Tuesday, October 26, 2010
கனவுகளின் பயணி
கடவுளின் கனவில் நானிருந்தேன்.
அவன் /அவள்/அது அல்லது
கடவுள் என்பதாய்
எழுதி இருந்தது
அவரின் முகவரி.
கடவுள் தன் இறப்பை
சற்றே தள்ளி வைத்தார்.......
தன் கேள்விக்களுக்குப் பதில் என்ன?
என்றபடி பிரபஞ்சத்தைத் தூங்க வைத்தார்.
கேள்விகள் எல்லாம் செத்துப் போன ஒரு தருணத்தில்
பதில்களெல்லாம் உயிர் பெற்றுப் பறந்தன.
பறக்கும் பதில்களில்
சில கடவுளின்
முகத்தில் உமிழ்ந்தன......
சில எச்சமிட்டன.....
கடைசியாய் நான் எப்படித்தோன்றினேன் ?
என்ற கேள்வியுடன் கடவுள் இறந்து போனார்
எல்லாப் பதில்களும் கடவுளின் அழுகிய
உடலைத் திண்ணத் தொடங்கின....
அவரின் கடைசிக் கேள்வி மட்டும்
கனத்த கழுகாய்
பிணத்தைச் சுற்றி வருகிறது.
மற்றொருவனின் கனவில்
வாழ்வதைப் பற்றிய
என் நினைவுகள்
வளரத்தொடங்கியது
கழுகின் நிழலில்....
ஒற்றை மரம் கொண்ட
பெருத்த வனமாய்.
Wednesday, October 13, 2010
ஈழம் - இரவு - எலீ வீஸல்
நான் படிக்கும் புத்தகங்களை பெரும்பாலும் நானே தேர்ந்தெடுக்கிறேன். அதிஷ்டவசமாக சில புத்தகங்கள் என்னிடம் வந்து சேரும். சமீபத்தில் தமிழினி பதிப்பகம் போயிருந்த போது அண்ணன் வசந்தகுமார் சில புத்தகங்களைக்கொடுத்து படிக்கச் சொன்னார். அதில் ஒரு புத்தகம் எலீ வீஸல் எழுதிய இரவு. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக என்னுடைய கண் முன்னே அசைவின்றி இருந்த புத்தகம். வாசிக்கும் விருப்பத்தில் அனேகமாக கடைசி நிலையில் இருந்த புத்தகம். திடீரென்று நேற்று வேலைக்கு கிளம்பும் போது கையில் சிக்கி படித்து முடித்தேன்.
அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிவிட விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தை படிக்கும் முன்பு யூதர்கள் மேல் ஒரு எரிச்சல் உண்டு. ஏனென்றால் இன்று உலகில் நடக்கும் பெரும் யுத்தங்களை பின் நின்று நடத்துவது அவர்கள்தான். பொருளாதாரம், கல்வி இரண்டையும் வைத்துக்கொண்டு உலகை ஆட்டிப் படைக்கும் அவர்களைப் பற்றி உலக அரசியல் தெரிந்த யாரும் அறிவார்கள்.
ஆனால், இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகான என் எண்ணம் முற்றிலும் வேறுபட்டது.
உலகம் முழுவதும் இலக்கியம் பல கிளை கொண்ட மரமாக இருக்கிறது. பேரிலக்கியங்கள் சமூக அவலங்களை உலகுக்கு எடுத்துச் சொல்பவையாகவேஇருக்கின்றன. இந்தப் புத்தகமும் ஒரு பேரவலத்தை நம் கண்முன் மறுபடி நிகழ்த்திக் காட்டுகிறது. இரண்டாம் உலகப்போர் என்பது ஹிட்லரை மையமாகக்கொண்டதாகவும் அவர் நடத்திய இனஅழிப்பை நிறுத்துவதற்காகவும் நடத்தப்பட்டது என்பதாகவே நாம் அறிந்திருக்கிறோம். இந்த இடத்தில் இனஅழிப்பு என்பதுஒரு சொல்லாக - கடந்து போகக்கூடியதாக இருக்கிறது. ஆனால் யூத இனம் எப்படி எல்லாம் அழிக்கப்பட்டது என்பதற்கு பல சாட்சியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்தப் புத்தகம்.
