Tuesday, August 18, 2015

தொடக்கக்கல்வி – தேவை அடிப்படையில் மாற்றம்
இன்றைய நிலையில் கல்வி வாழ்விற்கானது என்பதிலிருந்து வேலைக்கானது என்று மாறிவிட்டது. கல்வியின் குறிக்கோள் கற்றுக் கொள்வது என்று யாரிமாவது சொல்லிப்பாருங்கள். அநேகமாக நீங்கள் மனநிலை தவறியவர் என்று அடையாளம் காணப்படுவீர்கள். கடந்த முப்பது வருடங்களாக பள்ளி என்பது வேலை வாங்குவதற்காக காலத்தைச் செலவிடும் இடம் என்ற புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

உதாரணமாக சுந்தர் பிச்சை கூகிளின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவுடன் அவருடைய விக்கிபீடியா பக்கத்தில் கல்வி எனும் பகுதியில் அவர் பயின்ற பள்ளியின் விபரம்  மீண்டும் மீண்டும் நாள் முழுவதும் திருத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. திருத்தியவர்கள் யாராக இருக்கும் என்று எளிதில் ஊகித்துவிடலாம். ஏன் பள்ளிகள் தங்கள் பெயரைத் தவறாகவேனும் பிரபலப்படுத்திவிட முயல்கின்றன? கல்வியின் மூலம் அடைய வேண்டிய பெயரை, அறத்திற்குப் புறம்பாக பொய்களின் மூலம் அடைந்து, மேலும் பணம் சம்பாதிக்க மட்டுமே. இன்னொரு பக்கம் அதே நாளில் இந்திய இணையத்தில் நடந்த பெரிய விவாதம் சுந்தர் பிச்சையின் சம்பளம் பற்றியது. இப்படிப்பட்ட மக்களை உருவாக்கவே இன்றைய கல்வி முயல்கிறது.

கல்வி என்பது மனிதனை மனிதனாக அடையாளப்படுத்தும் ஒரு வழிமுறை மட்டுமே. அதன் மூலம் கிடைக்கும் உற்பத்திப் பொருள் – அறிவு கொண்ட மனிதன். அதில் அறிவே ஒரு வகையில் உபரிதான். அறிவெனும் உபரியின் மூலம் நாம் அடைவது வேலை. ஒரு உபரியின் உபரி – வேலை – மட்டுமே நமது குறிக்கோள் என்று கொள்கிறோம். இதை இப்படி விளக்கலாம். நிலத்தில் நெல் விதைக்கிறீர்கள், நெல் அறுவடையில் போது, வைக்கோல் கிடைக்கும், நெல்லும் கிடைக்கும், நெல்லிலிருந்து அரிசியும், தவிடும் கிடைக்கும். விவசாயத்தின் நோக்கம் நெல் விளைவிப்பது என்றுதான் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். உண்மையில், நிலம் பண்பட நாம் செய்வதுதான் விவசாயம். நிலம் என்பது அனைத்திற்கும் அடிப்படை. அதைத் தரிசாகப் போட்டால் நிலத்தை இழப்போம். இழந்தால், எதிர்காலத்தில் எதுவும் விளைவிக்க முடியாது. எனவே நிலத்தைக் எதிர்காலத்திற்காகப் பாதுகாக்கும் வேலையே விவசாயம். நிலத்திலிருந்து குறுகிய காலத்தில் பெரும் விளைச்சலை எடுக்க முயன்று உரங்களைக் கொட்டி அடிப்படையான நிலத்தை இழந்துவிட்டோம். அதே அடிப்படையை சீர்குலைக்கும் வேலையைத்தான் கல்வியிலும் செய்கிறோம்.

அந்த நிலம்தான் மாணவர்கள், விவசாயம்தான் கல்வி, நெல்தான் அறிவு, வைக்கோல் வெறும் அங்கீகாரம், தவிடுதான் வேலை. தவிட்டிற்காக நாம் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம். இனியும் தவிடுதான் உங்கள் குறிக்கோள் என்றால், இதைத் தொடர்ந்து வாசிக்காதீர்கள். இங்கே தவிடு குறித்து எதுவும் சொல்லப்படப் போவதில்லை.
இத்தகைய கல்விச் சிக்கலில், முதல் குற்றவாளி என்று பெற்றோரைத்தான் சொல்ல வேண்டும். இங்கே பெற்றோராகும் தகுதி வெறும் உடற்தகுதி மூலம் வருகிறதே தவிர, அறிவுத் தகுதி மூலம் அல்ல. திருமணத்திற்கு உடல்தகுதி போதுமானதாய் இருக்கலாம், ஆனால் அறிவற்ற யாருக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள எந்த உரிமையும் கிடையாது. இங்கே அறிவென்பது பட்டம் பெற்றிருத்தல் அல்ல. கல்விப் பின்புலமே இல்லாத ஒருவர் ஓர் குழந்தையை வளர்க்கும் அறிவுத்தகுதி கொண்டிருக்கலாம். முனைவர் பட்டம் பெற்றவர் அந்த அறிவுத்தகுதி அற்றவராக இருக்கலாம். பெரும்பாலும் கல்வித் தகுதி குறைந்த பெற்றோரைவிட கல்வி கற்ற பெற்றோர் குழந்தை வளர்க்கும் தகுதி குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்றால் கல்வித் தகுதி குறைந்தொரைவிட கல்வி கற்றவர்களுக்கு இருக்கும் சமூக அழுத்தம்தான் காரணம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பெரும்பாலோர்க்கு ஒரு குழந்தையை வளர்க்கும் தகுதி கிடையாதென்பதே உண்மை.

