Saturday, April 9, 2016

குடியம் பயணம் - தொல்குடிகள் இருந்த குகைகள்


இந்த வாரத்துக்குனு(ஏப்ரல் முதல் வாரம் 2016) ஏற்கனவே வச்சுருந்த பிளான் சொதப்பிருச்சு. செல்வபிரபு திடீர்னு குடியம் போவோம்னு சொன்னப்போ சரின்னு கெளம்பியாச்சு. வழக்கம் போல குருநாதர் செந்தில்வேல் ஓகே சொல்லிட்டார். கூடவே சுரேஷ்.


காலைல இளநியோட ஆரம்பிச்ச நாள் – வரும்போது இளநியோட முடிஞ்சது. சென்னைல இருந்து திருவள்ளூர், அங்கே இருந்து பூண்டி, அப்புறம் குடியம். போற வழில குடியம் எங்கே இருக்குனு கேட்டா யாருக்கும் தெரியல. பழைய கால குகை இருக்காமே அப்படின்னு கேட்டோம். ஓ.. கூடியமா அப்படின்னு கேட்டு வழி சொன்னாங்க. குடியம் கிராமவிலக்கிலிருந்து உள்ளே செல்ல மண் பாதை. இதுக்கு மேல் பைக் போகாது என்ற நிலைமைல நிறுத்திவிட்டு, நடக்க ஆரம்பித்தோம். அதைத் தாண்டிப் போகலாம்தான், ஆனால் பைக் காணமல் போக வாய்ப்பிருக்கு.
இந்த இடத்தில் ஒரு விஷயம், அந்த பகுதியில் சுத்தமா சிக்னல் இல்ல. அதுனால மேப்பும் வேலை செய்யாது.. குகை எங்க இருக்கு, எவ்வளவு தூரம் எதுவும் தெரியாது. என்ன ஆனா நமக்கு என்னனு நடக்க ஆரம்பிச்சோம். போற வழில ஒரு பள்ளம் தோண்டி வச்சிருந்தாய்ங்க. அதைத் தாண்டினா ஒரு வாட்ச் டவர். அதுல வலது பக்கம் திரும்பினோம். கொஞ்ச தூரம் போன உடனே, மலை இடது பக்கமா இருந்தது. அதுனால இடது பக்கம் திரும்பி நடக்க ஆரம்பிச்சோம். ஒத்தையடிப் பாதை. அது போய் முட்டிட்டா திரும்பி வந்து வேற பாதை. இப்படியே போயிட்டு இருந்தோம்.
அப்போ வழவழப்பான கற்கள் பரவிக் கெடக்கிறதப் பார்த்தோம். எடுறா கேமராவனு நிறைய போட்டோ எடுத்தோம். கருப்பா, வெள்ளையா, மஞ்சளா, வேற வேற அளவுல கற்கள் ஒவ்வொன்னும் அழகு. இந்தக் கற்களெல்லாம் குடியங்கிற இந்த ஊரைச் சுத்திக் கெடக்கு. நானும் செல்வாவும் கொஞ்சம் கற்களை எடுத்துக்கிட்டோம்.
1867ல ராபர்ட் ப்ருஷ்னு ஒரு வெள்ளைகார நிலவியலாளர் இந்தக் குகைகள கண்டு பிடிச்சு அறிவிச்சாராம். சில லட்சம் வருடங்களுக்கு முன்னாடி மனுஷன் இந்த மலைல வாழ்ந்திருக்கான். மனிதன் உணவுக்காக விலங்குக்களை வேட்டையாடத் தேவையான கற்கருவிகள் செய்ய ஏத்தது மாதிரி நிறையக் கற்கள் இங்கே இருந்ததுனால மனுஷன் இங்க தங்கி இருந்ததா சொல்றாங்க. அவங்க வாழ்ந்த குகையத்தான் நாங்க பார்க்கப் போயிருந்தோம்.