எலிசர் என்னும் சிறுவன், (வயது 15 ) ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன்இருப்பவன். ஹிட்லரின் நடவடிக்கையால் அவன் வாழ்வு எப்படியெல்லாம்மாறுகிறது எனபது தான் இந்த சுயசரிதையின் சுருக்கம். நடக்கும் துயரங்களைசிலர் சொன்னாலும், அவை எல்லாம் நடக்கவே சாத்தியமற்றவை என்பதாய்புரிந்து கொண்டு தினசரி வாழ்வை வாழும் மக்கள். அதன் பின் அவர்கள்கேள்விப்பட்டதை விடக்கொடுமையான சூழலில் வாழ்கிறார்கள். அவர்கள் நுழையும் ஒரு முகாமில், குழிகளில் சடலங்கள் கிடப்பதும், கைக்குழந்தைகள் கொல்லப்பட்டு எரிக்கப்படுவதையும் பார்ப்பவர்கள் தங்களுக்கு நேரப்போவதைதெரிந்துகொள்கிறார்கள். அதன்பின் அப்பாக்களை கொன்று, அவர்களின்உணவை மகன்கள் உண்டு வாழ்கிறார்கள். நோயாளிகள், உடல் திடமற்றோர் உடனடியாக எரி உலைக்கு அனுப்பபட்டு உலகத்தில் இருந்து விடைபெறுகிறார்கள். பலருக்கும் சாவதே விருப்பத்திற்கு உட்பட்ட செயலாய்இருக்கிறது. உயிரற்ற உடல்கள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. தூக்கிலிடப்படுவோர் உடலின் கனமற்ற தன்மையால் நெடுநேரம் தொங்கி அணுஅணுவாக உயிரை விடுகின்றனர். கடைசியில் எலீயின் அப்பாவும் நோய்வாய்பட, அவன் அப்பாவை முடிந்தவரை காப்பாற்ற முயல்கிறான். இறுதியில், அவனேசலித்துப்போய் கைவிட நேர்கிறது. ஒரு நாள் காலை அவன் எழும்போது அவன்அப்பா இல்லை. அவர் உயிருடனோ, பிணமாகவோ எரிக்கப் பட்டிருக்கலாம் என்றபடி கடந்து போகிறான். இடையே எல்லோரும் கடவுளைத் தொழுகிறார்கள். கடவுளிடம் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் புத்தகத்தில் ஓரிடத்தில் கடவுள் எங்கே எனக்கேட்பவனிடம், எலீ சொல்ல நினைப்பது " இதோ இங்கே தூக்கில் தொங்குகிறானே அவன் தான் கடவுள்" என்று.
எல்லோரையும் கொல்வதை எப்படி உலகம் வேடிக்கை பார்க்கிறது என்று கேட்க, அதற்கு உலகம் நம்மை மறந்துவிட்டது.... கைவிட்டுவிட்டது என்பதே பதிலாய்இருக்கிறது. இந்த இடம் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய இடம். உலகமே ஒரு இனத்தை கைவிடும் போது, மீண்டு வரும் யாரும் உலகத்தை பழிவாங்க முனைவது இயல்பே. அதனால்தான் இன்று யூத இனம் பேரழிவுகளைஏற்படுத்தும் ஒரு இனமாக இருக்கிறது. அவர்கள் இன்று உலகின் பெரும்எண்ணெய், தங்கம், வங்கி, ஆயுத வியாபாரிகளாக வளர்ந்துள்ளனர். சகமனிதனை கைவிடும் நாம் அதற்கான கூலியைப் பெற்றேஆகவேண்டியுள்ளது. இந்தப் புத்தகத்தை தொடர்ந்து ஒரே மூச்சில் வாசித்தல் என்பது சாத்தியமில்லை. ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் நிறுத்திவிட்டு இப்படிஎல்லாம் நடக்க சாத்தியமில்லை என்று யோசிக்க வாய்ப்பிருக்கிறது, இந்தப்புத்தகத்தில் வாழும் சராசரி மக்களைப்போலவே. அப்படி நினைப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நாளை இது நமக்கும் நடக்கலாம்.
இப்போது ஈழத்தைப் பற்றி,
இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்ட இன அழிப்பிற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல ஈழத்தில் நடந்த அழித்தொழிப்பு. ஈழத்தில் வாழ்ந்தவன் தமிழன்என்பதைத் தாண்டி, அவர்கள் மனிதர்கள் என்பதைகூட இந்த உலகம் உணரமறுத்துவிட்டது. 600 கோடிப் பேர் வாழும் உலகில் 10 லட்சம் பேர் அழிந்துபோனதுஒரு நிகழ்வாகக் கூடப் பதியப்படவில்லை. எண்ணிக்கை என்பதைவிட, ஒருஇனமே அழிக்கப்பட்ட துயரத்திற்கு யாரும் கண்டனம் தெரிவிக்ககூடத் தயாராய்இல்லை. இந்நிலையில் இந்தப்போர், நடந்தது அநேகமாக வரலாற்றின்பக்கங்களில் இருந்து துடைத்து எடுக்கப்படும். ஏனென்றால் வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படும் மிகைபுனைவு. அதில் உண்மையைக்கண்டறிய சாமானிய மனிதனுக்கு வாய்ப்பே இல்லை.
இப்போதைய தேவை என்ன?
ஈழத்தில் நடந்தது என்ன என்பதை விட, அங்கே நடந்த அரசியல், களத் தவறுகளைப் பேசி தானும் அறிவாளி என்பதைக் காட்டிக்கொள்ள முயல்வோரேஅதிகம். இன்னொன்று குறை சொல்வோர் யாரும் அதற்கான மாற்று அரசியல்பற்றி தெளிவான கருத்தை முன்வைப்பதில்லை. இன்றைய உலகமயமாக்கலின்சூழலில் ஆயுதப்போராட்டம் என்பது ஆயுத வியாபாரிகளின் வியாபாரத்தந்திரங்களில் ஒன்று. இங்கே ஆயுத வியாபாரி என்பது தனிப்பட்ட நிறுவனமோ, தனி நபரோ அல்ல - அவை பெரும் பண பலம் கொண்ட வல்லரசுகள் மட்டுமே.
