அடுத்த ஐந்து நாட்களும் ஆபீஸ். வெள்ளி ராத்திரி நேரா கர்ட் து நார்ட் ஸ்டேஷன் போயாச்சு. அங்கே இருந்து உக்கார்ந்துகிட்டே பயணம் – நம்ம ஊர் முதல் வகுப்பு ஏ.சி சிட்டிங் மாதிரி. ஒரு ரூம் மாதிரி இடத்துல மொத்தம் ஆறு சீட் இருக்கும். எனக்கு ஜன்னல் சீட்டைக் கேட்டு வாங்கிருந்தேன். அதுதான் வெளிலே வேடிக்கை பார்க்க வசதி. இன்னொன்னு சைடுல தலைய சாய்ச்சுக்கிட்டு படுத்துக்கிட்டே போயிடலாம். ஆறு பேர்ல – எனக்கு எதிரே இருந்த ஒரு சீட் காலி. மிச்சம் நாலு சீட்லயும் காலேஜ் பொண்ணுங்க. யுரோ ரயில் - குரூப் பாஸ் வச்சிருந்தாங்க. ஒரே வகுப்பில் படிக்கிற பொண்ணுங்க. என்கிட்ட சகஜமா பேசிட்டு வந்தாங்க.
நான் அவங்க படிப்பைப் பத்தியும், பொதுவான விஷயங்களைப் பத்தியும் கேட்டுட்டுத் தூங்கிட்டேன். நடுராத்திரில முழிப்பு வந்துருச்சு. பார்த்தா, என்னோட மடில தலை வச்சு ஒரு பொண்ணு தூங்கிட்டு இருக்கு. இன்னொரு பொண்ணு என்னோட கால்ல தலைய வச்சபடித் தரைலயும், எதிர்த்த மாதிரி இருந்த சீட்ல ஒரு பொண்ணு என்னை மாதிரி தூங்கிட்டு இருக்கு, அதோட மடில இன்னொரு பொண்ணு தலை வச்சுத் தூங்கிட்டு இருக்கு. நான் எழுந்தா எல்லாரும் எழுந்திருக்க வேண்டியதுதான். கண்ணை மூடுனேன் – தூங்கினேன்.
காலைல ஜெர்மனி அன்புடன் வரவேற்றது. நேர அக்கா வீடு, குட்டிப் பசங்க கூட அடுத்த ரெண்டு நாள் ஒரே ஆட்டம். இடைல வீட்டுல செஞ்ச மான்கறி, எலும்பு சூப். சோறு+ரசம்+மான்கறி வறுவல். ஜெர்மனில மான்கறி ரெண்டு விதமா கிடைக்கும் – ஒன்னு டின்ல வருவது. இன்னொன்னு பச்சைக்கறி. பச்சைக்கறில ரெண்டு வகை இருக்கு. ஒன்னு – வளர்த்து வெட்டுனது. இன்னொன்னு – காட்ல திரியுறதச் சுட்டு அதைக் கறியாக்குறது. இந்த ரெண்டாவது ஐட்டத்தோட ரெண்டாவது ஐட்டம் இருக்குல்ல, அதுதான் நான் விரும்பிச் சாப்பிடுறது.
அருமையான சூழல்ல, ரெண்டு நாளும் மான்கறி சாப்பாடு. ஏன் இந்தியால மான்கறியத் தடை பண்ணி வச்சுருக்காங்கன்னு தெரியணும்னா அத நீங்க சாப்பிட்டுப் பார்த்திருக்கணும். அங்கே இருந்து கிளம்பும் போது இந்தியாவுக்குக் கொண்டுபோக மான்கறி டின், பன்னிக்கறி டின் வாங்கிக்கிட்டேன். ஏன்னா, பிரான்ஸ்லயும் மான்கறி கிடைக்கிறது அபூர்வம் – அதுவும் காட்டு மான்கறி கிடைக்கிறது வாய்ப்பேயில்லை. ஆனா பாரிஸ்ல பச்சையான குதிரைக்கறி ரெண்டு இடத்தில கிடைக்கும். வாங்கி சமைக்கலாம். அதுவும் நல்லா இருக்கும். டேஸ்ட் என்னவோ மாட்டுக்கறி மாதிரித்தான் இருக்கும்.
