள், மக்கள் - அவர்களிடையே இருக்கும் தவிர்க்கவே முடியாத உறவு.

ஓர் எழுத்தாளனுக்கு வரலாறு அளிக்கும் சுதந்திரத்தை வேறெந்தக் களமும் அளிப்பதில்லை. இந்த இடத்தில் போரும் வாழ்வும் நாவலை எடுத்துக் கொள்வோம். அதில் இருக்கும் நீண்ட அத்தியாயங்கள், கதாப்பாத்திரங்களின் குணநலன்களையும், நிகழ்வுகளையும் வரலாற்றின் வேறொரு முனையிலிருந்து பார்க்கும் வாய்ப்பை ஒரு வாசகனுக்கு அளிக்கின்றன.

நான் இந்த நாவலை வாசிக்கும்போது, யாரோ ஒருவர் நம்மிடம் அந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன். கதை கேட்கும் போது, சொல்லும் நபரின் ஆளுமை சொல்லும் விஷயத்தில் கலந்து கேட்கும். அது கேட்கும் நபர் ஒவ்வொருவருக்கும் அவரவர் அநுபவம் மற்றும் விருப்பம் சார்ந்த புரிதலையே தருகிறது. எந்த ஒரு கதையும் இன்னொருவருக்கு அதே கதையாகப் போய்ச் சேர்வதில்லை. இதை அனுபவித்துப் பார்க்க எழுத்தாளர்கள் பவா, எஸ்.ராமகிருஷ்ணன் இருவரின் கதை சொல்லலை மற்றவர்களின் கதை சொல்லலோடு ஒப்பிடலாம். குறிப்பாக பவா எழுத்திலும், பேச்சிலும் கதைகளை நிகழ்த்திக் காட்டுவார். ஆனால் மாஸ்தி அய்யங்கார் தனக்குத் தெரிந்த ஓர் உண்மையை, கொஞ்சமே கொஞ்சமாகத் தன் கற்பனைகளைக் கலந்து சொல்கிறார். அங்கே கதை நிகழவெல்லாம் இல்லை, கதை நமக்குச் சொல்லப்படுகிறது.

இலக்கியத்தில் நுழையும் வாசகனுக்கு இந்த ‘சொல்லல்’ பிடித்துதான் போகும். ஏனென்றால் வாசகன் அங்கே நடந்ததை ஒரு நம்பிக்கையான நபரிடம் இருந்து கேட்கும் உணர்வை அடைகிறான். அங்கே பெரும் கற்பனைகளோ, நிகழ்ந்ததற்கு முற்றிலும் மாறான சம்பவங்களோ நிகழவே போவதில்லை. அரிச்சந்திர மயானகாண்டம் நாடகம் பார்ப்பதைப் போல, ஆண்டாண்டு காலமாய் நமக்குத் தெரிந்த அதே கதையை நிகழ்த்தினாலும், அது நமக்கு அளிக்கும் ஒட்டு மொத்த உணர்வுக்காக அதை மீண்டும் மீண்டும் பார்த்தபடியே இருப்போம் இல்லையா? அதுதான் சிக்க வீர ராஜேந்திரனிலும் நிகழ்கிறது.

இந்த நாவலைப் படிக்கும் போது நாம் மேலே சொன்ன விஷயங்களோடு எழுதப்பட்ட காலம், எழுதியவரின் பின்புலம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு சில சலுகைகளை அளிக்க வேண்டியதிருக்கிறது. இந்த நாவலில் சொல்லப்படும் தாரை தப்பட்டை கேட்பவனுக்கு கர்நாடக இசை புரியுமா? கடவுள் மறுப்புக் கொள்கைகளை விமர்சிக்கும் பகுதி, திப்புவை மதவெறியனாகக் காட்டுவது, சாதிய/மத நியாயப்படுத்தல்கள் - இவற்றையெல்லாம் நான் கணக்கில் கொள்ளவில்லை.

பொதுவாக நாவலின் ஓட்டத்திலேயே அதைப் புரிந்துகொள்வது என்பது ஒரு வழிமுறை. ஆனால் நான் எந்த நாவலையும் அதன் பெரும் கூறுகளின் வழியே மட்டுமே புரிந்து கொள்வேன். இந்த நாவலை நான் நான்கு வெவ்வேறு பார்வைகளில் புரிந்து கொள்ள முயன்றேன்.