வரலாற்றை மீண்டும் மீண்டும் படித்தால் ஒன்று மட்டும் தெளிவாகும் - அது கல்வியும் பொருளாதாரமுமே ஒரு இனத்தையோ தனி மனிதனையோ விடிதலை செய்யமுடியும் என்பதே. இந்த நிலையில் ஈழத்தமிழன் எந்த நாட்டிற்கு புலம் பெயர்ந்தாலும், கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் மூலம் இனத்தை மீட்டெடுக்க முடியும். இரண்டாவது ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வின்குறிப்புகளை யூதர்களைப் போல ஆவணமாக்குவது அவசியமாகிறது. ஏனென்றால் தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளர்கள் (?????) முதல்ஆராய்ச்சிக்கட்டுரைகள் வாசிக்கும் எழுத்தாளன் வரை யாரும் இதைத் தங்களின்படைப்பில் கொண்டுவரத் தயாராய் இல்லை. அவர்களை பொறுத்தவரைபிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள் மட்டுமே விளிம்பு மனிதர்கள். அதுதவிர விவசாயிகள், மீனவர்கள் போன்ற பெரும் எண்ணிகையிலான துயரவாழ்வினை வாழும் மக்களுக்கு அவர்களின் உலகில் இடமே இல்லை. மற்றசிலருக்கு காவிய நாயகர்கள், அரசியல்வாதிகள், அற்புத தருணங்கள் பற்றி எழுதமட்டுமே நேரமும் ஆர்வமும் இருக்கிறது. இன்னும் சிலருக்கு உலக இலக்கியம், உள்ளூர் இலக்கியம் எல்லாம் கரைத்துக் குடித்துவிட்டு - எது இலக்கியம் என்பதைவிளக்கவே நேரம் போதவில்லை.
எனவே இனஅழிப்பு பற்றிய புத்தகங்கள் ஈழ மக்களால் மட்டுமே எழுதப்படமுடியும். அப்படி ஒரு புத்தகம் வந்தாலாவது இந்த உலகம் வெட்கித்தலைகுனிகிறதா என்று பார்ப்போம்.
அதுவரை வழக்கம் போல இலக்கிய வியாதிகளின்அக்கப்போர்களை மட்டுமே கவனித்துக் கைதட்டுவோம். :(
புத்தகத்தைப் பரிந்துரைத்த அண்ணன் தமிழினி வசந்தகுமாருக்கு நன்றி.
சக மனிதன் மேல் அன்பிருக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
புத்தகத்தின் பெயர் : இரவு
எழுதியவர் : எலீ வீசல்
தமிழாக்கம்: ரவி இளங்கோவன்
பதிப்பகம் : யுனைடெட் ரைட்டர்ஸ்,
130/2, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
சென்னை - 86.
விலை : 70 ரூபாய்
Tuesday, September 21, 2010
களவு போகும் புரவிகள் - சு. வேணுகோபால் - புத்தகஅறிமுகம்
கடந்த சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் ஜெயமொஹனுடனான உரையாடலின் போது, இன்றைய தமிழ் இலக்கிய உலகில் விவசாயம் சார்ந்து எழுதுபவர்களில் சு. வேணுகோபால் மிக மிக கவனம் பெரும் படைப்பாளி என்று சொன்னார். சமீபத்தில் தமிழினி பதிப்பகம் போயிருந்த போது அவரின் களவு போகும் புரவிகள் புத்தகத்தை வாங்கினேன்.
மொத்தம் 17 சிறுகதைகள் உள்ள தொகுப்பு. ஒரே மூச்சில் 2 மணிநேரத்தில் படித்து முடித்தேன். சிறுகதைகள் பற்றி பார்ப்பதற்கு முன் சு.வேணுகோபாலின் எழுத்தைப் பற்றி சொல்ல வேண்டியுள்ளது. இன்றைய எழுத்தாளர்களில் பலர் பின் நவீனத்துவம், விளிம்புநிலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அந்த எழுத்துகள் பெரும்பாலும் அதிர்ச்சி மதிப்பீடுகள் சார்ந்தவை. வாசகனை ஒரு அறியா உலகில் நுழைத்து, கேள்விப் படாத சம்பவங்களை (அ) நடக்க சாத்தியமற்ற சம்பவங்களை விளக்கி எழுதப்படும் படைப்புகள்தான் அதிகம். அந்த சம்பவங்கள் படைப்பைவிட்டு வெளியே துருத்தியபடி இருப்பதை உணரலாம். ஆனால் சு.வேணுகோபாலின் இந்த சிறுகதைத் தொகுப்பு விளிம்பு மனிதர்களை/ வாழ்வை அவர்களின் தளத்தில் இருந்தே விளக்குகிறது. பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண், விவசாயத்தில் தோல்வி கண்டு வேறு வேலை தேடும் ஒரு தாழ்த்தப் பட்ட மனிதன், பாலுறவில் ஊக்கம் குறைந்த ஒருவன், பெண்ணியம் பேசும் பெண்கள், உண்மையான (?????) தியாகி, பன்றி மேய்க்கும் பெண், விவசாயிகள், உடல் பலமற்ற வயதானவர்கள், மன நிலை பிறழ்ந்த ஒரு மேதாவிப்பெண், கணவனுக்காக கருவைக் கலைக்கும் பெண் என்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பற்றியே பேசுகின்றன சு. வேணுகோபாலின் கதைகள். மற்றொன்று விவசாயம் பற்றி, வளர்ப்பு பிராணிகள் பற்றி வேணுகோபாலின் அவதானிப்பும்,வர்ணனைகளும் (details) வியப்பில் ஆழ்த்துகின்றன.