உதாரணமாக, உலகம் முழுக்க தாய்மொழிக் கல்வி அவசியமாய் இருக்க, நாம் ஆங்கிலவழியில் மட்டுமே படிக்க வைப்போம். தாய்மொழிக்கும் மூளையில் இருக்கும் மரபார்ந்த அறிவிற்கும், கற்றல் திறனுக்கும் உள்ள தொடர்பு பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முதலில், பெற்றோர் தமது குழந்தைக்கு அறிவைப் புகட்ட வேண்டும் என்று நினைக்க வேண்டியது அவசியம். பெற்றோரோ வேலை/பணம் எனும் தவிடைப் பெற வேண்டும் என நினைத்து, நெல்லை விட தவிடைப் பெரிதாக்கும் வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
இவர்களுக்குத் தோதாக, பள்ளிகள் குழந்தைகளை எந்திரங்களாக மாற்றும் வேலையைச் செய்து வருகின்றன. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க இரவும் பகலும் பெற்றோர்கள் தெருவில் காத்திருக்கச் செய்யப்படுகின்றனர். விண்ணப்பம் ஒன்று ஆயிரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பின் சேர்ப்புக் கட்டணம் லக்ஷங்களில், மேலும் வருடக்கட்டணம் தனி, மீண்டும் மாதக் கட்டணம் ஆயிரங்களில் வாங்கப்படுகிறது. ஏன் இதைச் செலவு செய்கிறார்கள்? அறிவைப் பெறவா? இல்லை, வாய்ப்புள்ள கல்லூரியில் சேர்ந்து பெரும் பணத்தை சம்பளமாகப் பெற. அதற்காக, பெற்றோராகிய இவர்கள் பென்ஸ் காரில் வந்து தெருவில் படுத்திருப்பார்கள். இவர்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் விமானத்தில் பறந்து அடிமையாய் இருப்பார்கள்.

குழந்தையை பெற்றுக் கொண்டால், அதன் உணவு மற்றும் அறிவினைத் தருவது பெற்றோரின் கடமை. ஆனால் இங்கே உணவும் அளிக்கும் தனியார் பள்ளிகளையே பெற்றோர் விரும்புகின்றனர். அதைப் பெருமையாக வேறு நினைக்கின்றனர். வெட்கக்கேடான விஷயம் அது. உங்களால் உணவைக் கூட அளிக்க முடியாதென்றால், எதற்குக் குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள்? பள்ளிகள் ஒட்டு மொத்தமாகத் தயாரித்து வழங்கும் உணவில் என்ன சத்து இருக்கும்? உங்கள் குழந்தைக்கு விருப்பமான உணவு கிடைக்குமா? நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு குழந்தைக்குமான விருப்ப/சத்துத் தேவைகள் புறந்தள்ளப்பட்டு உடல் வலுவற்ற பூஞ்சையான குழந்தைகள் உருவாக்கப்படுகின்றனர். மேலும் இதன் மூலம் அந்தக் குழந்தை மறைமுகமாக கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு அமைதியாக இருக்கப் பழக்கப்படுத்தப்படுகிறது. அதற்கென என்ன வேண்டும் என்றாலும் கிடைக்காது என்று உணர்த்தப்பட்டு அதன் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. இப்படியாக துடிப்பற்ற செம்மரியாடுகளாக அவர்கள் மாற்றப்படுகிறார்கள். பறவைகளும் விலங்குகளும் கூடத் தங்கள் குட்டிகளுக்குத் தேவையான உணவைத் தாங்களேதான் வழங்குகின்றன. அந்தக் குட்டிகள் துடிப்போடும் ஆர்வத்தோடும் இருக்கப் பழக்கப்படுத்தப்படுகின்றன. ஆனால் “ஆறறிவு” மாக்கள் தங்கள் மக்களுக்குத் தருவது ஆரோக்கியமற்ற சூழலை மட்டுமே. அதன் மூலம் உருவாவோர் தன்னுந்துதலற்ற பிராய்லர் மனிதர்கள்.

