என் வாசிப்பின் துவக்கம்:
என் அம்மா ஓர் ஆசிரியை. அவர் வாங்கித்தந்த சோவியத்
வெளியீடுகளில் இருந்து துவங்கியது என் வாசிப்பு. அவை யாவும் படக்கதைகள். இன்றும்கூட
ஞாபகத்தில் நிற்பவை. ஏதேனும் ஒரு பழைய புத்தகக்கடையைக் கண்டால் அதில் சோவியத்
புத்தகங்கள் இருக்கிறதா என்று பார்க்காமல் நான் நகர்வதில்லை. வீடு முழுக்க
நிறைந்து கிடக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள், அவற்றில் சொல்லப்பட்ட கதைகள் என்று
வாசிப்பை நோக்கி நான் வேகமாக் நகர்ந்தேன்.
என்னுடைய ஏழாம் வயதில் நூலகம் எனக்கு நேரடியாக அறிமுகம்
ஆனது. நூலகர் என் குடும்ப நண்பர் – குருசக்தி கணபதி. அடுத்த இருபது வருடம் அவர்
என்னுடைய ஊரின் நூலகத்தில் பணிபுரிந்தார். அவரை நான் இப்போதும் நன்றியுடன்
நினைவுகூர்கிறேன்.
நான் முதல் முதலாகப் படித்த புத்தகம் – ஒரு Applied
Psychology புத்தகம் – அதன் பெயர் மனோசக்தி. 1940களில் வெளியான புத்தகம்.
கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து என்னுடைய ஆராய்ச்சிக்கென
நான் தேர்ந்துகொண்ட துறை – குழந்தைகள் நரம்பியல், உளவியல் சிக்கல்கள், கற்றல்
திறன் மேம்பாடு மற்றும் அது சார்ந்த தகவலியம்.
முதல்முதலில் புத்தகங்களை அறிமுகம் செய்த என் பெற்றோர்
இப்படிப்பட்ட ஆராய்ச்சிக்குள் போகவேண்டும் என்ற குறிக்கோளுடன் என்னிடம் அந்தப்
புத்தகங்களைத் தரவில்லை. புத்தகங்கள் என்னையும், நான் புத்தகங்களையும்
தேர்ந்துகொண்டோம். இப்படித்தான் வாசிப்பு நம்மையறியாமல் நம்மை
ஒழுங்குபடுத்துகிறது.
பெற்றோர் வாசிக்காமல் ஒரு குழந்தை வாசிப்பது என்பது
விதையில்லாமல் ஒரு மரம் வளர வேண்டும் என்று நினைப்பதற்குச் சமம். ஒரு குழந்தைக்கு
வாசிப்பைப் பயிற்றுவிக்க மிகச் சிறந்த வழி – பெற்றோராகிய நீங்கள் வாசிப்பதும், அதைக்
குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்வதும்தான்.
கற்றலுக்கும் வாசிப்பிற்குமான உறவு:
நான் செவ்விந்தியக்கதைகளை மொழிபெயர்த்தபோது, அதில் ஒரு கதை
செவ்விந்தியர்களுக்கும் காட்டுப்புறாக்களும் இடையிலான உறவைச் சொல்கிறது. ஏன்
அந்தப் புறாக்களை யாரும் வேட்டையாடக்கூடாது? என்பதுதான் கதை. நான் அந்தப் புறாவைப்
பற்றிய மேலும் தகவல்களைச் சேகரித்தேன். அதன் பெயர் – Passenger Pigeon.
இந்தப்பெயர் ஒரு ஃபிரஞ்ச் வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வகைப் புறாக்கள் அமெரிக்கா
முழுவதும் லட்சக்கணக்கில் வாழ்ந்திருக்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகள்
செவ்விந்தியர்கள் அவற்றுடன் வாழிடத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். வெகுசில
நேரங்களில் அவற்றை வேட்டையாடியிருக்கிறார்கள். ஆனால் வெள்ளையர்கள் அமெரிக்காவைக்
கண்டுபிடித்து அங்கே நுழைந்த 400 வருடங்களில் அந்தப் புறாக்கள் ஒன்றுகூட மிச்சம்
இல்லை. 1914-ஆம் ஆண்டு கடைசி புறாவான மார்த்தா இறந்துபோனது. இதே கதைதான் அமெரிக்க
காட்டெருமைக்கும் நேர்ந்தது. இன்று எஞ்சி இருப்பது மிகச் சில.