இனி அந்தத்தொகுப்பில் உள்ள கதைகளைப் பற்றிய சிறு அறிமுகம்:
1 . அம்மாவின் விருப்பங்கள்:
ஒரு சிறுவனின் பார்வையில் அவன் அம்மா எப்படி நடந்து கொள்கிறாள். அம்மா ஏன் பிற பிள்ளைகளிடம் பாசம் காட்டாமல், நடிக்கிறாள் என்பது போன்ற கேள்விகளுடன் நகர்கிறது கதை. சிறுவர்களின் மன உலகை மிக நெருக்கத்தில் சென்று பார்க்கும் உணர்வைத் தரும் கதை.
2 . மண்ணைத் தின்றவன் :
நாம் உண்ணும் சோறு யாரோ ஒரு விவசாயியின் ரத்தம் என்பதை உணர்ந்திருப்போமா? விவசாயம் என்பது ஒரு சபிக்கப்பட்ட தொழில். அதில் வருமானம் பெறுவது என்பது தார்ப்பாலைவனத்தில் நீர் அருந்துவதைப் போன்றது. எவளவு தண்ணீர் அருந்தினாலும் பாலைவனத்தை ஒருபோதும் கடக்க முடியாது. விவசாயத்தில் வரும் வருமானம் விவசாயியின்/; அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த உழைப்பிற்கு ஈடாகாது. இருந்தும் ஏன் விவசாயம் நடைபெறுகிறது? அது ஆச்சர்யம்தான். சாதிய நிலைப்பாடுகளும், சமூக அங்கீகாரமும், விவசாயமும் எப்படி ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்துள்ளன என்பதை இந்தக் கதை நெற்றியில் அடித்தது போலச் சொல்கிறது.
3 . மீதமிருக்கும் கோதும் காற்று:
ஒரு பாலியல் தொழிலாளியின் அனுபவங்களை விளக்கி பல கதைகளை படித்திருப்போம்.ஆனால் இது உண்மையிலேயே அவளின் குரலில் சொல்லப்படுகிறது. வாசகனுக்கு அதிர்ச்சியைத் தந்து, எழுத்தாளன் கவனம் பெற முயலாமல் இயல்பாய் ஒரு சம்பவ நிகழ்வை விளக்கியிருப்பது மிகச்சிறப்பு.
வாய் நாற்றமெடுக்கும் ஒருவன் முத்தமிடும்போது அவள் நினைப்பது :
"மலத்தில் விழுந்த ஈயாகயோனியில் புரண்டார்கள். நிமிர்ந்தபோது அடிவயிற்று வலி.பிராந்தியை நீட்டினார்கள்.பிராந்தி அடித்தால் நாற்றம் தெரிவதில்லை."
"ஒவ்வொருவனும் மேலே படுக்கும்போது யோனி உடலின் வெவேறு இடங்களில் இருக்கக்கூடாதா என்றிருந்தது"
இங்கே காமம் செத்து ஒருத்தியின் சுயம் மட்டுமே எஞ்சுகிறது.
4 . சப்பைக்கட்டு:
புற உலகில் பெண்ணியம் பேசும் ஒருவன் தனக்கான உலகில் மனைவியை, சக தோழியை எவ்வாறு கேவலமாக அணுகுகிறான் என்பதும், அந்த முரணியக்கம் எப்படி நிகழ்கிறது என்பதும் தான் கதை. இந்த ஒருவன் நாமாகவும் இருக்கலாம்.
5 . உருமாற்றம்:
மாறிவரும் உலகில் ஒரு உண்மையான தியாகியின் இருப்பு என்ன? அந்த இருப்பின் தேவையோ/ அவசியமோ இல்லாத நிலையில் அந்த தியாகி எடுக்கும் முடிவும் விளைவையும் இயல்பாக விளக்கும் கதை. இந்தக் கதையில் வரும் தியாகி உங்கள் தாத்தாவாகவோ அப்பாவாகவோ இருக்கலாம்.
6 . சங்கிலி:
பாலுறவில் வெற்றி தோல்வி என்று ஏதுமில்லை. இருந்தும் முதலிரவில் தன் மனைவியிடம் நிருபிக்க முயலும் முதிர்கண்ணன் ஒருவன் தோற்றுவிட்டால் என்ன நடக்கும்? அவன் மனநிலை என்ன?
7 . உடம்பு:
ஈன முடியாமல் தவிக்கும் கிடேரியைப் பார்த்திருக்கிறீர்களா? அந்நிலையில் இருக்கும் பெண்ணை அவளின் கணவனின் மனநிலையில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? விலங்குகளிலும் சரி, மனிதனிலும் சரி விந்தைத் தருவதோடு முடிந்துவிடுகிறது ஆணின் கடமை. பின் மனிதனுக்கும் விலங்கிற்கும் என்னதான் வித்தியாசம்?
8 . நடை:
பலசமயம் புறக்கணித்தலை நாம் விலகிப் போதலின் வழியே உணர்த்துகிறோம். பிறரைப் புறக்கணிக்க அவர்களின் புறத்தொற்றமும், ஆளுமையும் போதும் என்றாகிப்போகிறது. இந்தச் சிறுகதைப் படித்தபின் நீங்கள் யாரையும் குற்ற உணர்வின்றிப் புறக்கணிப்பது அவளவு சுலபமாக இருக்காது.