இன்று பள்ளிகள் வழங்கும் உணவை அரசு வழங்கும் சத்துணவுடன் ஒப்பிடவே முடியாது. மேலும் பெற்றோரால் உணவளிக்க முடியாத சூழலில் உணவிற்கே கஷ்டப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு. ஆனால் இன்று உணவு வழங்கும் சக்தி இருப்போர்கூட பெருமைக்காய் இந்தக் குப்பை உணவுகளை (Junk Food) வழங்கும் பள்ளிகளில் சேர்ப்பது என்பது அயோக்கியத்தனம்.
அடுத்தது கல்வி. கல்வியைத் தருவது பெற்றோரின் கடமை. பெற்றோரின் கல்வித் தகுதிக்கு மேல் குழந்தைகளுக்கு அறிவுத் தேவை ஏற்படும் போது அந்த இடைவெளியை நிரப்புபவையாக, அதற்கான உதவியை அளிப்பவை கல்விக் கூடங்கள் இருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்ற பெற்றோர் கூட ஒன்றாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தையை தனி வகுப்புகளுக்கு (Tuition) அனுப்புகிறார்கள். இவர்களால் அந்தப் பாடத்தைக் கூடச் சொல்லிக் கொடுக்க முடியாதா என்ன? ஐந்து வயதிற்குள், முதிர்ச்சி அடையாத மூளையும், பெரும் தேடலும் கொண்ட குழந்தைகளுக்கு இந்தப் பள்ளிகள் எதைத் தருகின்றன? அவர்களின் வரையறைகள் என்ன? எதைச் செய்யக் கூடாது? என்றுதான் சொல்கின்றன. உண்மையில் வரையறை எதுவும் கிடையாதென்று அவர்கள் அறிய வேண்டிய காலம் அது. இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுத்து, ஐந்து வயது வரை குழந்தைகளிடம் நிறையப் பேசவும் செய்யும் பெற்றோர் தங்கள் குழந்தைக்கு வாழ்நாள் முழுமைக்குமான உடல் நலத்தையும், சிந்தனை அமைப்பையும் தருகின்றனர். இது நிலையான சொத்தும் கூட. ஆனால் குழந்தையின் எதிர்காலத்திற்காக பணம் சேர்ப்பதாக நினைக்கும் பெற்றோர், குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் வேலைக்குச் செல்வதும், அதன் பின் குழந்தையிடம் நேரமே செலவிடாமல் இருப்பதையுமே வழக்கமாகச் செய்கின்றனர். உங்கள் குழந்தையிடம் நீங்கள் நேரம் செலவிட முடியாதென்றால், ஆசிரியர் மட்டும் ஏன் செலவிடப் போகிறார்? அவரைப் பொருத்தவரை 50 குழந்தைகளில் ஒன்றுதான் உங்கள் குழந்தை. உங்களுக்கு அப்படியா என்ன?

அடுத்தது கணக்கற்ற வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்ப்பது. இசை, ஓவியம், நடனம், கணக்கு இன்னும் எத்தனையோ வகுப்புகள். குழந்தைகள் இவற்றைக் கற்றுக் கொள்வது தவறல்ல. ஆனால் எந்த ஒரு குழந்தைக்கும் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களில்தான் விருப்பமிருக்கும். அதைக் கண்டு பிடித்து அவற்றில் அவர்களை பயிற்றுவித்தால் அவர்கள் சிறப்பாக வருவார்கள். ஆனால் அதற்குச் செய்யவேண்டியது கண்ட வகுப்புகளிலும் செர்ப்பதல்ல – அவர்களுடன் நெருங்கி நேரம் செலவு செய்தல். அதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் திறமையை உணர்ந்து கொள்ளலாம். கணக்கற்ற வகுப்புகளில் சேர்க்கப்படும் குழந்தை முதலில் அதிர்ச்சி அடைகிறது, பின் அதில் ஏற்ப்படும் தோல்விகளால் பதட்டத்திற்கு உள்ளாகிறது. பின் நிரந்தரமாக வெறுக்க ஆரம்பிக்கிறது. ஒரு வேளை அதன் பின் அதற்கு விருப்பமான விஷயத்தை அது சந்திக்காமலே போகலாம். மீண்டும் மீண்டும் ஒப்பிடப்படும் போது அந்தக் குழந்தை அதன் பின் மீண்டுவர முடியாமலாகிறது. இப்படியாக அது சராசரித்தன்மைக்குள் தள்ளப்படுகிறது.

