Tuesday, September 21, 2010

களவு போகும் புரவிகள் - சு. வேணுகோபால் - புத்தகஅறிமுகம்

தமிழ் இலக்கியம் இயற்கை பற்றி நிறைய தகவல்களைக் கொண்டது. ஆனால், தற்போதைய இலக்கியம் நகரம் சார்ந்தும், அது தொடர்பான மக்கள் சார்ந்தும் இயங்கி வருகிறது. கிராமம் சார்ந்து எழுதுபவர்கள் கூட விவசாயமே இல்லாத கிராமத்தையே எழுதுகிறார்கள். கடந்த 50 வருட இலக்கியத்தில் விவசாயத்தை, விவசாயியைத் தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கிராமத்தை அழகியல் சார்ந்து கிட்டத்தட்ட ஒரு பாரதிராஜா படம் போல எழுதுபவர்கள்தான் இன்று இருக்கிறார்கள் அல்லது கிராமம் என்ற போர்வையில் நகர வாழ்வைச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் ஜெயமொஹனுடனான உரையாடலின் போது, இன்றைய தமிழ் இலக்கிய உலகில் விவசாயம் சார்ந்து எழுதுபவர்களில் சு. வேணுகோபால் மிக மிக கவனம் பெரும் படைப்பாளி என்று சொன்னார். சமீபத்தில் தமிழினி பதிப்பகம் போயிருந்த போது அவரின் களவு போகும் புரவிகள் புத்தகத்தை வாங்கினேன்.


மொத்தம் 17 சிறுகதைகள் உள்ள தொகுப்பு. ஒரே மூச்சில் 2 மணிநேரத்தில் படித்து முடித்தேன். சிறுகதைகள் பற்றி பார்ப்பதற்கு முன் சு.வேணுகோபாலின் எழுத்தைப் பற்றி சொல்ல வேண்டியுள்ளது. இன்றைய எழுத்தாளர்களில் பலர் பின் நவீனத்துவம், விளிம்புநிலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அந்த எழுத்துகள் பெரும்பாலும் அதிர்ச்சி மதிப்பீடுகள் சார்ந்தவை. வாசகனை ஒரு அறியா உலகில் நுழைத்து, கேள்விப் படாத சம்பவங்களை (அ) நடக்க சாத்தியமற்ற சம்பவங்களை விளக்கி எழுதப்படும் படைப்புகள்தான் அதிகம். அந்த சம்பவங்கள் படைப்பைவிட்டு வெளியே துருத்தியபடி இருப்பதை உணரலாம். ஆனால் சு.வேணுகோபாலின் இந்த சிறுகதைத் தொகுப்பு விளிம்பு மனிதர்களை/ வாழ்வை அவர்களின் தளத்தில் இருந்தே விளக்குகிறது. பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண், விவசாயத்தில் தோல்வி கண்டு வேறு வேலை தேடும் ஒரு தாழ்த்தப் பட்ட மனிதன், பாலுறவில் ஊக்கம் குறைந்த ஒருவன், பெண்ணியம் பேசும் பெண்கள், உண்மையான (?????) தியாகி, பன்றி மேய்க்கும் பெண், விவசாயிகள், உடல் பலமற்ற வயதானவர்கள், மன நிலை பிறழ்ந்த ஒரு மேதாவிப்பெண், கணவனுக்காக கருவைக் கலைக்கும் பெண் என்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பற்றியே பேசுகின்றன சு. வேணுகோபாலின் கதைகள். மற்றொன்று விவசாயம் பற்றி, வளர்ப்பு பிராணிகள் பற்றி வேணுகோபாலின் அவதானிப்பும்,வர்ணனைகளும் (details) வியப்பில் ஆழ்த்துகின்றன.


இனி அந்தத்தொகுப்பில் உள்ள கதைகளைப் பற்றிய சிறு அறிமுகம்:

1 . அம்மாவின் விருப்பங்கள்:

ஒரு சிறுவனின் பார்வையில் அவன் அம்மா எப்படி நடந்து கொள்கிறாள். அம்மா ஏன் பிற பிள்ளைகளிடம் பாசம் காட்டாமல், நடிக்கிறாள் என்பது போன்ற கேள்விகளுடன் நகர்கிறது கதை. சிறுவர்களின் மன உலகை மிக நெருக்கத்தில் சென்று பார்க்கும் உணர்வைத் தரும் கதை.

2 . மண்ணைத் தின்றவன் :
நாம் உண்ணும் சோறு யாரோ ஒரு விவசாயியின் ரத்தம் என்பதை உணர்ந்திருப்போமா? விவசாயம் என்பது ஒரு சபிக்கப்பட்ட தொழில். அதில் வருமானம் பெறுவது என்பது தார்ப்பாலைவனத்தில் நீர் அருந்துவதைப் போன்றது. எவளவு தண்ணீர் அருந்தினாலும் பாலைவனத்தை ஒருபோதும் கடக்க முடியாது. விவசாயத்தில் வரும் வருமானம் விவசாயியின்/; அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த உழைப்பிற்கு ஈடாகாது. இருந்தும் ஏன் விவசாயம் நடைபெறுகிறது? அது ஆச்சர்யம்தான். சாதிய நிலைப்பாடுகளும், சமூக அங்கீகாரமும், விவசாயமும் எப்படி ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்துள்ளன என்பதை இந்தக் கதை நெற்றியில் அடித்தது போலச் சொல்கிறது.