9 . பதிலடி:
புரிதலற்ற கணவன் மனைவியும், இடைவெளியை வலிந்து ஏற்படுத்தும் நண்பர்களும் சேர்ந்தால் குடும்பம் சிதைவதைத் தடுக்க முடியாது. இதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். கிராமம் என்றால் அப்பாவி மக்கள் வாழும் இடம் என்ற நினைவுடனே இங்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் மனிதனின் அடிப்படை உணர்ச்சியான குதர்க்கம், பொறாமை எல்லாம் அதிக அளவில் உள்ள சமூகம் அது.
10 . வட்டத்திற்குள்ளே:
ஒரு ஆண் - ஒரு பெண் தன் மனைவி ஆனதாலேயே அவளின் கனவுகளை, படைப்பூக்கத்தை, தினசரி வாழ்வை, இறுதியாய் அவளின் கர்ப்பத்தைக் கலைக்கிறான். அது ஒரு கனவின் அழிப்பு மட்டுமல்ல...... ஆன்மாவின் அழிப்பும்கூட.......
11 . வெகுதூரம் விலகி:
மருத்துவம் சேவை என்பதிலிருந்து வெகுதூரம் விலகி தொழில் என்ற நிலையை அடைந்துள்ளது. கதையின் இறுதியில் டாக்டர் கிழவனின் குரல் கேட்பதாகச் சொல்ல..... இல்ல சார், வெருவா கத்துது.... நாம வெகுதூரம் விலகி வந்துவிட்டோம்... என்கிறான் கூட வந்தவன்.
ஆம்..... நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம் இயற்கையிடமிருந்தும் கூட...
நாம் நாகரீகம் அற்றவர்கள் என்று சொல்லும் காட்டுவாசிகள் எப்படி மனிதத்துடன் இருக்கிறார்கள் என்பதன் மூலம் எழும் கேள்வி, யார் காட்டுமிராண்டிகள் அவர்களா நாமா? என்பதுதான்.
12 . மாயக்கல்:
சமூகம் ஒதுக்கியுள்ளோரை அதிகாரம் எப்படி சிதைக்கிறது என்பதும், வக்கிரம் பிடித்த அதிகாரப் புள்ளிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதுமே கதை.
கதையைப் படித்தவுடன் கீழ்வரும் எண்ணம் எழலாம்:
ராமேஸ்வரம் தாண்டிய கடலிலும் நடப்பது இதுதானே?
(இதில் பன்றிகளைப் பற்றி வரும் தகவல்கள் சிறுகதைகளில் தகவல்களின் முக்கியத்துவம் என்ன என்று சொல்கின்றன)
13 . சாப நினைவுகள்:
நமது சமூகம் குறிப்பாக கல்விக் கூடங்கள் அதிமேதாவிகளை அடிமுட்டாள்கள் ஆக்குவதைத்தான் வேலையாகச் செய்துவருகின்றன. அப்படி முட்டாள் ஆக்கப்பட்ட ஒருத்தி மனநிலை பாதிக்கப்பட்டு சமூகத்தால் என்ன நிலை அடைவாள்?
14 . வேம்பு :
உலகமயமாக்கலால் ஒரு கிராமமும் அதன் வாழ்வியலும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லும் சிறுகதை. இந்தக் கதையா படித்துவிட்டு சிரிக்கும் நாம் யார்?
குடிக்கும் நீரைக் காசுகொடுத்து வாங்கும் கோமாளிகள்.............
15 . இருட்குகைக்குள் விரியும் ஒளிப்புகை:
இறந்துபோனவனின் பார்வையில் இறப்பு எப்படி இருக்கும்? தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படியுங்கள்.
16 . தருணம்:
இங்கே கோயில்கள், மசூதிகள் எல்லாம் சிதைந்து போகின்றன. ஏன்? மனிதம் சிதைந்த மனிதர்களால்தான். மதம் பெரும்பாலும் மனிதனை தனியல்பு இலக்கச் செய்கின்றன. ஆனால் மதத்தால் என்ன பயன் என்ற கேள்விக்கு மட்டும் விடையே இல்லை.
17 . களவுபோகும் புரவிகள்:
கிராம தெய்வங்களின் உருவாக்கம் மூதாதேயர்களின் வழிபாடாகவே இருக்கிறது. அதை ஒரு மாயஎதார்த்த பாணியில் கதையாக்கியுள்ளார்.
அருமையான அனுபவத்தைத் தரும் கதை.
இது தமிழின் மிக முக்கியமான கதைத்தொகுப்பு.... எல்லோரும் படியுங்கள்......
புத்தகத்தின் பெயர் : களவு போகும் புரவிகள்
எழுதியவர் : சு. வேணுகோபால்
பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்
67 பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை
சென்னை - 14
விலை : 60 ரூபாய்
Thursday, August 26, 2010
புத்தகம்: ஹெய்டி - ஜோஹானா ஸ்பைரி
அப்போது எஸ்.ராமகிருஷ்ணனின் பரிந்துரையான ஹெய்டி-யைப் பார்த்தேன். பலமுறை இந்த புத்தகத்தை புத்தகக் கடைகளில் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். எஸ்.ராமகிருஷ்ணனின் எந்தப் பரிந்துரை புத்தகமும் இதுவரை என்னைக் கைவிட்டதில்லை. இதுவும் அப்படியே.
இந்தப் புத்தகத்தைப் பற்றிப் படிக்கும் முன் எஸ்.ராவின் அனுபவத்தைப்படித்துவிடுங்கள்.
இப்போது உங்களிடம் ஒரு கேள்வி...... உலகிலேயே அதிகபட்சக் கொடுமைக்கு உட்படுத்தப்படுவது யார்?
உங்களின் பதில் கீழ்க்கண்ட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஈழத்தமிழர்கள்...... பாலஸ்தீனியர்கள்..... தொழிலாளர்கள்.... தலித்துகள்...... சிறுபான்மை மக்கள்.... மனநோயாளிகள்..... விவசாயிகள்....
ஆனால் இவர்கள் யாருமே கிடையாது.... அதற்கான பதில் குழந்தைகள். குழந்தைகளின் மேலான வன்முறை கட்டற்றது. இந்தியாவில் இளையோர் எண்ணிக்கை முதியோர் எண்ணிக்கையைவிட அதிகம் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பெரும்பான்மையான கூட்டம் சிறுபான்மையால் தண்டிக்கப்படுவது குழந்தைகள் விஷயத்தில்தான். ஏனெனில் அவர்கள் பலகீனமானவர்கள். திருப்பித் தாக்க உடல்/மன வலிமை இல்லாதவர்கள். எனது நண்பர் ஒருவர் தன் பையனுக்கு ஓவியம், பாட்டு, கணக்கு, நடனம் இவற்றில் எல்லாம் பயிற்சி கொடுப்பதாக சொன்னார். பையனின் வயது என்ன? என்றேன். மூன்று என்றார். எதற்கு இவ்வளவு கொடுமை செய்கிறீர்கள் என்ற போது, இப்பொழுதே இப்படி பயிற்சி கொடுத்தால்தான் அவன் IIT -ல் சேர முடியும் என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் பார்க்கும் எந்த அறிவாளியும் இப்படி உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. திறமையைக் கண்டுபிடித்து வளர்ப்பது தவறல்ல. திறமையை உண்டாக்க நினைப்பது முட்டாள்தனம் என்றெல்லாம் பேசிய பிறகு அவர் சொன்னது : இப்படி எல்லாம் நினைத்ததால்தான் நீங்க இப்படி ஒரு சாதாரண சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்கீங்க. என்புள்ள நாசாவுல வேலை செய்வான் அப்பிடின்னார். எனக்கு அந்தக் குழந்தையை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் 1880 ல் எழுதப்பட்ட ஹெய்டி மிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஹெய்டி ஒரு ஐந்து வயது குழந்தையாக அறிமுகம் ஆகிறாள். அவளுக்கு அம்மா அப்பா இல்லை. தாத்தாவிடம் வளர வேண்டிய சூழல். தாத்தாவோ ஊரே வெறுக்கும் மனிதர் அல்லது ஊரை வெறுக்கும் மனிதர். அங்கே அவள் எப்படி வாழ்கிறாள். தாத்தாவிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் எப்படி கற்றுக் கொள்கிறாள் என்பதுதான் கதை.
கதையில் மிகக் குறைவான கதாப்பாத்திரங்களே வருகின்றன. ஹெய்டி, அவளின் தாத்தா, பீட்டர் (ஆடு மேய்க்கும் சிறுவன்) மற்றும் அவன் குடும்பம், நடக்கவே முடியாத கிளாரா, டாக்டர், கண்டிப்பான உதவியாளர் மேயர், கிளாராவின் பாட்டி & அப்பா.இவை தவிர சில கதாப்பாத்திரங்கள் உண்டு. பூக்களும், மலையும், ஆடுகளும் சிறுவர் உலகின் சிறந்த குறியீடுகள். அவர்கள் அவற்றுடன் பேசுகிறார்கள், விளையாடுகிறார்கள்.
உடல் நலமில்லாத பணக்காரக் குழந்தையான கிளாராவிற்கு தோழியாக பிராங்க்பர்ட் கொண்டு செல்லப்படும் ஹெய்டி, அங்கு கிளாராவுடன் ஏற்படும் நட்பு. அங்கே அவளின் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒருத்தியானாலும் அவளின் மனநிலை பாதிக்கப்பட்டு மறுபடி தாத்தாவிடமே அனுப்பப்படுகிறாள். அங்கே அவளின் வாழ்க்கை எப்படி சுவாரசியமாகிறது, பிறகு வரும் கிளாராவின் உடல்நிலை எப்படி மாறுகிறது, பீட்டரின் மனநிலை என்ன என்பதுதான் கதை. குழந்தைகள் எல்லாமே உங்களால் முடியும் என்று நினைக்கிறார்கள், ஆனால் நாம் அவர்களுக்கு எதெல்லாம் முடியாது என்று சொல்லிக் கொடுக்கவே முயல்கிறோம். இதில் பீட்டரின் பாட்டிக்கு கண் பார்வையை தன் தாத்தாவால் திரும்பத்தர முடியுமென்று ஹெய்டி நம்புகிறாள். முடியாதெனும்போது பார்வையின்மை இயல்பானது என ஏற்றுக் கொண்டு அவள் பாட்டிக்குத் தேவையான ரொட்டியைத் தருகிறாள். அதேபோல நடக்கவே முடியாத கிளாரா நடக்க முடியும் என்று ஹெய்டி, பீட்டர், கிளாரா மூவருமே நம்பி வெற்றி பெறுகிறார்கள்.
எது அவர்களால் முடியும் என்று அவர்களே (குழந்தைகளே) தீர்மானிக்கட்டும்....தீர்மானிக்க வேண்டியது நாமல்ல. அதேபோல் குழந்தைகள் நீங்கள் அவர்களுக்குத் தரும் வசதிகளைவிட அன்பையும், இயல்பான கற்றலையுமே விரும்புகிறார்கள் ஹெய்டியை போல. இது குழந்தைகளுக்கான நாவல் மட்டுமல்ல, எல்லா வயதினருக்குமான நாவல். நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது கண்டிப்பான மேயரை உங்களுக்குப் பிடிக்காது, ஆனால் இந்தப் புத்தகத்தை உங்கள் குழந்தை படித்தால் உங்களையே மேயராக நினைக்கலாம். எனவே நீங்களே மேயரைப் போல வாழ்வதை உணர்ந்து உங்கள் குழந்தையின் மீதான வன்முறையை கைவிட்டால் அது ஹெய்டிக்குக் கிடைத்த வெற்றி.
புத்தகத் தமிழாக்கம் நன்றாக இருக்கிறது என்றாலும் சில குறைகள் உள்ளன. விலங்குகளை மேற்கத்தியர்கள் அவன் அவள் என்று அழைப்பார்கள் ஆனால் நாம் விலங்குகளை அது/அவை என்றே அழைப்போம். இங்கும் அப்படியே மொழிபெயர்த்திருக்கலாம். ஆடுகள் கூட அவள் என்றே அழைக்கப்படுவது அந்நியப்படுத்துகிறது.
புத்தகத்தின் பெயர் : ஹெய்டி
எழுதியவர் : ஜோஹானா ஸ்பைரி
மொழிபெயர்த்தவர் : ஸ்ரீமதி, கயல்விழி
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ,
57-53ஆவது தெரு,அசோக் நகர்.
விலை : 160 ருபாய்
Wednesday, August 25, 2010
மனநல மருத்துவர் - மச்சடோ டி ஆசிஸ்
அல்லது
பிறரை அப்படி உணர்ந்ததுண்டா?
அல்லது
சமூகம் அப்படி இருப்பதாக உணர்ந்ததுண்டா?
ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்கானது.
மச்சடோ டி ஆசிஸ் எழுதிய மனநல மருத்துவர் என்ற கதையைப் படிக்கும் பொது நாம் ஒரு பழக்கப் பட்ட உலகில் வாழ்வதையே உணர்வோம்.
சீமோன் ஒரு மருத்துவர். அவருக்கு உளவியல் மருத்துவத்தில் நாட்டம் ஏற்பட்டு அதைக் கற்கிறார். பின் ஊரில் இருக்கும் பைத்தியங்களைப் பராமரிக்க நகரசபை உதவியுடன் ஒரு மனநல விடுதியை(கிரீன் ஹவுஸ்) ஆரம்பிக்கிறார். தொடர்ந்த ஆராய்ச்சிகளின் விளைவாக யார் பைத்தியம் என்பதைத் தீர்மானிக்க ஒரு விதியைக் கண்டுபிடிக்கிறார்.
விதி ஒன்று : அது யார் எப்படி இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு மனநலக் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறது. மனைவியிடம் கோபப் படுவது, பிறரைப் புகழ்வது என எல்லாமே மனநோய்க்குறிகள் என்று ஊரில் உள்ள முக்கால்வாசிப் பேர் கிரீன் ஹௌசிற்கு கொண்டு வரப் படுகின்றனர். அவருக்கு எதிராகப் புரட்சி வெடித்துக் கிளம்புகிறது. "வதங்கிய கோட்டைகள்" என்று அழைக்கப் படும் அவர்கள் நகர சபையைக் கைப்பற்றினாலும் அவர்களுக்கு ஒரு பைத்தியக்கார விடுதி தேவையாய் இருக்கிறது. புரட்சிக்கு எதிரான புரட்சி வெடித்து புது ஆட்சி வர, அந்த நேரம் பார்த்து டாக்டரின் கொள்கையும் மாறிவிடுகிறது.
விதி இரண்டு: யாரெல்லாம் நேர்மை, வாய்மை, பகுத்தறிவுடன் உள்ளார்களோ அவர்கள் எல்லாம் மனநோயாளிகள்.
இதன் படி சிலரே விடுதியில் அடைக்கப்படுகின்றனர்.120 வருடங்களுக்கு முன்னும் கூட சிலரே இந்தக் குணாதிசயங்களுடன் இருந்துள்ளனர் :) அதையெல்லாம் அவர்கள் கைவிடும்வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒவ்வொருவரும் எப்படி தங்கள் கொள்கைகளைக் கைவிடுகின்றனர் என்பதை மச்சடோ மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார்.
இறுதியில் டாக்டர் மறுபடியும் தன தேடல் வழியே புது விதியைக் கண்டடைகிறார். அது என்ன என்பதையும் அதன் விளைவு என்ன என்பதையும் புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
பகடியில் பலவிதம், இதில் வரிக்கு வரி பகடிதான். கதையில் உலாவும் எல்லோரும் நம்மை எதோ ஒரு இடத்திலாவது பிரதிபலிப்பது மச்சடோவின் சாதனை. ஆராய்ச்சி என்ற பெயரில் நடக்கும் கோமாளித்தனங்களை நூறு வருடங்களுக்கு முன் இப்படி ஒரு மனிதன் பகடி செய்திருப்பதை நம்பவே முடியவில்லை. இத்தாகூய் நகரத்தை நாம் வாழும் சமூகமாகவும், நகரசபை நம்மை நிர்வாகம் செய்யும் அரசியல் அமைப்புகளாகவும் கொண்டால், நாம் எல்லா சமயங்களிலும் நோயாளியாகவும், டாக்டராகவும் வாழ்வது புரியும். ஒவ்வொரு முறை பிறரை நோயாளிகளாக உணரும் பொது நாம் விடுதலை பெற்றதாய் உணர்கிறோம். அதே நேரம் நாம் நோயாளியாவது தவிர்க்க முடியாததாகிறது. பெரும்பாலும் உண்மையை உணரும்போது மரணம் நமக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணரலாம். சமூகம், மக்கள், புரட்சி, மருத்துவம், ஆராய்ச்சி, தத்துவம், பக்திஇவற்றைப் பகடி செய்து இந்த உண்மையைச் சொல்வதில் மச்சடோ பெரும் வெற்றி பெற்றுவிட்டார்.