எந்தப் பெற்றோராவது தங்கள் குழந்தைகளைப் பாடப்புத்தகமல்லாத புத்தகத்தை வாசிக்கச் சொல்லி இருக்கிறார்களா? அப்படி வாசிக்கச் சொல்லும் பள்ளிகள் எத்தனை? முதலில் பெற்றோர் ஏதேனும் புத்தகம் வாசிக்கிறார்களா? புத்தகம் வாசிக்காத குழந்தை வாழ்நாள் முழுக்க அறியாமையில் வாழ்வது தவிர்க்க முடியாதது – அது அவர்கள் எத்தனை படித்திருந்தாலும் கூட. புத்தகம் வாசிப்பதால் என்ன கிடைக்கிறது? பணமும் நேரமும் நஷ்டம் என்று சொல்வோர்தான் அதிகம். ஆனால் அப்படிச் சேர்க்கப்படும் பணமும் நேரமும் இவர்களால் எப்படிச் செலவிடப்படுகிறது? குப்பை உணவுகளை உண்பதிலும், தொலைக்காட்சிப் பெட்டி முன்னாலும்தான். மாதம் ஒரு புத்தகத்தை வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். காமிக்ஸ்-ல் ஆரம்பித்து பேரிலக்கியங்கள் வரை எதை வேண்டுமானாலும் படிக்கத் தரலாம். அது அவரவர் வயது, வாசிக்கும் வேகம் இவற்றைப் பொறுத்து அளவு கூடவோ குறையவோ செய்யலாம்.

முறையான பல்நோக்குக் கல்வியைக் கற்பது, வெற்றுக் கல்வியை கற்பது இரண்டில் முறையான பல்நோக்குக் கல்வியைக் கற்றால் ஓர் மனிதனாக வாழ்வில் சிறந்த இடத்தை அடையலாம். வெற்றுக் கல்வியை கற்றால் அதிக மதிப்பெண் பெறலாம். ஆனால் மதிப்பெண்ணிற்கும் வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மதிப்பெண் பெறுகிறீர்களோ இல்லையோ தொடர்ந்த பயிற்சியும் முயற்சியும் மட்டுமே அறிவுரீதியாக மேலே செல்ல உதவும். நிறைய மதிப்பெண்கள் பெறுவதென்பது மாணவர்களுக்குக் கூடுதலாகச் சில வாய்ப்புகளை அளிக்கலாம் – அவ்வளவுதான். அதற்கு மேல் வேறொன்றும் இல்லை. மாநில அளவில் மதிப்பெண் எடுக்கும் பெரும்பாலான மாணவர்கள் படித்து முடித்து வேலையில் சேர்ந்து அத்தோடு நின்று விடுவார்கள். ஆனால் தங்களின் குறைகளை உணர்ந்த சராசரி மாணவர்கள், அந்தக் குறைபாடுகளின் தீவிரத்தைத் தொடர்ந்த பயிற்சியின் மூலம் குறைத்து முன்னோக்கிச் செல்கின்றனர். மேல்நிலைக் கல்வியிலேயே இப்படித்தான் என்றால் தொடக்கக் கல்வியில் இவ்வளவு அழுத்தம் தேவையே இல்லை. மெதுவாக ஆனால் ஆழமாக என்ற அடிப்படையிலேயே மாணவர்கள் கல்வி கற்க வேண்டும். கல்வியை வேகமாக ஆனால் மிக மேலோட்டமாகக் கற்கும் இன்றைய மாணவர்கள் கல்வியில் சர்வதேச அளவில் பெரும் இடங்களை அடைவதில்லை. அதனால்தான் நம்முடைய நாட்டிலிருந்து குறிப்பிடத்தகுந்த கண்டுபிடிப்புகள் வருவதில்லை. ஆராய்ச்சிகள் ஆழமான அறிவை, பொறுமையைக் கோருபவை. நாமோ படிக்க, உடனடி மதிப்பெண் பெற என்று வளர்க்கப்படுகிறோம். அதன் மூலம் அறிவுப் பூஞ்சைகளாய் மட்டுமே இருக்கிறோம். 

தொடக்கக்கல்விக்கு வலுவான பாடத்திட்டங்கள் தேவையே தவிர, சுமையான பாடத்திட்டங்கள் தேவை இல்லை என்பதையும், இன்றைய நிலையில் பெரும் சுமைகளை ஏற்றி வைத்துக் குழந்தைகளின் அறிவை மழுங்கடித்து வருகிறோம் என்பதை பெற்றோர் உணர வேண்டும். பள்ளிக்கு வெளியே இருக்கும் முறைசாராக் கல்வி குறித்து ஒவ்வொரு பெற்றோரும் சிந்தித்து அதற்கு முயல வேண்டும். அதன் மூலம் வாழ்க்கையின் உண்மையான சவால்களைச் சந்திக்கும் குழந்தைகள் உருவாக்கப்பட வேண்டும். உருவாவார்கள் என்று நம்புவோம்.

