Wednesday, October 13, 2010

ஈழம் - இரவு - எலீ வீஸல்


நான் படிக்கும் புத்தகங்களை பெரும்பாலும் நானே தேர்ந்தெடுக்கிறேன். அதிஷ்டவசமாக சில புத்தகங்கள் என்னிடம் வந்து சேரும். சமீபத்தில் தமிழினி பதிப்பகம் போயிருந்த போது அண்ணன் வசந்தகுமார் சில புத்தகங்களைக்கொடுத்து படிக்கச் சொன்னார். அதில் ஒரு புத்தகம் எலீ வீஸல் எழுதிய இரவு. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக என்னுடைய கண் முன்னே அசைவின்றி இருந்த புத்தகம். வாசிக்கும் விருப்பத்தில் அனேகமாக கடைசி நிலையில் இருந்த புத்தகம். திடீரென்று நேற்று வேலைக்கு கிளம்பும் போது கையில் சிக்கி படித்து முடித்தேன்.

அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிவிட விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தை படிக்கும் முன்பு யூதர்கள் மேல் ஒரு எரிச்சல் உண்டு. ஏனென்றால் இன்று உலகில் நடக்கும் பெரும் யுத்தங்களை பின் நின்று நடத்துவது அவர்கள்தான். பொருளாதாரம், கல்வி இரண்டையும் வைத்துக்கொண்டு உலகை ஆட்டிப் படைக்கும் அவர்களைப் பற்றி உலக அரசியல் தெரிந்த யாரும் அறிவார்கள்.

ஆனால், இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகான என் எண்ணம் முற்றிலும் வேறுபட்டது.

உலகம் முழுவதும் இலக்கியம் பல கிளை கொண்ட மரமாக இருக்கிறது. பேரிலக்கியங்கள் சமூக அவலங்களை உலகுக்கு எடுத்துச் சொல்பவையாகவேஇருக்கின்றன. இந்தப் புத்தகமும் ஒரு பேரவலத்தை நம் கண்முன் மறுபடி நிகழ்த்திக் காட்டுகிறது. இரண்டாம் உலகப்போர் என்பது ஹிட்லரை மையமாகக்கொண்டதாகவும் அவர் நடத்திய இனஅழிப்பை நிறுத்துவதற்காகவும் நடத்தப்பட்டது என்பதாகவே நாம் அறிந்திருக்கிறோம். இந்த இடத்தில் இனஅழிப்பு என்பதுஒரு
சொல்லாக - கடந்து போகக்கூடியதா இருக்கிறது. ஆனால் யூத இனம் எப்படி எல்லாம் அழிக்கப்பட்டது என்பதற்கு பல சாட்சியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்தப் புத்தகம்.