ஞாயிற்றுகிழமை ராத்திரி 10 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்தேன். என்னோட ட்ரைன் நம்பர், ஆம்ஸ்டர்டாம் ட்ரைன் நம்பர் ரெண்டும் ஒரே நேரம், ஒரே பிளாட்பார்ம்ல வரும்னு ஸ்க்ரால் ஓட்டிட்டு இருந்துச்சு. நான் அது எப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். வண்டி வந்து நின்னது. யூரோ ரயில்ல TTR மாதிரி சில பேர் இருப்பாங்க. ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி திருப்பி உள்ள ஏறி வருவாங்க. அவர்கிட்டப் போய் பாரிஸ் ட்ரைன் இதுவான்னு கேட்டேன். முதல் 6 பெட்டி ஆம்ஸ்டர்டாம், அடுத்த ஆறு பாரிஸ் போகும்னு சொன்னாப்ள. என்னோட பொட்டிய தூக்கிட்டு பின்னாடிப் பெட்டிக்கு ஓடுனேன். சரியா உள்ள போறேன் கதவு மூடிருச்சு. என்னோட இடத்துக்குப் போய் படுத்துட்டேன்.
காலைல 7 மணிக்கு எழுந்தேன். TTR வந்தார், பத்து வருசத்துக்கு ஒரு தடவை நடக்குற மெயின்டனன்ஸ் வேலையால பாரிஸ் போக 10 மணியாகும்னு சொன்னாப்ள. அய்யயோ நான் பத்துமணிக்கு ஆபிஸ்ல இருக்கணுமே அப்படின்னேன். மன்னிச்சுக்கோங்க அப்பிடின்னு பலமுறை சொன்னார். அவர் ரூம்ல இருந்து கொஞ்சம் பிஸ்கட், சாக்லேட் குடுத்தாரு. தின்னுட்டு, 200 யூரோ மிச்சம் பண்றேன்னு என்னைய இந்தச் சிக்கல்ல மாட்டிவிட்டானே அந்த டிக்கெட் விக்கிற தம்பி அவனத் திட்டிட்டு, மறுபடி தூங்கிட்டேன். வேறென்ன செய்யுறது.
பத்துமணிக்கு கர்ட் டு நார்ட். மெத்ரோவை புடிச்சு சேட்டியோன் மன்ரோக் போய், பஸ் புடிச்சு ரூம் போய் அப்புறம் ஆபிஸ் போனப்போ மணி 11. நண்பர் எஸ், நான் காணாமப் போயிட்டேன்னு கதிகலங்கிப் போய்ட்டாப்ள.
அப்புறம் வேலைதான். தினசரி சாயங்காலம் பாரிஸச் சுத்துறது. மறுபடி வேலை.
நாங்க இந்தியா கிளம்புற நாள் வந்தது. நான், நண்பர் எஸ் அப்புறம் நண்பர் எம் மூணுபேரும் பாரிஸ்ல இருந்து ப்ரசெல்ஸ், அங்கேயிருந்து சென்னை வரணும். சனிக்கிழமைக் காலைல சாப்பிட்டு கிளம்பினோம். எடை செக் பண்ற இடத்துல ஆரம்பிச்சது சனி. என்னோடது ஆறு கிலோ அதிகம். போதுவா நான் சும்மா போயிட்டு சும்மா வாரதுதான் பழக்கம். ஆனால், ஏதோ ஒரு ஞாபகத்துல 5+3 லிட்டர் போர்டோ ஒயின். 2 கிலோ பாதாம், 3 கிலோ சாக்லேட், மான் , பன்றிக்கறினு வாங்கிக் குமிச்சுட்டேன். இது போக கிப்டா வந்த சாக்லேட் வேற பணம் 600 யூரோ கட்டணும்னு சொன்னதா ஞாபகம். இப்போ என்ன பண்றது?
மான், பன்றிக்கறி, ஒயின், கிப்ட் சாக்லேட் தவிர எதைவேனா இழக்கலாம். ஏன்னா இதெல்லாத்தையும் கொண்டு போயே ஆக ஒரு காரணம் இருந்தது. சாக்லேட் பாதி, 3 லிட்டர் ஒயின், 1 கிலோ பாதாம் எல்லாத்தையும் தூக்கிக் குப்பைக்கூடைல போட்டேன். இதையெல்லாம் வெளில எடுக்கும் போது என்னோட புத்தம் புது ஷூவ எடுத்து ஓரமா வச்சேன். நான் பொருளெல்லாம் எடுத்துக் குப்பைல போட்ட அடுத்த நிமிஷம் ஒரு ஆப்பிரிக்கர் எல்லாத்தையும் ஒரு தள்ளுவண்டில எடுத்து வச்சுக்கிட்டுப் போயிட்டே இருந்தாப்ள. திரும்பிப் பார்க்குறேன் ஷூவக் காணோம். எவனோ ஆட்டையப் போட்டுட்டான். ஆஹா அஹஆகஹா. போகட்டும்னு எடையைப் போட்டு, பொட்டிய உள்ளார தள்ளிட்டு ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் கௌண்டர் போனா நிக்கிறாய்ங்க ஒரு பெரிய க்யு.
