Tuesday, September 21, 2010

களவு போகும் புரவிகள் - சு. வேணுகோபால் - புத்தகஅறிமுகம்

தமிழ் இலக்கியம் இயற்கை பற்றி நிறைய தகவல்களைக் கொண்டது. ஆனால், தற்போதைய இலக்கியம் நகரம் சார்ந்தும், அது தொடர்பான மக்கள் சார்ந்தும் இயங்கி வருகிறது. கிராமம் சார்ந்து எழுதுபவர்கள் கூட விவசாயமே இல்லாத கிராமத்தையே எழுதுகிறார்கள். கடந்த 50 வருட இலக்கியத்தில் விவசாயத்தை, விவசாயியைத் தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கிராமத்தை அழகியல் சார்ந்து கிட்டத்தட்ட ஒரு பாரதிராஜா படம் போல எழுதுபவர்கள்தான் இன்று இருக்கிறார்கள் அல்லது கிராமம் என்ற போர்வையில் நகர வாழ்வைச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் ஜெயமொஹனுடனான உரையாடலின் போது, இன்றைய தமிழ் இலக்கிய உலகில் விவசாயம் சார்ந்து எழுதுபவர்களில் சு. வேணுகோபால் மிக மிக கவனம் பெரும் படைப்பாளி என்று சொன்னார். சமீபத்தில் தமிழினி பதிப்பகம் போயிருந்த போது அவரின் களவு போகும் புரவிகள் புத்தகத்தை வாங்கினேன்.


மொத்தம் 17 சிறுகதைகள் உள்ள தொகுப்பு. ஒரே மூச்சில் 2 மணிநேரத்தில் படித்து முடித்தேன். சிறுகதைகள் பற்றி பார்ப்பதற்கு முன் சு.வேணுகோபாலின் எழுத்தைப் பற்றி சொல்ல வேண்டியுள்ளது. இன்றைய எழுத்தாளர்களில் பலர் பின் நவீனத்துவம், விளிம்புநிலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அந்த எழுத்துகள் பெரும்பாலும் அதிர்ச்சி மதிப்பீடுகள் சார்ந்தவை. வாசகனை ஒரு அறியா உலகில் நுழைத்து, கேள்விப் படாத சம்பவங்களை (அ) நடக்க சாத்தியமற்ற சம்பவங்களை விளக்கி எழுதப்படும் படைப்புகள்தான் அதிகம். அந்த சம்பவங்கள் படைப்பைவிட்டு வெளியே துருத்தியபடி இருப்பதை உணரலாம். ஆனால் சு.வேணுகோபாலின் இந்த சிறுகதைத் தொகுப்பு விளிம்பு மனிதர்களை/ வாழ்வை அவர்களின் தளத்தில் இருந்தே விளக்குகிறது. பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண், விவசாயத்தில் தோல்வி கண்டு வேறு வேலை தேடும் ஒரு தாழ்த்தப் பட்ட மனிதன், பாலுறவில் ஊக்கம் குறைந்த ஒருவன், பெண்ணியம் பேசும் பெண்கள், உண்மையான (?????) தியாகி, பன்றி மேய்க்கும் பெண், விவசாயிகள், உடல் பலமற்ற வயதானவர்கள், மன நிலை பிறழ்ந்த ஒரு மேதாவிப்பெண், கணவனுக்காக கருவைக் கலைக்கும் பெண் என்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பற்றியே பேசுகின்றன சு. வேணுகோபாலின் கதைகள். மற்றொன்று விவசாயம் பற்றி, வளர்ப்பு பிராணிகள் பற்றி வேணுகோபாலின் அவதானிப்பும்,வர்ணனைகளும் (details) வியப்பில் ஆழ்த்துகின்றன.


இனி அந்தத்தொகுப்பில் உள்ள கதைகளைப் பற்றிய சிறு அறிமுகம்:

1 . அம்மாவின் விருப்பங்கள்:

ஒரு சிறுவனின் பார்வையில் அவன் அம்மா எப்படி நடந்து கொள்கிறாள். அம்மா ஏன் பிற பிள்ளைகளிடம் பாசம் காட்டாமல், நடிக்கிறாள் என்பது போன்ற கேள்விகளுடன் நகர்கிறது கதை. சிறுவர்களின் மன உலகை மிக நெருக்கத்தில் சென்று பார்க்கும் உணர்வைத் தரும் கதை.

