Monday, November 1, 2010

பயணம் ஒரு கலை.... ஏமாந்தால்? - பிலோ இருதயநாத்- புத்தக அறிமுகம்


பயணம் - இந்த ஒற்றை சொல்லில் இயங்குகிறது உலகம். ஆனால் கடைசியாகப் பயணம் சென்ற இடம் என்ன என்று நம்மைக் கேட்டால் சற்றே யோசிக்கத் தோன்றும். தினசரி வாழ்வில் சிதையும் ஆன்மாவைக் காப்பாற்ற எங்கேயாவது போகலாம் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். சிறுவயதில் பக்கத்துத் தெருவிற்குப்போவதே பயணம்தான். வயது ஏற ஏற உள் நோக்கிய பயணமும், வெளி உலகப்பயணமும் குறைந்து போகிறது. உலகில் பெரும் மாற்றங்கள் பயணத்தின்மூலமே சாத்தியமாகி உள்ளன. ஆப்ரிக்காவில் இருந்து மனிதன் பயணத்தின் மூலமே உலகெங்கும் பரவினான்.அதன் பின்தான் அவன் சந்தித்த சவால்களின்மூலம் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி சத்தியப்பட்டது. இன்று நாம் காலையிலிருந்து இரவுவரை ஒரே மாதிரியான வாழ்க்கை வாழப்பழகிவிட்டோம். நமது தினசரிப் பயணம் என்பது ஒரு கூண்டில் இருந்து இன்னொரு கூண்டிற்குமாறும் நாகரீக சர்க்கஸ் கூண்டு வாழ்வாகவே இருக்கிறது.வெளி உலகத்தேடலுடன் இருக்கும் குழந்தைகளை நான் பார்த்தே பலவருடம் இருக்கும். இதில் நகரம் கிராமம் என்ற பேதம் எல்லாம் இல்லை. முன்பெல்லாம் குழந்தைகள் வீடு வந்து சேர்வதில்லை என்ற கவலையுடனே பல பெற்றோர் இருப்பார்கள். ஆனால் இன்று உட்கார்ந்தஇடத்தில் டி.வி , கம்ப்யூட்டர் , அபாகஸ், ஓவியம் இவற்றை கற்றுக்கொள்கிறார்கள். இதில் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள் நிச்சயமாக மனித எந்திரங்கள்தான்.

பெற்றோர் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக் கொடுக்க நினைப்பதுதவறல்ல.ஆனால் இயற்கையை பற்றிய எந்த அறிவும் அற்ற இவர்கள் என்ன ஓவியம்
வரைந்து எதை அடையப்போகிறார்கள். அது போலவே மற்றவையும். பெரும்பாலான பெற்றோரின் சோம்பல்தான், அவர்களின் குழந்தைகளுக்கும் பழக்கமாகிறது. சனி, ஞாயிறு என்பது தின்றுவிட்டுத் தூங்கும் நாட்கள் என்பதாகவே நம் மனதில் பதிந்து போயிருப்பது சோகம்தான்.

சிறு வயதில் நான் படித்த "பயணம் ஒரு கலை.... ஏமாந்தால்?" புத்தகத்தை என்னால் மறக்கவே முடியாது. எப்போதும் வெளியே சுற்றுவதை வரவேற்கும் என் சித்தப்பாவிற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் ஒரு நாளில் நூறு கிலோமீட்டர்வரை சைக்கிளில் பயணம் செய்யக்கூடியவர் (
பல முறை அவர் மதுரைக்கு சைக்கிளில் பொய் வருவதை பார்த்திருக்கிறேன்). நானும் அவருமாக எங்கள் ஊரின் அருகே உள்ள பல கிராமங்களுக்கு சென்று வருவோம். வெளிஉலகம் என்ற ஒன்றை அறிமுகம் செய்ததில் அவர் பங்கு மிகமுக்கியமானது. அதே போல பிலோ இருதயநாத். என் சித்தப்பாவை மற்றொரு பிலோ என்று சொல்லலாம்.

பிலோ இருதயநாத், ஒரு பயணி என்பதாக எடுத்துக் கொண்டால் நாம் அவரைசரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு தனி நபர் காடுமேடெல்லாம் அலைந்து இந்தியாவின் பல பகுதிகளையும் பார்த்திருக்கிறார். அவர் பெரும்பாலும் பார்த்தது காடுவாழ் மக்களை - இப்போதும் நாம் காட்டுமிராண்டி என்று அழைக்கும் மக்களை. அந்த மக்களை சக மனிதனாக 50 வருடங்களுக்கு முன் நினைப்பதே பெரிய ஆச்சர்யம். இந்நிலையில்அவர்களுடன் போய் தங்கி, உண்டு உறங்கி, குறிப்புகள் எடுத்து அவர்களின் வாழ்வை இன்றும் நமக்குச் சொல்லும் புத்தகங்களை எழுதிய தனி நபர் இயக்கம் என்று பிலோவை சொல்லலாம்.