மணி ஏழரை. எங்க ப்ளைட் 8.30க்கு. அதைப் பிடிச்சு வந்து ப்ரசெல்ஸ் ஏர்போர்ட்ல ஜெட் ஏர்வேஸ 10.45 க்குப் பிடிக்கணும். நிக்கிறவங்கள்ள பெரும்பாலும் கருப்பர்கள். எனக்கு ஏற்கனவே இதுபோல ஒரு அனுபவம் இருக்கு. ஆனா எஸ் மற்றும் எம்-க்குக் கிடையாது. என்னான்னா கருப்பர்கள் செக்யூரிட்டி முடிக்க வழக்கமா ஆகிறத விட மூணு மடங்கு நேரம் ஆகும். அவங்களோட உருவம் நம்மளைப்போல 2 மடங்கு, அதுனால உடை மூணு மடங்கு இருக்கும். ஒவ்வொருத்தரும் 2 கிலோ இரும்பு நகையப் போட்ருப்பாய்ங்க, அது மெட்டல் டிடெக்டர்ல கத்திகிட்டே இருக்கும், ஒவ்வொரு கத்துக்கும் உடம்போட எதோ ஒரு பகுதில இருந்து ஒவ்வொரு நகையா கழட்டுவாய்ங்க, ஒவ்வொருத்தரும் கைல எவ்வளவு எடை எடுத்துட்டுப் போகலாமோ அதுமாதிரி ரெண்டுமடங்கு கொண்டுட்டு வருவாய்ங்க, அதைக் கீழ போட சொன்னா, சண்டைதான் போடுவாய்ங்க, கடைசியா ஒன்னு – ஒவ்வொரு அம்மாவும் கொறஞ்சது ரெண்டு பிள்ளையாவது வச்சுருக்கும் – அந்தப் பிள்ளைகள் மேல உயிரையே வச்சுருப்பாய்ங்க. ஆனா அந்தப் பிள்ளைங்க சுத்திலும் இருக்க எல்லாரையும் உயிர வாங்கும். வெள்ளைக்காரப் பயவுள்ளைக மண்ணு மாதிரி இருக்கும்.
அடுத்து என்ன செய்யுறது - வரிசைல நிக்க வேண்டியதுதான். நாங்க போக வேண்டிய ப்ளைட் எங்க கண்ணு முன்னாடிப் பறந்து போயுடுச்சு. அதோ போகுதுல்ல அதுதான் நாம போகவேண்டிய ப்ளைட்னு சொன்னேன். அவ்வளவுதான். நம்ம மக்களோட புலம்பல் ஆரம்பிச்சது. ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் பாரிஸ்ல இருந்து தொடர்ந்து டவுன்பஸ் மாதிரி வண்டி விட்டுக்கிட்டே இருப்பாய்ங்க. அடுத்த வண்டில ஏத்தி ப்ரசெல்ஸ்ல இறக்குனாய்ங்க. மணி 11.15 AM. பியர்- A ல இருந்து பியர்-B வந்தப்போ மணி 11.30 AM. நேர ஜெட் ஏர்வேஸ் கவுன்ட்டர் போனோம், 10.45 AMக்கே வண்டி போயிடுச்சு. நீங்க எங்க பேசெஞ்ஜர் இல்ல தம்பிகளா, போயி ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபிசரப் பாருங்கன்னாங்க.