3 . மீதமிருக்கும் கோதும் காற்று:
ஒரு பாலியல் தொழிலாளியின் அனுபவங்களை விளக்கி பல கதைகளை படித்திருப்போம்.ஆனால் இது உண்மையிலேயே அவளின் குரலில் சொல்லப்படுகிறது. வாசகனுக்கு அதிர்ச்சியைத் தந்து, எழுத்தாளன் கவனம் பெற முயலாமல் இயல்பாய் ஒரு சம்பவ நிகழ்வை விளக்கியிருப்பது மிகச்சிறப்பு.

வாய் நாற்றமெடுக்கும் ஒருவன் முத்தமிடும்போது அவள் நினைப்பது :

"மலத்தில் விழுந்த ஈயாகயோனியில் புரண்டார்கள். நிமிர்ந்தபோது அடிவயிற்று வலி.பிராந்தியை நீட்டினார்கள்.பிராந்தி அடித்தால் நாற்றம் தெரிவதில்லை."

"ஒவ்வொருவனும் மேலே படுக்கும்போது யோனி உடலின் வெவேறு இடங்களில் இருக்கக்கூடாதா என்றிருந்தது"


இங்கே காமம் செத்து ஒருத்தியின் சுயம் மட்டுமே எஞ்சுகிறது.


4 . சப்பைக்கட்டு:
புற உலகில் பெண்ணியம் பேசும் ஒருவன் தனக்கான உலகில் மனைவியை, சக தோழியை எவ்வாறு கேவலமாக அணுகுகிறான் என்பதும், அந்த முரணியக்கம் எப்படி நிகழ்கிறது என்பதும் தான் கதை. இந்த ஒருவன் நாமாகவும் இருக்கலாம்.

5 . உருமாற்றம்:

மாறிவரும் உலகில் ஒரு உண்மையான தியாகியின் இருப்பு என்ன? அந்த இருப்பின் தேவையோ/ அவசியமோ இல்லாத நிலையில் அந்த தியாகி எடுக்கும் முடிவும் விளைவையும் இயல்பாக விளக்கும் கதை. இந்தக் கதையில் வரும் தியாகி உங்கள் தாத்தாவாகவோ அப்பாவாகவோ இருக்கலாம்.

6 . சங்கிலி:

பாலுறவில் வெற்றி தோல்வி என்று ஏதுமில்லை. இருந்தும் முதலிரவில் தன் மனைவியிடம் நிருபிக்க முயலும் முதிர்கண்ணன் ஒருவன் தோற்றுவிட்டால் என்ன நடக்கும்? அவன் மனநிலை என்ன?

7 . உடம்பு:

ஈன முடியாமல் தவிக்கும் கிடேரியைப் பார்த்திருக்கிறீர்களா? அந்நிலையில் இருக்கும் பெண்ணை அவளின் கணவனின் மனநிலையில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? விலங்குகளிலும் சரி, மனிதனிலும் சரி விந்தைத் தருவதோடு முடிந்துவிடுகிறது ஆணின் கடமை. பின் மனிதனுக்கும் விலங்கிற்கும் என்னதான் வித்தியாசம்?

8 . நடை:

பலசமயம் புறக்கணித்தலை நாம் விலகிப் போதலின் வழியே உணர்த்துகிறோம். பிறரைப் புறக்கணிக்க அவர்களின் புறத்தொற்றமும், ஆளுமையும் போதும் என்றாகிப்போகிறது. இந்தச் சிறுகதைப் படித்தபின் நீங்கள் யாரையும் குற்ற உணர்வின்றிப் புறக்கணிப்பது அவளவு சுலபமாக இருக்காது.

9 . பதிலடி:
புரிதலற்ற கணவன் மனைவியும், இடைவெளியை வலிந்து ஏற்படுத்தும் நண்பர்களும் சேர்ந்தால் குடும்பம் சிதைவதைத் தடுக்க முடியாது. இதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.
கிராமம் என்றால் அப்பாவி மக்கள் வாழும் இடம் என்ற நினைவுடனே இங்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் மனிதனின் அடிப்படை உணர்ச்சியான குதர்க்கம், பொறாமை எல்லாம் அதிக அளவில் உள்ள சமூகம் அது.

10 . வட்டத்திற்குள்ளே:

ஒரு ஆண் - ஒரு பெண் தன் மனைவி ஆனதாலேயே அவளின் கனவுகளை, படைப்பூக்கத்தை, தினசரி வாழ்வை, இறுதியாய் அவளின் கர்ப்பத்தைக் கலைக்கிறான். அது ஒரு கனவின் அழிப்பு மட்டுமல்ல...... ஆன்மாவின் அழிப்பும்கூட.......

