Tuesday, October 26, 2010

பாலையில் அலையும் மான்கள்



"பழைய ராமநாதபுரம் மாவட்டம்" என்றாலே இதை படிக்கும் யாருக்கும் ஒருவறண்ட பாலை நிலம் மனதில் தோன்றும். தண்ணி இல்லாத காடு என்ற சொற்பிரயோகத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தந்த மண். ஆனால் எத்தனை பேருக்கு சிவகங்கை மாவட்டத்தைத் தெரியும் என்றுதெரியவில்லை. பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப் பட்ட இந்த மாவட்டம் அசல் தண்ணி இல்லாத அரைப்பாலைநிலம். கடந்த கால அரசுகளின் அளப்பரிய சாதனையான வேலிக்காத்தான் மரங்களும் இயல்பான வெக்கையும் நிரம்பிய இந்த மாவட்ட மக்களில் குறிப்பிடத்தகுந்த அளவு ஆண்கள் அரபு நாடுகளில் வேலை செய்கிறார்கள். விவசாயம் மற்றொரு தொழில். ஆனால் அது வெறும் பேசு பொருள்மட்டுமே. வருடத்தில் 5 -6 நாட்கள் மட்டுமே புரண்டோடும் மழை பெய்யும். அதை நம்பி விவசாயம் செய்ய சிலருக்கு மட்டுமே மனதைரியம் உள்ளதால், விவசாயம்
வழக்கொழிந்து வருகிறது.. பலநூறு ஆண்டுகளாக மக்கள் வெளிநாடுகளில் (முன்பு இந்தோனேசியா, பர்மா, மலேயா, இப்போது அரபு நாடுகள், சிங்கபூர்) வேலை செய்வதையே வருமானத்திற்கான முக்கிய வழியாக கொண்டுள்ளனர். எந்த இயற்கை வளமும் அற்ற அந்தப் பகுதியில்தான் உலகப்புகழ் பெற்ற செட்டிநாட்டு அரண்மனைகள் உள்ளன. இவை அனைத்துமே நான்கு மாதத்திற்கு முன்பான புரிதல்கள். ஆனால் ஒரு உயிரின் இருப்பு இவை அனைத்தையும் தாண்டிய சந்தோசத்தையும் பெருமையையும் அந்தப் பாலைக்கு ஏற்படுத்தி உள்ளது.

நான்கு மாதத்திற்கு முன் ஒரு சனிக்கிழமை நானும் என் சகோதரரும் மதுரை சென்றோம்.ஆயிரம் ஆண்டு பழமையான மதுரையின் நெடும்வீதிகளின் வழியே அலைந்து எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிக்கொண்டு இரவு 9 மணி அளவில் மாட்டுத்தாவணி வந்து சேர்ந்தோம். மேலூர் வழியாக மதகுபட்டி சென்று அங்கிருந்து எங்கள் ஊரான ஒக்கூருக்குச் செல்வதெனமுடிவு செய்து பேருந்தில் ஏறினோம். மாட்டுத்தாவணியில் இருந்துகிளம்பியதில் இருந்தே இம்சை ஆரம்பித்தது. பழைய அதிலும் மொக்கையான பாடல்களை நாராசமாய் ஒளிபரப்ப ஆரம்பித்தனர்.
ஓட்டுனர் இருக்கையின் பின்புறம் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். எனவே அந்தப் பாடல்கள் மற்றும் நடிகர்களின் உடல்மொழி பற்றிப் பகடி செய்தபடியே வந்தோம். மதகுபட்டியை நெருங்கும் பொது திடீரென்று 'டம்' என்ற சத்தம் கேட்டது...... எங்களையும் டிரைவரையும் தவிர்த்து மக்கள் அனைவருமே தூக்கத்தில்இருந்தனர். டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்க, நாங்களும்இறங்கினோம்.