Wednesday, July 29, 2015

ஆட்டிசம் சில புரிதல்கள் - துலக்கம் - ஒரு பார்வைவாழ்வின் பல படிகளில் சவால்களைச் சந்திக்கிறீர்கள். பின் உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, அது ஆட்டிசக்குழந்தை என அடையாளம் காணப்படுகிறது. இப்போது உங்கள் முன் இருக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். ஒன்று - விதி அதுதான் என்று வேதாந்தம் பேசிக் கொண்டு உங்களையும் வருத்தி, அந்தக் குழந்தையையும் வருத்திக் கொள்வது. இரண்டு – தன்முனைப்புக்குறைபாட்டைப் பற்றிய புரிதலை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையை அந்தக் குழந்தையைக் கொண்டே எதிர்கொள்வது. நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்? முடிவு செய்துவிட்டீர்கள் அல்லவா? அதையும் தாண்டி வேறென்ன செய்வீர்கள்? உங்களுக்குத் தெரிந்த தன்முனைப்புக்குறைபாட்டு நிலைச் சவால்களை, குழந்தை வளர்ப்புச் சிக்கல்களைப் பிறருக்குச் சொல்வீர்கள் இல்லையா? அதைத்தான் யெஸ்.பாலபாரதியும், லக்ஷ்மியும் செய்கிறார்கள்.

ஆட்டிசம் அல்லது தன்முனைப்புக்குறைபாடு குறித்துத் தொடர்ந்து செயல்பட்டு வரும் யெஸ்.பாலபாரதியின் ஆட்டிசம் சில புரிதல்கள் புத்தகம் கடந்த வருடம் வெளியிடப்பட்டது. அது அவர் தன்னுடைய வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பாலபாரதியின் மகன் ஆட்டிசக்குழந்தை. அவனை வளர்ப்பதற்காக பாலபாரதி மற்றும் அவர் மனைவி லக்ஷ்மி எடுத்த முயற்சிகள், அதன் மூலம் கிடைத்த அனுபவங்கள், செய்திகள் இவற்றைத் தொடர்ந்து தனது வலைப்பூவில் கட்டுரைகளாக எழுதி வருகிறார்(கள்).
விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே ஆட்டிசம் சில புரிதல்கள் என்ற அபுனைவும் - துலக்கம் என்ற புனைவும் அவரால் எழுதப்பட்டுள்ளன, இந்தக் கட்டுரையைத் தொடரும் முன் யெஸ்.பாலபாரதியின் வலைப்பூக் கட்டுரைகளை இந்த இணைப்பில் படிக்கவும்.

நமது சமூக அமைப்பு, எல்லோருக்குமான வெளியை எப்போதுமே வழங்கி வந்திருக்கிறதா? ஒவ்வொரு குடும்பத்திலும் மன, உடல், சமூக குறைபாடுகளைக் கொண்ட ஒருவராவது இருந்துள்ளனர். அவர்களை இரண்டாம் நிலை மனிதர்களாக அந்தக் குடும்பம்/சமூகம் நடத்திவந்திருக்கிறது. சமூகக்குறைபாடுகள் மட்டுமே கொண்ட மனிதர்கள் (socially unadjusted human) மற்ற இரு வகையினரையும்விட குறைவாகப் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக திருமணம், குழந்தைகள் என்று அனைத்தும் கொண்டு, ஆனால் தன்முனைப்போடு பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல், தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து, இறந்து போன மனிதர்களை ஒவ்வொரு குடும்பமும் கண்டிருக்கிறது. அவர்களை மனக்குறைபாடு கொண்டோர் என்றோ, உடற்குறைபாடு கொண்டோர் என்றோ சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் தங்களின் தொடர்பியல்[1] வழிமுறையில் வித்தியாசம் கொண்ட தன்முனைப்புக்குறைபாட்டுநிலை மனிதர்களை, கற்றல் திறன் சவால் கொண்டோரை, சிறப்புக் குழந்தைகளை நாம் மிகக்கடுமையாக ஒடுக்கிவருகிறோம். உண்மையில் படிக்காதவர்களை விட படித்தவர்கள்தான் இத்தகைய ஒடுக்குதல்களை அதிகம் செய்கிறார்கள்.