11 . வெகுதூரம் விலகி:

மருத்துவம் சேவை என்பதிலிருந்து வெகுதூரம் விலகி தொழில் என்ற நிலையை அடைந்துள்ளது. கதையின் இறுதியில் டாக்டர் கிழவனின் குரல் கேட்பதாகச் சொல்ல..... இல்ல சார், வெருவா கத்துது.... நாம வெகுதூரம் விலகி வந்துவிட்டோம்... என்கிறான் கூட வந்தவன்.

ஆம்..... நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம் இயற்கையிடமிருந்தும் கூட...

நாம் நாகரீகம் அற்றவர்கள் என்று சொல்லும் காட்டுவாசிகள் எப்படி மனிதத்துடன் இருக்கிறார்கள் என்பதன் மூலம் எழும் கேள்வி, யார் காட்டுமிராண்டிகள் அவர்களா நாமா? என்பதுதான்.


12 . மாயக்கல்:

சமூகம் ஒதுக்கியுள்ளோரை அதிகாரம் எப்படி சிதைக்கிறது என்பதும், வக்கிரம் பிடித்த அதிகாரப் புள்ளிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதுமே கதை.
கதையைப் படித்தவுடன் கீழ்வரும் எண்ணம் எழலாம்:
ராமேஸ்வரம் தாண்டிய கடலிலும் நடப்பது இதுதானே?
(இதில் பன்றிகளைப் பற்றி வரும் தகவல்கள் சிறுகதைகளில் தகவல்களின் முக்கியத்துவம் என்ன என்று சொல்கின்றன)

13 . சாப நினைவுகள்:

நமது சமூகம் குறிப்பாக கல்விக் கூடங்கள் அதிமேதாவிகளை அடிமுட்டாள்கள் ஆக்குவதைத்தான் வேலையாகச் செய்துவருகின்றன. அப்படி முட்டாள் ஆக்கப்பட்ட ஒருத்தி மனநிலை பாதிக்கப்பட்டு சமூகத்தால் என்ன நிலை அடைவாள்?

14 . வேம்பு :


உலகமயமாக்கலால் ஒரு கிராமமும் அதன் வாழ்வியலும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லும் சிறுகதை. இந்தக் கதையா படித்துவிட்டு சிரிக்கும் நாம் யார்?

குடிக்கும் நீரைக் காசுகொடுத்து வாங்கும் கோமாளிகள்.............

15 . இருட்குகைக்குள் விரியும் ஒளிப்புகை:

இறந்துபோனவனின் பார்வையில் இறப்பு எப்படி இருக்கும்? தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படியுங்கள்.

16 . தருணம்:

இங்கே கோயில்கள், மசூதிகள் எல்லாம் சிதைந்து போகின்றன. ஏன்? மனிதம் சிதைந்த மனிதர்களால்தான். மதம் பெரும்பாலும் மனிதனை தனியல்பு இலக்கச் செய்கின்றன. ஆனால் மதத்தால் என்ன பயன் என்ற கேள்விக்கு மட்டும் விடையே இல்லை.

17 . களவுபோகும் புரவிகள்:

கிராம தெய்வங்களின் உருவாக்கம் மூதாதேயர்களின் வழிபாடாகவே இருக்கிறது. அதை ஒரு மாயஎதார்த்த பாணியில் கதையாக்கியுள்ளார்.
அருமையான அனுபவத்தைத் தரும் கதை.

இது தமிழின் மிக முக்கியமான கதைத்தொகுப்பு.... எல்லோரும் படியுங்கள்......


புத்தகத்தின் பெயர் : களவு போகும் புரவிகள்

எழுதியவர் : சு. வேணுகோபால்
பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்
67 பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை
சென்னை - 14
விலை : 60 ரூபாய்

Thursday, August 26, 2010

புத்தகம்: ஹெய்டி - ஜோஹானா ஸ்பைரி

கடந்த வாரம் landmark -ல் சில புத்தகங்களை கேட்க அவர்கள் நான் கேட்ட எந்தப் புத்தகமும் இல்லை என்று சொன்னார்கள். :(
அப்போது எஸ்.ராமகிருஷ்ணனின் பரிந்துரையான ஹெய்டி-யைப் பார்த்தேன். பலமுறை இந்த புத்தகத்தை புத்தகக் கடைகளில் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். எஸ்.ராமகிருஷ்ணனின் எந்தப் பரிந்துரை புத்தகமும் இதுவரை என்னைக் கைவிட்டதில்லை. இதுவும் அப்படியே.

இந்தப் புத்தகத்தைப் பற்றிப் படிக்கும் முன் எஸ்.ராவின் அனுபவத்தைப்படித்துவிடுங்கள்.

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி...... உலகிலேயே அதிகபட்சக் கொடுமைக்கு உட்படுத்தப்படுவது யார்?
உங்களின் பதில் கீழ்க்கண்ட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஈழத்தமிழர்கள்...... பாலஸ்தீனியர்கள்..... தொழிலாளர்கள்.... தலித்துகள்...... சிறுபான்மை மக்கள்.... மனநோயாளிகள்..... விவசாயிகள்....