வரிக்கு வரி மொழிபெயர்ப்பு செய்திருப்பதால் சில இடங்களில் வாசிக்கக் கடுமையாய் இருக்கிறது என்றாலும், கண்டிப்பாக எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
புத்தகத்தின் பெயர் : மனநல மருத்துவர்
எழுதியவர் : மச்சடோ டி ஆசிஸ்
மொழிபெயர்த்தவர் : ராஜகோபால்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ,
57-53ஆவது தெரு,அசோக் நகர்.
விலை : 70 ருபாய்
Wednesday, July 7, 2010
உயிரோசையில் வெளியான என் கவிதைகள்
விடைபெறும் உரையாடல்
அவனிடமிருந்து அவளுக்கு.....................
விளிம்பு சிதைந்த சிறையின்
நடுவே
ஒற்றை ரோஜா.
ஊண் துளைக்கும் புழுக்களின்
புன்னகையில்
நகர்கிறது மையம்.
விளிம்பின் விரிந்த புள்ளியின்
அடியில் கிடக்கிறது
வாழ்தலின் அர்த்தம்...
பைத்தியமாதலின் சாத்தியங்களில்
பிறக்கிறது
யாரோ ஒருத்தியின் குழந்தை.
கடந்த காலத்தைக் கடந்தும்
கேட்கிறது தனியறைக் கைதியின்
மரண இசை.
மரணம் கூட சாத்தியமில்லை
என்கிறான்
என்னுடன் இறந்துபோன
எவனோ ஒருவன்.
சிதையும் விளிம்பால்
நகர்ந்து கொண்டே இருக்கிறது
எல்லோருக்குமான மையம்.
இப்படிக்கு,
இவன்.
அவளிடமிருந்து அவனுக்கு ......................
மகளிர் விடுதியின்
தனித்த அறையை
மூடிக்கொண்டேன்.
அறையுடன் என் உரையாடல்
கிசுகிசுப்பின் மொழியில்
தொடர்கிறது......
உடலிடும் ஓலத்தை
மறைவிடத்தின்
எதோ ஒரு மூலையில்
விரல்களின் நடனத்தால்
சரி செய்கிறேன்.
சுதி சரியில்லை என்ற
அறையின் பதிலால்
மாறவில்லை
உடலின் ஒலி.
வெடித்துக் கசியும்
சுடுநீரின் வெப்பத்தில்
வழிகிறது
காமத்தின் தனிமை.
சங்கீதம் சுதி சேர
வருடங்கள் ஆகலாம்.....
அசலோடும் நிழலோடும்
தனிமையில் மிதக்கிறது
காமத்தின் பிரபஞ்சம்.
உடைந்த கண்ணாடியில்
தெரிகிறது
என் பல்வேறு உருவங்கள்....
இப்படிக்கு,
இவள்.
நிலா வாழும் மூனாங்கட்டு முட்ட முட்டக் தூக்கம் - விழித்திருத்தலின் வீடு என்பது குறிப்பு: நன்றி: உயிரோசை - உயிர்மை http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3102
குடித்த இரவுகள்
ஒரு சொட்டு
விஸ்கி மீதமாவதுடன்
முடிகின்றன.
இடிந்துபோன
வீட்டின் மூனாங்கட்டில்
வாழ்கிறது...
சாத்தியம் புரியாமல்
கரைகிறது என் நிலா.
ஒதுக்கப் பட்ட வீதி
என்பதாய்
தெரு நாயில்
ஒரு நாய்க்குச் சொல்கிறேன்.
மூனாங்கட்டு - மூன்றாம் கட்டு - செட்டிநாட்டு வீடுகளின் பெட்டகங்கள் இருக்கும் பகுதி
Thursday, June 17, 2010
உயிரோசையில் என்னுடைய கவிதை
புலிகள் பேசும் இரவு
எதற்குமே சமமற்ற
இரவின் நிழலில்
வரிகளற்ற புலி
என் உடல்மேல்
நகர்ந்தது.
உயிரின் விலை
உணவு என்றது
சிகப்பு சேலை உடுத்திய
பெண்ணின் உதிரம்
ருசியானது என்றது
மற்றும்
விளைவுகளை மட்டுமே
விதைக்க முடியும் என்றது
இருளின் உச்சத்தில்
சிரித்தபடியே நடந்து
மறைந்தது
அதன் வாலற்ற பின்புறம்
ஒரு
இரவு ராணியின்
பின்புறத்தை ஒத்திருந்தது...
இன்னும் இரவு
மிச்சமிருக்கிறது..........
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3034
நன்றி : உயிரோசை - உயிர்மை.