ஒரு குழந்தை மீது அதிக வன்முறை செலுத்துபவர்கள் என்று பெற்றோரையும், அடுத்து ஆசிரியர்களையும் சொல்லலாம். அவர்களின் முக்கியமான வன்முறை எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு என்பதுதான் தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளின் மிகப் பெரும் சவால். தொடர்பு மொழியில் இருக்கும் சிக்கல்களால் அவர்கள் நினைப்பதைச் சொல்லிவிடமுடியாது, அது மிகப் பெரும் பிரச்சனையாக பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் மாறுகிறது.  யோசித்துப் பாருங்கள், குழந்தை இருக்கும் ஒரு வீட்டிற்குப் போனாலே அங்கிளுக்குப் பாட்டுப் பாடிக்காட்டு, டான்ஸ் ஆடிக் காட்டு, முத்தம் கொடு என்று சித்ரவதை செய்வதைப் பார்க்கிறோம் அல்லது நாமே செய்கிறோம். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட இந்த மூன்று செயல்களுமே தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளை பதட்டம் அடையச் செய்பவை. அவர்கள் அதைச் செய்யாதபோது, அது ஒரு அந்தஸ்துக் குறையாக (status issue) மாறி பெற்றோரைப் பதட்டமடையச் செய்கிறது. கூடுதலாக அந்தக் குழந்தைக்குத் தண்டனையும் கிடைக்கும். அதே போல ஆசிரியர்கள் சராசரிப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களை இவர்களுக்குச் சொல்லி சராசரி அளவேயான மறுமொழியை, மதிப்பெண்ணை எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியமாகாத போதும், தண்டனைகளே கிடைக்கின்றன. இவையெல்லாமே சராசரிக் குழந்தைகளைப் பாதிக்கும் அளவைவிட தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன.
ஆட்டிசம் சில புரிதல்கள் புத்தகத்தில், தன்முனைப்புக்குறைபாடு, அதன் அறிகுறிகள், உட்பிரிவுகள், மென்ணுணர்வு [2] மிக்க தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளிடம் நாம் மாற்றவேண்டிய விஷயங்கள் என்ன? பெற்றோரான நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? அவர்களுக்கான உணவு என்ன? என்பதைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். இந்தப் புத்தகம் நிச்சயமாக ஒரு மைல்கல்தான். ஆனால் இந்தப் புத்தகம் யாரைச் சென்றடைய வேண்டும்? முதலில் ஆசிரியர்களை பின் பெற்றோர்களை. நமது கல்வி அமைப்பு என்பது அடிப்படைப் புரிதல்கள் ஏதுமற்ற மதிப்பெண் அளவீடுகள் கொண்ட தட்டைப் பரப்பாக மாறி 30 வருடங்களாகிறது. அவற்றின் பரிணாம வளர்ச்சிதான், இன்று நாம் காணும் ப்ராய்லர் பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் கற்றல் அறிவியல், கற்றல் திறன் சவால், மாணவர் மனநிலை குறித்து கல்லூரிகளில் படிப்பதோடு சரி, அதன்பின் அவற்றை பயன்படுத்துவதோ, தொடர்ந்து அவற்றில் நடக்கும் கண்டுபிடிப்புகளை அறிந்துகொள்வதோ கிடையாது – ஆனால் இவர்கள் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளை கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் ஒப்பீட்டளவில் குறைவான சேதாரத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துபவர்கள். தனியார் பள்ளிகளில் இன்னும் மோசம், முறையான கல்விப் பயிற்சியோ, உளவியலோ இல்லாத பெரும்பாலோர் ஆசிரியராக இருக்கின்றனர். அதையும் மீறி இவற்றைப் பற்றி பேசினால் அந்த ஆசிரியர் வெளியே துரத்தப்படுவது நிச்சயம். மதிப்பெண் எடுக்க வை, இல்லாவிட்டால் வெளியே போ என்பதுதான் இவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு. உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் ஏதேனும் ஒரு ஆசிரியரிடம் மேலே சொன்ன பிரச்சனைகள் பற்றிக் கருத்துக் கேளுங்கள்.

ஆசிரியர்கள் இந்தப் புத்தகத்தைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் - அவர்கள்தான் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அவர்கள் மூலமே பெரும்பாலான தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பின் விகிதாச்சார அடிப்படையில்[3] தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவே போகிறது. குறிப்பாக எண்ணிக்கையில் அதிகரிக்கும் போது. இந்தக் குழந்தைகளைத் தவிர்த்துவிட்டு நாம் சமூகத்தில் வாழ்ந்துவிட முடியாது, அவர்கள் உரிமைகள் நிலை நிறுத்தப்பட வேண்டியது கட்டாயம். இந்தப் புத்தகம் யாரேனும் ஒரு ஆசிரியரை மாற்றினாலே அது வெற்றிதான்.
இனி துலக்கம் பற்றி - துலக்கத்தின் கதை மிக எளிமையானது. அஸ்வின் என்ற ஒரு சிறுவன் காணாமல் போகிறான். அவன் ஒரு தன்முனைப்புக்குறைபாட்டு நிலையாளன். அவனை சமூகம், சட்ட அமைப்பு, சக மனிதர்கள், பெற்றோர், மருத்துவர்கள் என ஒவ்வொருவரும் எப்படிப் பார்கின்றனர், அவன் இவர்களை எப்படிப் பார்க்கிறான், எதற்காக அவன் வெளியேறினான் என்பதன் மூலம் கதை நகர்கிறது. கதை வெகு இயல்பான வெகுஜன மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. யெஸ்.பாலபாரதியின் கடந்தகால படைப்புகளில் தெரியும் ஆழமோ, கவித்துவமோ இந்தப் புத்தகத்தில் இல்லை அல்லது வேண்டுமென்றே முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறது. அதற்கான காரணமாக, ஆட்டிசம் சில புரிதல்கள் புத்தகம் மூலம் எதிர்பார்த்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் சென்றடையவில்லை, இது குறித்த விழிப்புணர்வு அதிகமானோரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே துலக்கம் எழுதப்பட்டது என்று புத்தக வெளியீட்டில் யெஸ்.பாலபாரதி சொல்லியிருக்கிறார். இங்கேதான் அபுனைவிற்கும் புனைவிற்குமான சாத்தியங்கள் வேறுபடுகின்றன. 