பொதுவா காட்டுக்குள்ள போகும்போது இடது பக்கமா போற பாதையத் தேர்ந்தெடுத்துப் போயிட்டே இருந்தா, முடிவுல ஏதாவது இடத்துக்கோ (?????) அல்லது கிளம்பின இடத்துக்கோ வந்துடலாம். அதுனால நாங்க போய்க்கிட்டே இருந்தோம். அப்போ ஒரு வண்டிப்பாதைல வந்து சேர்ந்தோம். அதுல நிறைய காலடித் தடம் இருந்தது. சரி நாம சரியாதான் போயிட்டு இருக்கோம்னு முடிவு பண்ணுனோம்.
கொஞ்ச தூரம் போன பின்னாடி, மூணு பேரு சரக்கைப் போட்டுட்டு இருந்தாங்க. இதே பாதைல 1.5 கி.மீ போங்க குகை வரும்னு சொன்னாங்க. போனோம். வந்தது.
அகலமான குகை. குளிர்ச்சியாக இருந்தது. மொத்த மலையுமே கடற்பாறைகளைப் போன்றே இருந்தது. நிறைய தேன் கூடுகள். இது சில கோடி வருசத்துக்கு முன்னாடி கடலாக இருந்து, நிலமாக ஆனது என்று செல்வா சொன்னார். அருமையான கற்கள். உருளைக் கற்கள் ஆற்றின் நீரோட்டத்தினால் வழவழப்பாக ஆவதாக நினைத்திருந்தேன். இயற்கையிலேயே அப்படி இருந்து எரிமலைக் குழம்பினால் வெளியே வந்து அப்படியே உறைந்து நிற்கும் கற்களைக் காண முடிந்தது.


இந்திய நிலப்பகுதிக்கு ஐந்தாயிரம் வருடம் என்பதெல்லாம் குறுகிய காலமே. ஆனால் இரண்டு லட்சம் வருடம் என்பது நீண்ட காலம். குடி-யம் என்ற வார்த்தையே குடி – கூடம் – கூட்டம் – மக்கள் திரள் என்ற பொருளில்தான் இருக்கிறது. குடியமர்வு என்ற வார்த்தையில் இருக்கும் குடியம் அதுதான் என்று நினைக்கிறேன். மக்கள் குடியமர்ந்த இடம். தமிழ் மொழி – என் அருமைத் தமிழ் மொழி. தொல்நிலம், தொல்மாந்தர் வாழ்ந்த இந்த இடத்தை ஒவ்வொரு மனிதரும் பார்க்கவேண்டும். முக்கியமா, இப்பகுதியில் ஏதேனும் தனிமம், கனிமம் கிடைப்பதாகத் தெரியும் முன்னாடிப் பார்த்துவிட வேண்டும். இல்லைனா, மதுரையின் சமணப்படுகைகள் காணாமப் போனது மாதிரி இதுவும் காணாமப் போயிடும். அப்புறம் நாம நினைச்சாலும் பார்க்க முடியாது.



தனியாகப் பயணம் போக ஏற்ற பகுதி அல்ல. குறைந்தது நான்குபேராகச் செல்வது நல்லது. பெண்கள் போவதாக இருந்தால் மிகக்கவனம் தேவை. தண்ணீர் நிறைய எடுத்துட்டுப் போங்க. பிளாஸ்டிக் பைகளை அல்லது பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள். கொண்டு சென்றால் திரும்பி எடுத்து வந்துவிடுங்கள். உள்ளே நுழையும் போதே வாட்ச் டவர் இருக்கும். அங்கேயே இடதுபுறம் திரும்பினால் நல்ல பாதையில் சீக்கிரம் குகையை அடையலாம். வலது புறம் திரும்பினால் கற்கள் நிரம்பிய இடங்களைப் பார்க்கலாம். நிறையப் படங்கள் எடுக்கலாம். நினைவிற்காக கொஞ்சம் கற்களை எடுத்து வரலாம். ஆனால் இந்தப் பாதை சாகச விரும்பிகளுக்கானது.

No comments:

Post a Comment