ஆனால் இவர்கள் யாருமே கிடையாது.... அதற்கான பதில் குழந்தைகள். குழந்தைகளின் மேலான வன்முறை கட்டற்றது. இந்தியாவில் இளையோர் எண்ணிக்கை முதியோர் எண்ணிக்கையைவிட அதிகம் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பெரும்பான்மையான கூட்டம் சிறுபான்மையால் தண்டிக்கப்படுவது குழந்தைகள் விஷயத்தில்தான். ஏனெனில் அவர்கள் பலகீனமானவர்கள். திருப்பித் தாக்க உடல்/மன வலிமை இல்லாதவர்கள். எனது நண்பர் ஒருவர் தன் பையனுக்கு ஓவியம், பாட்டு, கணக்கு, நடனம் இவற்றில் எல்லாம் பயிற்சி கொடுப்பதாக சொன்னார். பையனின் வயது என்ன? என்றேன். மூன்று என்றார். எதற்கு இவ்வளவு கொடுமை செய்கிறீர்கள் என்ற போது, இப்பொழுதே இப்படி பயிற்சி கொடுத்தால்தான் அவன் IIT -ல் சேர முடியும் என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் பார்க்கும் எந்த அறிவாளியும் இப்படி உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. திறமையைக் கண்டுபிடித்து வளர்ப்பது தவறல்ல. திறமையை உண்டாக்க நினைப்பது முட்டாள்தனம் என்றெல்லாம் பேசிய பிறகு அவர் சொன்னது : இப்படி எல்லாம் நினைத்ததால்தான் நீங்க இப்படி ஒரு சாதாரண சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்கீங்க. என்புள்ள நாசாவுல வேலை செய்வான் அப்பிடின்னார். எனக்கு அந்தக் குழந்தையை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் 1880 ல் எழுதப்பட்ட ஹெய்டி மிக முக்கியத்துவம் பெறுகிறது.


ஹெய்டி ஒரு ஐந்து வயது குழந்தையாக அறிமுகம் ஆகிறாள். அவளுக்கு அம்மா அப்பா இல்லை. தாத்தாவிடம் வளர வேண்டிய சூழல். தாத்தாவோ ஊரே வெறுக்கும் மனிதர் அல்லது ஊரை வெறுக்கும் மனிதர். அங்கே அவள் எப்படி வாழ்கிறாள். தாத்தாவிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் எப்படி கற்றுக் கொள்கிறாள் என்பதுதான் கதை.
கதையில் மிகக் குறைவான கதாப்பாத்திரங்களே வருகின்றன. ஹெய்டி, அவளின் தாத்தா, பீட்டர் (ஆடு மேய்க்கும் சிறுவன்) மற்றும் அவன் குடும்பம், நடக்கவே முடியாத கிளாரா, டாக்டர், கண்டிப்பான உதவியாளர் மேயர், கிளாராவின் பாட்டி & அப்பா.இவை தவிர சில கதாப்பாத்திரங்கள் உண்டு. பூக்களும், மலையும், ஆடுகளும் சிறுவர் உலகின் சிறந்த குறியீடுகள். அவர்கள் அவற்றுடன் பேசுகிறார்கள், விளையாடுகிறார்கள்.
உடல் நலமில்லாத பணக்காரக் குழந்தையான கிளாராவிற்கு தோழியாக பிராங்க்பர்ட் கொண்டு செல்லப்படும் ஹெய்டி, அங்கு கிளாராவுடன் ஏற்படும் நட்பு. அங்கே அவளின் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒருத்தியானாலும் அவளின் மனநிலை பாதிக்கப்பட்டு மறுபடி தாத்தாவிடமே அனுப்பப்படுகிறாள். அங்கே அவளின் வாழ்க்கை எப்படி சுவாரசியமாகிறது, பிறகு வரும் கிளாராவின் உடல்நிலை எப்படி மாறுகிறது, பீட்டரின் மனநிலை என்ன என்பதுதான் கதை. குழந்தைகள் எல்லாமே உங்களால் முடியும் என்று நினைக்கிறார்கள், ஆனால் நாம் அவர்களுக்கு எதெல்லாம் முடியாது என்று சொல்லிக் கொடுக்கவே முயல்கிறோம். இதில் பீட்டரின் பாட்டிக்கு கண் பார்வையை தன் தாத்தாவால் திரும்பத்தர முடியுமென்று ஹெய்டி நம்புகிறாள். முடியாதெனும்போது பார்வையின்மை இயல்பானது என ஏற்றுக் கொண்டு அவள் பாட்டிக்குத் தேவையான ரொட்டியைத் தருகிறாள். அதேபோல நடக்கவே முடியாத கிளாரா நடக்க முடியும் என்று ஹெய்டி, பீட்டர், கிளாரா மூவருமே நம்பி வெற்றி பெறுகிறார்கள்.

