Wednesday, July 29, 2015

ஆட்டிசம் சில புரிதல்கள் - துலக்கம் - ஒரு பார்வை



வாழ்வின் பல படிகளில் சவால்களைச் சந்திக்கிறீர்கள். பின் உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, அது ஆட்டிசக்குழந்தை என அடையாளம் காணப்படுகிறது. இப்போது உங்கள் முன் இருக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். ஒன்று - விதி அதுதான் என்று வேதாந்தம் பேசிக் கொண்டு உங்களையும் வருத்தி, அந்தக் குழந்தையையும் வருத்திக் கொள்வது. இரண்டு – தன்முனைப்புக்குறைபாட்டைப் பற்றிய புரிதலை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையை அந்தக் குழந்தையைக் கொண்டே எதிர்கொள்வது. நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்? முடிவு செய்துவிட்டீர்கள் அல்லவா? அதையும் தாண்டி வேறென்ன செய்வீர்கள்? உங்களுக்குத் தெரிந்த தன்முனைப்புக்குறைபாட்டு நிலைச் சவால்களை, குழந்தை வளர்ப்புச் சிக்கல்களைப் பிறருக்குச் சொல்வீர்கள் இல்லையா? அதைத்தான் யெஸ்.பாலபாரதியும், லக்ஷ்மியும் செய்கிறார்கள்.

ஆட்டிசம் அல்லது தன்முனைப்புக்குறைபாடு குறித்துத் தொடர்ந்து செயல்பட்டு வரும் யெஸ்.பாலபாரதியின் ஆட்டிசம் சில புரிதல்கள் புத்தகம் கடந்த வருடம் வெளியிடப்பட்டது. அது அவர் தன்னுடைய வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பாலபாரதியின் மகன் ஆட்டிசக்குழந்தை. அவனை வளர்ப்பதற்காக பாலபாரதி மற்றும் அவர் மனைவி லக்ஷ்மி எடுத்த முயற்சிகள், அதன் மூலம் கிடைத்த அனுபவங்கள், செய்திகள் இவற்றைத் தொடர்ந்து தனது வலைப்பூவில் கட்டுரைகளாக எழுதி வருகிறார்(கள்).
விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே ஆட்டிசம் சில புரிதல்கள் என்ற அபுனைவும் - துலக்கம் என்ற புனைவும் அவரால் எழுதப்பட்டுள்ளன, இந்தக் கட்டுரையைத் தொடரும் முன் யெஸ்.பாலபாரதியின் வலைப்பூக் கட்டுரைகளை இந்த இணைப்பில் படிக்கவும்.

நமது சமூக அமைப்பு, எல்லோருக்குமான வெளியை எப்போதுமே வழங்கி வந்திருக்கிறதா? ஒவ்வொரு குடும்பத்திலும் மன, உடல், சமூக குறைபாடுகளைக் கொண்ட ஒருவராவது இருந்துள்ளனர். அவர்களை இரண்டாம் நிலை மனிதர்களாக அந்தக் குடும்பம்/சமூகம் நடத்திவந்திருக்கிறது. சமூகக்குறைபாடுகள் மட்டுமே கொண்ட மனிதர்கள் (socially unadjusted human) மற்ற இரு வகையினரையும்விட குறைவாகப் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக திருமணம், குழந்தைகள் என்று அனைத்தும் கொண்டு, ஆனால் தன்முனைப்போடு பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல், தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து, இறந்து போன மனிதர்களை ஒவ்வொரு குடும்பமும் கண்டிருக்கிறது. அவர்களை மனக்குறைபாடு கொண்டோர் என்றோ, உடற்குறைபாடு கொண்டோர் என்றோ சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் தங்களின் தொடர்பியல்[1] வழிமுறையில் வித்தியாசம் கொண்ட தன்முனைப்புக்குறைபாட்டுநிலை மனிதர்களை, கற்றல் திறன் சவால் கொண்டோரை, சிறப்புக் குழந்தைகளை நாம் மிகக்கடுமையாக ஒடுக்கிவருகிறோம். உண்மையில் படிக்காதவர்களை விட படித்தவர்கள்தான் இத்தகைய ஒடுக்குதல்களை அதிகம் செய்கிறார்கள்.