குடகின் ஜமீன் - சிக்க வீர ராஜேந்திரன் என்ற மனிதன் - மக்களும், சுரண்டல்களும், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பும் - நொண்டி பசவன் & ராஜேந்திரன் என்ற இரு தனி நபர்களிடையேயான உறவு அதில் சிக்கி சீரழியும் நாடு.

இதில் அய்யங்கார் குடகின் வரலாற்றையும் அழிவையும் முதன்மைப்படுத்தியே இந்த நாவலை எழுதியிருக்கிறார். அந்தப் பார்வையில் அதை நாம் படித்தால் இந்த நாவல் ஒரு குறிக்கோள் கொண்டதாகவேபடுகிறது. இது குடகின் கதை என்றால் சிக்கவீர ராசேந்திரன் ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே. குடகின் வர்ணனைகள், பின்புலம், மக்கள் மற்றும் அதிகார முரண்கள் வழியாக அவனும் பேசப்பட்டிருக்க வேண்டும். மிகச்சமீபத்தில் இந்தக் கதை நிகழும் பகுதியில் இரண்டு பயணங்களை மேற்கொண்டேன். அதை வைத்துப் பார்த்தால் நாவலில் வரும் வர்ணனைகள் மிகத் தட்டையானவை. நாவல் என்பது ஒரு மேடை, அதில் நிகழும் சூழல் குறித்த ஆழமான வர்ணனைகள் இல்லாவிட்டால் வாசகன் அந்தச் சூழலோடு தன்னை இணைத்துக் கொள்ள முடியாமல் போகிறது. அதுபோக, அந்நிலத்தின்  நீண்ட வரலாறு, நிலவியல், வருமானம், அது சார்ந்து மக்கள் வாழ்வு, தலைமை, ஒழுக்கம் மற்றும் ஒழுக்க மீறல், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்று ஒரு முழுமையான பார்வையை நாவல் முன் வைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஓர் ஒப்பீட்டிற்காக நாம் கிராவின் கோபல்ல கிராமத்தை எடுத்துக் கொள்வோம். அதுவும் ஒரு வரலாற்றைப் பேசுகிறது – மக்களின் வரலாறு. அதில் வரும் கழுவேற்றும் காட்சியில் சுற்றிலுமான மக்கள், அவர்களின் மனநிலை, ஏற்பாடுகள், உடலைத் துளைத்து வெளியேறும் கழு, அதன்பின் மக்களிடம் ஏற்படும் மனநிலை மாற்றம், அதற்குப் பின் ஏற்படும் சமாதானம், கொல்லப்பட்டவன் கடவுளாதல் என்று அதை கிரா நம்மிடம் சொல்வதன் மூலம் – அவர் நிகழ்த்திக்காட்டுகிறார். ஆனால் சிக்க வீர ராஜேந்திரனில் அது தவறிவிட்டது.

இந்த நாவலை சிக்கவீர ராஜேந்திரன் கதையாக மட்டுமே கொண்டு பார்த்தோமென்றால், அவனுடைய அதிகாரவெறி, அதற்காக அவன் மேற்கொள்ளும் நேர், எதிர் நடவடிக்கைகள், உடல் நலன், ஒரு குழந்தையைக் கொல்லும் மனநிலை - சுற்றிலுமான பெண்கள் - அவன் அம்மா, பெரியம்மா (நொண்டி பசவனின் அம்மா பகவதி), அவனையும் பசவனையும் வளர்த்த ஒரே கிழவி, ராஜேந்திரனின் மனைவி, மகள், தங்கை, பேத்தி, விலை மகளிர், ஆசைக்காகவே தூக்கி வரப்படும் பெண்கள், வெள்ளைக்காரப் பெண்கள் - அவனுடைய மந்திரிகள், உத்தையதக்கன், சென்னபசவன் என மையத்தைச் சுற்றி விரிவாக அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அவர்களுடைய மனநிலை விரிவாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். நாவலில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அதற்கான வெவ்வேறு ஆழங்களோடு பேசப்படவேண்டும். ஆழமற்ற புறச்சித்தரிப்புகள் வாசகனுக்குக் கடந்தவேண்டிய உணர்வுகளைக் கடத்துவதில் தொல்வியுறுகின்றன.