எது அவர்களால் முடியும் என்று அவர்களே (குழந்தைகளே) தீர்மானிக்கட்டும்....தீர்மானிக்க வேண்டியது நாமல்ல. அதேபோல் குழந்தைகள் நீங்கள் அவர்களுக்குத் தரும் வசதிகளைவிட அன்பையும், இயல்பான கற்றலையுமே விரும்புகிறார்கள் ஹெய்டியை போல. இது குழந்தைகளுக்கான நாவல் மட்டுமல்ல, எல்லா வயதினருக்குமான நாவல். நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது கண்டிப்பான மேயரை உங்களுக்குப் பிடிக்காது, ஆனால் இந்தப் புத்தகத்தை உங்கள் குழந்தை படித்தால் உங்களையே மேயராக நினைக்கலாம். எனவே நீங்களே மேயரைப் போல வாழ்வதை உணர்ந்து உங்கள் குழந்தையின் மீதான வன்முறையை கைவிட்டால் அது ஹெய்டிக்குக் கிடைத்த வெற்றி.

புத்தகத் தமிழாக்கம் நன்றாக இருக்கிறது என்றாலும் சில குறைகள் உள்ளன. விலங்குகளை மேற்கத்தியர்கள் அவன் அவள் என்று அழைப்பார்கள் ஆனால் நாம் விலங்குகளை அது/அவை என்றே அழைப்போம். இங்கும் அப்படியே மொழிபெயர்த்திருக்கலாம். ஆடுகள் கூட அவள் என்றே அழைக்கப்படுவது அந்நியப்படுத்துகிறது.

புத்தகத்தின் பெயர் : ஹெய்டி
எழுதியவர் : ஜோஹானா ஸ்பைரி
மொழிபெயர்த்தவர் : ஸ்ரீமதி, கயல்விழி
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்.
57-53ஆவது தெரு,அசோக் நகர்.
சென்னை - 600083

விலை : 160 ருபாய்

Wednesday, August 25, 2010

மனநல மருத்துவர் - மச்சடோ டி ஆசிஸ்

நீங்கள் எப்போதாவது ஒரு மனநிலை பிறழ்ந்தவராக உணர்ந்ததுண்டா?
அல்லது
பிறரை அப்படி உணர்ந்ததுண்டா?
அல்லது
சமூகம் அப்படி இருப்பதாக உணர்ந்ததுண்டா?

ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்கானது.

மச்சடோ டி ஆசிஸ் எழுதிய மனநல மருத்துவர் என்ற கதையைப் படிக்கும் பொது நாம் ஒரு பழக்கப் பட்ட உலகில் வாழ்வதையே உணர்வோம்.

சீமோன் ஒரு மருத்துவர். அவருக்கு உளவியல் மருத்துவத்தில் நாட்டம் ஏற்பட்டு அதைக் கற்கிறார். பின் ஊரில் இருக்கும் பைத்தியங்களைப் பராமரிக்க நகரசபை உதவியுடன் ஒரு மனநல விடுதியை(கிரீன் ஹவுஸ்) ஆரம்பிக்கிறார். தொடர்ந்த ஆராய்ச்சிகளின் விளைவாக யார் பைத்தியம் என்பதைத் தீர்மானிக்க ஒரு விதியைக் கண்டுபிடிக்கிறார்.

விதி ஒன்று : அது யார் எப்படி இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு மனநலக் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறது. மனைவியிடம் கோபப் படுவது, பிறரைப் புகழ்வது என எல்லாமே மனநோய்க்குறிகள் என்று ஊரில் உள்ள முக்கால்வாசிப் பேர் கிரீன் ஹௌசிற்கு கொண்டு வரப் படுகின்றனர். அவருக்கு எதிராகப் புரட்சி வெடித்துக் கிளம்புகிறது. "வதங்கிய கோட்டைகள்" என்று அழைக்கப் படும் அவர்கள் நகர சபையைக் கைப்பற்றினாலும் அவர்களுக்கு ஒரு பைத்தியக்கார விடுதி தேவையாய் இருக்கிறது. புரட்சிக்கு எதிரான புரட்சி வெடித்து புது ஆட்சி வர, அந்த நேரம் பார்த்து டாக்டரின் கொள்கையும் மாறிவிடுகிறது.

விதி இரண்டு: யாரெல்லாம் நேர்மை, வாய்மை, பகுத்தறிவுடன் உள்ளார்களோ அவர்கள் எல்லாம் மனநோயாளிகள்.
இதன் படி சிலரே விடுதியில் அடைக்கப்படுகின்றனர்.120 வருடங்களுக்கு முன்னும் கூட சிலரே இந்தக் குணாதிசயங்களுடன் இருந்துள்ளனர் :) அதையெல்லாம் அவர்கள் கைவிடும்வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒவ்வொருவரும் எப்படி தங்கள் கொள்கைகளைக் கைவிடுகின்றனர் என்பதை மச்சடோ மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார்.