ஒரு குழந்தை மீது அதிக வன்முறை செலுத்துபவர்கள் என்று பெற்றோரையும், அடுத்து ஆசிரியர்களையும் சொல்லலாம். அவர்களின் முக்கியமான வன்முறை எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு என்பதுதான் தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளின் மிகப் பெரும் சவால். தொடர்பு மொழியில் இருக்கும் சிக்கல்களால் அவர்கள் நினைப்பதைச் சொல்லிவிடமுடியாது, அது மிகப் பெரும் பிரச்சனையாக பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் மாறுகிறது.  யோசித்துப் பாருங்கள், குழந்தை இருக்கும் ஒரு வீட்டிற்குப் போனாலே அங்கிளுக்குப் பாட்டுப் பாடிக்காட்டு, டான்ஸ் ஆடிக் காட்டு, முத்தம் கொடு என்று சித்ரவதை செய்வதைப் பார்க்கிறோம் அல்லது நாமே செய்கிறோம். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட இந்த மூன்று செயல்களுமே தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளை பதட்டம் அடையச் செய்பவை. அவர்கள் அதைச் செய்யாதபோது, அது ஒரு அந்தஸ்துக் குறையாக (status issue) மாறி பெற்றோரைப் பதட்டமடையச் செய்கிறது. கூடுதலாக அந்தக் குழந்தைக்குத் தண்டனையும் கிடைக்கும். அதே போல ஆசிரியர்கள் சராசரிப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களை இவர்களுக்குச் சொல்லி சராசரி அளவேயான மறுமொழியை, மதிப்பெண்ணை எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியமாகாத போதும், தண்டனைகளே கிடைக்கின்றன. இவையெல்லாமே சராசரிக் குழந்தைகளைப் பாதிக்கும் அளவைவிட தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன.
ஆட்டிசம் சில புரிதல்கள் புத்தகத்தில், தன்முனைப்புக்குறைபாடு, அதன் அறிகுறிகள், உட்பிரிவுகள், மென்ணுணர்வு [2] மிக்க தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளிடம் நாம் மாற்றவேண்டிய விஷயங்கள் என்ன? பெற்றோரான நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? அவர்களுக்கான உணவு என்ன? என்பதைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். இந்தப் புத்தகம் நிச்சயமாக ஒரு மைல்கல்தான். ஆனால் இந்தப் புத்தகம் யாரைச் சென்றடைய வேண்டும்? முதலில் ஆசிரியர்களை பின் பெற்றோர்களை. நமது கல்வி அமைப்பு என்பது அடிப்படைப் புரிதல்கள் ஏதுமற்ற மதிப்பெண் அளவீடுகள் கொண்ட தட்டைப் பரப்பாக மாறி 30 வருடங்களாகிறது. அவற்றின் பரிணாம வளர்ச்சிதான், இன்று நாம் காணும் ப்ராய்லர் பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் கற்றல் அறிவியல், கற்றல் திறன் சவால், மாணவர் மனநிலை குறித்து கல்லூரிகளில் படிப்பதோடு சரி, அதன்பின் அவற்றை பயன்படுத்துவதோ, தொடர்ந்து அவற்றில் நடக்கும் கண்டுபிடிப்புகளை அறிந்துகொள்வதோ கிடையாது – ஆனால் இவர்கள் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளை கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் ஒப்பீட்டளவில் குறைவான சேதாரத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துபவர்கள். தனியார் பள்ளிகளில் இன்னும் மோசம், முறையான கல்விப் பயிற்சியோ, உளவியலோ இல்லாத பெரும்பாலோர் ஆசிரியராக இருக்கின்றனர். அதையும் மீறி இவற்றைப் பற்றி பேசினால் அந்த ஆசிரியர் வெளியே துரத்தப்படுவது நிச்சயம். மதிப்பெண் எடுக்க வை, இல்லாவிட்டால் வெளியே போ என்பதுதான் இவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு. உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் ஏதேனும் ஒரு ஆசிரியரிடம் மேலே சொன்ன பிரச்சனைகள் பற்றிக் கருத்துக் கேளுங்கள்.

ஆசிரியர்கள் இந்தப் புத்தகத்தைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் - அவர்கள்தான் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அவர்கள் மூலமே பெரும்பாலான தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பின் விகிதாச்சார அடிப்படையில்[3] தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவே போகிறது. குறிப்பாக எண்ணிக்கையில் அதிகரிக்கும் போது. இந்தக் குழந்தைகளைத் தவிர்த்துவிட்டு நாம் சமூகத்தில் வாழ்ந்துவிட முடியாது, அவர்கள் உரிமைகள் நிலை நிறுத்தப்பட வேண்டியது கட்டாயம். இந்தப் புத்தகம் யாரேனும் ஒரு ஆசிரியரை மாற்றினாலே அது வெற்றிதான்.
இனி துலக்கம் பற்றி - துலக்கத்தின் கதை மிக எளிமையானது. அஸ்வின் என்ற ஒரு சிறுவன் காணாமல் போகிறான். அவன் ஒரு தன்முனைப்புக்குறைபாட்டு நிலையாளன். அவனை சமூகம், சட்ட அமைப்பு, சக மனிதர்கள், பெற்றோர், மருத்துவர்கள் என ஒவ்வொருவரும் எப்படிப் பார்கின்றனர், அவன் இவர்களை எப்படிப் பார்க்கிறான், எதற்காக அவன் வெளியேறினான் என்பதன் மூலம் கதை நகர்கிறது. கதை வெகு இயல்பான வெகுஜன மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. யெஸ்.பாலபாரதியின் கடந்தகால படைப்புகளில் தெரியும் ஆழமோ, கவித்துவமோ இந்தப் புத்தகத்தில் இல்லை அல்லது வேண்டுமென்றே முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறது. அதற்கான காரணமாக, ஆட்டிசம் சில புரிதல்கள் புத்தகம் மூலம் எதிர்பார்த்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் சென்றடையவில்லை, இது குறித்த விழிப்புணர்வு அதிகமானோரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே துலக்கம் எழுதப்பட்டது என்று புத்தக வெளியீட்டில் யெஸ்.பாலபாரதி சொல்லியிருக்கிறார். இங்கேதான் அபுனைவிற்கும் புனைவிற்குமான சாத்தியங்கள் வேறுபடுகின்றன. 

புனைவு தரும் கற்பனைச் சாத்தியங்கள் – அபுனைவு எழுத்தில் சாத்தியமில்லை, அதனாலேயே பொதுவாக புனைவற்ற படைப்புகள் மக்கள் மனதை எளிதில் வசீகரிப்பதில்லை. ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற நோக்கம் சார்ந்த படைப்புகள் பெரும்பாலும் அபுனைவாகவே எழுதப்படுகின்றன. அதனாலேயே பிரச்சார எழுத்துக்களை இலக்கிய வரையறைக்குள் கொண்டு வரக்கூடாது என்று தூயஇலக்கியவாதிகள் காலங்காலமாகச் சொல்லி வருகின்றனர். ஆனால் மார்க்சியப் பார்வையில் இலக்கியம் அதன் அழகுணர்ச்சி சார்ந்து மதிப்பிடப்படுவதைக் காட்டிலும் சமூக/அமைப்பியல் மாற்றம் என்ற அளவீட்டில் வைத்தே அளவிடப்படுகிறது. தீவிர மார்க்சியர்கள் அழகுணர்ச்சியை முற்றிலும் நீக்கிவிட வேண்டும் என்று கூடச் சொல்லி இருக்கின்றனர். அதேசமயம் பேசப்படும் கருத்து பன்முகத்தன்மையுடன், விரிந்து-விவாதித்து எழுதப்பட்டிருக்க வேண்டும். துலக்கம் கூட – தூய்மைவாத இலக்கிய அளவீடுகள் அடிப்படையில் அல்லாமல், மார்க்சிய இலக்கிய அளவீட்டில் வைத்தே அளவிடப்பட வேண்டும். 