இன்னொரு பார்வையில் மக்களும், அரசச் சுரண்டல்களும், ஆங்கிலேய ஆக்கிரமிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றன - அரசு, மக்கள், சாதிய  முரண்கள், அதிகாரப் படிநிலைகள், மக்களை அழுத்திச் சுரண்டி கொழுக்கும் அரசர்களுக்கும் மக்களுக்குமான முரணியக்கம், அது குறித்த கேள்விகள், ஏன் மக்கள் முற்றுமுதலாக ஆங்கிலேயரை எதிர்க்கும் மனநிலைக்கே வரவில்லை? ஏன் சாதாரண மனிதர் வாழ்விற்கும் அரச வாழ்விற்குமான இடைவெளி இவ்வளவு பெரியதாக இருந்தது? புரட்சி இயக்கங்கள் ஏன் மன்னரை எதிர்த்த அளவில் ஆங்கிலேயர்களை எதிர்க்கவில்லை? என்பது போன்ற கேள்விகளுக்கு நாவலில் இடமே இல்லை.

இந்த நாவலை மற்றொரு கோணத்தில் புரிந்து கொள்ள முயன்றேன். அது நொண்டி பசவன் மற்றும் சிக்க வீர ராஜேந்திரன் இடையிலான உறவு. நொண்டி பசவனைக் கதாநாயகனாகக் கொண்டு அவனுடைய பிரதியாக (Copy) சிக்க வீர ராஜேந்திரன் படைக்கப்பட்டு, இந்த இருவரிடையே இருக்கும் இயைபுகள் (harmony), முரண்கள் எப்படி ஒட்டு மொத்த நாட்டையும் பாதிக்கிறது என்று புரிந்துகொள்ள முயலும் போது இது வேறொரு நாவலாக இருக்கிறது. உண்மையில் அத்தனை தகுதியும் கொண்ட பசவன் கால் முறிக்கப்பட்டு நாய்களோடு நாயாக வளர்க்கப்படுவதும், தகுதியேதுமற்ற ராஜேந்திரன் முழு அதிகார வசதிகளோடு வளர்க்கப்படுவதும் - என்ன மாதிரியான வாய்ப்புகள்? ஒரே கிழவியே இருவரையும் வளர்க்கிறாள். நொண்டி பசவன்தான் நாட்டை ஆள்கிறான். அவன் பிறப்பு - ஓர் இழிவு, வளர்ப்பு - மற்றோர் இழிவுமந்திரிப் பதவி - ஓரு பிச்சை. ஆனாலும்கூட அவன்தான் அரசை நடத்தும் கருவி. பிறப்பால், எண்ணத்தால் உயர்ந்த மற்ற மந்திரிகளோ, விசுவாசிகளோ, ஏன் மன்னனோ கூட அவனுடைய அதிகாரத்தில் கைவைக்க முடிவதில்லை. தன் சகோதரியை - அவள் மன்னனுக்கும் சகோதரி - மடி மேல் அமர்த்துகிறான், மன்னன் அனுபவிக்கும் பெண்களை அவனும் அனுபவிக்கிறான், மன்னனுக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் கூட்டிக் கொடுக்கிறான். ஒரு குழந்தையைக் கொல்லவேண்டிய சமயம் தவறியதை நினைத்துச் சந்தோசப்படுகிறான். தன்னை நாயோடு நாயாக்கிய சமூகத்தைப் பழிவாங்குகிறான். மிக முக்கியமாக யாரெல்லாம் நல்ல மனிதர்களாக இருக்கிறார்களோ அவர்களை எல்லோரையுமே துன்புறுத்துகிறான். இறுதியில் தகுதி எதுவும் அற்ற தன்னுடைய பிரதியினாலேயே கொல்லப்படுகிறான். வாழ்க்கை அரசனைப்போல அவனையும், கையாலாகாதவனாக ராஜேந்திரனையும் உருவாக்குகிறது. ராஜேந்திரனுக்குக் குற்ற உணர்வோ, தண்டனைகளோ எதுவும் இல்லை. இறுதிவரை அவன் செல்லாக்காசாகவே இருந்து முடிக்கிறான்.