பல வருடங்களுக்கு முன் படித்த, பயணம் செய்த என் நினைவுகளை மீண்டும் புத்துயிர் ஊட்ட பிலோவின் புத்தகங்களை தேடினேன். என் நண்பர்
களிடமும் , பல புத்தகக் கடைகளிலும் விசாரித்து, கடைசியாக அவர் புத்தகங்கள் வானதி பதிப்பகத்தில் கிடைப்பது தெரிந்தது. வானதி பதிப்பகம் போய் பிலோவின் எல்லாப்புத்தகங்களும் வேண்டும் என்றவுடன், அவர்கள் நான்குதான் இருப்பதாகவும், இரண்டு புத்தகங்கள் இல்லை என்றும் சொன்னார்கள். நான்கையும் வங்கி உடனேபடிக்க ஆரம்பித்தேன். புத்தகங்கள் பதிப்பிக்கப் பட்ட வருடம் 1989 . நான்குபுத்தகங்களின் மொத்த விலை 53 ரூபாய்.

புத்தகம் பயணம் செய்வது எப்படி என்பதில் ஆரம்பித்து சவால்கள், சிரமங்கள், உயிராபத்துகள், விலங்குகள், காடர்கள், திருடர்கள் என்று எல்லா பகுதிகளையும்விவரிக்கிறது. பிலோ வெறும் மனிதர்கள் நம்பி மட்டுமே பயணிக்கிறார். பயணத்தில் அவர் சந்திக்கும் நாட்டு மனிதர்களில் சிலராவது திருடர்களாய் இருக்கிறார்கள். ஆனால் காட்டில் அவரிடம் பரிவுடன் பழகும் மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர் எச்சரிக்கை செய்வது எல்லாமே நாட்டில் வாழும் மனிதர்களைப் பற்றியும், காட்டில் வாழும் விலங்குகளைப் பற்றியுமே. ஒரு இடத்தில், போட்டோ எடுக்கக் கூட அனுமதி கேட்கிறார், ஏனென்றால் நான் என் அதிகாரத்தை அப்பாவிகளிடம் காட்ட விரும்பவில்லை என்று கூறுகிறார். இந்நிலையில் தண்டகாருண்யாவில் நமது அரசும், முதலாளிகளும் செய்யும் அத்துமீறல்கள் உங்கள் ஞாபகத்தில் வந்தால் நீங்கள் இன்னொரு பிலோ என்றுசொல்லாம். குழந்தைகள் இதைப் படித்தால் அவர்கள் வாழ்வின் எக்காலத்திலும் பிறர் மேல் அதிகாரம் செலுத்த நினைக்கமாட்டார்கள்.

இந்தப் புத்தகத்தில் வரும் குறிப்பை கொண்டு பார்த்தால்... 2012 பிலோவின்நூற்றாண்டாக இருக்கும், பிலோவின் புத்தகங்களை நாட்டுடமை ஆக்கி, அவர்பயணம் மேற்கொண்ட இடங்களுக்கு அந்த அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்லலாம். இதன் மூலம் குழந்தைகளுக்குப் பயணம் பற்றியும், காட்டுயிர்கள், காடர்கள், மனித உரிமை பற்றியும் ஒருவிழிப்புணர்ச்சி ஏற்படும். ஐரோப்பாவில் இதைப் போல வர விடுமுறைகளில் மாணவர்கள் பெருமளவில் பயணம் செய்வதைக் காணலாம். அதற்கு அரசு கட்டண விலக்குகளையும் அளிக்கிறது.
இன்றைய சூழலில், இப்படிப் பட்ட புத்தகங்கள் தமிழில் வருவதில்லை. வருவதெல்லாம் 5 வயது குழந்தைக்கு C ++, 10 வயதுக் குழந்தை பணம் சம்பாதிப்பது எப்படி போன்ற புத்தகங்கள்தான். வாழ்க்கை என்பது பணம், வீடு, அதிகாரம் இவற்றை எல்லாம் தாண்டிய ஒன்று என்பதை உணர இந்த புத்தகம் உதவக்கூடும். உங்கள் குழந்தைக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள்.... பயணம் செய்ய ஊக்குவியுங்கள்... அவர்கள் ஒரு முழு மனிதனாய் வளர உதவுங்கள்.... பெற்றோராய் அல்ல..... ஒரு சக மனிதனாய்..... அதுவே பிலோவைப்போன்ற மனிதர்களுக்கு... அவர்களின் உழைப்பிற்குச் செய்யும் மரியாதை.

புத்தகத்தின் பெயர் : பயணம் ஒரு கலை.... ஏமாந்தால்?
எழுதியவர் : பிலோ இருதயநாத்
பதிப்பகம் : வானதி பதிப்பகம்,
13, தீனதயாளு தெரு,
தி.நகர்.
சென்னை - 17.
விலை : 18 ரூபாய்




5 comments:

  1. அருமையா பதிவு .. இதை போலவே நிறைய எழுதவும்

    ReplyDelete
  2. பிலே எழுதிய புத்தக விமர்சனம். பயணங்களின் அவசியம் ...அடுத்தவர்களின் உரிமைக்கு கொடுக்கும் உதாரணங்கள் அருமை... அருமை.நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி ரோமியோ & மதுரை சரவணன்

    ReplyDelete
  4. நண்பர் சரவணன்

    //அவர் எச்சரிக்கை செய்வது எல்லாமே நாட்டில் வாழும் மனிதர்களைப் பற்றியும், காட்டில் வாழும் விலங்குகளைப் பற்றியுமே//

    உண்மையில் இந்த வரிகள் சிந்திக்க வேண்டிய வரிகள்
    புத்தக பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. பிலோ இருதயநாத் பற்றிய அருமையான பதிவு .


    தேவன்

    ReplyDelete