அவ்வாறு மதிப்பிட்டால், துலக்கம் ஒரு சமூகத்தேவைக்கான படைப்பு. இங்கே இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டியது இருக்கிறது. உடனடியாக விழிப்புணர்வை ஏற்படுத்த அபுனைவைவிட சிறந்த வடிவம் இல்லை. அதேசமயம் நிறையப் பேரைச் சென்றடைய புனைவு மிக முக்கியமாகிறது - ஆனால் அது பெரும் உழைப்பைக் கோரும் விஷயம். பல அடுக்குகளைக் கொண்ட இலக்கியம் என்பது நிகழ்வை, சமூகக் கட்டமைப்பை, வக்கிரங்களை, வன்மத்தை, எதிர்பாராமையை, உன்னதத்தை சொல்லி வாசகனின் மனதில் நீண்டகால அடிப்படையில் நிலையான மாற்றங்களை உருவாக்கக்கூடியது. அது விழிப்புணர்வு என்ற தளத்தில் மட்டும் இல்லாமல், வரலாற்றில் நடந்திருக்கும் ஒரு மோசமான நிகழ்வை, என்ன நடந்திருக்க வேண்டும் என்று சொல்லுவதன் வழியே எதிர்காலத்தில் அது மீண்டும் நடக்காமல் இருக்கச் செய்யும் முயற்சி. விளிம்புநிலை மனிதர்கள் என்று சொல்லி மனநலம் குன்றியோர்களை, திருடர்களை, பாலியல் தொழிலாளிகளை காட்சிப்படுத்தும் இலக்கிய முயற்சிகள் ஒரு அதிர்ச்சியை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். அது தேவையும் கூட. ஆனால் அதே விளிம்பின் விளிம்பில் இருக்கும் கற்றல் திறன் குறைந்தோர், தன்முனைப்புக்குறைபாட்டு நிலையினர், விவசாயிகள், பாலியல் சிறுபான்மையினர் பற்றிய எழுத்துகள் மிகக் குறைவு – ஏனென்றால் அவை தரும் அதிர்ச்சி பாலியல் கிளர்ச்சியையோ, சாகசத்தையோ முன் வைப்பதில்லை. முக்கியமாக, அவை தரும் அதிர்ச்சிகளை நாம் காண விரும்புவதில்லை.
அஸ்வின் நம்முடைய சட்ட அமைப்பில் எப்படி நடத்தப்படுகிறான் என்பதைச் சொல்லும் இந்தக் கதையில், அந்த அமைப்பு தன்முனைப்புக்குறைபாட்டு நிலையோரை மட்டும் அல்ல, யாரையுமே எப்படி நடத்துகிறது? என்ற கேள்வி எழுகிறது. ஏன் அமைப்பு அவ்வாறு நடக்கிறது? அஸ்வினின் உள்உலகம் என்ன? அவனுடைய அடிப்படை விருப்பு வெறுப்புகள், இந்த சமூகத்தை எப்படிப் பார்க்கிறான், அவனுடைய பெற்றோருக்கும் சராசரிப் பெற்றோருக்கும் இருக்கும் மனநிலை மாறுபாடுகள், பள்ளியில் அவனுக்கு இருக்கும் சவால்கள், ஆசிரியர்களுக்கு இருக்கும் சவால்கள், அவனுக்கும் அவன் நண்பர்களுக்குமான உறவு, அவனுக்கும் அவன் உடன் பிறந்தோருக்குமான உறவு, உடல் சார்ந்த அவனுடைய சவால்கள் – முக்கியமாக பதின் வயதில் ஏற்படும் பாலியல் கொந்தளிப்புகள், காதல், நெருங்கியோர் மரணம் போன்ற சவால்களை எதிர்கொள்வது என்று எண்ணற்ற பக்கங்களைக் கொண்ட ஒரு நாவல் இந்தக் கதையில் இருக்கிறது. அதே நேரம் ஒரு தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தை பெண்ணாயிருந்து அவள் இவற்றை எப்படிச் சந்திப்பாள்? என்று எழுதினால் அது முற்றிலும் வேறான நாவலாக இருக்கும். விழிப்புணர்வு என்ற ஒரு பார்வையை மட்டும் முன்வைப்பதால், மிகச் சுருக்கமாக மேலே சொன்ன விசயங்களில் சிலவற்றை மட்டுமே சொல்லி, பலவற்றைத் தவிர்த்து இருக்கிறார்.
இந்தப் புத்தகங்களுடன் பார்க்க வேண்டிய படம் என்று – Forrest Gump - திரைப்படத்தைச் சொல்லலாம். பாரெஸ்ட் ஒரு தன்முனைப்புக்குறைபாட்டு நிலையினன். இருந்தும் சிறப்புக் குழந்தையான அவன் எப்படித் தன் வாழ்வின் சவால்களை எதிர்கொள்கிறான் என்று மிகச் சிறப்பாகச் சொல்லி இருப்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு படியிலும், ஒவ்வொரு நிகழ்விலும் அவனுடைய முழுப்பங்களிப்பு இருக்கும். வேறெதைப் பற்றியும் அவன் கவலை கொள்வதில்லை. அவனுக்குத் தேவை – தன்னைப் புரிந்தவர்கள். அதேபோல, அவனுக்கு எல்லாமும் புரியும். அவனுக்குப் புரிந்ததாக அவன் சொல்வதில்லை. அவன் நல்ல மகனாக, நல்ல நண்பனாக, நல்ல காதலனாக, நல்ல குடிமகனாக, நல்ல தோழனாக, நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக இருக்க முடிகிறது. அது சராசரியாய் இருக்கும் பெரும்பாலோரால் செய்ய முடியாத சாதனை அல்லவா? அவ்வளவு பெரிய சாதனையாளனான அவன் சொல்வதைபோலவே - I'm not a smart man... but I know what love is - ஒவ்வொரு ஆட்டிசக்குழந்தையும் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, Try to understand me, Nothing else.[4]