இறங்கிப் பார்த்தால், நன்கு வளர்ந்த புள்ளிமான் ஒன்று துடித்தபடி இருந்தது. நிச்சயமாக டிரைவர் மேல் எந்த தவறும் இல்லை. மிக மெதுவாகவே வண்டியை ஓட்டி வந்தார். இருந்தாலும் சட்டப்படி செயல்பட்ட அவர், அருகில் உள்ள மதகுபட்டி காவல் நிலையத்திற்கு தெரிவித்தார். உடனே பின்னால் வந்த சுமோ வெளிச்சத்தில் என் சகோதரர் மானை ஆராயத்தொடங்கினார். அது 3 அடி உயரமும், 30 கிலோ எடையும் இருக்கும். உடல்முழுக்க புள்ளிகளும் அடிவயிறு சற்றே வெள்ளை நிறமாகவும் இருந்தது. அது தண்ணீர் குடிக்க வந்திருக்கலாம். என் அண்ணன் மானின் வயிற்றைத் தடவிப் பார்த்துவிட்டு அது சினையாக இருப்பதாகவும், விரைந்து செயல்பட்டால் வயிற்றில் இருக்கும் குட்டிகளையாவது காப்பாற்றலாம் என்றுஅங்கு வந்த காவல் அதிகாரியிடம் சொல்ல, அவர் மிக அலட்சியமாகஅதெல்லாம் செத்துரும் தம்பி என்றார். அது சரி, மனிதன் உயிருக்குப்போராடினாலே காப்பாற்ற மாட்டார்கள் இதில் மானையா காப்பாற்றப்போகிறார்கள் என்றார் ஒரு பெரியவர். இரவு 12.30 வரை அங்கேயேநின்றுவிட்டு இறுதியாக மானை நாங்கள் இருந்த பஸ்சிலேயே ஏற்றினோம். மூன்று பேர் சேர்த்துதான் தூக்கவே முடிந்தது. இரவு மதகுபட்டி காவல்நிலையத்தில் இறந்து போன மானை இறக்கி வைத்துவிட்டுக் கிளம்பினோம். மறுநாள் ஒக்கூர் மாட்டாஸ்பத்திரியில் பிரேத
ப்பரிசோதனை முடிந்து மான் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காட்டுயிர் பற்றிய ஆழ்ந்த கேள்விகளை இந்த மானின் இறப்பு எழுப்பி உள்ளது. ஏனெனில் என் அம்மா சிறு வயதில் பலமுறை மான்கறி சாப்பிட்டது பற்றி சொன்னதும்,
என் வீட்டின் அருகில் ஒரு மான் வேலியில் மாட்டி இறந்து போனதையும் தவிர எங்கள் ஊரில் மானின் இருப்பு பற்றிய கதைகள் குறைவு. அந்த மான் இறந்த போது, சிவகங்கையில் இருந்து வனஅலுவலர் மற்றும் விலங்கியல் மருத்துவர் வந்து பிரேத பரிசோதனைசெய்துவிட்டு மானைப் புதைத்தார்களாம். பின் மக்களிடம் யாரும் புதைத்தமானைத் தோண்டி எடுத்துத் திண்ணக்கூடாது ஏனெனில் விசஊசி போடப்பட்டுள்ளது என்று எச்சரித்துவிட்டுச் சென்றனராம். இந்த மான்களின் இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதை எங்கள் நில மற்றும் உயிரின அடிப்படையில் புரிந்து கொள்வது இன்றியமையாதது. எங்கள் மாவட்டத்தில் குழிமுயல், நரி, கீரி போன்ற சிற்றுயிர்கள் மட்டுமே வாழமுடியும். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் பெருமழையில் கண்மாய் நிரம்பினால் எண்ணற்ற வக்கா பறவைகளும், நீர்க்காக்கைகளும் வரும். பறவைக்கழிவுகள் நிலங்களை உரப்படுத்தி அவ்வருடம் விவசாயம் செழிக்கும் என்பதால் அவருடம் மக்களின் சந்தோசம் வருடம் முழுவதும் இருக்கும். அப்போதெல்லாம் சில வீடுகளில், கரும்பு வயல்களில் இருந்த நரிக்குட்டிகளை எடுத்து வந்து நாயைப் போல வளர்ப்பார்கள். அவை இரவு முழுவதும் ஊளை இட்டபடி இருக்கும்.10 வருடம் முன்பு வரை எளிதாகக் காணமுடிந்த நரிகளை இப்போது பார்க்கவே முடியவில்லை. இந்நிலையில் வருடம் முழுவதும் பாலையின் வெக்கையும், இலையற்ற வேம்பும் நிறைந்த எங்கள் மாவட்டமான சிவகங்கையில் மான்களுக்கான வனச்சூழல் நிலவுவது மகிழ்ச்சியையும் பெரும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது. இதுமாதிரியான பாலையில் வாழப்பழகி உள்ள அவற்றைக் காப்பது மக்களின் - அரசின் கடமை ஆகிறது. இப்பகுதியில் மான்களால் விவசாயத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகக்குறைவாகவே இருக்கும் என்பதால் மேலும் சில மானினங்களைஅறிமுகப்படுத்தி, ஒரு ஒருங்கிணைக்கப் பட்ட மற்றும் பாதுகாக்கப் பட்டமான்சரணாலயம் அமைக்கப்பட்டால் அது மக்களிடையே காட்டுயிர்கள் பற்றிய புரிதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும் நிகழ்சிகள் மூலம் மக்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகளுக்கு புரிதலை ஏற்படுத்தினால் வேறெங்கும் இல்லாத அளவிற்கு இங்கே மான் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தை ஏற்படுத்தலாம்.அவ்வழியே வன உயிர்ப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

எல்லாவற்றிலும்
மேலாக செட்டிநாட்டு அரண்மனைகளைப் போலவே மான்களுக்கான பகுதியாகவும் இந்த பாலை நிலம் அறியப்படும்.

குறிப்புகள் :-

மாட்டாஸ்பத்திரி - veterinary hospital

ஒக்கூர் - சிவகங்கை அருகே உள்ள ஒரு சிற்றூர். புறநானூற்றுப் புலவரான மாசாத்தியாரின் ஊர்.

வேலிக்காத்தான் -
காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முள்மரம். இன்றும் பல குடும்பங்களை வாழவைக்கும் தேவதாரு. ஆடுகளும், மாடுகளும் விரும்பி உண்ணும் இதன் காய்கள் மிகுந்த புரதம் நிரம்பியவை. ஆனால் சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதிக்கும் மரம்.

மலேயா
- மலேஷியா

No comments:

Post a Comment