2 . மண்ணைத் தின்றவன் :
நாம் உண்ணும் சோறு யாரோ ஒரு விவசாயியின் ரத்தம் என்பதை உணர்ந்திருப்போமா? விவசாயம் என்பது ஒரு சபிக்கப்பட்ட தொழில். அதில் வருமானம் பெறுவது என்பது தார்ப்பாலைவனத்தில் நீர் அருந்துவதைப் போன்றது. எவளவு தண்ணீர் அருந்தினாலும் பாலைவனத்தை ஒருபோதும் கடக்க முடியாது. விவசாயத்தில் வரும் வருமானம் விவசாயியின்/; அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த உழைப்பிற்கு ஈடாகாது. இருந்தும் ஏன் விவசாயம் நடைபெறுகிறது? அது ஆச்சர்யம்தான். சாதிய நிலைப்பாடுகளும், சமூக அங்கீகாரமும், விவசாயமும் எப்படி ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்துள்ளன என்பதை இந்தக் கதை நெற்றியில் அடித்தது போலச் சொல்கிறது.

3 . மீதமிருக்கும் கோதும் காற்று:
ஒரு பாலியல் தொழிலாளியின் அனுபவங்களை விளக்கி பல கதைகளை படித்திருப்போம்.ஆனால் இது உண்மையிலேயே அவளின் குரலில் சொல்லப்படுகிறது. வாசகனுக்கு அதிர்ச்சியைத் தந்து, எழுத்தாளன் கவனம் பெற முயலாமல் இயல்பாய் ஒரு சம்பவ நிகழ்வை விளக்கியிருப்பது மிகச்சிறப்பு.

வாய் நாற்றமெடுக்கும் ஒருவன் முத்தமிடும்போது அவள் நினைப்பது :

"மலத்தில் விழுந்த ஈயாகயோனியில் புரண்டார்கள். நிமிர்ந்தபோது அடிவயிற்று வலி.பிராந்தியை நீட்டினார்கள்.பிராந்தி அடித்தால் நாற்றம் தெரிவதில்லை."

"ஒவ்வொருவனும் மேலே படுக்கும்போது யோனி உடலின் வெவேறு இடங்களில் இருக்கக்கூடாதா என்றிருந்தது"


இங்கே காமம் செத்து ஒருத்தியின் சுயம் மட்டுமே எஞ்சுகிறது.


4 . சப்பைக்கட்டு:
புற உலகில் பெண்ணியம் பேசும் ஒருவன் தனக்கான உலகில் மனைவியை, சக தோழியை எவ்வாறு கேவலமாக அணுகுகிறான் என்பதும், அந்த முரணியக்கம் எப்படி நிகழ்கிறது என்பதும் தான் கதை. இந்த ஒருவன் நாமாகவும் இருக்கலாம்.

5 . உருமாற்றம்:

மாறிவரும் உலகில் ஒரு உண்மையான தியாகியின் இருப்பு என்ன? அந்த இருப்பின் தேவையோ/ அவசியமோ இல்லாத நிலையில் அந்த தியாகி எடுக்கும் முடிவும் விளைவையும் இயல்பாக விளக்கும் கதை. இந்தக் கதையில் வரும் தியாகி உங்கள் தாத்தாவாகவோ அப்பாவாகவோ இருக்கலாம்.

6 . சங்கிலி:

பாலுறவில் வெற்றி தோல்வி என்று ஏதுமில்லை. இருந்தும் முதலிரவில் தன் மனைவியிடம் நிருபிக்க முயலும் முதிர்கண்ணன் ஒருவன் தோற்றுவிட்டால் என்ன நடக்கும்? அவன் மனநிலை என்ன?

7 . உடம்பு:

ஈன முடியாமல் தவிக்கும் கிடேரியைப் பார்த்திருக்கிறீர்களா? அந்நிலையில் இருக்கும் பெண்ணை அவளின் கணவனின் மனநிலையில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? விலங்குகளிலும் சரி, மனிதனிலும் சரி விந்தைத் தருவதோடு முடிந்துவிடுகிறது ஆணின் கடமை. பின் மனிதனுக்கும் விலங்கிற்கும் என்னதான் வித்தியாசம்?

8 . நடை:

பலசமயம் புறக்கணித்தலை நாம் விலகிப் போதலின் வழியே உணர்த்துகிறோம். பிறரைப் புறக்கணிக்க அவர்களின் புறத்தொற்றமும், ஆளுமையும் போதும் என்றாகிப்போகிறது. இந்தச் சிறுகதைப் படித்தபின் நீங்கள் யாரையும் குற்ற உணர்வின்றிப் புறக்கணிப்பது அவளவு சுலபமாக இருக்காது.