இவையெல்லாம் தவிர்த்து இந்த நாவலில் வரும் பெண்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மையோடு இருக்கிறார்கள். அரசருக்குப் பிறக்கும் தன் குழந்தையைக் கைவிடும் பகவதி, நீண்ட நெடும் காலம் காத்திருக்கிறாள். மகன் நொண்டி என்று அழைக்கப்படுவதை, அவன் தன்னைத்தானே தகுதிக் குறைவாக உணர்வதை, அவன் எடுபிடியாக இருப்பதை வெறுக்கிறாள். எப்படியேனும் தன் மகனை அரசனாக்க முயலும் அவள் சிக்கவீர ராஜேந்திரனைக் காப்பாற்றவும், அழிக்கவும் செய்கிறாள்.
இதற்கு முற்றிலும் மாறாக தன் கணவனை அரச பதவியில் நீடிக்கச் செய்யவும், அவனை மனிதனாக்கவும் கௌரம்மா முயன்று கொண்டே இருக்கிறாள். முற்றிலும் அழிவுப் பாதையில் செல்லும் சிக்கவீர ராஜேந்திரனை தன் மனவலிமையாலும், பக்தியாலும் மீட்டுவிட முயலும் அவள், அவனுக்குப் பதிலாக அரசை ஆள்வதையோ, அதிகாரத்திற்காக யாரையும் துன்புறுத்துவதையோ ஏற்பதில்லை. இறுதியில் சுயஅழிவின் மூலமே அவளுக்கு விடுதலை கிடைக்கிறது.

ராஜேந்திரனையும், பசவனையும் வளர்க்கும் கிழவி. அவளுக்கும் பகவதிக்கும் மட்டுமே பசவன் யாரென்று தெரியும். அவளுக்கு கால் முறிக்கப்பட்ட பசவன் மேல் ஒரு நம்பிக்கை இருக்கிறது, அதே சமயம் விலக்கமும். சிக்கவீர ராஜேந்திரன் குறித்து அவள் கொண்டிருக்கும் சித்திரம்தான் முக்கியமானதாகப்படுகிறது. குழந்தையாகச் சிக்கவீரன் இருக்கும்போது தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறான், அது கிழவியின் காதை நனைக்கிறது. இந்த நிகழ்வைச் சொல்லி ஒரு பெண்ணை அவன் பிடியிலிருந்து அவளால் மீட்க முடிகிறது. இறுதிவரை அவள் தூக்கத்தில் படுக்கையை நனைக்கும் சிறுவனாகவே அவனைப் பார்க்கிறாள்.

ஆண்களே இந்த உலகை ஆள்வதாக நாம் நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் பெண்களே இந்த உலகை ஆள்கிறார்கள். அவர்கள்தான் போட்டியை உருவாக்குகிறார்கள். உலகம் பெண் மையச் சமூகமாக இருந்ததன் எச்சமாக இன்றும் ஒவ்வொரு குடும்பமும் மறைமுகமாக பெண்களாலேயே வழிநடத்தப்படுகிறது, அதன் வழியே ஆண்களும் சமூகமும் இந்த உலகமும் கூட அவர்கள் காலடியிலேயே கிடக்கிறது. பெண்கள் மிக நுட்பமாக தங்கள் அதிகாரத்தைச் செலுத்தப் பழகிவிட்டனர். ஆண்களோ இதற்கு நேர்மாறான நிலையில், வெளிப்படையாக தாங்கள் அதிகாரம் செலுத்துவதாகக் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். அந்தக் கனவுகளில் தன் வாழ்வை இழக்கின்றனர். இந்த நாவலும் அப்படிப்பட்ட சூழலையே சித்தரிக்கிறது. தன்னைச் சுற்றி, உண்மையோடிருக்கும் நபர்கள் மீது தன் அதிகாரத்தைச் செலுத்த ஆரம்பிக்கும் போதும், அவர்களைக் காயப்படுத்தும்போதும் ஒரு தனி மனிதனின் அழிவு ஆரம்பமாகிறது. அந்தத் தனி மனிதன் தலைவனாக இருந்துவிட்டால் நாடே அழிந்துபோகும். தன் தங்கை, போபண்ணா, ரேவண்ண செட்டி, உத்தய்ய தக்கன் என்று சிக்க வீர ராஜேந்திரன் தன் அதிகார வெறியைச் செலுத்த ஆரம்பிக்கும் போது நல்ல மனிதர்களான அவர்கள் ஒவ்வொருவராக அவனைக் கைவிட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் தீமையின் முழு வடிவான நொண்டி பசவனோ இறுதிவரை சிக்கவீர ராஜேந்திரனைக் கைவிடுவதேயில்லை. இப்படியாக வாழ்வு அதன் போக்கில் முரண்களை விதைப்பதும் அறுப்பதுமாய் இருக்கிறது.

