Tuesday, August 18, 2015

தொடக்கக்கல்வி – தேவை அடிப்படையில் மாற்றம்




இன்றைய நிலையில் கல்வி வாழ்விற்கானது என்பதிலிருந்து வேலைக்கானது என்று மாறிவிட்டது. கல்வியின் குறிக்கோள் கற்றுக் கொள்வது என்று யாரிமாவது சொல்லிப்பாருங்கள். அநேகமாக நீங்கள் மனநிலை தவறியவர் என்று அடையாளம் காணப்படுவீர்கள். கடந்த முப்பது வருடங்களாக பள்ளி என்பது வேலை வாங்குவதற்காக காலத்தைச் செலவிடும் இடம் என்ற புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

உதாரணமாக சுந்தர் பிச்சை கூகிளின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவுடன் அவருடைய விக்கிபீடியா பக்கத்தில் கல்வி எனும் பகுதியில் அவர் பயின்ற பள்ளியின் விபரம்  மீண்டும் மீண்டும் நாள் முழுவதும் திருத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. திருத்தியவர்கள் யாராக இருக்கும் என்று எளிதில் ஊகித்துவிடலாம். ஏன் பள்ளிகள் தங்கள் பெயரைத் தவறாகவேனும் பிரபலப்படுத்திவிட முயல்கின்றன? கல்வியின் மூலம் அடைய வேண்டிய பெயரை, அறத்திற்குப் புறம்பாக பொய்களின் மூலம் அடைந்து, மேலும் பணம் சம்பாதிக்க மட்டுமே. இன்னொரு பக்கம் அதே நாளில் இந்திய இணையத்தில் நடந்த பெரிய விவாதம் சுந்தர் பிச்சையின் சம்பளம் பற்றியது. இப்படிப்பட்ட மக்களை உருவாக்கவே இன்றைய கல்வி முயல்கிறது.

கல்வி என்பது மனிதனை மனிதனாக அடையாளப்படுத்தும் ஒரு வழிமுறை மட்டுமே. அதன் மூலம் கிடைக்கும் உற்பத்திப் பொருள் – அறிவு கொண்ட மனிதன். அதில் அறிவே ஒரு வகையில் உபரிதான். அறிவெனும் உபரியின் மூலம் நாம் அடைவது வேலை. ஒரு உபரியின் உபரி – வேலை – மட்டுமே நமது குறிக்கோள் என்று கொள்கிறோம். இதை இப்படி விளக்கலாம். நிலத்தில் நெல் விதைக்கிறீர்கள், நெல் அறுவடையில் போது, வைக்கோல் கிடைக்கும், நெல்லும் கிடைக்கும், நெல்லிலிருந்து அரிசியும், தவிடும் கிடைக்கும். விவசாயத்தின் நோக்கம் நெல் விளைவிப்பது என்றுதான் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். உண்மையில், நிலம் பண்பட நாம் செய்வதுதான் விவசாயம். நிலம் என்பது அனைத்திற்கும் அடிப்படை. அதைத் தரிசாகப் போட்டால் நிலத்தை இழப்போம். இழந்தால், எதிர்காலத்தில் எதுவும் விளைவிக்க முடியாது. எனவே நிலத்தைக் எதிர்காலத்திற்காகப் பாதுகாக்கும் வேலையே விவசாயம். நிலத்திலிருந்து குறுகிய காலத்தில் பெரும் விளைச்சலை எடுக்க முயன்று உரங்களைக் கொட்டி அடிப்படையான நிலத்தை இழந்துவிட்டோம். அதே அடிப்படையை சீர்குலைக்கும் வேலையைத்தான் கல்வியிலும் செய்கிறோம்.

அந்த நிலம்தான் மாணவர்கள், விவசாயம்தான் கல்வி, நெல்தான் அறிவு, வைக்கோல் வெறும் அங்கீகாரம், தவிடுதான் வேலை. தவிட்டிற்காக நாம் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம். இனியும் தவிடுதான் உங்கள் குறிக்கோள் என்றால், இதைத் தொடர்ந்து வாசிக்காதீர்கள். இங்கே தவிடு குறித்து எதுவும் சொல்லப்படப் போவதில்லை.
இத்தகைய கல்விச் சிக்கலில், முதல் குற்றவாளி என்று பெற்றோரைத்தான் சொல்ல வேண்டும். இங்கே பெற்றோராகும் தகுதி வெறும் உடற்தகுதி மூலம் வருகிறதே தவிர, அறிவுத் தகுதி மூலம் அல்ல. திருமணத்திற்கு உடல்தகுதி போதுமானதாய் இருக்கலாம், ஆனால் அறிவற்ற யாருக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள எந்த உரிமையும் கிடையாது. இங்கே அறிவென்பது பட்டம் பெற்றிருத்தல் அல்ல. கல்விப் பின்புலமே இல்லாத ஒருவர் ஓர் குழந்தையை வளர்க்கும் அறிவுத்தகுதி கொண்டிருக்கலாம். முனைவர் பட்டம் பெற்றவர் அந்த அறிவுத்தகுதி அற்றவராக இருக்கலாம். பெரும்பாலும் கல்வித் தகுதி குறைந்த பெற்றோரைவிட கல்வி கற்ற பெற்றோர் குழந்தை வளர்க்கும் தகுதி குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்றால் கல்வித் தகுதி குறைந்தொரைவிட கல்வி கற்றவர்களுக்கு இருக்கும் சமூக அழுத்தம்தான் காரணம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பெரும்பாலோர்க்கு ஒரு குழந்தையை வளர்க்கும் தகுதி கிடையாதென்பதே உண்மை.

