Sunday, June 26, 2016

நுங்கம்பாக்கம் – ரயில் நிலையம் - ஒரு நினைவு


என் சென்னை வாழ்வுல, நான் அதிக முறை போன இடம்னா அது நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன்தான். கிட்டத்தட்ட ஆறு வருஷம் சூளைமேட்டுல இருந்தேன். மாத பாஸ் 120 ரூபாய்க்கு வாங்கிட்டு, தினசரி வேலை இருக்கோ, இல்லையோ ரயில்ல பயணம் பண்ணுவது என் பழக்கம். அப்போ ஸ்டேசன் உள்ளார போகவும் வரவும் எங்களுக்குன்னு ஒரு வழி உண்டு. சவுராஷ்டிரா நகர் நாலாவது தெருவுல புகுந்து நேரே வந்தா ரயில்வே சுவர் உடைந்து இருக்கும், அது வழியா ஏறி ட்ராக்கைக் கடந்து உள்ளே போவோம். அதே போல இறங்கி வெளியிலும் வருவோம். இதெல்லாம் பகல்ல மட்டும்தான். ராத்திரில அந்த இடத்துல நாய் தொந்தரவு இருக்கும். அப்படி உள்ளே போகும் போது, எப்போவாவது டிக்கெட் செக் பண்ணுவாங்க. TC-க்கு எங்களை எல்லாம் நல்லாத் தெரியும், ஒன்னும் கேக்க மாட்டாரு. டிக்கெட் இல்லாம மாட்டுறவங்கள அந்தக் கடைசில இருக்க ரூம்ல நிக்க வைப்பாங்க. ஓரளவு ஆள் சேர்ந்த உடனே, எக்மோர் ஸ்டேசன் கூட்டிட்டுப் போய் தண்டம் கட்டவைக்கணும். அது கூட எப்போவாவதுதான் நடக்கும். அந்த ரூம் வாசல்ல எடை போடுற மிசின் ஒன்னு கெடக்கும். அந்த ரூமை தாண்டினா கிரானைட் பெஞ்ச் – வரிசையா இருக்கும். அதெல்லாமே சாயங்கால நேரத்துல லவ்வர்ஸ் பெஞ்ச்கள்.
இன்னொரு நடை மேடை வெளியூர் ட்ரைன்-களுக்காக இருக்கும். அதுல மாசம் ஒரு ட்ரைன் நிக்கிறதே பெருசு. அதுக்குப் போகணும்னா, ட்ராக் க்ராஸ் பண்ணனும் இல்லனா, வெளில போய் லயோலா ஒட்டி ஒரு பாதைல வந்து உள்ள வரணும். அந்தப் பாதைல புல் மண்டிப் போய் இருக்கும். அந்த நடை மேடைல ஒன்னு ரெண்டு கஞ்சா அடிமைகளைத் தவிர யாரும் இருக்க மாட்டாங்க.
ராத்திரி 12 மணி, அதிகாலை 5 மணினு எத்தனையோ முறை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன் போயிருக்கேன். சாயங்காலத்துல போய் கிரானைட் பெஞ்ச்ல உட்கார்ந்து புத்தகம் படிச்சுருக்கேன்.
(2008 ஆக இருக்கலாம்), இரவு 11 மணிக்கு மேல இருக்கும். மாம்பலத்துல இருந்து நுங்கம்பாக்கம் வந்துட்டு இருந்தேன். கோடம்பாக்கத்திற்கும், நுங்கம்பாக்கத்துக்கும் நடுவுல வண்டி நின்னு கெளம்பியது. நுங்கம்பாக்கத்தில் ரெம்பக் குறைவான பேர்தான் இறங்கினாங்க.
நான் படிக்கட்டுக்கிட்ட வரும்போது ஒரு இத்துப் போன ஸ்ரெச்சர்ல பழைய சாக்கை வச்சு எதையோ மூடி வச்சுக்கிட்டு, கைலி கட்டின ஒருத்தர் ஒவ்வொருத்தர்கிட்டையா அதைப் பார்த்துக்கச் சொல்லி கெஞ்சிக்கிட்டு இருந்தார். யாரும் நிற்கவில்லை. போய்கிட்டே இருந்தாங்க. கடைசியா வந்த என்கிட்ட கேட்டார். அவரிடம் இருந்து மட்ட ரக சாராய வாடை அடித்தது. நான் அவரிடம் ஸ்ரெச்சேரில் என்னனு கேட்டேன். 