இறுதியில் டாக்டர் மறுபடியும் தன தேடல் வழியே புது விதியைக் கண்டடைகிறார். அது என்ன என்பதையும் அதன் விளைவு என்ன என்பதையும் புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

பகடியில் பலவிதம், இதில் வரிக்கு வரி பகடிதான். கதையில் உலாவும் எல்லோரும் நம்மை எதோ ஒரு இடத்திலாவது பிரதிபலிப்பது மச்சடோவின் சாதனை. ஆராய்ச்சி என்ற பெயரில் நடக்கும் கோமாளித்தனங்களை நூறு வருடங்களுக்கு முன் இப்படி ஒரு மனிதன் பகடி செய்திருப்பதை நம்பவே முடியவில்லை. இத்தாகூய் நகரத்தை நாம் வாழும் சமூகமாகவும், நகரசபை நம்மை நிர்வாகம் செய்யும் அரசியல் அமைப்புகளாகவும் கொண்டால், நாம் எல்லா சமயங்களிலும் நோயாளியாகவும், டாக்டராகவும் வாழ்வது புரியும். ஒவ்வொரு முறை பிறரை நோயாளிகளாக உணரும் பொது நாம் விடுதலை பெற்றதாய் உணர்கிறோம். அதே நேரம் நாம் நோயாளியாவது தவிர்க்க முடியாததாகிறது. பெரும்பாலும் உண்மையை உணரும்போது மரணம் நமக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணரலாம். சமூகம், மக்கள், புரட்சி, மருத்துவம், ஆராய்ச்சி, தத்துவம், பக்திஇவற்றைப் பகடி செய்து இந்த உண்மையைச் சொல்வதில் மச்சடோ பெரும் வெற்றி பெற்றுவிட்டார்.

வரிக்கு வரி மொழிபெயர்ப்பு செய்திருப்பதால் சில இடங்களில் வாசிக்கக் கடுமையாய் இருக்கிறது என்றாலும், கண்டிப்பாக எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தின் பெயர் : மனநல மருத்துவர்
எழுதியவர் : மச்சடோ டி ஆசிஸ்
மொழிபெயர்த்தவர் : ராஜகோபால்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்.
57-53ஆவது தெரு,அசோக் நகர்.
சென்னை - 600083

விலை : 70 ருபாய்

Wednesday, July 7, 2010

உயிரோசையில் வெளியான என் கவிதைகள்

உயிரோசையில் வெளியான என் கவிதைகள்:

விடைபெறும் உரையாடல்

அவனிடமிருந்து அவளுக்கு.....................

விளிம்பு சிதைந்த சிறையின்
நடுவே
ஒற்றை ரோஜா.

ஊண் துளைக்கும் புழுக்களின்
புன்னகையில்
நகர்கிறது மையம்.

விளிம்பின் விரிந்த புள்ளியின்
அடியில் கிடக்கிறது
வாழ்தலின் அர்த்தம்...

பைத்தியமாதலின் சாத்தியங்களில்
பிறக்கிறது
யாரோ ஒருத்தியின் குழந்தை.

கடந்த காலத்தைக் கடந்தும்
கேட்கிறது தனியறைக் கைதியின்
மரண இசை.

மரணம் கூட சாத்தியமில்லை
என்கிறான்
என்னுடன் இறந்துபோன
எவனோ ஒருவன்.

சிதையும் விளிம்பால்
நகர்ந்து கொண்டே இருக்கிறது
எல்லோருக்குமான மையம்.

இப்படிக்கு,
இவன்.


அவளிடமிருந்து அவனுக்கு ......................

மகளிர் விடுதியின்
தனித்த அறையை
மூடிக்கொண்டேன்.

அறையுடன் என் உரையாடல்
கிசுகிசுப்பின் மொழியில்
தொடர்கிறது......

உடலிடும் ஓலத்தை
மறைவிடத்தின்
எதோ ஒரு மூலையில்
விரல்களின் நடனத்தால்
சரி செய்கிறேன்.

சுதி சரியில்லை என்ற
அறையின் பதிலால்
மாறவில்லை
உடலின் ஒலி.

வெடித்துக் கசியும்
சுடுநீரின் வெப்பத்தில்
வழிகிறது
காமத்தின் தனிமை.

சங்கீதம் சுதி சேர
வருடங்கள் ஆகலாம்.....

அசலோடும் நிழலோடும்
தனிமையில் மிதக்கிறது
காமத்தின் பிரபஞ்சம்.

உடைந்த கண்ணாடியில்
தெரிகிறது
என் பல்வேறு உருவங்கள்....

இப்படிக்கு,
இவள்.



நிலா வாழும் மூனாங்கட்டு

முட்ட முட்டக்
குடித்த இரவுகள்
ஒரு சொட்டு
விஸ்கி மீதமாவதுடன்
முடிகின்றன.

தூக்கம் -
இடிந்துபோன
வீட்டின் மூனாங்கட்டில்
வாழ்கிறது...

விழித்திருத்தலின்
சாத்தியம் புரியாமல்
கரைகிறது என் நிலா.

வீடு என்பது
ஒதுக்கப் பட்ட வீதி
என்பதாய்
தெரு நாயில்
ஒரு நாய்க்குச் சொல்கிறேன்.

குறிப்பு:
மூனாங்கட்டு - மூன்றாம் கட்டு - செட்டிநாட்டு வீடுகளின் பெட்டகங்கள் இருக்கும் பகுதி


நன்றி: உயிரோசை - உயிர்மை

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3102



Thursday, June 17, 2010

உயிரோசையில் என்னுடைய கவிதை

என்னுடைய கவிதை - புலிகள் பேசும் இரவு இந்த வார உயிரோசையில் வெளிவந்துள்ளது......