உதாரணமாக, உலகம் முழுக்க தாய்மொழிக் கல்வி அவசியமாய் இருக்க, நாம் ஆங்கிலவழியில் மட்டுமே படிக்க வைப்போம். தாய்மொழிக்கும் மூளையில் இருக்கும் மரபார்ந்த அறிவிற்கும், கற்றல் திறனுக்கும் உள்ள தொடர்பு பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முதலில், பெற்றோர் தமது குழந்தைக்கு அறிவைப் புகட்ட வேண்டும் என்று நினைக்க வேண்டியது அவசியம். பெற்றோரோ வேலை/பணம் எனும் தவிடைப் பெற வேண்டும் என நினைத்து, நெல்லை விட தவிடைப் பெரிதாக்கும் வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
இவர்களுக்குத் தோதாக, பள்ளிகள் குழந்தைகளை எந்திரங்களாக மாற்றும் வேலையைச் செய்து வருகின்றன. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க இரவும் பகலும் பெற்றோர்கள் தெருவில் காத்திருக்கச் செய்யப்படுகின்றனர். விண்ணப்பம் ஒன்று ஆயிரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பின் சேர்ப்புக் கட்டணம் லக்ஷங்களில், மேலும் வருடக்கட்டணம் தனி, மீண்டும் மாதக் கட்டணம் ஆயிரங்களில் வாங்கப்படுகிறது. ஏன் இதைச் செலவு செய்கிறார்கள்? அறிவைப் பெறவா? இல்லை, வாய்ப்புள்ள கல்லூரியில் சேர்ந்து பெரும் பணத்தை சம்பளமாகப் பெற. அதற்காக, பெற்றோராகிய இவர்கள் பென்ஸ் காரில் வந்து தெருவில் படுத்திருப்பார்கள். இவர்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் விமானத்தில் பறந்து அடிமையாய் இருப்பார்கள்.

குழந்தையை பெற்றுக் கொண்டால், அதன் உணவு மற்றும் அறிவினைத் தருவது பெற்றோரின் கடமை. ஆனால் இங்கே உணவும் அளிக்கும் தனியார் பள்ளிகளையே பெற்றோர் விரும்புகின்றனர். அதைப் பெருமையாக வேறு நினைக்கின்றனர். வெட்கக்கேடான விஷயம் அது. உங்களால் உணவைக் கூட அளிக்க முடியாதென்றால், எதற்குக் குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள்? பள்ளிகள் ஒட்டு மொத்தமாகத் தயாரித்து வழங்கும் உணவில் என்ன சத்து இருக்கும்? உங்கள் குழந்தைக்கு விருப்பமான உணவு கிடைக்குமா? நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு குழந்தைக்குமான விருப்ப/சத்துத் தேவைகள் புறந்தள்ளப்பட்டு உடல் வலுவற்ற பூஞ்சையான குழந்தைகள் உருவாக்கப்படுகின்றனர். மேலும் இதன் மூலம் அந்தக் குழந்தை மறைமுகமாக கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு அமைதியாக இருக்கப் பழக்கப்படுத்தப்படுகிறது. அதற்கென என்ன வேண்டும் என்றாலும் கிடைக்காது என்று உணர்த்தப்பட்டு அதன் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. இப்படியாக துடிப்பற்ற செம்மரியாடுகளாக அவர்கள் மாற்றப்படுகிறார்கள். பறவைகளும் விலங்குகளும் கூடத் தங்கள் குட்டிகளுக்குத் தேவையான உணவைத் தாங்களேதான் வழங்குகின்றன. அந்தக் குட்டிகள் துடிப்போடும் ஆர்வத்தோடும் இருக்கப் பழக்கப்படுத்தப்படுகின்றன. ஆனால் “ஆறறிவு” மாக்கள் தங்கள் மக்களுக்குத் தருவது ஆரோக்கியமற்ற சூழலை மட்டுமே. அதன் மூலம் உருவாவோர் தன்னுந்துதலற்ற பிராய்லர் மனிதர்கள்.