அங்கிருத்து ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபிஸ். ஒரே ஒரு பொண்ணு சிவனேன்னு உட்கார்ந்து இருந்தது. இது எங்களோட தப்பு இல்ல, நீங்க சரியான நேரத்துக்கு பாரிஸ்ல எங்கள ஏத்தி, இங்க கொண்டு வரல. அதுனால வேற ஏற்பாடு பண்ணும்மா அப்படின்னேன். அந்தப் புள்ளைக்குக் கொஞ்சோண்டு இங்கிலீஷ்தான் தெரியும் போல. தந்தி அடிச்சுக்கிட்டு இருந்துச்சு. சரின்னு சொல்லி நாளைக்குத்தான் உங்களை அனுப்ப முடியும். லண்டன் போயிட்டு அங்கேருந்து சென்னை போற மாதிரி ஏற்பாடு பண்றேன்னு என்கிட்ட சொன்னுச்சு. இங்கபாரு ஆத்தா, நாங்க காமன்வெல்த் சிட்டிசைங்க, என்கிட்ட செங்கன்தான் இருக்கு, பிரிட்டிஷ் விசாவோ, USA விசாவோ கிடையாது. அதுனால எங்கள நீ அங்க அனுப்பி ட்ரான்சிட் பண்ணுறது சாத்தியம் இல்லைன்னு சொன்னேன். அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். மூடிட்டு சொன்னத செய்யினு சொல்லுச்சு. அந்த புள்ளைக்கு என்கூட வந்த பயலுக சப்போர்ட். ஏங்க அவிங்களே போக சொல்றாய்ங்க நீங்க என் வில்லங்கம் பேசுறீங்க? சீக்கிரம் சென்னை போகணும், மாமனார், மாமியார், பொண்டாட்டியெல்லாம் ஏர்போர்ட் வந்துருவாங்க, என்ன செய்யிறது? blablabla.....
ஆள விடுங்கடா சாமிகளா. எனக்கு அம்மா, அப்பாவ விட்டா ஒருத்தரும் இல்லை, ஆனா ஒரு நாளைக்கு ரெண்டு தடவ, போன்ல நான் பேசலைன்னா எங்கம்மா கெளம்பி இங்கேயே வந்துருவாங்க. அதுனால நான் எப்போ போனாலும் ஒண்ணுதான்னு சொல்லிட்டேன். ஏர்போர்ட்-உள்ளேயே இருக்குற ஷெரட்டன் ஹோட்டல்ல ஆளுக்கொரு ரூம் குடுத்தாங்க. மறுபடி இமிக்ரேஷன் டு ஐரோப்பா – அந்த ஆபிசர் ஏன் வெளில போறீங்கனு கேட்டார். நாங்க எங்க கதைய சொன்ன உடனே, நான் இந்த ஏர்போர்ட்ல 20 வருசமா வேலை பார்க்குறேன், இதுவரை ஷெரட்டன் ஹோட்டல்ல தங்கினது கிடையாது. வாழ்த்துகள் அப்படின்னு சொன்னாப்ள. மிச்ச ஏர்போர்ட் ஆபீசர்களை ஒப்பிட்டா, ப்ரசெல்ஸ் ஆபீசர்கள் அருமையான நபர்கள் – ரிலாக்ஸா இருப்பாங்க. (அங்கே எதுக்குக் குண்டு வச்சானுக? )
ஷெரட்டன் – அருமையான ஹோட்டல். அன்னைக்கு நிலைமைல ரூம் இல்லாததால 650 யூரோ ரூம் ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியா. சாப்பாடு வேற தனி. எல்லாம் ப்ரீ. நான் அப்படியே ஒரு ரவுண்டு ப்ரசெல்ஸ் போகலாம்னு சொன்னேன். எஸ், எம்மும் என்னைப் பார்த்த பார்வைல- வேணாம்னு முடிவு பண்ணினேன். ஏர்போர்ட் முழுக்க சுத்துனேன். அப்புறம் ராத்திரி ஒரு முறை ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபீஸ் போய் உறுதி பண்ணினேன். காலைல எட்டு மணிக்கு நண்பர் எம் ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் மூலம் லண்டன், ஒன்பது மணிக்கு நானும், நண்பர் எஸ்சும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மூலம் லண்டன். அப்படித்தான் அவங்க ரிசெர்வ் பண்ணி வச்சு இருந்தாங்க.
காலைல நண்பர் எம் முதல்ல கிளம்பினார். டிக்கெட் வாங்கினார், உள்ளே போனார், காணாமலானார். அடுத்த அரை மணியில், நாங்கள் டிக்கெட் வாங்கினோம், பிரிட்டிஷ் ஏர்வேஸ் கவுன்ட்டர் போனோம், பாஸ்போர்ட்-விசா செக் பண்ணினார்கள், பொடனியில் அடித்து விரட்டினார்கள். நான் நேற்றுச் சொன்ன அதே காரணம். கலங்கிய கண்களுடன், பாவமன்னிப்பு சிவாஜி மாதிரி நண்பர் எஸ் ஒரு நடை நடந்து என்னுடன் ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் கவுன்ட்டர் வந்தார். ஊருக்குத் திரும்பிப் போகும் வாய்ப்பேயில்லைனு வேற என்கிட்டச் சொன்னார். கவலைப்படாதீங்க நம்மள மாதிரி ஆளையெல்லாம் இங்க வச்சுக்க மாட்டாய்ங்க - எப்படியும் வெரட்டி அடிசுருவாய்ங்க. கொஞ்சம் பொறுங்கனு சொன்னேன்.
