Friday, February 26, 2010

ரத்தம் வளர் போதி

முடிச்சுகளின் முடிவில்
வாழ்வின் பெருங்கதவைத் திறந்தான்
புத்தன்.

விரைகளற்ற ஆண்கள்
முலைகளற்ற பெண்கள்
மனித ரத்தத்தில்
பெருத்து வளர்கிறது
போதி.

சிரிப்பற்ற புத்தனிடம்
எஞ்சியது
பலரும் புணர்ந்த
இதழற்ற தாமரை.

விரை அறுக்க விரைகிறான்
ஒருவன்
புத்தனும் தமிழன்தான் என்று.

புத்தனுக்குத் தெரியும்
அவனும் இன்னொரு
புத்தன் தான் என்று.

Thursday, February 25, 2010

வரலாறு

என் கடிகாரத்தின் நேரம்
யாரோ ஒருவனின்
கடிகாரத்தில் நகர்கிறது

சிவந்த மனிதர்கள்
அவர்களுக்காக
அவர்களே
வரலாற்றை எழுதுகிறார்கள்

கறுப்பான எங்களில்
மிகக்கறுப்பானவனின்
ரத்தம்
மையாய் ஒழுகிச்செல்கிறது
அவர்களின்
வரலாற்றுப் பக்கங்களில்.

Monday, February 22, 2010

ஊண் வழியும் வார்த்தைகள்

ஊண் வழியும் வார்த்தைகள்

கனவில் புணரும் சிலருக்காக
கனவைப் புணருகிறேன் நான்
வெள்ளைக் கருப்பில் விளைந்தன
விதைகள்
சிதைந்த விதைகளில் முளைக்கிறது மரணம்.

எந்த ஒரு சொல்லின் முடிவிலும்
எட்டிப்பார்க்கிறது வாழ்வின் அபத்தம்..
வரிகளின் முடிவில் ஒழிந்திருக்கிறது
அதன் ஆயுதம்.......
கவிதையின் முற்றுப்புள்ளியில்
ஆரம்பமாகிறது ஒவ்வொருவரின் வக்கிரம்..

மிச்சமிருப்பதோ
ஒழுங்கற்ற நினைவுகளும்
ரத்தம் சொட்டும் வார்த்தைகளும்............

Sunday, February 21, 2010

புணரும் காலம்

புணரும் காலம்

காமம் எரியும் ஒரு பகலின் ஒளியில்
சரியும் எல்லாம் நிமிரும் என்றாய்
என் முலை பார்த்து

இல்லை என்றேன் ஏளனத்துடன்
உன் குறி பார்த்து....

ஒளியற்ற எனதிரவில்
நீர்புசிக்கும்
உயிர் உறுப்பு
எப்போதேனும் எனது
எச்சில் நீ ருசிப்பாய்
என்றே காத்திருக்கும்
காந்தள் உதடு ......

நடுங்கும் கரங்கள்-
பதுங்கிய புலியாய்க் காமம்
நிலையற்று அலைகிறது சொல் தன துணைதேடி
இறுதியில் இருப்பதென்னவோ
இறுதியின் இறுதியும்
இருத்தலின் மரணமும்.

Saturday, February 20, 2010

தொழில்நுட்பப்பெண்ணின் ஒரு நாள்

தொழில்நுட்பப்பெண்ணின் ஒரு நாள்

கசகசக்கும்
கருக்குழி ரத்தம்

தாய்ப்பாலால் நிறைகிறது
கழிவறைக்குழி
கடவுள் சிரிக்கிறான்
பாலுறிஞ்சும் பந்தில்.

பாசத்தைப் பதிலிடுகிறது
பணம்
நினைவுகளை மட்டுமே
நீட்டிக்கிறது காலம்.
கனவில் கலைகிறது
குழந்தையின் சிரிப்பு.
தவணையில் நிறைகிறது
குறி...
அடுத்த முறைக்காகக்
காத்திருக்கிறது
காமம்

ரகசியக் கதவுகளின் பின்
ஒளிந்து நின்று
சிரிக்கிறது விதி..

Friday, February 19, 2010

சதிர்

சதிர்

கடவுளுக்கும் சாத்தானுக்குமான
சதுரங்கத்தில்
பெரும்பாலும்
சாத்தானையே ஜெயிக்க வைக்கும்
கடவுளின் உடலில் கரைந்து கிடக்கிறது
சாத்தானின் ரத்தம்.

கடவுளின் கடவுள் யாரென்றேன்....
கடவுளும் சாத்தானும்
சேர்ந்தே சொன்னார்கள்
நான்தான் என்று...

Thursday, February 18, 2010

கவிதை அல்லது அது போல ஏதோ ஒன்று

காமவாசம்

யாருமற்ற ரயில் நிலையத்தில்
எப்போதாவது நின்று செல்லும்
ரயிலுக்காகக் காத்திருக்கிறேன்.

கசங்கி
உதிர்ந்து கிடக்கும் மல்லிகைப் பூவின்
மணத்தில் ஒளிந்து கிடக்கிறது
உடலை விற்ற ஒருத்தியுடன்
மனதைத் தொலைத்த ஒருவன் பேசிய
சொற்களற்ற உரையாடல்.....

நிழலற்றவன்

வெயில் வழியும் நடுச்சாலையில்
நிர்வாணமாய் நிற்கிறேன்.
என் நிழலைக் காணோம் என ஒதுங்கிச்செல்கின்றனர்
முகமற்ற பலர்.
மூளையின் மறத்த பக்கங்களில்
ஒளிந்திருக்கிறது என் நிழல்.

Wednesday, February 17, 2010

மனிதம்

மனிதம்

மடக்கிய கத்தியில்
சொட்டுகிறது ரத்தம்
மனதினை வாட்டுகிறது
மரணம்
அடுத்த இரையைக்
குறிவைக்கிறது மனிதம்.

Tuesday, February 16, 2010

சிறுகடவுளின் தலையெழுத்து

எப்போதும் விழித்தே இருக்கும் நரகத்தில்
"ஸ்டெத்" மணிகட்டிய பெருங்கடவுள் ஆணையிட்டார்
பலரின் தலையெழுத்தை வாசிக்க...

போதையேறிய சிறுகடவுளின் ஆயுதம்
பழைய சுத்தியும்
உடைந்த கத்தியும்

புழுத்து நாறும் அரசவையில்
நிறைகின்றனர்
அங்கங்கள் அற்ற அடிமைகள்......
சிறு கடவுளாய் இருத்தலின்
சாத்தியங்களைப் பழித்தபடி
வாசிக்கப்படுகிறது அவர்களின்
தலையெழுத்து......

......................தொடர் புள்ளிகளால்
நீட்டிக்கப் படுகிறது
சிறுகடவுளின் முற்றுப் புள்ளி .

Monday, February 15, 2010

இரு மிருகங்களின் கதையாடல்

உன் மிருகத்தை ஏவினாய்
ஒவ்வொரு இரவிலும்
அது வெற்றிபெறும் வேளையில்தான்
விழிக்கிறது என் மிருகம்.......

மோத யாருமற்ற களத்தில்
அதன் வெறிக்கு இரையாகிறது
என் விரல்.....
வெறுமையின் பிசுபிசுப்பில்
நிறைகிறது காலிடைக்களம்.......