புனைவு தரும் கற்பனைச் சாத்தியங்கள் – அபுனைவு எழுத்தில் சாத்தியமில்லை, அதனாலேயே பொதுவாக புனைவற்ற படைப்புகள் மக்கள் மனதை எளிதில் வசீகரிப்பதில்லை. ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற நோக்கம் சார்ந்த படைப்புகள் பெரும்பாலும் அபுனைவாகவே எழுதப்படுகின்றன. அதனாலேயே பிரச்சார எழுத்துக்களை இலக்கிய வரையறைக்குள் கொண்டு வரக்கூடாது என்று தூயஇலக்கியவாதிகள் காலங்காலமாகச் சொல்லி வருகின்றனர். ஆனால் மார்க்சியப் பார்வையில் இலக்கியம் அதன் அழகுணர்ச்சி சார்ந்து மதிப்பிடப்படுவதைக் காட்டிலும் சமூக/அமைப்பியல் மாற்றம் என்ற அளவீட்டில் வைத்தே அளவிடப்படுகிறது. தீவிர மார்க்சியர்கள் அழகுணர்ச்சியை முற்றிலும் நீக்கிவிட வேண்டும் என்று கூடச் சொல்லி இருக்கின்றனர். அதேசமயம் பேசப்படும் கருத்து பன்முகத்தன்மையுடன், விரிந்து-விவாதித்து எழுதப்பட்டிருக்க வேண்டும். துலக்கம் கூட – தூய்மைவாத இலக்கிய அளவீடுகள் அடிப்படையில் அல்லாமல், மார்க்சிய இலக்கிய அளவீட்டில் வைத்தே அளவிடப்பட வேண்டும். 