9 . பதிலடி:
புரிதலற்ற கணவன் மனைவியும், இடைவெளியை வலிந்து ஏற்படுத்தும் நண்பர்களும் சேர்ந்தால் குடும்பம் சிதைவதைத் தடுக்க முடியாது. இதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.
கிராமம் என்றால் அப்பாவி மக்கள் வாழும் இடம் என்ற நினைவுடனே இங்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் மனிதனின் அடிப்படை உணர்ச்சியான குதர்க்கம், பொறாமை எல்லாம் அதிக அளவில் உள்ள சமூகம் அது.

10 . வட்டத்திற்குள்ளே:

ஒரு ஆண் - ஒரு பெண் தன் மனைவி ஆனதாலேயே அவளின் கனவுகளை, படைப்பூக்கத்தை, தினசரி வாழ்வை, இறுதியாய் அவளின் கர்ப்பத்தைக் கலைக்கிறான். அது ஒரு கனவின் அழிப்பு மட்டுமல்ல...... ஆன்மாவின் அழிப்பும்கூட.......

11 . வெகுதூரம் விலகி:

மருத்துவம் சேவை என்பதிலிருந்து வெகுதூரம் விலகி தொழில் என்ற நிலையை அடைந்துள்ளது. கதையின் இறுதியில் டாக்டர் கிழவனின் குரல் கேட்பதாகச் சொல்ல..... இல்ல சார், வெருவா கத்துது.... நாம வெகுதூரம் விலகி வந்துவிட்டோம்... என்கிறான் கூட வந்தவன்.

ஆம்..... நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம் இயற்கையிடமிருந்தும் கூட...

நாம் நாகரீகம் அற்றவர்கள் என்று சொல்லும் காட்டுவாசிகள் எப்படி மனிதத்துடன் இருக்கிறார்கள் என்பதன் மூலம் எழும் கேள்வி, யார் காட்டுமிராண்டிகள் அவர்களா நாமா? என்பதுதான்.


12 . மாயக்கல்:

சமூகம் ஒதுக்கியுள்ளோரை அதிகாரம் எப்படி சிதைக்கிறது என்பதும், வக்கிரம் பிடித்த அதிகாரப் புள்ளிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதுமே கதை.
கதையைப் படித்தவுடன் கீழ்வரும் எண்ணம் எழலாம்:
ராமேஸ்வரம் தாண்டிய கடலிலும் நடப்பது இதுதானே?
(இதில் பன்றிகளைப் பற்றி வரும் தகவல்கள் சிறுகதைகளில் தகவல்களின் முக்கியத்துவம் என்ன என்று சொல்கின்றன)

13 . சாப நினைவுகள்:

நமது சமூகம் குறிப்பாக கல்விக் கூடங்கள் அதிமேதாவிகளை அடிமுட்டாள்கள் ஆக்குவதைத்தான் வேலையாகச் செய்துவருகின்றன. அப்படி முட்டாள் ஆக்கப்பட்ட ஒருத்தி மனநிலை பாதிக்கப்பட்டு சமூகத்தால் என்ன நிலை அடைவாள்?

14 . வேம்பு :


உலகமயமாக்கலால் ஒரு கிராமமும் அதன் வாழ்வியலும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லும் சிறுகதை. இந்தக் கதையா படித்துவிட்டு சிரிக்கும் நாம் யார்?

குடிக்கும் நீரைக் காசுகொடுத்து வாங்கும் கோமாளிகள்.............

15 . இருட்குகைக்குள் விரியும் ஒளிப்புகை:

இறந்துபோனவனின் பார்வையில் இறப்பு எப்படி இருக்கும்? தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படியுங்கள்.

16 . தருணம்:

இங்கே கோயில்கள், மசூதிகள் எல்லாம் சிதைந்து போகின்றன. ஏன்? மனிதம் சிதைந்த மனிதர்களால்தான். மதம் பெரும்பாலும் மனிதனை தனியல்பு இலக்கச் செய்கின்றன. ஆனால் மதத்தால் என்ன பயன் என்ற கேள்விக்கு மட்டும் விடையே இல்லை.

17 . களவுபோகும் புரவிகள்:

கிராம தெய்வங்களின் உருவாக்கம் மூதாதேயர்களின் வழிபாடாகவே இருக்கிறது. அதை ஒரு மாயஎதார்த்த பாணியில் கதையாக்கியுள்ளார்.
அருமையான அனுபவத்தைத் தரும் கதை.

இது தமிழின் மிக முக்கியமான கதைத்தொகுப்பு.... எல்லோரும் படியுங்கள்......


புத்தகத்தின் பெயர் : களவு போகும் புரவிகள்

எழுதியவர் : சு. வேணுகோபால்
பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்
67 பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை
சென்னை - 14
விலை : 60 ரூபாய்

No comments:

Post a Comment