புலிகள் பேசும் இரவு

எதற்குமே சமமற்ற
இரவின் நிழலில்
வரிகளற்ற புலி
என் உடல்மேல்
நகர்ந்தது.

உயிரின் விலை
உணவு என்றது

சிகப்பு சேலை உடுத்திய
பெண்ணின் உதிரம்
ருசியானது என்றது

மற்றும்

விளைவுகளை மட்டுமே
விதைக்க முடியும் என்றது

இருளின் உச்சத்தில்
சிரித்தபடியே நடந்து
மறைந்தது

அதன் வாலற்ற பின்புறம்
ஒரு
இரவு ராணியின்
பின்புறத்தை ஒத்திருந்தது...

இன்னும் இரவு
மிச்சமிருக்கிறது..........


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3034

நன்றி : உயிரோசை - உயிர்மை.

Saturday, March 27, 2010

பதிவர் சங்க விவாதம் அல்லது பின்நவீனத்துவ பயிற்சிப் பட்டறை அல்லது..... கொய்யால ஏதோ ஒன்னு!

முதலில் பதிவர் சந்திப்பைப்பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் ஸ் யப்பா முடியல............................

இன்றைய பதிவர் சந்திப்பிற்கு மாலை 6 .30 க்குப் போய்ச் சேர்ந்தேன். உண்மைத்தமிழன் அண்ணாச்சி ஒரு மொக்கை மேட்டர் டைப் செய்யப் பட்ட பேப்பரைத் தந்தார். அப்போதே நான் உஷாராகி இருக்க வேண்டும். அதன் பின் ஒன்லி மொக்கை மற்றும் மொக்கையோ மொக்கை.

கருத்துக்குத்துக்களை இறக்குவதாக நினைத்து மட்டையடிக்கருத்துக்கள் சராமரியாக இறக்கப் பட்டன. விதிவிலக்கு சுகுணா திவாகர் மற்றும் நர்சிம். ஆ'ரம்பம்' முதலே காமெடிப் படம் பார்க்கும் உணர்வு. ஆளாளுக்கு என்று ஒரு கூட்டம் இருப்பதும் எங்கு எதற்காகக் கூடினாலும் கூட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நிரூபித்துக் கொண்டும் இருந்தனர். உண்மைத்தமிழன் பேசும்போது யாராவது நாம் பேசுவதைக் கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தார். ம்ஹீம்........இல்லையே..... ஆனா அவரும் சாதாரணப் பட்ட ஆளு இல்ல... எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாரு. :) அநேகமா தானைத்தலைவரா அவரையே நியமிச்சுரலாம். அண்ணன் பைத்தியக்காரன் பேசிய பொது, எனக்கு இவர் தமிழ்ப்படம் போலக் கூட்டத்தைக் கலாய்க்கிறாரோ என்று நினைத்தால் உண்மையிலேயே மனுஷன் சீரியஸ்-ஆ பேசுறாரு. அந்த முன் அறிக்கையைப் படித்த எனக்கே இது ஆவாதுன்னு தெரிஞ்சு போச்சு. அண்ணே உங்களுக்குத் தெரியலையா? இல்ல உண்மையிலேயே கலாய்ச்சிங்களா? தனியாவாவது எனக்குச் சொல்லுங்க....... அப்புறம் சங்கம் சங்கம் என்று யாராவது சொல்லும் போதெல்லாம் எனக்குக் கைப்புள்ள வடிவேலும் அந்த இத்துப் போன வண்டியும் ஞாபகம் வந்து தொலைத்தது.
அப்புறம் ஞாநி........ வழக்கமாக அவர் சொல்லும் அறிவுரைகள், சட்டம், அனுபவங்கள்........ நான் சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல. மொத்த 1 .30 மணி நேரத்துல 1 மணிநேரம் பேசுனாரு. (அப்பிடித்தான் எனக்குத் தோன்றியது) அவரு சொன்ன விஷயம் எல்லாம் ஓகே. ஆனால் அபத்தமான ஒரு நாடகத்தில் இடம்பெறும் அறிவுரைக் கருத்துக்களைப் போல இருந்தது.
நான் என்ன கருத்துடன் சென்றேனோ அதே கருத்துக்களைச் சுகுணாவும் நர்சிமும் சொன்னார்கள். பிளாக் என்பது ஒரு கட்டற்ற பெருவெளி, அங்கே ஒரு சென்சாரைக் கொண்டுவருவதைப் போல பேசினார்கள் பலர். சார் என்னை இவன் கிள்ளீட்டான் சார்னு யாராவது சொன்னால் சங்கம் இறங்கிப் போராடி நடவடிக்கை எடுக்குமாம். இப்போதே யாராவது உங்களைப் பாதிக்கிற மாதிரி எழுதினால் அவர்களை முடக்க முடியும் எனும்போது கமிட்டி எதற்கு? தலைவர் எதற்கு?. யாருக்காவது உதவவேண்டும் என்றால் இப்போது செய்வதைப் போலவே ஒரு போஸ்ட் போடுங்கள். விரும்பியவர் தரட்டும்.இதில் சங்கம் என்ன செய்யப் போகிறது?. சங்கத்தின் பேரில் செய்வார்களாம்..... இப்போதும் வலைப்பதிவர் உதவி என்றுதானே சொல்லப்படுகிறது. எப்படியும் யாரையும் கட்டாயப்படுத்தி காசு/உதவி வாங்க முடியாது எனும் போது தலைவர் சங்கம் எல்லாம் என்ன செய்வதற்கு ?