இன்று பள்ளிகள் வழங்கும் உணவை அரசு வழங்கும் சத்துணவுடன் ஒப்பிடவே முடியாது. மேலும் பெற்றோரால் உணவளிக்க முடியாத சூழலில் உணவிற்கே கஷ்டப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு. ஆனால் இன்று உணவு வழங்கும் சக்தி இருப்போர்கூட பெருமைக்காய் இந்தக் குப்பை உணவுகளை (Junk Food) வழங்கும் பள்ளிகளில் சேர்ப்பது என்பது அயோக்கியத்தனம்.
அடுத்தது கல்வி. கல்வியைத் தருவது பெற்றோரின் கடமை. பெற்றோரின் கல்வித் தகுதிக்கு மேல் குழந்தைகளுக்கு அறிவுத் தேவை ஏற்படும் போது அந்த இடைவெளியை நிரப்புபவையாக, அதற்கான உதவியை அளிப்பவை கல்விக் கூடங்கள் இருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்ற பெற்றோர் கூட ஒன்றாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தையை தனி வகுப்புகளுக்கு (Tuition) அனுப்புகிறார்கள். இவர்களால் அந்தப் பாடத்தைக் கூடச் சொல்லிக் கொடுக்க முடியாதா என்ன? ஐந்து வயதிற்குள், முதிர்ச்சி அடையாத மூளையும், பெரும் தேடலும் கொண்ட குழந்தைகளுக்கு இந்தப் பள்ளிகள் எதைத் தருகின்றன? அவர்களின் வரையறைகள் என்ன? எதைச் செய்யக் கூடாது? என்றுதான் சொல்கின்றன. உண்மையில் வரையறை எதுவும் கிடையாதென்று அவர்கள் அறிய வேண்டிய காலம் அது. இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுத்து, ஐந்து வயது வரை குழந்தைகளிடம் நிறையப் பேசவும் செய்யும் பெற்றோர் தங்கள் குழந்தைக்கு வாழ்நாள் முழுமைக்குமான உடல் நலத்தையும், சிந்தனை அமைப்பையும் தருகின்றனர். இது நிலையான சொத்தும் கூட. ஆனால் குழந்தையின் எதிர்காலத்திற்காக பணம் சேர்ப்பதாக நினைக்கும் பெற்றோர், குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் வேலைக்குச் செல்வதும், அதன் பின் குழந்தையிடம் நேரமே செலவிடாமல் இருப்பதையுமே வழக்கமாகச் செய்கின்றனர். உங்கள் குழந்தையிடம் நீங்கள் நேரம் செலவிட முடியாதென்றால், ஆசிரியர் மட்டும் ஏன் செலவிடப் போகிறார்? அவரைப் பொருத்தவரை 50 குழந்தைகளில் ஒன்றுதான் உங்கள் குழந்தை. உங்களுக்கு அப்படியா என்ன?

அடுத்தது கணக்கற்ற வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்ப்பது. இசை, ஓவியம், நடனம், கணக்கு இன்னும் எத்தனையோ வகுப்புகள். குழந்தைகள் இவற்றைக் கற்றுக் கொள்வது தவறல்ல. ஆனால் எந்த ஒரு குழந்தைக்கும் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களில்தான் விருப்பமிருக்கும். அதைக் கண்டு பிடித்து அவற்றில் அவர்களை பயிற்றுவித்தால் அவர்கள் சிறப்பாக வருவார்கள். ஆனால் அதற்குச் செய்யவேண்டியது கண்ட வகுப்புகளிலும் செர்ப்பதல்ல – அவர்களுடன் நெருங்கி நேரம் செலவு செய்தல். அதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் திறமையை உணர்ந்து கொள்ளலாம். கணக்கற்ற வகுப்புகளில் சேர்க்கப்படும் குழந்தை முதலில் அதிர்ச்சி அடைகிறது, பின் அதில் ஏற்ப்படும் தோல்விகளால் பதட்டத்திற்கு உள்ளாகிறது. பின் நிரந்தரமாக வெறுக்க ஆரம்பிக்கிறது. ஒரு வேளை அதன் பின் அதற்கு விருப்பமான விஷயத்தை அது சந்திக்காமலே போகலாம். மீண்டும் மீண்டும் ஒப்பிடப்படும் போது அந்தக் குழந்தை அதன் பின் மீண்டுவர முடியாமலாகிறது. இப்படியாக அது சராசரித்தன்மைக்குள் தள்ளப்படுகிறது.