இது தவிரவும் அதிகார மட்டத்தில் இரண்டாம் இடத்திற்காக நடக்கும் போட்டிகள், அதற்கான நகர்வுகள், உள்ளடிகள், பேச்சு வார்த்தைகள், சமரசங்கள் என்று அது ஒரு தனி உலகமாக இயங்கியபடி இருக்கிறது. மாஸ்தி அவர்கள் தன்னுடைய அலுவல் வாழ்வில் நடந்த அனுபவங்களை, உரையாடல்களைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதிகாரத்தளத்தில் நடக்கும் உரையாடல்கள் இந்த நாவலின் தரத்தை ஒருபடி மேல் நகர்த்துகின்றன. மாஸ்தி அய்யங்காரும் ஓர் அதிகாரப் போட்டியின் இறுதியில் தோல்வியுற்று, அதனாலேயே உணர்ச்சி வசப்பட்டு வேலையை விட்டிருக்கிறார். அதன் பின் முழு நேர எழுத்தாளனாக வாழ்ந்திருக்கிறார். இதே நிகழ்வு நாவலில் மந்திரி போபண்ணாவிற்கு நிகழ்வதாக வருகிறது. இப்படியாக வரலாறு என்னவோ திரும்பத் திரும்ப நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது.

எழுத்தாளன் தானறிந்த அனைத்தையும் சேர்த்து ஒரே நாவலாக எழுத வேண்டுமென்றால் அதற்கு மாபெரும் உழைப்பும் ஆராய்ச்சியும் கற்பனையும் தேவைப்படும். மாஸ்தி அய்யங்கார் அப்படிப்பட்ட ஒரு கனவை முயற்சித்துப் பார்த்திருக்கிறார். எனக்கோ அது இன்னும் பெரும் கனவாய் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் அந்தந்த எழுத்தாளனின் உரிமை/தேர்வுதான் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள்ளத்தான் வேண்டும்.

அதே சமயம், ஒரு சிறுகதை ஒற்றை மையம் நோக்கி மட்டுமே பேசுவதாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒரு நாவல் மையம் நோக்கிக் குவியும் அதே நேரத்தில், அதைச் சுற்றிய சூழலும், சூழலுக்கு வெளியில் இருக்கும் அமைப்பும், மையத்திற்கு மறுபக்கம் இருக்கும் காரணங்களும் என விரிந்து பரவவும் வேண்டும். விரிவும் ஆழமுமே சிறந்த நாவலுக்கான வரையறை. எதைச் சொல்வது? எதை விடுவது? எது மையம்? எது நோக்கிச் செல்வது? என்பது குறித்து குழப்பம் வரும் போது எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால்தான் சிக்கவீர ராஜேந்திரன் எல்லாவற்றையும் பற்றிப் பேசியபடியே இருக்கிறது. இருந்தாலும் கூட, தமிழின் பெரும்பாலான வரலாற்று நாவல்களில் காணப்படும் வெற்றுக் கற்பனைகளோ, கிளுகிளுப்புகளோ, விதந்தோதல்களோ இல்லாத தரமான நாவல் என்றே சிக்கவீர ராஜேந்திரனைச் சொல்லலாம்.

மொழிபெயர்ப்பு இன்னும் கொஞ்சம் இயல்பாகவும் எளிமையாகவும் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் இந்த நாவலைத் தமிழிலேயே படித்தேன், ஒரு வேளை கன்னடத்தில் மாஸ்தி அவர்களின் சித்தரிப்புகள், மொழிவளம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கூடும்.

வாசிப்பிற்கு உதவிய தளங்கள்: