Showing posts with label சூழலியல். Show all posts
Showing posts with label சூழலியல். Show all posts

Monday, October 1, 2012

ஊமைச்செந்நாயும் இன்னபிறவும்


இது எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, அவரின் ஊமைச்செந்நாய் குறித்து எழுதிய கடிதமும் அதன் பதிலும்.

அன்பின் ஜெயமோகன்,

நான் பா.சரவணன் - ஒரு மென்பொருள் பொறியாளன். கடந்த 4 வருடமாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன். தங்களின் அரசியல் என்றும் எனக்கு ஏற்பானது அல்ல என்றாலும், ஒரு உச்சகட்ட கலை வெளிப்பாடு கொண்ட உங்கள் புனைவுகள் மற்றும் அபுனைவுகளில் ஒரு வாசகனாய் மனஎழுச்சி கண்டிருக்கிறேன். அநேகமாக 2007 -இல் இருந்து தொடர்ந்து வாசிப்பதில், உங்கள் எழுத்துகள் வாசிப்புக்கு நேர்மையாய் இருந்துள்ளன(நேர்மறையாகவோ/ எதிர்மறையாகவோ). தங்களின் இயற்கை குறித்த பதிவுகள் எனக்குள் பல திறப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

உங்கள் ஊமைச்செந்நாய் கதையைப் படித்துவிட்டு "கொன்னுட்டான்யா இந்த ஆளு" னு ஒரு வாரம் வாசிப்பின் ருசி அறிந்த நண்பர்களிடம் பேசி இருக்கிறேன். அதற்கு முன்பே உங்கள் புனைவுகளில் பல உச்சங்களைக் கண்டிருந்தாலும், தூ எனத்துப்பும் ஊமைச்செந்நாயின் உணர்வின் ஆழத்தைக் காட்டும் அந்த வரிகள் உச்சங்களின் உச்சம் என்றே நினைக்கிறேன்.
கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள் (Stray Dogs) குழுவாய்ச் செயல்பட்டு வேட்டை ஆடுவதை நான் கண்டிருக்கிறேன். அவை எப்படி வேட்டை இயல்பை இழப்பதில்லையோ அதே போல் மனிதனிடம் இருந்து பெற்ற குணஇயல்புகளையும் முழுவதும் இழப்பதில்லை. மனிதர்களின் எச்சில் சோற்றை திண்ணும் 2 -ஆம் மூன்றாம் தலைமுறை - கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள் (Feral Dogs) உண்டு. ஆனால் என் உறவினர் வீட்டில் வளர்த்த நரி ஒன்று மனித எச்சில் பட்ட உணவை மிக நீண்ட நேரம் புறக்கணித்து விட்டு பின் வேறு வழி இல்லை எனும்போது மட்டுமே உண்பதைப் பார்த்திருக்கிறேன். அதே போல ஊமைச்செந்நாயும் இருவேறு குணங்களுடன் இருக்கிறான். ஒன்று தன் அடிமைப்பிறப்பு அது சார்ந்து பெற்ற குணம், கட்டற்ற ஆதிவாசிப் பின்னணியில் இருந்து பெற்ற மற்றொரு குணம். அவன் கதை முழுவதும் போராடுவதேன்னவோ தற்காலிகமாகப் பெற்ற அடிமை என்ற எண்ணத்தை எதிர்த்துதான். எப்பக்கமும் சேர வழியற்ற அவன் தனித்த ஒற்றைக் கோம்பனைப் போல அலைந்தவாறே இருக்கிறான்.

மிருகங்களில் மோசமான மிருகமான மனிதப்பிறப்பு அவனைப் புற உலகில் அலைக்கழிப்பதும், கவலைகளிலேயே பெரும் கவலையான தன் அடையாளம் குறித்த கவலை அவன் அகஉலகைச் சிதைப்பதும்தான் கதையை நகர்த்துகிறது. அதில் வரும் எந்த மிருகமும் முட்டாள் இல்லை என்ற வரியில் மனிதனைத் தவிர என்றொரு பதம் சொல்லப்படாமல் கடந்து செல்கிறது.

அதே போல் துரை இன்னொரு அடிமை மட்டுமே. அவனுக்குத் தன்னை அடையாள படுத்திக்கொள்ள முடிகிறது. தான் எங்கோ இருக்கும் ஒரு சமூகத்தின் அடிமை - ஒரு உயர்குடிப் பெண்ணும் தன்னை ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்னும் அளவுக்கு.

எந்த ஒரு வேட்டையின்  இறுதியிலும் சாவின் மூலம் மிருகம் மனிதனை வெல்கிறது. மிருகம் தன்னை வேட்டையாடும் யாரிடமும் இரக்கத்தை எதிர்பார்ப்பதில்லை. அது எதிர்பார்ப்பதெல்லாம் தான் தவிர்க்கவே முடியாத அல்லது தவிர்க்கவே விரும்பாத மரணத் தருணத்தைத்தான்.அந்த ஒரே மிருகம் முதலில் கொம்பனாகவும் பின் ஊமைச்செந்நாய்யாகவும், இன்னும் பல மிருகங்களாகவும் புனைவு முழுவதும் வாழ்கிறது.



செந்நாய் குறித்த குறிப்புகள் உங்கள் எழுத்தின் வெவ்வேறு இடங்களில் அதிகமும் தென்படுகின்றன. இல்லையா?  

இது தவிர உங்கள் எழுத்தில் எனக்குப் பிடித்த விஷயம் இயல்பாய் நிகழ்ந்த ஒரு நிகழ்வை புனைவுக்குள் இணைக்கும் உக்தி.
உதாரணமாக யானை டாக்டர் கதையில் வரும் செந்நாய் பற்றிய குறிப்பு. அதை முன்னரே உங்கள் அவலாஞ்சி, பங்கித்தபால் கட்டுரையில்கூட குறிப்பிட்டுள்ளீர்கள்.

"மலையைச்சுற்றிக்கொண்டு திரும்பி காருக்கு வந்து சேர்ந்தோம். திரும்பும் வழியில் வனக்காவலர் செந்நாய் ஒன்றைக் காட்டினார்.  அதன் காதுகள் நுட்பமாக எங்களை நோக்கி கூர்ந்திருந்தன. சிலைபோல பார்த்தபடி நின்றது. சற்று தள்ளி இன்னொரு செந்நாய். சற்று தள்ளி இன்னொன்று. ஆனால் அவை ஓடவில்லை. ஒருவகை வியூகம் அமைப்பதுபோல இடம் மாறி மாறி நின்றன. அப்போதுதான் படுத்திருந்த இன்னொரு செந்நயைக் கண்டோம். பெரியது. ஆனால் அதுஎ ழுந்து விலகியபோது கால் ஒடிந்திருப்பது தெரிந்தது"

ஒரு அனுபவம் புனைவில் எப்படி மற்றொரு அழியா வடிவத்தை அடைகிறதென்று மேல் குறிப்பிட்ட வரிகளையும், யானை டாக்டர் கதையில் வரும் செந்நாய் குறித்த வரிகளையும் சேர்த்து படித்த போது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தின் ஆற்றல் இந்தப் புனைவை ஒரு உண்மை எனும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது. உண்மையில் Dr.K போற்றப்பட வேண்டியவர்தான் என்றாலும், சொல்லப்பட்டது புனைவு என்பது வாசகனுக்கு தெரிய வேண்டும் இல்லையா? ஏனென்றால் அந்த புனைவைப் பற்றிய சில கடிதங்கள் Dr.Kயை மிஸ்டிக் மருத்துவர் எனும் அளவிற்கு எடுத்துச் சென்றுவிட்டன. ஆனால் அவர் அப்படித் தவறாக அறியப்படக்கூடாது என்றே நீங்கள் நினைப்பீர்கள் இல்லையா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்த மென்பொருள் தயாரிப்பு வாழ்வில் உள்ள புற & அக தேவைகள்/நெருக்கடிகளில் இருந்து என்னைப் பாதுகாப்பது இந்த வாசிப்பு மட்டுமே. தங்களுடனான ஒரு சந்திப்பில் சு.வேணுகோபாலைப் பற்றித் தெரிந்து கொண்டு படித்தேன். உண்மையில் விவசாயிகளைப் பற்றியும்/ இயற்கை பற்றியும் எழுதும் ஒரு இயல்பான எழுத்து. அதே போல் James Herriot-இன் புத்தகங்கள். சாலீம் அலியின் சில புத்தகங்களைப் படித்து இருக்கிறேன். இவற்றை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

மேலும் தங்களின் புத்தக அறிமுகங்களின் மூலம் பல நல்ல படைப்புகளை வாசித்து இருக்கிறேன். தமிழில் மா.கிருஷ்ணன்,தியடோர் பாஸ்கரன், முகமது அலி தவிர்த்து இயற்கை, சூழலியல், பிற உயிரினங்கள் குறித்து எழுதி இருக்கிறார்களா? எனக்கு இயற்கை, சூழலியல், பிற உயிரினங்கள் குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் சில புத்தகங்களை சொன்னால் பயனாய் இருக்கும். நன்றி.

என்றும் அன்புடன்,
பா.சரவணன் 


ஜெயமோகன் பதில்: http://www.jeyamohan.in/?p=22354

அன்புள்ள பா.சரவணன்,
என்றுமே என்னுடைய படைப்பூக்கத்துக்கான விதையை இயற்கையில் இருந்தே எடுத்திருக்கிறேன். என்னுடைய நோக்கில் மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதிதான். அந்த விரிந்த புலத்தில் நிறுத்தாமல் நான் மனிதனை அணுகுவதில்லை. ஊமைச்செந்நாயும் அப்படியே.
செந்நாய், காட்டுநாய்களை நான் எப்போதும் கவனித்து வருகிறேன். அவற்றின் சிந்தனையும் கற்பனையும் இன்றுவரை விலங்கியல் அனுமானித்திருப்பதை விட அதிகம் என்றும், நாளை இன்னும் அதிகமான கண்டுபிடிப்புகள் வெளிவரும் என்றும் நினைக்கிறேன். அவற்றை நான் எப்போதுமே எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ஊமைச்செந்நாய் எளிதில் அறியமுடியாத ஆழம் உடையவன். இந்த பிரம்மாண்டமான தேசத்தின் ஆன்மா அந்த யானை. அதற்கும் துரைக்கும் நடுவே இருக்கும் தொடர்பான ஊமைச்செந்நாயின் அகத்தை வரையறை செய்யாமலேயே கதையில் விட்டுவிட்டேன். ஏனென்றால் அதை என்னாலேயே முழுமையாக சொல்லிவிடமுடியாது.
புனைவு எப்போதுமே சாரமான உண்மையை முன்வைக்கக்கூடியது. அதற்காகப் புறவய உண்மையை அது வளைக்கிறது. அதற்கான உரிமை புனைவெழுத்தாளனுக்கு உண்டு. வாசகன் அதிலிருந்து பெற வேண்டியது அந்த சாராம்சமான உண்மையையே. புனைவின் தகவல்களை அல்ல. ஊமைச்செந்நாய் யானைடாக்டரை மிஸ்டிக் என்று காட்டவில்லை. உண்மையிலேயே டாக்டர் கெ பைரன் மீது பேரன்பு கொண்டவர். அந்த எல்லைக்குள்ளேயே அவர் காட்டப்படுகிறார்.
தமிழில் இயற்கை மற்றும் மிருகங்கள் பற்றி மிகமிகக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. நான் வாசித்தவரை பொருட்படுத்தக்கூடிய எழுத்து மா.கிருஷ்ணன், தியோடர் பாஸ்கரன் எழுதியவை. மா.கிருஷ்ணன்கூட பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதினார். பழங்குடிகளைப்பற்றி என்றால் ஃபிலோ இருதயநாத் எழுதிய பழைய கட்டுரைகள் சுவாரசியமானவை. தமிழில் இயற்கைபற்றிய எழுத்துக்கு வாசிப்புத்தளமே இல்லை
ஜெ

Monday, November 1, 2010

பயணம் ஒரு கலை.... ஏமாந்தால்? - பிலோ இருதயநாத்- புத்தக அறிமுகம்


பயணம் - இந்த ஒற்றை சொல்லில் இயங்குகிறது உலகம். ஆனால் கடைசியாகப் பயணம் சென்ற இடம் என்ன என்று நம்மைக் கேட்டால் சற்றே யோசிக்கத் தோன்றும். தினசரி வாழ்வில் சிதையும் ஆன்மாவைக் காப்பாற்ற எங்கேயாவது போகலாம் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். சிறுவயதில் பக்கத்துத் தெருவிற்குப்போவதே பயணம்தான். வயது ஏற ஏற உள் நோக்கிய பயணமும், வெளி உலகப்பயணமும் குறைந்து போகிறது. உலகில் பெரும் மாற்றங்கள் பயணத்தின்மூலமே சாத்தியமாகி உள்ளன. ஆப்ரிக்காவில் இருந்து மனிதன் பயணத்தின் மூலமே உலகெங்கும் பரவினான்.அதன் பின்தான் அவன் சந்தித்த சவால்களின்மூலம் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி சத்தியப்பட்டது. இன்று நாம் காலையிலிருந்து இரவுவரை ஒரே மாதிரியான வாழ்க்கை வாழப்பழகிவிட்டோம். நமது தினசரிப் பயணம் என்பது ஒரு கூண்டில் இருந்து இன்னொரு கூண்டிற்குமாறும் நாகரீக சர்க்கஸ் கூண்டு வாழ்வாகவே இருக்கிறது.வெளி உலகத்தேடலுடன் இருக்கும் குழந்தைகளை நான் பார்த்தே பலவருடம் இருக்கும். இதில் நகரம் கிராமம் என்ற பேதம் எல்லாம் இல்லை. முன்பெல்லாம் குழந்தைகள் வீடு வந்து சேர்வதில்லை என்ற கவலையுடனே பல பெற்றோர் இருப்பார்கள். ஆனால் இன்று உட்கார்ந்தஇடத்தில் டி.வி , கம்ப்யூட்டர் , அபாகஸ், ஓவியம் இவற்றை கற்றுக்கொள்கிறார்கள். இதில் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள் நிச்சயமாக மனித எந்திரங்கள்தான்.

பெற்றோர் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக் கொடுக்க நினைப்பதுதவறல்ல.ஆனால் இயற்கையை பற்றிய எந்த அறிவும் அற்ற இவர்கள் என்ன ஓவியம்
வரைந்து எதை அடையப்போகிறார்கள். அது போலவே மற்றவையும். பெரும்பாலான பெற்றோரின் சோம்பல்தான், அவர்களின் குழந்தைகளுக்கும் பழக்கமாகிறது. சனி, ஞாயிறு என்பது தின்றுவிட்டுத் தூங்கும் நாட்கள் என்பதாகவே நம் மனதில் பதிந்து போயிருப்பது சோகம்தான்.

சிறு வயதில் நான் படித்த "பயணம் ஒரு கலை.... ஏமாந்தால்?" புத்தகத்தை என்னால் மறக்கவே முடியாது. எப்போதும் வெளியே சுற்றுவதை வரவேற்கும் என் சித்தப்பாவிற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் ஒரு நாளில் நூறு கிலோமீட்டர்வரை சைக்கிளில் பயணம் செய்யக்கூடியவர் (
பல முறை அவர் மதுரைக்கு சைக்கிளில் பொய் வருவதை பார்த்திருக்கிறேன்). நானும் அவருமாக எங்கள் ஊரின் அருகே உள்ள பல கிராமங்களுக்கு சென்று வருவோம். வெளிஉலகம் என்ற ஒன்றை அறிமுகம் செய்ததில் அவர் பங்கு மிகமுக்கியமானது. அதே போல பிலோ இருதயநாத். என் சித்தப்பாவை மற்றொரு பிலோ என்று சொல்லலாம்.

பிலோ இருதயநாத், ஒரு பயணி என்பதாக எடுத்துக் கொண்டால் நாம் அவரைசரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு தனி நபர் காடுமேடெல்லாம் அலைந்து இந்தியாவின் பல பகுதிகளையும் பார்த்திருக்கிறார். அவர் பெரும்பாலும் பார்த்தது காடுவாழ் மக்களை - இப்போதும் நாம் காட்டுமிராண்டி என்று அழைக்கும் மக்களை. அந்த மக்களை சக மனிதனாக 50 வருடங்களுக்கு முன் நினைப்பதே பெரிய ஆச்சர்யம். இந்நிலையில்அவர்களுடன் போய் தங்கி, உண்டு உறங்கி, குறிப்புகள் எடுத்து அவர்களின் வாழ்வை இன்றும் நமக்குச் சொல்லும் புத்தகங்களை எழுதிய தனி நபர் இயக்கம் என்று பிலோவை சொல்லலாம்.

பல வருடங்களுக்கு முன் படித்த, பயணம் செய்த என் நினைவுகளை மீண்டும் புத்துயிர் ஊட்ட பிலோவின் புத்தகங்களை தேடினேன். என் நண்பர்
களிடமும் , பல புத்தகக் கடைகளிலும் விசாரித்து, கடைசியாக அவர் புத்தகங்கள் வானதி பதிப்பகத்தில் கிடைப்பது தெரிந்தது. வானதி பதிப்பகம் போய் பிலோவின் எல்லாப்புத்தகங்களும் வேண்டும் என்றவுடன், அவர்கள் நான்குதான் இருப்பதாகவும், இரண்டு புத்தகங்கள் இல்லை என்றும் சொன்னார்கள். நான்கையும் வங்கி உடனேபடிக்க ஆரம்பித்தேன். புத்தகங்கள் பதிப்பிக்கப் பட்ட வருடம் 1989 . நான்குபுத்தகங்களின் மொத்த விலை 53 ரூபாய்.

புத்தகம் பயணம் செய்வது எப்படி என்பதில் ஆரம்பித்து சவால்கள், சிரமங்கள், உயிராபத்துகள், விலங்குகள், காடர்கள், திருடர்கள் என்று எல்லா பகுதிகளையும்விவரிக்கிறது. பிலோ வெறும் மனிதர்கள் நம்பி மட்டுமே பயணிக்கிறார். பயணத்தில் அவர் சந்திக்கும் நாட்டு மனிதர்களில் சிலராவது திருடர்களாய் இருக்கிறார்கள். ஆனால் காட்டில் அவரிடம் பரிவுடன் பழகும் மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர் எச்சரிக்கை செய்வது எல்லாமே நாட்டில் வாழும் மனிதர்களைப் பற்றியும், காட்டில் வாழும் விலங்குகளைப் பற்றியுமே. ஒரு இடத்தில், போட்டோ எடுக்கக் கூட அனுமதி கேட்கிறார், ஏனென்றால் நான் என் அதிகாரத்தை அப்பாவிகளிடம் காட்ட விரும்பவில்லை என்று கூறுகிறார். இந்நிலையில் தண்டகாருண்யாவில் நமது அரசும், முதலாளிகளும் செய்யும் அத்துமீறல்கள் உங்கள் ஞாபகத்தில் வந்தால் நீங்கள் இன்னொரு பிலோ என்றுசொல்லாம். குழந்தைகள் இதைப் படித்தால் அவர்கள் வாழ்வின் எக்காலத்திலும் பிறர் மேல் அதிகாரம் செலுத்த நினைக்கமாட்டார்கள்.

இந்தப் புத்தகத்தில் வரும் குறிப்பை கொண்டு பார்த்தால்... 2012 பிலோவின்நூற்றாண்டாக இருக்கும், பிலோவின் புத்தகங்களை நாட்டுடமை ஆக்கி, அவர்பயணம் மேற்கொண்ட இடங்களுக்கு அந்த அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்லலாம். இதன் மூலம் குழந்தைகளுக்குப் பயணம் பற்றியும், காட்டுயிர்கள், காடர்கள், மனித உரிமை பற்றியும் ஒருவிழிப்புணர்ச்சி ஏற்படும். ஐரோப்பாவில் இதைப் போல வர விடுமுறைகளில் மாணவர்கள் பெருமளவில் பயணம் செய்வதைக் காணலாம். அதற்கு அரசு கட்டண விலக்குகளையும் அளிக்கிறது.
இன்றைய சூழலில், இப்படிப் பட்ட புத்தகங்கள் தமிழில் வருவதில்லை. வருவதெல்லாம் 5 வயது குழந்தைக்கு C ++, 10 வயதுக் குழந்தை பணம் சம்பாதிப்பது எப்படி போன்ற புத்தகங்கள்தான். வாழ்க்கை என்பது பணம், வீடு, அதிகாரம் இவற்றை எல்லாம் தாண்டிய ஒன்று என்பதை உணர இந்த புத்தகம் உதவக்கூடும். உங்கள் குழந்தைக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள்.... பயணம் செய்ய ஊக்குவியுங்கள்... அவர்கள் ஒரு முழு மனிதனாய் வளர உதவுங்கள்.... பெற்றோராய் அல்ல..... ஒரு சக மனிதனாய்..... அதுவே பிலோவைப்போன்ற மனிதர்களுக்கு... அவர்களின் உழைப்பிற்குச் செய்யும் மரியாதை.

புத்தகத்தின் பெயர் : பயணம் ஒரு கலை.... ஏமாந்தால்?
எழுதியவர் : பிலோ இருதயநாத்
பதிப்பகம் : வானதி பதிப்பகம்,
13, தீனதயாளு தெரு,
தி.நகர்.
சென்னை - 17.
விலை : 18 ரூபாய்




Tuesday, October 26, 2010

பாலையில் அலையும் மான்கள்



"பழைய ராமநாதபுரம் மாவட்டம்" என்றாலே இதை படிக்கும் யாருக்கும் ஒருவறண்ட பாலை நிலம் மனதில் தோன்றும். தண்ணி இல்லாத காடு என்ற சொற்பிரயோகத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தந்த மண். ஆனால் எத்தனை பேருக்கு சிவகங்கை மாவட்டத்தைத் தெரியும் என்றுதெரியவில்லை. பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப் பட்ட இந்த மாவட்டம் அசல் தண்ணி இல்லாத அரைப்பாலைநிலம். கடந்த கால அரசுகளின் அளப்பரிய சாதனையான வேலிக்காத்தான் மரங்களும் இயல்பான வெக்கையும் நிரம்பிய இந்த மாவட்ட மக்களில் குறிப்பிடத்தகுந்த அளவு ஆண்கள் அரபு நாடுகளில் வேலை செய்கிறார்கள். விவசாயம் மற்றொரு தொழில். ஆனால் அது வெறும் பேசு பொருள்மட்டுமே. வருடத்தில் 5 -6 நாட்கள் மட்டுமே புரண்டோடும் மழை பெய்யும். அதை நம்பி விவசாயம் செய்ய சிலருக்கு மட்டுமே மனதைரியம் உள்ளதால், விவசாயம்
வழக்கொழிந்து வருகிறது.. பலநூறு ஆண்டுகளாக மக்கள் வெளிநாடுகளில் (முன்பு இந்தோனேசியா, பர்மா, மலேயா, இப்போது அரபு நாடுகள், சிங்கபூர்) வேலை செய்வதையே வருமானத்திற்கான முக்கிய வழியாக கொண்டுள்ளனர். எந்த இயற்கை வளமும் அற்ற அந்தப் பகுதியில்தான் உலகப்புகழ் பெற்ற செட்டிநாட்டு அரண்மனைகள் உள்ளன. இவை அனைத்துமே நான்கு மாதத்திற்கு முன்பான புரிதல்கள். ஆனால் ஒரு உயிரின் இருப்பு இவை அனைத்தையும் தாண்டிய சந்தோசத்தையும் பெருமையையும் அந்தப் பாலைக்கு ஏற்படுத்தி உள்ளது.

நான்கு மாதத்திற்கு முன் ஒரு சனிக்கிழமை நானும் என் சகோதரரும் மதுரை சென்றோம்.ஆயிரம் ஆண்டு பழமையான மதுரையின் நெடும்வீதிகளின் வழியே அலைந்து எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிக்கொண்டு இரவு 9 மணி அளவில் மாட்டுத்தாவணி வந்து சேர்ந்தோம். மேலூர் வழியாக மதகுபட்டி சென்று அங்கிருந்து எங்கள் ஊரான ஒக்கூருக்குச் செல்வதெனமுடிவு செய்து பேருந்தில் ஏறினோம். மாட்டுத்தாவணியில் இருந்துகிளம்பியதில் இருந்தே இம்சை ஆரம்பித்தது. பழைய அதிலும் மொக்கையான பாடல்களை நாராசமாய் ஒளிபரப்ப ஆரம்பித்தனர்.
ஓட்டுனர் இருக்கையின் பின்புறம் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். எனவே அந்தப் பாடல்கள் மற்றும் நடிகர்களின் உடல்மொழி பற்றிப் பகடி செய்தபடியே வந்தோம். மதகுபட்டியை நெருங்கும் பொது திடீரென்று 'டம்' என்ற சத்தம் கேட்டது...... எங்களையும் டிரைவரையும் தவிர்த்து மக்கள் அனைவருமே தூக்கத்தில்இருந்தனர். டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்க, நாங்களும்இறங்கினோம்.