எலிசர் என்னும் சிறுவன், (வயது 15 ) ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன்இருப்பவன். ஹிட்லரின் நடவடிக்கையால் அவன் வாழ்வு எப்படியெல்லாம்மாறுகிறது எனபது தான் இந்த சுயசரிதையின் சுருக்கம். நடக்கும் துயரங்களைசிலர் சொன்னாலும், அவை எல்லாம் நடக்கவே சாத்தியமற்றவை என்பதாய்புரிந்து கொண்டு தினசரி வாழ்வை வாழும் மக்கள். அதன் பின் அவர்கள்கேள்விப்பட்டதை விடக்கொடுமையான சூழலில் வாழ்கிறார்கள். அவர்கள் நுழையும் ஒரு முகாமில், குழிகளில் சடலங்கள் கிடப்பதும், கைக்குழந்தைகள் கொல்லப்பட்டு எரிக்கப்படுவதையும் பார்ப்பவர்கள் தங்களுக்கு நேரப்போவதைதெரிந்துகொள்கிறார்கள். அதன்பின் அப்பாக்களை கொன்று, அவர்களின்உணவை மகன்கள் உண்டு வாழ்கிறார்கள். நோயாளிகள், உடல் திடமற்றோர் உடனடியாக எரி உலைக்கு அனுப்பபட்டு உலகத்தில் இருந்து விடைபெறுகிறார்கள். பலருக்கும் சாவதே விருப்பத்திற்கு உட்பட்ட செயலாய்இருக்கிறது. உயிரற்ற உடல்கள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. தூக்கிலிடப்படுவோர் உடலின் கனமற்ற தன்மையால் நெடுநேரம் தொங்கி அணுஅணுவாக உயிரை விடுகின்றனர். கடைசியில் எலீயின் அப்பாவும் நோய்வாய்பட, அவன் அப்பாவை முடிந்தவரை காப்பாற்ற முயல்கிறான். இறுதியில், அவனேசலித்துப்போய் கைவிட நேர்கிறது. ஒரு நாள் காலை அவன் எழும்போது அவன்அப்பா இல்லை. அவர் உயிருடனோ, பிணமாகவோ எரிக்கப் பட்டிருக்கலாம் என்றபடி கடந்து போகிறான். இடையே எல்லோரும் கடவுளைத் தொழுகிறார்கள். கடவுளிடம் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் புத்தகத்தில் ஓரிடத்தில் கடவுள் எங்கே எனக்கேட்பவனிடம், எலீ சொல்ல நினைப்பது "
இதோ இங்கே தூக்கில் தொங்குகிறானே அவன் தான் கடவுள்" என்று.

எல்லோரையும் கொல்வதை எப்படி உலகம் வேடிக்கை பார்க்கிறது என்று கேட்க, அதற்கு உலகம் நம்மை மறந்துவிட்டது.... கைவிட்டுவிட்டது என்பதே பதிலாய்இருக்கிறது. இந்த இடம் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய இடம். உலகமே ஒரு இனத்தை கைவிடும் போது, மீண்டு வரும் யாரும் உலகத்தை பழிவாங்க முனைவது இயல்பே. அதனால்தான் இன்று யூத இனம் பேரழிவுகளைஏற்படுத்தும் ஒரு இனமாக இருக்கிறது. அவர்கள் இன்று உலகின் பெரும்எண்ணெய், தங்கம், வங்கி, ஆயுத வியாபாரிகளாக வளர்ந்துள்ளனர். சகமனிதனை கைவிடும் நாம் அதற்கான கூலியைப் பெற்றேஆகவேண்டியுள்ளது. இந்தப் புத்தகத்தை தொடர்ந்து ஒரே மூச்சில் வாசித்தல் என்பது சாத்தியமில்லை. ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் நிறுத்திவிட்டு இப்படிஎல்லாம் நடக்க சாத்தியமில்லை என்று யோசிக்க வாய்ப்பிருக்கிறது, இந்தப்புத்தகத்தில் வாழும் சராசரி மக்களைப்போலவே. அப்படி நினைப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நாளை இது நமக்கும் நடக்கலாம்.

இப்போது ஈழத்தைப் பற்றி,

இந்தப்
புத்தகத்தில் விவரிக்கப்பட்ட இன அழிப்பிற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல ஈழத்தில் நடந்த அழித்தொழிப்பு. ஈழத்தில் வாழ்ந்தவன் தமிழன்என்பதைத் தாண்டி, அவர்கள் மனிதர்கள் என்பதைகூட இந்த உலகம் உணரமறுத்துவிட்டது. 600 கோடிப் பேர் வாழும் உலகில் 10 லட்சம் பேர் அழிந்துபோனதுஒரு நிகழ்வாகக் கூடப் பதியப்படவில்லை. எண்ணிக்கை என்பதைவிட, ஒருஇனமே அழிக்கப்பட்ட துயரத்திற்கு யாரும் கண்டனம் தெரிவிக்ககூடத் தயாராய்இல்லை. இந்நிலையில் இந்தப்போர், நடந்தது அநேகமாக வரலாற்றின்பக்கங்களில் இருந்து துடைத்து எடுக்கப்படும். ஏனென்றால் வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படும் மிகைபுனைவு. அதில் உண்மையைக்கண்டறிய சாமானிய மனிதனுக்கு வாய்ப்பே இல்லை.