நேரே பிசினெஸ் கிளாஸ் கவுன்ட்டர் போனேன் – அங்கே ஒரு பய நிற்கமாட்டான். என்னுடைய ஒட்டு மொத்தக் கோபத்தையும் காட்டினேன். நேற்றே இப்படித்தான் நடக்கும் என்று நான் சொன்னதையும், அதை மீறி நீங்க வெட்டி வேலை செஞ்சு வச்சிங்க. இருந்தாலும் எங்களைச் சென்னை அனுப்ப இன்னும் ஒரு வாய்ப்புத் தரேன், அதுலயும் சொதப்பினா கடுமையான சட்ட நடவடிக்கையை எடுப்பேன்னு சொன்னேன். அடுத்த அரைமணி நேரத்துல அபுதாபி போறதுக்கு என் கையில இரண்டு டிக்கெட் கொடுத்தாய்ங்க. உள்ள போன நண்பர் எம்க்கு ஏதாவது ஆச்சுன்னாலும் நீங்க சட்டப்படி எங்களைச் சந்திக்க வேண்டியது வரும்னு சொன்னேன். அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. அவர் இந்நேரம் லண்டன் போயிட்டு இருப்பார்னு சொன்னாய்ங்க. எங்க ப்ளைட் இன்னும் 40 நிமிசத்துல கெளம்பும், சீக்கிரம் போங்கனு சொன்னாய்ங்க.
எங்க கைல எதுவும் பொருள் இல்ல, அதுனால எல்லாம் உடனே கிளியர் பண்ணி உள்ள போனா, நாங்க போற வழில நண்பர் எம் - உள்ளார இருக்க ப்ரசெல்ஸ் கவுன்ட்டர்ல கதறிக்கிட்டு இருந்தாப்ள. ப்ளைட் உள்ளார இருந்து பொடனில அடிச்சு எறக்கி இருக்காய்ங்க. ஆப்பிரிக்கா ட்ரான்சிட் வராத மாதிரி ப்ளைட்ல கெளம்பி வாயான்னு சொல்லிட்டு நாங்க ப்ளைட் ஏறுனோம். அபுதாபி வந்தோம். அங்கே ஒரு பிரியாணி சாப்பிட்டதுக்கு அப்புறம் நம்ம ஊருக்கு வந்துட்டோம்னு தோணுச்சு.
அங்கே இருந்து சென்னை வந்தோம். நண்பர் எம் ப்ரசெல்ஸ்ல இருந்து நாலுமணிநேரம் கழிச்சுக் கிளம்பி, ம்யுனிக், அங்கே 6 மணிநேரம் ட்ரான்சிட். அங்கே இருந்து டெல்லி. டெல்லி ஏர்போர்ட்ல பொட்டிய அவங்களே சென்னை அனுப்புவாய்ங்கனு நெனைச்சு டொமஸ்டிக் வந்து, அவிங்ககிட்டக் கேட்டுட்டு, அவிங்க நீதான்யா எடுத்துக்கிட்டு வரணுனு சொல்லி, வண்டியப் புடிச்சு மறுபடி திரும்பப் போய் எடுத்துக்கிட்டு வந்து அதுனால ப்ளைட்ட விட்டு, அடுத்த ப்ளைட்ட புடிச்சு சென்னை வரும் போது ரெண்டு நாள் ஆயிடுச்சு.
ஒரு பயணத்துல எல்லாமே தப்பா நடக்க வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சுக்க இன்னொரு விஷயமும் நடந்தது.
இதெல்லாம் நடந்து ரெண்டு நாள்ல, என்னோட போட்டோ எல்லாத்தையும் ஸ்டோர் பண்ணி வச்சுருந்த என்னோட கம்ப்யூட்டர், பேக்கப் எடுத்து வச்சுருந்த கார்த்தியோட கம்ப்யூட்டர் எல்லாம் ஒரே நேரத்துல பார்மேட் ஆகி என்கிட்ட ஒரு போட்டோ கூட இல்லாம போச்சு. அதுனால என்ன? வேறெந்தப் பயணத்தை விடவும் இதோட நினைவு மட்டும் அப்படியே இருக்கு, வேறென்ன வேணும்?
No comments:
Post a Comment