எந்தப் பெற்றோராவது தங்கள் குழந்தைகளைப் பாடப்புத்தகமல்லாத புத்தகத்தை வாசிக்கச் சொல்லி இருக்கிறார்களா? அப்படி வாசிக்கச் சொல்லும் பள்ளிகள் எத்தனை? முதலில் பெற்றோர் ஏதேனும் புத்தகம் வாசிக்கிறார்களா? புத்தகம் வாசிக்காத குழந்தை வாழ்நாள் முழுக்க அறியாமையில் வாழ்வது தவிர்க்க முடியாதது – அது அவர்கள் எத்தனை படித்திருந்தாலும் கூட. புத்தகம் வாசிப்பதால் என்ன கிடைக்கிறது? பணமும் நேரமும் நஷ்டம் என்று சொல்வோர்தான் அதிகம். ஆனால் அப்படிச் சேர்க்கப்படும் பணமும் நேரமும் இவர்களால் எப்படிச் செலவிடப்படுகிறது? குப்பை உணவுகளை உண்பதிலும், தொலைக்காட்சிப் பெட்டி முன்னாலும்தான். மாதம் ஒரு புத்தகத்தை வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். காமிக்ஸ்-ல் ஆரம்பித்து பேரிலக்கியங்கள் வரை எதை வேண்டுமானாலும் படிக்கத் தரலாம். அது அவரவர் வயது, வாசிக்கும் வேகம் இவற்றைப் பொறுத்து அளவு கூடவோ குறையவோ செய்யலாம்.

முறையான பல்நோக்குக் கல்வியைக் கற்பது, வெற்றுக் கல்வியை கற்பது இரண்டில் முறையான பல்நோக்குக் கல்வியைக் கற்றால் ஓர் மனிதனாக வாழ்வில் சிறந்த இடத்தை அடையலாம். வெற்றுக் கல்வியை கற்றால் அதிக மதிப்பெண் பெறலாம். ஆனால் மதிப்பெண்ணிற்கும் வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மதிப்பெண் பெறுகிறீர்களோ இல்லையோ தொடர்ந்த பயிற்சியும் முயற்சியும் மட்டுமே அறிவுரீதியாக மேலே செல்ல உதவும். நிறைய மதிப்பெண்கள் பெறுவதென்பது மாணவர்களுக்குக் கூடுதலாகச் சில வாய்ப்புகளை அளிக்கலாம் – அவ்வளவுதான். அதற்கு மேல் வேறொன்றும் இல்லை. மாநில அளவில் மதிப்பெண் எடுக்கும் பெரும்பாலான மாணவர்கள் படித்து முடித்து வேலையில் சேர்ந்து அத்தோடு நின்று விடுவார்கள். ஆனால் தங்களின் குறைகளை உணர்ந்த சராசரி மாணவர்கள், அந்தக் குறைபாடுகளின் தீவிரத்தைத் தொடர்ந்த பயிற்சியின் மூலம் குறைத்து முன்னோக்கிச் செல்கின்றனர். மேல்நிலைக் கல்வியிலேயே இப்படித்தான் என்றால் தொடக்கக் கல்வியில் இவ்வளவு அழுத்தம் தேவையே இல்லை. மெதுவாக ஆனால் ஆழமாக என்ற அடிப்படையிலேயே மாணவர்கள் கல்வி கற்க வேண்டும். கல்வியை வேகமாக ஆனால் மிக மேலோட்டமாகக் கற்கும் இன்றைய மாணவர்கள் கல்வியில் சர்வதேச அளவில் பெரும் இடங்களை அடைவதில்லை. அதனால்தான் நம்முடைய நாட்டிலிருந்து குறிப்பிடத்தகுந்த கண்டுபிடிப்புகள் வருவதில்லை. ஆராய்ச்சிகள் ஆழமான அறிவை, பொறுமையைக் கோருபவை. நாமோ படிக்க, உடனடி மதிப்பெண் பெற என்று வளர்க்கப்படுகிறோம். அதன் மூலம் அறிவுப் பூஞ்சைகளாய் மட்டுமே இருக்கிறோம். 

தொடக்கக்கல்விக்கு வலுவான பாடத்திட்டங்கள் தேவையே தவிர, சுமையான பாடத்திட்டங்கள் தேவை இல்லை என்பதையும், இன்றைய நிலையில் பெரும் சுமைகளை ஏற்றி வைத்துக் குழந்தைகளின் அறிவை மழுங்கடித்து வருகிறோம் என்பதை பெற்றோர் உணர வேண்டும். பள்ளிக்கு வெளியே இருக்கும் முறைசாராக் கல்வி குறித்து ஒவ்வொரு பெற்றோரும் சிந்தித்து அதற்கு முயல வேண்டும். அதன் மூலம் வாழ்க்கையின் உண்மையான சவால்களைச் சந்திக்கும் குழந்தைகள் உருவாக்கப்பட வேண்டும். உருவாவார்கள் என்று நம்புவோம்.