அவ்வாறு மதிப்பிட்டால், துலக்கம் ஒரு சமூகத்தேவைக்கான படைப்பு. இங்கே இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டியது இருக்கிறது. உடனடியாக விழிப்புணர்வை ஏற்படுத்த அபுனைவைவிட சிறந்த வடிவம் இல்லை. அதேசமயம் நிறையப் பேரைச் சென்றடைய புனைவு மிக முக்கியமாகிறது - ஆனால் அது பெரும் உழைப்பைக் கோரும் விஷயம். பல அடுக்குகளைக் கொண்ட இலக்கியம் என்பது நிகழ்வை, சமூகக் கட்டமைப்பை, வக்கிரங்களை, வன்மத்தை, எதிர்பாராமையை, உன்னதத்தை சொல்லி வாசகனின் மனதில் நீண்டகால அடிப்படையில் நிலையான மாற்றங்களை உருவாக்கக்கூடியது. அது விழிப்புணர்வு என்ற தளத்தில் மட்டும் இல்லாமல், வரலாற்றில் நடந்திருக்கும் ஒரு மோசமான நிகழ்வை, என்ன நடந்திருக்க வேண்டும் என்று சொல்லுவதன் வழியே எதிர்காலத்தில் அது மீண்டும் நடக்காமல் இருக்கச் செய்யும் முயற்சி. விளிம்புநிலை மனிதர்கள் என்று சொல்லி மனநலம் குன்றியோர்களை, திருடர்களை, பாலியல் தொழிலாளிகளை காட்சிப்படுத்தும் இலக்கிய முயற்சிகள் ஒரு அதிர்ச்சியை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். அது தேவையும் கூட. ஆனால் அதே விளிம்பின் விளிம்பில் இருக்கும் கற்றல் திறன் குறைந்தோர், தன்முனைப்புக்குறைபாட்டு நிலையினர், விவசாயிகள், பாலியல் சிறுபான்மையினர் பற்றிய எழுத்துகள் மிகக் குறைவு – ஏனென்றால் அவை தரும் அதிர்ச்சி பாலியல் கிளர்ச்சியையோ, சாகசத்தையோ முன் வைப்பதில்லை. முக்கியமாக, அவை தரும் அதிர்ச்சிகளை நாம் காண விரும்புவதில்லை.
அஸ்வின் நம்முடைய சட்ட அமைப்பில் எப்படி நடத்தப்படுகிறான் என்பதைச் சொல்லும் இந்தக் கதையில், அந்த அமைப்பு தன்முனைப்புக்குறைபாட்டு நிலையோரை மட்டும் அல்ல, யாரையுமே எப்படி நடத்துகிறது? என்ற கேள்வி எழுகிறது. ஏன் அமைப்பு அவ்வாறு நடக்கிறது? அஸ்வினின் உள்உலகம் என்ன? அவனுடைய அடிப்படை விருப்பு வெறுப்புகள், இந்த சமூகத்தை எப்படிப் பார்க்கிறான், அவனுடைய பெற்றோருக்கும் சராசரிப் பெற்றோருக்கும் இருக்கும் மனநிலை மாறுபாடுகள், பள்ளியில் அவனுக்கு இருக்கும் சவால்கள், ஆசிரியர்களுக்கு இருக்கும் சவால்கள், அவனுக்கும் அவன் நண்பர்களுக்குமான உறவு, அவனுக்கும் அவன் உடன் பிறந்தோருக்குமான உறவு, உடல் சார்ந்த அவனுடைய சவால்கள் – முக்கியமாக பதின் வயதில் ஏற்படும் பாலியல் கொந்தளிப்புகள், காதல், நெருங்கியோர் மரணம் போன்ற சவால்களை எதிர்கொள்வது என்று எண்ணற்ற பக்கங்களைக் கொண்ட ஒரு நாவல் இந்தக் கதையில் இருக்கிறது. அதே நேரம் ஒரு தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தை பெண்ணாயிருந்து அவள் இவற்றை எப்படிச் சந்திப்பாள்? என்று எழுதினால் அது முற்றிலும் வேறான நாவலாக இருக்கும். விழிப்புணர்வு என்ற ஒரு பார்வையை மட்டும் முன்வைப்பதால், மிகச் சுருக்கமாக மேலே சொன்ன விசயங்களில் சிலவற்றை மட்டுமே சொல்லி, பலவற்றைத் தவிர்த்து இருக்கிறார்.
இந்தப் புத்தகங்களுடன் பார்க்க வேண்டிய படம் என்று – Forrest Gump - திரைப்படத்தைச் சொல்லலாம். பாரெஸ்ட் ஒரு தன்முனைப்புக்குறைபாட்டு நிலையினன். இருந்தும் சிறப்புக் குழந்தையான அவன் எப்படித் தன் வாழ்வின் சவால்களை எதிர்கொள்கிறான் என்று மிகச் சிறப்பாகச் சொல்லி இருப்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு படியிலும், ஒவ்வொரு நிகழ்விலும் அவனுடைய முழுப்பங்களிப்பு இருக்கும். வேறெதைப் பற்றியும் அவன் கவலை கொள்வதில்லை. அவனுக்குத் தேவை – தன்னைப் புரிந்தவர்கள். அதேபோல, அவனுக்கு எல்லாமும் புரியும். அவனுக்குப் புரிந்ததாக அவன் சொல்வதில்லை. அவன் நல்ல மகனாக, நல்ல நண்பனாக, நல்ல காதலனாக, நல்ல குடிமகனாக, நல்ல தோழனாக, நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக இருக்க முடிகிறது. அது சராசரியாய் இருக்கும் பெரும்பாலோரால் செய்ய முடியாத சாதனை அல்லவா? அவ்வளவு பெரிய சாதனையாளனான அவன் சொல்வதைபோலவே - I'm not a smart man... but I know what love is - ஒவ்வொரு ஆட்டிசக்குழந்தையும் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, Try to understand me, Nothing else.[4]

மார்க்சிய இலக்கியப் பின்னணி கொண்ட யெஸ்.பாலபாரதி, எரியும் பனிக்காடு, சோளகர் தொட்டி போன்று அழகியலை விடக் கருத்தியல் பார்வையை முன்வைக்கும் – அதே நேரத்தில் பன்முகங்கள் கொண்ட ஒரு படைப்பை விரைவில் தருவார் என்று நம்பலாம்.
பெற்றோராக திரு யெஸ்.பாலபாரதியும், திருமதி லக்ஷ்மியும் செய்யும் இத்தகைய பெரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

புத்தகங்கள்:
1.        ஆட்டிசம் சில புரிதல்கள்
வெளியீடு: புக் ஃபார் சில்ரன்
விலை: 50 ரூபாய்
2.        துலக்கம்
வெளியீடு: ஆனந்தவிகடன்
விலை: 85 ரூபாய்
1.        தொடர்பியல் Impart information & the way of expression - என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளேன். (communication அல்ல)
2.        மென்னுணர்வு - மென்மை உணர்வு என்ற அடிப்படையில் நான் உபயோகிக்கவில்லை. They could be cognitively disturbed without any external reason. - எளிதில் பாதிப்படையக்கூடிய/சமநிலை இழக்கக்கூடிய - என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளேன்.
4.        எந்தச் சிறப்புக் குழந்தையும் மேதையோ, முட்டாளோ அல்ல. ஆனால் அவர்கள் மற்றெல்லாக் குழந்தைகளையும் போல (கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படும்) சராசரிகள்தான் என்று புரிந்து கொள்ளவே ஃபாரஸ்ட் கம்ப்-ஐ உதாரணமாகச் சொல்லி இருக்கிறேன்.