நார்த் மெட்ராஸ்#1
நேற்று மதியம் மூலக்கடை போயிட்டுருந்தேன். அரை போதையில் பக்கத்தில் வந்து உட்காந்தார் ஒரு வடசென்னைவாசி. நான் புத்தகத்திற்குள் இருந்தேன், சாரி சார் – நான் குடிச்சிருக்கேன் – ஸ்மெல் மே டிஸ்டர்ப் யு. பர்டன் மி.
உங்கள மேரிதான், என் பொண்ணும் பட்ச்சுகினே இருக்கும் சார். பிளஸ் 2 இந்த வருஷம் போவுது. 25 ஆயிரம் கேக்குறான் சார் பீசு. அந்தக் கவலைலதான் ரெண்டு கோட்டர் போட்டேன். நேத்துப் பத்தாயிரம் குடுத்தேன். இன்னும் பதினைஞ்சாயிரம் ரெடி பண்ணனும். நல்லா படிப்பா சார். எனுக்கு வேற புள்ள இல்லை. அவளுக்கு அம்மா பாசம். அம்மா நீ அழகா இருக்க, அப்பா கருப்பு அப்பிடின்னு சொல்லிச்சொல்லி அவ அம்மாவுக்கு முத்தம் குடுத்துட்டே இருப்பா. எனக்கு ஒரு முத்தம் குடுக்க மாட்டா. என்னைப் பார்த்து, நீ எங்க அம்மாவுக்கு ஜோடியானு கேட்பா சார்.
போன வாரம் புர்சவாக்கம் இட்னு போய் சுடிதார் எடுத்துக் குடுத்தேன். எவ்ளோன்ற ரெண்டாயிரம் ரூபா. ஐநூறுக்கு வாங்கிக்க சொன்னா, இவ்ளோக்கு எடுக்குது. இன்னா பண்றது, பாவோம்ல வாங்கிக்கோன்னேன். ஆனா, அடுத்த வருஷம் அவள காலேஜ் அனுப்ப முடியாது, என்னாண்ட பணம் இல்ல சார்.
எங்க அப்பா ரிப்பன் பில்டிங்ல வேலை செஞ்சார். அம்மா ஸ்கூல் டீச்சர். நான் ஏழு பசங்க – ஏழும் பசங்கத்தான். எனக்கும் அம்மாதான் சார் எல்லாம். அவுங்கோ செத்து ஆறு வருஷம் ஆவுது. நான் பத்தாவதுக்கு மேலே படிக்கல – ஏறல, இன்னா பண்றது. இப்போ என் பொண்ண படிக்க வைக்க முடியாது சார். குடில உளர்றேன். தப்பா நெனைச்சுக்காத. ஆட்டுத்தொட்டி வந்துடுச்சு சார். Study well. all the best. bye bye.
நார்த் மெட்ராஸ் #2
பஸ் ஸ்டாப்பில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். 16 வயதிருக்கலாம் அழுக்குச் சட்டை- கையில ஒரு குச்சி, இன்னொரு கையில புத்தம் புது பிளாஸ்டிக் செருப்பு - ஒரு ஜோடி. வெகு நிதானமாகக் குச்சியை வைத்துத் தார்ச்சாலையில் தட்டிக்கிட்டே வந்தான். அவன் வயசே இருக்கும் இன்னொருவன் வந்து வழிமறித்தான் இவன் சட்டை அழுக்குடனும், கிழிந்தும் இருந்தது.
டேய் செருப்பக் குடு - ரெண்டாமாவன். முதல் சிறுவன் - குச்சியைத் தட்டுவதை நிறுத்தினான். ஆனால் செருப்பையும் விடவில்லை. இன்னும் மூனு பெண்கள் வந்தார்கள். செருப்பைக் கேட்டவனிடம், டேய் இன்னாடா, உனுக்கு இன்னா வோணும்னு கேட்பதை, நானும் கேட்டேன்.
இவன் அந்தக் கடைல இருந்த செருப்ப எட்துனு வன்ட்டான். கொஞ்ச தொலைவில் நடைபாதை செருப்புகள் பரப்பி இருந்ததைப் பார்த்தேன். அங்கேயிருந்து இன்னொரு மத்திய வயது நபர் வந்தவுடனே செருப்பைப் பிடுங்கி அவரிடம் கொடுத்துவிட்டு, டப்பென்று அறை ஒன்றையும் செருப்பை எடுத்தவனுக்குக் கொடுத்தான் ரெண்டாவது சிறுவன்.
பொருள் வந்ட்டுல்ல இன்னாத்துக்கு அடிக்கிற த்தா – இது மூன்று பெண்களின் வாயிலிருந்தும் வந்த வார்த்தைகள். செருப்பைக் வாங்கிய கடைக்காரரும் ஏண்டா அவன அடிச்ச? போடா அன்னாண்டனு சொன்னார். அடித்தவன் எதிர் திசையில் போய்க் கொண்டேயிருந்தான். அடி வாங்கியவன் கண்ணைப் பிடித்துக் கொண்டு குச்சியைக் கீழே போட்டுவிட்டு தரையிலேயே உட்கார்ந்துவிட்டான்.
த்தா. பொருள் கெடைச்ச பின்ன இந்தப் புள்ளிய என்னா மயிருக்கு அடிக்குது பாடுனு இரண்டாமாவனைத் திட்டியபடிக்கு ஒரு பெண் சேலையால் அவன் முகத்தைத் துடைத்தாள்.
சிவந்த கண்ணுடன் எழுந்தவன், குச்சியால் தரையைத் தட்டியபடிக்கு மறுதிசையில் கிளம்பிப் போனான்.
No comments:
Post a Comment