அப்புறம் அரசாங்கத்தை எப்படி சந்திப்பது... :) இவர்கள் ஒருமுறை யாரையாவது சந்தித்தால் தெரியும் அந்தக் காமெடி.
ஒரு முறை தலைவராய் இருந்தவர் அடுத்த முறை பிளாக் உலகிலேயே இருக்க வாய்ப்பு மிகக் குறைவு. இரண்டு வருடத்திற்கு முன் தீவிரமாக வலையுலகில் செயல்பட்டவர்கள் இப்போது இல்லை.இப்போது இருப்பவர்கள்? வலையுலகம் அதிகாரத்தை பரவலாக்கி இருக்கிறது. அதை மீண்டும் ஏன் சங்கத்தலைவர், செயற்குழு என்று ஓரிடத்தில் குவிக்க வேண்டும்?

ஒரு அமைப்பை விர்ச்சுவல் உலகில் தொடங்கி அதை ஒரு பகிரும் இடமாகப் பயன்படுத்துவதுதான் இந்நிலையில் சரியானதாக இருக்கும். இது நிச்சயம் வெற்றி பெறும்.. அதற்கு சிறுகதைப் பட்டறை, சிறுகதைப் போட்டி,சிங்கை நாதனுக்கு உதவியது, போலி விசயத்தில் உறுதியாய் இறுதிவரை நின்ற அண்ணன் உண்மைத்தமிழன் என்று பல முன் உதாரணங்கள் இருக்கின்றன. ஒரு பொதுவான ப்ளாகில் எல்லாருடைய ப்ளாக், எழுதுபவரின் விருப்பம், வேலை - அவரால் அவரது பணி சார்ந்து உதவ முடியுமா? (உதா:- ப்ருனோ, செந்தழல் ரவி), பணி சாராத வேறு உதவிகள் செய்ய இயலுமா ( உதா:- நர்சிம், பைத்தியக்காரன்), அதற்கான நேரம், தொடர்பு எண், ஈமெயில்.... வலையுலக சந்தேகங்கள் (டெக்னிகல் பிரச்சனைகள்) தொடர்பான உதவிகள் செய்பவர்கள் போன்ற விபரங்களையும் , ஒரு பிரச்சனையின் தீர்வை பொதுவான அந்த பிளாக்-இல் பகிர்தல் என எவ்வளவோ செய்ய முடியும்.

இதைத்தாண்டி ஒரு நிறுவனஅமைப்பாக இதைத் தொடங்கினால் இன்றைய மொக்கைக் கூட்டம் போல ஒரு மொக்கை அமைப்பாக மாறும் சாத்தியங்கள்தான் அதிகம்.

இந்தக் கூட்டத்தினால் எனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் :
டீயே குடிக்காத நான் இன்று டீ குடித்தேன் அது நன்றாக வேறு இருந்தது.
இப்படி ஒரு புத்தகக்கடை இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
இனிமேல் மான்கராத்தே செய்வதற்கு ஏதுவாக கதவின் அருகே இடம்பிடிக்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன். (பல சீனியர்கள் மான்கராத்தெயில் ப்ளாக் பெல்ட் வாங்கி இருப்பதையும் இன்றுதான் பார்த்தேன் - இப்படி எத்தனை கூட்டத்த நாங்க பார்த்திருப்போம் - ஒரு மான் மாஸ்டர் ) :)
நிறைய ப்ளாக்கர்கள் கதைசொல்லிகளாக இருப்பதும் தெரிய

வந்தது.
எல்லாவற்றையும் விட இந்தப் பதிவை இரவு 12 .30 க்கு டைப் செய்வது.....

மற்றும்

கூட்டம் என்றால் முடிவுகள் எடுக்கப் படவேண்டும் என்ற நவீனத்துவக் கூற்றைக் கட்டுடைத்து பின்நவீனத்துவ ரீதியில் ஒரு கூட்டத்தை நடத்துவது எப்படி என்று ஒரு பயிற்சிப்பட்டறை நடத்தியவர்களுக்கு என் நன்றி நன்றி நன்றி நன்றி.


படித்ததில் பாதித்தது

எனக்கு வினவு தளத்தின் மேல் பல விமர்சனங்கள் உண்டு என்றாலும்,
இந்தக் கட்டுரை என் மனதின் அடி ஆழம் வரை பாதித்து இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய கட்டுரை / அல்லது உலகிற்கான கடிதம்......

http://www.vinavu.com/2010/03/26/women-sankari/

சகோதரி சங்கரிக்கு ஒரு செவ்வணக்கம் ...........