இப்போதைய தேவை என்ன?

ஈழத்தில் நடந்தது என்ன என்பதை விட, அங்கே நடந்த அரசியல், களத் தவறுகளைப் பேசி தானும் அறிவாளி என்பதைக் காட்டிக்கொள்ள முயல்வோரேஅதிகம். இன்னொன்று குறை சொல்வோர் யாரும் அதற்கான மாற்று அரசியல்பற்றி தெளிவான கருத்தை முன்வைப்பதில்லை. இன்றைய உலகமயமாக்கலின்சூழலில் ஆயுதப்போராட்டம் என்பது ஆயுத வியாபாரிகளின் வியாபாரத்தந்திரங்களில் ஒன்று. இங்கே ஆயுத வியாபாரி என்பது தனிப்பட்ட நிறுவனமோ, தனி நபரோ அல்ல - அவை பெரும் பண பலம் கொண்ட வல்லரசுகள் மட்டுமே.

வரலாற்றை மீண்டும் மீண்டும் படித்தால் ஒன்று மட்டும் தெளிவாகும் - அது கல்வியும் பொருளாதாரமுமே ஒரு இனத்தையோ தனி மனிதனையோ விடிதலை செய்யமுடியும் என்பதே. இந்த நிலையில் ஈழத்தமிழன் எந்த நாட்டிற்கு புலம் பெயர்ந்தாலும், கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் மூலம் இனத்தை மீட்டெடுக்க முடியும். இரண்டாவது ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வின்குறிப்புகளை யூதர்களைப் போல ஆவணமாக்குவது அவசியமாகிறது. ஏனென்றால் தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளர்கள் (?????) முதல்ஆராய்ச்சிக்கட்டுரைகள் வாசிக்கும் எழுத்தாளன் வரை யாரும் இதைத் தங்களின்படைப்பில் கொண்டுவரத் தயாராய் இல்லை. அவர்களை பொறுத்தவரைபிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள் மட்டுமே விளிம்பு மனிதர்கள். அதுதவிர விவசாயிகள், மீனவர்கள் போன்ற பெரும் எண்ணிகையிலான துயரவாழ்வினை வாழும் மக்களுக்கு அவர்களின் உலகில் இடமே இல்லை. மற்றசிலருக்கு காவிய நாயகர்கள், அரசியல்வாதிகள், அற்புத தருணங்கள் பற்றி எழுதமட்டுமே நேரமும் ஆர்வமும் இருக்கிறது. இன்னும் சிலருக்கு உலக இலக்கியம், உள்ளூர் இலக்கியம் எல்லாம் கரைத்துக் குடித்துவிட்டு - எது இலக்கியம் என்பதைவிளக்கவே நேரம் போதவில்லை.

எனவே இனஅழிப்பு பற்றிய புத்தகங்கள் ஈழ மக்களால் மட்டுமே எழுதப்படமுடியும். அப்படி ஒரு புத்தகம் வந்தாலாவது இந்த உலகம் வெட்கித்தலைகுனிகிறதா என்று பார்ப்போம்.

அதுவரை வழக்கம் போல
இலக்கிய வியாதிகளின்அக்கப்போர்களை மட்டுமே கவனித்துக் கைதட்டுவோம். :(

புத்தகத்தைப் பரிந்துரைத்த அண்ணன் தமிழினி வசந்தகுமாருக்கு நன்றி.

சக மனிதன் மேல் அன்பிருக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

புத்தகத்தின் பெயர் : இரவு
எழுதியவர் : எலீ வீசல்
தமிழாக்கம்: ரவி இளங்கோவன்
பதிப்பகம் : யுனைடெட் ரைட்டர்ஸ்,
130/2, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
சென்னை - 86.
விலை : 70 ரூபாய்

No comments:

Post a Comment