இறங்கிப் பார்த்தால், நன்கு வளர்ந்த புள்ளிமான் ஒன்று துடித்தபடி இருந்தது. நிச்சயமாக டிரைவர் மேல் எந்த தவறும் இல்லை. மிக மெதுவாகவே வண்டியை ஓட்டி வந்தார். இருந்தாலும் சட்டப்படி செயல்பட்ட அவர், அருகில் உள்ள மதகுபட்டி காவல் நிலையத்திற்கு தெரிவித்தார். உடனே பின்னால் வந்த சுமோ வெளிச்சத்தில் என் சகோதரர் மானை ஆராயத்தொடங்கினார். அது 3 அடி உயரமும், 30 கிலோ எடையும் இருக்கும். உடல்முழுக்க புள்ளிகளும் அடிவயிறு சற்றே வெள்ளை நிறமாகவும் இருந்தது. அது தண்ணீர் குடிக்க வந்திருக்கலாம். என் அண்ணன் மானின் வயிற்றைத் தடவிப் பார்த்துவிட்டு அது சினையாக இருப்பதாகவும், விரைந்து செயல்பட்டால் வயிற்றில் இருக்கும் குட்டிகளையாவது காப்பாற்றலாம் என்றுஅங்கு வந்த காவல் அதிகாரியிடம் சொல்ல, அவர் மிக அலட்சியமாகஅதெல்லாம் செத்துரும் தம்பி என்றார். அது சரி, மனிதன் உயிருக்குப்போராடினாலே காப்பாற்ற மாட்டார்கள் இதில் மானையா காப்பாற்றப்போகிறார்கள் என்றார் ஒரு பெரியவர். இரவு 12.30 வரை அங்கேயேநின்றுவிட்டு இறுதியாக மானை நாங்கள் இருந்த பஸ்சிலேயே ஏற்றினோம். மூன்று பேர் சேர்த்துதான் தூக்கவே முடிந்தது. இரவு மதகுபட்டி காவல்நிலையத்தில் இறந்து போன மானை இறக்கி வைத்துவிட்டுக் கிளம்பினோம். மறுநாள் ஒக்கூர் மாட்டாஸ்பத்திரியில் பிரேத
ப்பரிசோதனை முடிந்து மான் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காட்டுயிர் பற்றிய ஆழ்ந்த கேள்விகளை இந்த மானின் இறப்பு எழுப்பி உள்ளது. ஏனெனில் என் அம்மா சிறு வயதில் பலமுறை மான்கறி சாப்பிட்டது பற்றி சொன்னதும்,
என் வீட்டின் அருகில் ஒரு மான் வேலியில் மாட்டி இறந்து போனதையும் தவிர எங்கள் ஊரில் மானின் இருப்பு பற்றிய கதைகள் குறைவு. அந்த மான் இறந்த போது, சிவகங்கையில் இருந்து வனஅலுவலர் மற்றும் விலங்கியல் மருத்துவர் வந்து பிரேத பரிசோதனைசெய்துவிட்டு மானைப் புதைத்தார்களாம். பின் மக்களிடம் யாரும் புதைத்தமானைத் தோண்டி எடுத்துத் திண்ணக்கூடாது ஏனெனில் விசஊசி போடப்பட்டுள்ளது என்று எச்சரித்துவிட்டுச் சென்றனராம். இந்த மான்களின் இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதை எங்கள் நில மற்றும் உயிரின அடிப்படையில் புரிந்து கொள்வது இன்றியமையாதது. எங்கள் மாவட்டத்தில் குழிமுயல், நரி, கீரி போன்ற சிற்றுயிர்கள் மட்டுமே வாழமுடியும். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் பெருமழையில் கண்மாய் நிரம்பினால் எண்ணற்ற வக்கா பறவைகளும், நீர்க்காக்கைகளும் வரும். பறவைக்கழிவுகள் நிலங்களை உரப்படுத்தி அவ்வருடம் விவசாயம் செழிக்கும் என்பதால் அவருடம் மக்களின் சந்தோசம் வருடம் முழுவதும் இருக்கும். அப்போதெல்லாம் சில வீடுகளில், கரும்பு வயல்களில் இருந்த நரிக்குட்டிகளை எடுத்து வந்து நாயைப் போல வளர்ப்பார்கள். அவை இரவு முழுவதும் ஊளை இட்டபடி இருக்கும்.10 வருடம் முன்பு வரை எளிதாகக் காணமுடிந்த நரிகளை இப்போது பார்க்கவே முடியவில்லை. இந்நிலையில் வருடம் முழுவதும் பாலையின் வெக்கையும், இலையற்ற வேம்பும் நிறைந்த எங்கள் மாவட்டமான சிவகங்கையில் மான்களுக்கான வனச்சூழல் நிலவுவது மகிழ்ச்சியையும் பெரும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது. இதுமாதிரியான பாலையில் வாழப்பழகி உள்ள அவற்றைக் காப்பது மக்களின் - அரசின் கடமை ஆகிறது. இப்பகுதியில் மான்களால் விவசாயத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகக்குறைவாகவே இருக்கும் என்பதால் மேலும் சில மானினங்களைஅறிமுகப்படுத்தி, ஒரு ஒருங்கிணைக்கப் பட்ட மற்றும் பாதுகாக்கப் பட்டமான்சரணாலயம் அமைக்கப்பட்டால் அது மக்களிடையே காட்டுயிர்கள் பற்றிய புரிதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும் நிகழ்சிகள் மூலம் மக்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகளுக்கு புரிதலை ஏற்படுத்தினால் வேறெங்கும் இல்லாத அளவிற்கு இங்கே மான் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தை ஏற்படுத்தலாம்.அவ்வழியே வன உயிர்ப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

எல்லாவற்றிலும்
மேலாக செட்டிநாட்டு அரண்மனைகளைப் போலவே மான்களுக்கான பகுதியாகவும் இந்த பாலை நிலம் அறியப்படும்.

குறிப்புகள் :-

மாட்டாஸ்பத்திரி - veterinary hospital

ஒக்கூர் - சிவகங்கை அருகே உள்ள ஒரு சிற்றூர். புறநானூற்றுப் புலவரான மாசாத்தியாரின் ஊர்.

வேலிக்காத்தான் -
காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முள்மரம். இன்றும் பல குடும்பங்களை வாழவைக்கும் தேவதாரு. ஆடுகளும், மாடுகளும் விரும்பி உண்ணும் இதன் காய்கள் மிகுந்த புரதம் நிரம்பியவை. ஆனால் சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதிக்கும் மரம்.

மலேயா
- மலேஷியா