Monday, March 18, 2013

பரதேசியும் நானும் - 2

பரதேசியும் நானும் - 1

பரதேசியைப் பற்றி இதுவரை இணையத்தில் வந்த விமர்சனங்களை - முக்கியமாக intellectual என்று இணையத்தில் உலவும் பலரும் படத்தை வலிந்து கீழ்மைப்படுத்துவதைக் காண முடிகிறது.

விமர்சனங்கள் எந்த முறைமைகளும் இன்றி, எப்படித்  தனிமனிதனின் விருப்பம் சார்ந்து அமைக்கப்படுகின்றன என்று இதன் மூலம் யாரும் புரிந்து கொள்ளலாம்.

சரி பரதேசிக்கு வருவோம்.

என் அப்பாவின் குடும்பம், என் அம்மாவின் குடும்பம், என் அப்பத்தாவின் குடும்பம் இவை அனைத்துமே பெரும் பேரும் , பொருளும் கொண்ட குடும்பங்கள். அவ்வளவு பெரும் பொருளை எப்படி சம்பாதித்தார்கள் என்பதில்தான் பல உண்மைக்கதைகள் இருக்கின்றன. அவ்வளவு பொருளும் அடிமைகளின் ரத்தத்தால் ஊறியவை மட்டுமே.

அதற்கு முன் செட்டிநாட்டு அரண்மனைகளையும் அங்கே நிலவும் சாதியக் கட்டுமானங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அரண்மனைகள் முழுக்கக் கட்டப்பட்டது பர்மிய அடிமைகளின் உழைப்புச் சுரண்டலாலும், இந்திய கூலிகளின் பசியாலும்தான். ஒவ்வொரு வீடும் நான்கு அல்லது ஐந்து பிரிவுகளைக் கொண்டது. குறைந்த பட்சமாக 40 சென்ட் இடத்தில் இருந்து சில ஏக்கர் வரையிலான அளவுகளைக் கொண்ட கட்டிடங்கள். தரையிலிருந்து 10 அடிவரை உயர்த்தப்பட்ட அடித்தளங்கள்  இன்ச் இஞ்சாக செதுக்கப்பட்ட வெள்ளை, கருங்கற்களையும் கொண்டு அமைக்கப்பட்டன. முழுக்க முழுக்க பர்மாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேக்கு மரங்களைக் கொண்டு இளைத்து இளைத்து செய்யப்பட கதவுகள், ஜன்னல்கள், அறைகலன்கள் கொண்டு நிறைந்து கிடக்கும். இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பிள் கற்கள், ஓடுகளால் தரைகள் அலங்கரிக்கப் பட்டு இருக்கும். ஒவ்வொரு வீடும் கட்டி முடிக்க 5 முதல் 30 வருடங்கள் வரை ஆகி இருக்கிறது. இவற்றுக்கான பணம் எங்கே இருந்து வந்து இருக்கும்?

இங்கே தான் ஆரம்பிக்கிறது அடிமை முறையும் உழைப்புச் சுரண்டலும். ஒவ்வொரு செட்டிநாட்டு நபருக்கும் இரண்டு விதமான வேலைகள் சாத்தியமாக இருந்தன.

ஒன்று பர்மாவில் போய் வட்டிக் கடை வைப்பது.
இரண்டு எஸ்டேட் தொடர்பான வேலைகள்.