மார்க்சிய இலக்கியப் பின்னணி கொண்ட யெஸ்.பாலபாரதி, எரியும் பனிக்காடு, சோளகர் தொட்டி போன்று அழகியலை விடக் கருத்தியல் பார்வையை முன்வைக்கும் – அதே நேரத்தில் பன்முகங்கள் கொண்ட ஒரு படைப்பை விரைவில் தருவார் என்று நம்பலாம்.
பெற்றோராக திரு யெஸ்.பாலபாரதியும், திருமதி லக்ஷ்மியும் செய்யும் இத்தகைய பெரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

புத்தகங்கள்:
1.        ஆட்டிசம் சில புரிதல்கள்
வெளியீடு: புக் ஃபார் சில்ரன்
விலை: 50 ரூபாய்
2.        துலக்கம்
வெளியீடு: ஆனந்தவிகடன்
விலை: 85 ரூபாய்
1.        தொடர்பியல் Impart information & the way of expression - என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளேன். (communication அல்ல)
2.        மென்னுணர்வு - மென்மை உணர்வு என்ற அடிப்படையில் நான் உபயோகிக்கவில்லை. They could be cognitively disturbed without any external reason. - எளிதில் பாதிப்படையக்கூடிய/சமநிலை இழக்கக்கூடிய - என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளேன்.
4.        எந்தச் சிறப்புக் குழந்தையும் மேதையோ, முட்டாளோ அல்ல. ஆனால் அவர்கள் மற்றெல்லாக் குழந்தைகளையும் போல (கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படும்) சராசரிகள்தான் என்று புரிந்து கொள்ளவே ஃபாரஸ்ட் கம்ப்-ஐ உதாரணமாகச் சொல்லி இருக்கிறேன்.

Tuesday, July 14, 2015

இஸ்தான்புல் – ஒரு நகரத்தின் நினைவுகள் – ஓரான் பாமுக்



இஸ்தான்புல் – ஒரு நகரத்தின் நினைவுகள் – ஓரான் பாமுக்

வரலாறு என்பது என்ன? ஒரு நபரின்/ஒரு குழுவின் - காலம் குறித்த பார்வைதான் வரலாறு. பெரும்பாலும் அது வென்றவர்களின் பார்வை – ஒரு பக்கச்சார்பானது. பெரும்பாலும் எழுதப்பட்ட வரலாறு என்பது பாரபட்சம் கொண்ட புனைவுதான். விதிவிலக்காகச் சில சம்பவங்கள் இருக்கலாம்.

ஒரு காலத்தில் பயணிகளே வரலாற்றை எழுதும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். இதில் புனைவின் சதவிகிதமும், ஆதரிப்போர் மீதான எண்ணச் சாய்வுகளும் அதிகம். பின் அதிகார மையங்கள் தங்களுக்குத் தேவையான வரலாற்றை அனைவருக்குமாக எழுதிக் கொண்டனர். அப்படிப்பட்ட சூழலில், நிகழ்வுகள் வரலாறாவதற்கான தேவை மற்றும் தேவையின்மை என்பது எழுதும் தரப்பின் அரசியல் லாப-நஷ்டங்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இப்படிப்பட்ட வரலாறுகள் எல்லாமே ஒற்றைப் பார்வை கொண்ட குறைநோக்கு வரலாறுகளாகவே இருக்கின்றன. உண்மை என்பது மக்களின் அடிமனதிலும், புனைவுகளிலும் நிகழ்வுகளாகப் பதிவு பெற்று அவற்றுக்கான வரலாற்று மதிப்பினை இழக்கின்றன. இதன் மூலம் தொடர்ந்து அரை உண்மைகள் வரலாறாக நீடிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள இணையப்புரட்சி ஒவ்வொரு மனிதனின் கருத்தும் பதிவாக வரும் சாத்தியத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமகாலம் குறித்த பார்வை பதிவுகளாக, நடைபெறும் போதே எழுதப்படும் வரலாறாகக் குறிக்கப்படுகின்றன. வரலாறை எழுத எவ்வித நோக்கமும், தேவையும் இல்லாத போது பெரும்பாலும் உண்மைகள் அப்படியே கடத்தப்படுகின்றன. எழுதுபவரின் கல்வி, அரசியல் பின்புலங்கள் செலுத்தும் சாய்வு இருக்கிறதென்றாலும் அதன் எதிர்நிலையினரும் உடனே தங்கள் தரப்பைத் தந்து விடுவதற்கான வாய்ப்புகள் திறந்தே இருக்கின்றன. இது இத்தகைய வரலாறுக்கு ஒரு பன்முகத்தன்மையைத் தானாகவே அளிக்கிறது.  தனிமனிதப் பார்வை என்பது எப்போதுமே குறைப்பார்வைதான், இந்தத் தனிமனிதப் பார்வைகளை ஒன்றிணைத்து, தன் பார்வையையும் முன்வைத்து ஓர் அறிவுலக நபர் எழுதும் வரலாறானது இத்தகைய குறைகளையும் மீறி ஓரளவிற்கேனும் ஒட்டு மொத்தப் பார்வையைக் கொண்டிருக்கும் சாத்தியங்கள் கொண்டது. ராகுலின் வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புத்தகங்கள் இவ்வாறானவை. ஓரான் பாமுக் எழுதி இருப்பது, அப்படிப்பட்ட ஒரு வரலாறைத்தான். இந்தப் புத்தகத்தை ஓரானின் சுயசரிதையாக அல்லது பாமுக்குகளின் வம்சக்கதையாக அல்லது முக்கியத்துவம் இழந்து போன நகரின் கதையாக அல்லது ஆட்டோமான் சாம்ராஜ்யத்திற்குப் பின்பான ஜனநாயகத் துருக்கியின் கதையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இது புனைவல்ல, ஒரு நபரின், குடும்பத்தின், சமூகத்தின், நகரின், வர்க்கத்தின், நாட்டின் வரலாறு. இந்த வரலாற்றில் ஓரான் ஒரு பார்வையாளனாகவும், பங்களிப்பானாகவும் இருக்கிறார். ஆட்டோமான் அரசு சரிந்து, அதன் பின்பான காலனிய அரசில் பெரும் செல்வம் சேர்த்து மேல் எழும் ஒரு தலைமுறைக்குப் பின், ஜனநாயக அரசில் கொஞ்சம் கொஞ்சமாக அழிவுறும் ஒரு குடும்பத்தின் வரலாறு. அது அந்தக் குடும்பத்தின் வரலாறு மட்டுமல்ல, அந்தக் குடும்பம் சார்ந்த வர்க்கம் மற்றும் அந்நகரின் வரலாறும் கூட. அந்த நகரின் அழிவு ஓரானின் பிறப்பிற்கு முன்பே தொடங்கிவிட்டது, அந்த அழிவினூடே ஓரானின் குடும்பம் மேலெழுகிறது, அதைத் தக்கவைக்கும் நிலையில் அவர் அப்பா இல்லாத போது அழிவு கொஞ்சம் கொஞ்சமாக இடிபாடுகளில் மற்றொரு இடிபாடாக அந்தக் குடும்பத்தை மாற்றுகிறது. வாழ்ந்து கெட்ட ஒரு நகரில் வாழும், இன்னொரு வாழ்ந்து கெட்ட குடும்பமாக அது மாறுகிறது. 

வாழ்ந்து கெட்ட மனிதர்களை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா? அவர்களால் நன்றாக வாழ்ந்த நினைவுகளைப் புதைத்து விட்டு, நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவர்கள் அவர்களுக்கான சோகத்தை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்டு அவற்றில் புதைந்து கொண்டு அவற்றிலேயே அழிந்து போவார்கள். இந்நிலையை ஓரான் ஹுசுன் என்று சொல்கிறார். இஸ்தான்புல் அப்படிப்பட்ட ஹுசுனிலேயே வாழ்கிறது.

இதைப் புரிந்து கொள்ள நாம் செட்டிநாட்டை எடுத்துக் கொள்ளலாம். அது ஒரு புதைந்த பகுதிதான். ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்திய வருமானத்தில் குறிப்பிடும் அளவு சதவிகிதத்தை அது கொண்டிருந்தது. தனி விமானத்தளம், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களால் கட்டப்பட்ட அரண்மனை போன்ற வீடுகள், பெரும் அளவிலான விவசாய நிலங்கள், வறண்ட பகுதியை வளமாக்கும் நீர் நிலைகள், பொருட்செலவை கோரும் கோயில்கள், ரயில் போக்குவரத்து, ஏற்றுமதி வசதிகள் என்று வாழ்ந்த ஒரு பகுதி. காலமாற்றம் ஏற்பட்டு காலனி அரசிடம் இருந்து ஜனநாயக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின் (அதற்குச் சற்று முன்பே கூட) ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களை உள்வாங்காத ஒரு தலைமுறையிடம் சொத்துக்கள் வந்து சேர்ந்த போது அழிவு ஆரம்பித்தது. நிலங்களை விற்று, நகைகளை - பெட்டகங்களை விற்று, வீடுகளின் உத்திரங்களாக, கதவுகளாக, ஜன்னல்களாக இருந்த பர்மிய தேக்கு மரக்கட்டைகளை விற்று, அறைகலன்களை விற்று, பட்டியற்கற்களை விற்று, சமையல் பாத்திரங்களை விற்று என்று - இன்றுவரை விற்றுத் தீராத செல்வம் கொண்ட அந்தப் பகுதி இன்றுவரை அதன் இருண்டகாலத்தைக் கடந்து வரவே இல்லை. வாழ்ந்து கேட்டவர்கள் வாழ்ந்தபோது செய்தவற்றை பெருமைமிகு குடும்பப் பாரம்பரியம் என்பார்கள், எத்தனையோ குடும்பங்கள் அவற்றைக் காப்பாற்ற தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணமே செய்யாமல் விட்டுவிட்டதும் உண்டு. அதுதான் ஹுசுன். அவர்கள் கண்டுபிடித்த/ கிழக்காசியாவிலிருந்து கொண்டு வந்த சுவைமிகு உணவுகளை உலகமே ரசித்து உண்ணும்போது, அவர்கள் அவற்றை உண்ணும் சாத்தியமே இல்லாதபோது தோன்றும் வெறுமைதான் ஹுசுன். பக்கத்திற்கு, ஐந்து அடி அகலமும், கலை வெளிப்பாடுகளும் கொண்ட நிலைவாசலும், கதவும் - முன்னும் பின்னும் ஏதுமற்ற மொட்டைச் சுவற்றில் நிற்குமே அதுதான் ஹுசுன்.  வளர்ச்சிக்கான வாய்ப்பெதுவும் இல்லாத போது கடந்தகாலத்தின் செரிக்காத நினைவுகளில் வாழும் - ஜீவன் செத்த மனிதர்கள் முகங்களில் தெரிவதுதான் ஹுசுன். இவையெல்லாம் எளிமைப்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டுகள் மட்டுமே, ஹுசுனைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தை முழுவதும் படிப்பது நல்லது. 

ஹுசுன்தான் இஸ்தான்புல்லின் தேர்ந்தெடுத்த தலைவிதியாய் இருக்கிறது. ஒட்டுமொத்தப் புத்தகமும் ஹுசுனைப் பற்றித்தான் எழுதப்பட்டுள்ளது. இருள் கவிந்த நாகரிகத்தில் வேறென்ன பேசுபொருளாய் இருக்க முடியும்? காய்ந்த எலும்பொன்றைக் கவ்விக்கவ்வி தன் வாய்வழியே வழியும் தன் ரத்தத்தையே நக்கி ருசிக்கும் ஓர் நாயைப் போல, இடிந்த நகரின் நம்பிக்கை இழந்த மனிதர்களின் வாழ்வென்பது எல்லாவற்றையும் குறைகூறிக்கொண்டு தன்னையும் பிறரையும் வருத்திக் கொள்வதல்லாமல் வேறென்ன? யாருக்கும் வழிகாட்டக்கூட இடிந்த அரண்மனைகளையும், எரிந்த யாலிகளையும் அடையாளம் சொல்லும் வருத்தம் ஒரானுக்கு பெரும் மனநெருக்கடியைத் தருவதில் வியப்பொன்றும் இல்லை.

புதிதாய் மேலெழும் மனிதர்கள் மேல் உள்ள கோபம், பொறாமை, அவர்களைப் போலச் செயல்பட முடியாமை எல்லாம் வீழ்ச்சியுறும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அந்த நாட்டுக்குமே ஒரு சவால்தான். இதனிடையே மூன்றாம் தலைமுறை மனிதரான ஓரான் முழுக்க விலக முடியாமல், தன் தப்பித்தலான கனவில் வாழ்தலிலும் ஓவியம் வரைதலிலும் மூழ்க முயலும் போது சந்திக்கும் நெருக்கடிகள் எந்த ஒரு கலைஞனுக்கும் இயல்பாக நடப்பவைதான். புறவாழ்வின் நெருக்கடிகள் காதலியின் வழியே, அம்மாவின் வழியே நெருக்கும் போது விடாப்பிடியாகத் தன் கட்டிடக்கலைப் படிப்பைப் புறந்தள்ளுதல் மூலம் கனவில் தான் காணும் பிரபல ஓவியர் என்ற சித்திரத்தை நனவுலகிலும் கொண்டு வந்து விட முயல்கிறார் ஓரான். 

பொதுவாக கலைஞர்கள் மனநோயாளிகளாக, குடிகாரர்களாக, பாலியல் நோயாளிகளாக மாற அவர்களின் அதிகற்பனைகள்தான் காரணமாகின்றன. அதே சமயம் அவர்களை வெறியோடு இயங்கச் செய்பவையும் அவைதான். ஒரே கலையில் மூழ்கும் கலைஞர்கள் அதிஷ்டவசமாக வெற்றியை மட்டுமே அடைந்துவிட்டால், அவர்கள் மேல் சொன்ன பிரச்சனைகளைச் சந்திப்பதில்லை - அதற்கான சாத்தியங்கள் வெகு அபூர்வம் என்றாலும் கூட. அதே சமயம் அவர்கள் தொடர்தோல்வியோ அல்லது தொடர்ந்த வெற்றிக்குப் பின்பான பெரும் தோல்வியையோ அடையும் போது அவர்கள் சுயஅழிதலுக்குப் போகிறார்கள். தொடர் தோல்வி – சுய அழிதலுக்கு ஓவியர் வான்கோ போன்றோரையும், தொடர் வெற்றி – பெரும் தோல்விக்கு மைக்கேல் ஜாக்சன் போன்றோரையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இப்போது ஒரு நாகரிகத்தை இந்த இடத்தில் பொருத்திப் பார்ப்போம். நாகரிகம் என்பது கலையின் நீண்ட வெற்றிகளை தன் அணிகளாகக் கொண்டது. அதனளவில் நீண்ட வருடங்களாய்த் தொடரும் பாரம்பரியத்தைக் கொண்டது. அது ஒரு தோல்வியைச் சந்திக்கும் போது அது மீண்டெழும் சாத்தியங்களை மறுக்கிறது. சிதைந்த நாகரிகங்கள் எல்லாமே மீண்டெழ முடியாமைக்கு அதுவரையிலான அதன் மீது அதுவே ஏற்படுத்திக் கொண்ட ஒற்றைப்பார்வைச் சிறப்புகளே காரணமாகின்றன. ஆண்டாண்டு காலமாய் அது தன்னைப் பற்றி எழுப்பியுள்ள வெறும் சிறப்பு குறித்த பிம்பங்கள் கூட்டு எண்ணங்களாய் ஆட்சியாளர்கள் - மக்கள் மனதில் பதிந்து அவர்களை அதை விட்டு வெளியேற முடியாதவர்களாய் மாற்றுகின்றன. அது ஒரு பலவீனமான படையெடுப்பினால் ஏற்படும் சிறு பின்னடைவிலேயே கூடச் சிதைத்து போகிறது. சிறப்பு குறித்த பிம்பங்கள் இருந்த இடத்தை தோல்வி குறித்த சுயஇரக்கம் நிரப்பத் தொடங்குகிறது. அது ஒட்டு மொத்த இருளுக்குள் மனிதனை, நாட்டை, நாகரிகத்தை அழைத்துச் செல்கிறது. இதற்கு உலக வரலாற்றின் எந்த ஒரு நாட்டையும், நாகரிகத்தையும் உதாரணமாகக் கொள்ளலாம்.

அப்படியான இருளில் இருந்து மறுபடி மீண்டு வருதல் என்பது காலத்தை உண்ணும் செயலாய் இருக்கிறது. அந்த இருளான நாட்டில் இருந்து தப்பித்து வெளிச்சம் கொண்ட இடம் நோக்கிச் சில கலைஞர்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றனர். இன்னும் சிலரோ தங்களுக்குள்ளே இருக்கும் இருளிலேயே கரைந்து போகின்றனர். ஓரானின் அம்மா இது பாரிஸ் அல்ல, இஸ்தான்புல் என்று சொல்வது அதைத்தான். ஆனால் ஓரானின் மனதில் சிறு வயதில் இருந்தே கதாநாயகர்களாய் இருப்போர் அந்த இடிந்த நகரை விட்டுச் செல்லாத, அந்த நகரை ஆராதிக்கும் தோல்வியுற்ற எழுத்தாளர்கள்தான். அந்த அங்கீகாரமற்ற சாகச மனிதர்கள்தான் ஓரானின் ஆளுமை வளர்ச்சியை நிர்ணயித்துள்ளனர். 

கலைஞர்களில் இன்னொரு சிறப்பு இயல்பு கொண்டோர் உண்டு, தன் கலையை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கைவிட்டுவிட்டு மற்றோர் கலையில் ஈடுபடுவோர். இவர்கள் அங்கீகாரத்திற்காக, அகத்தூண்டுதலில், நெருக்கடியில், வேறுவழியின்றி, பணத்தேவைக்காக என்று பல காரணங்களுக்காக இரண்டாம் கலையைத் தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் தோல்வி அடைவதில் வருத்தம் கொள்வோரில்லை. அவர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் அவர்களின் தோல்வியை – முதல் கலையைக் கைவிட்ட அன்றே - ஒப்புக்கொண்டவர்கள். இத்தகையோரை வரலாறும் கொண்டாடித்தீர்க்கும். ஏனென்றால் முதல் கலையை இரண்டாவதாய்த் தேர்ந்தெடுத்துக் கொண்ட கலையுடன் இணைத்து இரண்டு கலைகளுக்கும் புதுப்பரிமானத்தை வழங்குவார்கள் – ஒரானைப் போல. தன்னுடைய ஓவியக்கலைக்கு நெருக்கமான கட்டிட வரைவியலை புறந்தள்ளும் ஓரான், ஓவியக்கலையையே ஒட்டுமொத்தமாக விலக்கிவிட்டு இறுதியில், அதற்குக் கொஞ்சமும் தொடர்பற்ற எழுத்தாளனாய் வரப்போவதாய் முடிவெடுக்கிறார். ஆனால், ஓரானின் படைப்புகளில் வரும் ஓவிய நுணுக்கங்கள், வர்ணனைகள் ஒரு புது வித வாசிப்பனுவத்தைத் தருபவை. நாவலின் காட்சிகள் அனைத்துமே ஓவியத்தின் ஒரு பகுதிபோல, நகரும் ஓவியத்தை போலவே விளக்கப்படும். அதே சமயம் ஒரானால் ஒரு ஓவியத்தை காட்சியாக விளக்கவும் முடிகிறது. ஓவியன் ஓர் ஓவியத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பித்து எப்படி வேண்டுமானாலும் பயணித்து குறிப்பிட்ட சட்டகத்தில் முழுமை பெற வைக்க முடியும். அதைப்போல ஒரானும் தன் நாவல்களின் சம்பவங்களை எங்கோ ஆரம்பித்து பயணம் செய்து முழுமை பெறச்செய்வார். (என் பெயர் சிவப்பு வர்ணனைகளுக்காகவே மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய நாவல்.)

Departures என்று ஒரு ஜப்பானியப் படம் உண்டு. அதில் செலோ வசிக்கும் ஒரு கலைஞன் திடீரென வேலை இழந்து, வேறு வழியின்றி பிணங்களை அலங்கரிக்கும் வேலைக்குச் செல்வான். முதலில் விருப்பமே இல்லாமல் ஆரம்பிக்கும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக செலோ வாசித்தலுக்கான நுணுக்கங்களுடன், பிணங்களையும் அலங்கரிக்கத் தொடங்குவான். ஒரு கலையில் நேர்த்தி அடைதல் என்பது தனிப்பட்ட கலையில் ஏற்படும் நேர்த்தி அல்ல, அது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மேல் உள்ள அக்கறையினால் ஏற்படும் நேர்த்திதான். பிணங்களை அலங்கரிக்கும் கலை அவனுள் ஏற்படுத்தும் மாற்றங்கள், அவனுடைய செலோ வாசிக்கும் திறனையும் மேம்படுத்தும். இவை ஒட்டுமொத்தமாக பிற மனிதர்கள் குறித்த அவனுடைய பார்வையையும், அவன் மேலான பிற மனிதர் பார்வையையும் தலைகீழாக்கும். கலையிலிருந்து கலைக்கு என்னும்படியான மாற்றங்கள்தான் இருள் கவிந்த ஹுசுனில் இருந்து மனிதர்களை வெளியே வரச்செய்யும். அதே சமயம் அடித்தட்டு மக்களுக்கு போராட்டத்திலிருந்து மற்றொரு போராட்டம் என்னும்படியான மாற்றங்கள்தான் தேவைப்படுகிறது. அது இரண்டு வர்க்கங்களின் முரண்.

இது தவிர்த்து, ஓரானின் இந்தப் புத்தகம் அரசு, மதம் குறித்து கறாரான விமர்சனங்களை முன்வைக்கிறது. கைக்கூலி அரசுகள் எப்படிச் செயல்பட்டன, அவை தனி மனிதனின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்று விரிவாகச் சொல்கிறார். இரு பெரும் கலாச்சார – புவியியல் சந்திப்பில் இருக்கும் துருக்கி உடை போன்ற தனிநபர் விருப்பங்களில் தலையிட்டு மேற்கத்திய மாற்றங்களைத் திணித்ததும், ஆயிரமாண்டு மொழியின் வரிவடிவம் அழிக்கப்பட்டு புது வரிவடிவம் திணிக்கப்பட்டதும் மக்களின் அடையாளப் பெருமிதங்களை அழிக்கும் வேலைதான். அது இரண்டு விதங்களில் வேலை செய்யும், புது உத்வேகத்துடன் ஒரு தலைமுறை கிளம்பலாம் அல்லது பெருமிதங்கள் ஏதுமில்லாத மனிதக்கூட்டம் மாபெரும் மந்தைகளாக மாறலாம். துருக்கியில் இரண்டாம் நிலையே நீடிக்கிறது. இதற்கு நேர்மாறாக இத்தாலிய, ஆர்மீனிய மக்கள் அழித்தொழிப்பு செய்யப்படும் நிலையை அதே மொழிவெறியே ஏற்படுத்தி உள்ளது. நோன்பு நோற்றலை வற்புறுத்தாத, மேற்கத்திய சிந்தனைகளை முன்னிறுத்தும் ஒரு குடும்பத்திலிருந்து வந்த ஓரான் – சமூகமே மதத்தை முன்னிறுத்தி கடுங்கோட்பாடுகளை செயல்படுத்தும் நிலையை அடைவதைப் பார்க்கும்போது ஒரு சிந்தனாவாதியாக நோகடிக்கப்படுவது இயல்புதான். எந்த ஒரு சுயசிந்தனை கொண்ட மனிதனும் எந்த ஒரு வெறியையும் ஏற்றுக்கொள்ள மறுப்பான். அவ்வகையில் ஓரானின் இந்தப் புத்தகம் துருக்கி குறித்து ஒரு திறந்த பார்வையை முன்வைக்கிறது. ஆனாலும் கூட, இது ஒரு குறிப்பிட்ட  வர்க்கத்தின் பார்வைதான். இங்கே ஏன் வர்க்கம் குறித்து சொல்கிறேன் என்றால், ஓரானின் பார்வை சமூகத்தின் மேல்மட்டத்தில் இருந்த அல்லது இருக்கும் மனிதனின் பார்வைதான். அவர் சொல்லும் ஹுசுன் என்பது கூட இருந்ததை இழந்தவை குறித்த ஏமாற்றம் மற்றும் இழந்த பெருமைகள் குறித்த ஏக்கம்தான். ஆனால், காலம் காலமாக இப்படிப்பட்ட பகுதியில் வாழும், எந்தப் பெருமைகளையும், வசதிகளையும் அனுபவிக்காத மக்களுக்கு வாழ்வும், அழிவும் ஒன்றுதான். அடிவயிறு எரியும் நிலையில் உணவற்ற இருளில் வாழும் அவர்களிடம் ஏக்கங்களின் வழி கொண்ட ஹுசுனுக்கு வேலை ஏதும் இல்லை. அரண்மனைகளிலோ, யாலிகளிலோ, நிலங்களிலோ எவ்வித ஒட்டுறவும் இல்லாத நிலையில், ஒருமுறைகூட அவற்றின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், அவை குறித்த பெருமை உணர்ச்சியோ, அவை அழியும் போது ஏற்பட வேண்டிய ஏக்கங்களுக்கோ எவ்வித வேலையும் இல்லை. - அது செட்டிநாடாக இருந்தாலும் சரி, இல்லை இஸ்தான்புல்லாக இருந்தாலும் சரி. 

இந்நிலையில் நம்முடைய வரலாற்று, கலாசார நினைவுச்சின்னங்கள் சிதைக்கப்படுவதற்கும், அவை குறித்து நாம் குற்ற உணர்ச்சி கொள்ளாமல் இருப்பதற்கும் பின்னால் இந்திய சனாதன அமைப்பின் தீண்டாமை இருக்கிறது. காலங்காலமாக கலையைக் கோயில்களுக்குள்ளும், அரண்மனைகளுக்குள்ளும் அடைத்துவிட்டு, அவற்றுக்குள் மக்களை அனுமதிக்காத வேலையை சனாதன சாதி அமைப்பு செய்தது. அவற்றுக்குள்  அனுமதிக்கப்படாத மக்களிடம் இருந்து கலையும், கலையிடம் இருந்து மக்களும் வெகுதூரம் விளக்கப்பட்டு, கலை குறித்த புரிதலை, அதனால் ஏற்படும் பெருமை உணர்ச்சியை ஒட்டுமொத்த மக்களும் முற்றிலுமாக இழந்துவிட்டனர்.  இந்நிலையில் ஆயிரம் ஆண்டு பழைமை கொண்ட ஓவியத்தில், சிற்பத்தில் தன் பெயரை ஆங்கிலத்தில் கிறுக்குவதைக் குற்றம் சொல்ல யாருக்கும் இங்கே தகுதி இல்லை. இன்றும் கூட, வேறெப்போதும் இல்லாத அளவில் மக்கள் கலைகள் புறந்தள்ளப்படுவதும், அவை வாழும் கிராம தெய்வவழிபாடுகள் அழிக்கப்பட்டு பெருந்தெய்வ வழிபாடுகள் முன்நிறுத்தப்படுவதும், மக்களுக்கும் கலைகளுக்கும் இடையே ஓர் பெரும் இடைவெளியை ஏற்படுத்திவருகிறது. தமிழில் வழிபாடு செய்ய மறுக்கப்படுவது, சிதம்பரம் கோயில் தனியாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பளிப்பது, பெரும்பான்மை மக்கள் கருவறைக்குள் அனுமதிக்கப்படாதது, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது, பறையடிப்பதை இசையே இல்லை என்பது, IIT-யில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தைத் தடை செய்வது என்று எல்லாமே இந்த அந்நியப்படுத்துதலின் வெவ்வேறு வடிவங்கள்தான். இந்தப் புரிதலுடன்தான் இந்தப் படைப்பை வாசிக்க வேண்டியதிருக்கிறது.

சென்னையை இப்படிப்பட்ட ஒரு அரசியல் பார்வையுடன் அணுகிய அபுனைவுகள்  இதுவரை வரவில்லை. ஏன் – தமிழ்நாட்டில் அரசியல் பார்வையில் நகரங்களை முன்வைத்து எந்த ஒரு புத்தகமும் எழுதப்பட்டதில்லை. ஏனென்றால், இங்கிருக்கும் எழுத்து எந்திரங்களுக்கு விருதுகளில் இருக்கும் கவனம் மக்கள் மேல் இருந்ததில்லை. அன்றைய அரண்மனைக் கோமாளிகளுக்கும் இவர்களுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. அன்றும் இன்றும் அரண்மனைகளையே அண்டிப்பிழைக்கும் இவர்கள் கலையை மக்களிடமிருந்து பிரித்து, சிலருக்கு மட்டுமே ஆனது என்று சொல்லி, புதைத்து மாலை போட்டு, அதன்மேல் ஆசிரமம் கட்டி, அதுதான் உன்னதம் என்றும் சொல்லி ஏமாற்றுபவர்கள். இன்றிருக்கும் சூழலில், 90-களுக்குப் பின்பான தாராளமயச்சிந்தனை ஒரு நகரத்தில் ஏற்படுத்தியுள்ள கலை, அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கறாராக முன்வைக்கும் புனைவற்ற படைப்பு ஒன்றிற்கான தேவை இருக்கிறது. அதை மக்களே மக்களுக்காகச் செய்வார்கள் என்று நம்பலாம் – ஏனென்றால் நம்மிடம் ஒரான்கள் யாரும் இல்லை.