அனாதைப் பொணம் சார். ரயில்ல அடிபட்டது. நாங்க ரெண்டு பேர் சேர்ந்து தூக்கினோம். அவன் போலீஸ் கூட எக்மோர் போய்ட்டான். அவனும் போலிசும் வர்ற வரை இங்கதான் இருக்கணும். அப்புறம் நோட் போட்டு ஜி.ஹச் போவனும் சார். ஸ்டேசன் மாஸ்டர போன் பண்ணி வர சொல்லணும். நான் மேல போயிட்டு வர்ற வரை இதைப் பார்த்துக்க சார். நான் ஓடிட மாட்டேன் – நம்பு சார். நீ வேணா நான் மேல போறதைப் பார்த்துகிட்டே இரு.
சரி போயிட்டு வாங்க நான் நிக்கிறேன்.
சுற்றிலும் பார்த்தா, எப்போவும் பூ விக்கிற அந்த அக்கா கூட இல்லை. நான் பக்கத்துல இருந்த பெஞ்ச்ல உட்காந்தேன். அவர் அந்தப் படி வழியா மேல போய் கவுன்ட்டர்ல இருக்க ஆள்கிட்டப் பேசுறதைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ அடிச்ச காத்துல சாக்கு விலகி உள்ளே இருக்கும் பிணத்தின் தலை தெரிஞ்சது. பெண், நீண்ட முடி. ஆனால், முகம்கிற ஒன்னே இல்லை. துண்டு துண்டா சிதறிய இடத்தில் பற்கள். உதடே இல்லை. பக்கத்தில இருந்த குச்சிய வச்சு சாக்கால் மறுபடி மூடினேன். அப்புறம் மறுபடி பறக்காம இருக்க ஒரு சின்னக் கல்லை அதன் மேல் வச்சேன்.
போனவர் அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தாப்ள.
மேல டிக்கெட் கவுன்ட்டர்ல இருக்கவர் இங்க வர மாட்றார். பொணம்னாப் பயமாம், டிக்கெட் வேற குடுக்கணுமாம். என்கிட்ட இருபது ருபாயக் குடுத்துட்டு, தயவு செஞ்சி பொணத்தப் பார்க்கக் கூப்பிடாதனு சொல்லிட்டாரு. என்னா சார் மனுசங்க. ஆள் வரட்டும், அதுவரை நானே பார்த்துக்குவேன். சரி சார் நீ கெளம்பு.
பரவால்லை. ஆள் வர வரைக்கும் நானும் இருக்கேன்.
நான் கல்லெடுத்து வச்சுருக்கிறதைப் பார்த்துட்டு, நாய்க்குப் பயந்துதான் உன்னை இங்க இருக்க சொன்னேன். அது வந்து இழுத்துப் போட்டுட்டு போயிரும். நெறைய இடத்துல நாங்க போறதுக்கு முன்னாடி நாய் இழுத்து, இங்கேயும் அங்கேயும் கெடக்குற பீசுங்கள எடுத்து பொட்டலமா ஆக்கித் தூக்கிட்டு வந்துருக்கோம். பெஜாராய்டும். முழுப்போதை இல்லாம இந்த வேலை செய்ய முடியாது. இனி இதைத் தூக்கி மார்ச்சுவரில போடுற வரை சாப்பாடு கெடியாது சார். இது அனாதைப் பொணம் வேற, எங்களுக்கு ஒன்னும் கெடைக்காது.
இடுப்பிலிருந்து ஒரு குவாட்டரை எடுத்து அதில் பாதியைத் தொண்டைக்குள் கவிழ்த்தார். அது மானிட்டர் பிராந்தி என்பது வெளிச்சத்தில் தெரிந்தது.
அரை மணி நேரத்தில் போலீஸ், இன்னொரு நபர், ஸ்டேசன் மாஸ்டர் எல்லாரும் வந்துவிட்டனர். நான் கிளம்பினேன். அப்போதெல்லாம் படி ரெம்பக் குறுகல். மேலே ஏறி இடப்பக்கம் திரும்பினேன். ஒரே ஒரு ட்யுப் லைட்தான். வரிசையாகப் பிச்சைக்காரர்கள் படுத்திருந்தார்கள். அவர்களை நான் பலமுறை இதே ரயில்வே ஸ்டேஷனில் பார்த்திருக்கிறேன். ஒரு குழந்தை குப்பை கூலங்களுக்கு நடுவே தனியாகக் கிடந்தது. கொஞ்சத் தூர இடைவெளியில், மனநிலை தவறிய ஒரு பெண், தன் அழுக்கான உடைகள் விலகப் படுத்திருந்தாள். அவள் கண்கள் திறந்திருந்தன. நான் நிதானமாகப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தேன்.
--------------------------------------------------------------------------------------
என் நினைவிற்காக:
மேலும், இதற்காக அப்போது ஒரு கவிதையும் எழுதினேன்.
சிறுகடவுளின் தலையெழுத்து

எப்போதும் விழித்தே இருக்கும் நரகத்தில்
"ஸ்டெத்" மணிகட்டிய பெருங்கடவுள் ஆணையிட்டார்
பலரின் தலையெழுத்தை வாசிக்க.
போதையேறிய சிறுகடவுளின் ஆயுதம்
பழைய சுத்தியும்
உடைந்த கத்தியும்
புழுத்து நாறும் அரசவையில்
நிறைகின்றனர்
அங்கங்கள் அற்ற அடிமைகள்.
சிறு கடவுளாய் இருத்தலின்
சாத்தியங்களைப் பழித்தபடி
வாசிக்கப்படுகிறது அவர்களின்
தலையெழுத்து.
......................தொடர் புள்ளிகளால்
நீட்டிக்கப் படுகிறது
சிறுகடவுளின் முற்றுப் புள்ளி.

No comments:

Post a Comment