முதலாவதில் செட்டியார்களும், இரண்டாவதில் கள்ளர் இன மக்களும் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் கலந்தே இந்தத் தொழில்களைச் செய்தனர் என்றே சொல்லலாம். எப்படி என்றால், முதலில் போய் வட்டிக்குக்கொடுப்பது, பின் தொழிலைக் கற்றுக் கொண்டு தனியே கடை வைத்து, கணக்குத் தெரியாத  பர்மிய மக்களை ஏமாற்றி பொருள் சேர்த்து பின் அவர்களின் இடங்களை பெரும் அளவில் வாங்கிக் குவிப்பது/ ஆக்கிரமிப்பது. பின் அவர்களையே அடிமைகள் ஆக்கி வேலை செய்ய வைப்பது அல்லது இங்கே இருந்து அடிமைகளாக மக்களைக் (பெரும்பாலும் தலித்துகள்) கொண்டு சென்று வேலை வாங்குவது.  இந்த இடத்தில்தான் அடிமைகளை "மேய்க்கக்" கூடிய, சற்றும் இரக்கம் அற்ற, உடல் உரம் மிக்க கங்காணிகளின் தேவை ஏற்படுகிறது.  அதற்காக செட்டிநாட்டில் இருந்து பெரும் அளவில் ஆதிக்க சாதியினர் அனுப்பப்பட்டனர்.

எஸ்டேட் வைத்து இருந்தவர்கள் "முதலாளி வீடு" என்றும், இந்தக் கங்காணிகள் "சோக்ரா" என்றும் சொல்லப்பட்டனர். இந்தக் குடும்பங்கள் இன்றும் "சொக்கரா வீடு/ வகையறா" என்றுதான் அழைக்கப்படுகின்றனர். (எனது சொந்தக்காரர்கள் சிலரின் குடும்பங்கள் இன்றும் இப்படித்தான் அழைக்கப்படுகின்றன). இவை தவிர கணக்கு வழக்குப் பார்ப்பதற்காக என்று சிலர் அனுப்பப்பட்டனர். அவர்கள் கணக்கு பிள்ளை வீடு என்று அழைக்கப்பட்டனர். 

இவற்றில் முதலாளிகள் என்போர் பெரும்பாலும் குட்டி அரசர்கள்தான். பெரும் பணம், ஏகப்பட்ட வீடுகள், பல மனைவிகள், உல்லாச வாழ்க்கை, குடி, கூத்து, அராஜகம் என்று பெரும் டாம்பீக வாழ்க்கை வாழ்வது மட்டுமே ஒரே வேலை.உதாரணத்திற்கு என் அப்பத்தாவின் அப்பாவிற்கு 5 மனைவிகள், கணக்கற்ற பிள்ளைகள், 4 பெரிய பங்களாக்கள், சில கிராமங்கள் சொந்தமாக இருந்தது. இவற்றை பராமரிக்க பணம் பர்மாவின் எஸ்டேட்டுகளில் இருந்து வந்திருக்கிறது. எப்படி வந்தது என்றால், பர்மிய/இந்திய அடிமைகள் ரத்தம் சிந்தச்சிந்த இங்கே வரைமுறை அற்ற வாழ்வை இவர்கள் வாழ்ந்துள்ளனர்.

கணக்குப்பிள்ளைகள் இரண்டு பக்கமும் சுரண்டுபவர்கள், படத்தில் இப்படி ஒரு கதாப்பாத்திரத்தின் தேவை இல்லை.

உண்மையில் எரியும் பனிக்காடும் சரி, பரதேசியும் சரி சொன்னதும் காட்டியதும் மிகக்குறைவே.

பரதேசி படத்தில் வரும் ஊர்களான சாலூரும், கோடாங்கிபட்டியும் என் ஊருக்கு மிக அருகில் இருக்கும் ஊர்கள்தான். கதை என்னவோ திருநெல்வேலியில் நடந்து இருந்தாலும் இந்த ஊர்களின் பெயர் பரதேசி படத்தின் ஒளிப்பதிவாளர் செழியானால் பாலாவுக்குச் சொல்லப்பட்டு இருக்கலாம். ஏனென்றால் அண்ணன் செழியனின் ஊரான நாட்டரசன்கோட்டையும் எங்கள் ஊருக்கு அருகிலான ஊர்தான்.

தொடரும்....

1 comment:

  1. ஒவ்வொரு வீடும் கட்டி முடிக்க 5 முதல் 30 வருடங்கள் ...!

    தொடர்கிறேன்....

    ReplyDelete