கவனியுங்கள் – ஒரு கதை, மொழி, பண்பாடு, படையெடுப்பு,
சிந்தனை வகை, வரலாறு. அழிவு என்று பல இடங்களைத் தொட்டுச் செல்கிறது. இந்தத்
தகவல்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. பேச வைக்கின்றன. பிற உயிர்கள்
எவ்விதத்திலும் மனிதனுக்குக் குறைந்தவை அல்ல என்று உணர வைக்கின்றன. இதற்குப்
பெயர்தான் கல்வி. இன்றைய கல்வி – புறா என்றால் என்ன என்றே தெரியாத மாணவர்களை
உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
இன்னொரு அனுபவத்தைச் சொல்கிறேன்.
கடந்த ஆண்டின் மழையின்போது நான் என் வீட்டில் அமர்ந்து
வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் தெரு வழியே அருகில் இருந்த
ஏரிக்கு வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. அப்போது ஒரு பறவை – கடுஞ்சாம்பல் நிறத்துடன்,
மார்பில் வெள்ளைக்கோட்டுடன் புதருக்குள் இருந்து வெளியே வந்து தண்ணீரில் பூச்சி
பிடித்துவிட்டு பின் புதருக்குள் ஓடிவிட்டது. மழை ஓய்ந்த ஒரு மாலை நேரம், அது தன்
இரு குஞ்சுகளுடன் வெளியேறி வந்து அவற்றுக்கு உணவூட்ட ஆரம்பித்தது. நான் அந்தப்
பறவையின் அடையாளங்களை வைத்து அதன் பெயரை இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.
அதன் பெயர் – White breasted water hen. அது இங்கே
வாழ்கிறதென்றால் அதற்கு ஒரு தமிழ் பெயர் இருந்தே ஆகவேண்டும் இல்லையா? இணையத்தில்
தேடினேன். உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை. பின், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
நூல்களில் தேடினேன். புறநானூற்றில் இப்படி ஒரு பாடல் இருக்கிறது.
பெருநீர் மேவல் தண்ணடை
எருமை
இருமருப்பு உறழும்
நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின்
கோல்அணைக்,
கன்றுடை மரையாத் துஞ்சும்
சீறூர்க்
கோள்இவண் வேண்டேம், புரவே; நார்அரி
நனைமுதிர் சாடிநறவின்
வாழ்த்தித்,
துறைநனி கெழீஇக் கம்புள்
ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே, வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த
மார்பின்,
மடல்வன் போந்தையின், நிற்கு மோர்க்கே.
போருக்குப் போகவிருக்கும்
வீரர்களுக்கு அரசன் கள்ளும், விருந்தும் அளிக்கிறான். அப்போது வீரர்கள்
தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் – எப்படியும் நாம் வெற்றிபெறுவோம். அப்போது நம்முடைய
அரசன் நமக்கு வெகுமதியாக நிலங்களை வழங்குவான். அப்படி வழங்கும் ஊர்,
தண்ணீருக்குள்ளேயே அமிழ்ந்து கிடக்கும் எருமையின் கொம்பை ஒத்த பாசிப்பயற்றின்
தோட்டின் மேல் தன் கன்றோடு காட்டுமாடு உறங்கும் முல்லை நிலமாக இருந்தால், அதை
வேண்டாம் என மறுத்து, நீருக்கு அருகில் முட்டையிட்டு வாழும் கம்புள் (சம்பங்கோழி)
வாழும் மருதநிலத்து ஊர்களை வேண்டுவோம் என்கிறார்கள்.
ஆம். அந்தப் பறவையின்
பெயர் கம்புள் அல்லது சம்பங்கோழி.
மேலே உள்ள பாடல் நமக்கு
என்னவெல்லாம் சொல்லித்தருகிறது. 2000 ஆண்டுகளுக்குப் பின்னும் அந்தப் பறவை
மாறவில்லை. அது மருதநிலத்தில் வாழ்கிறது. அதற்குத் தெரியாது அந்த இடம் தற்போது
இரண்டரை கோடி ரூபாய் போகிறதென்று. அதற்குத் தெரியாது இன்னும் மூன்று மாதத்தில் அங்கே
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வரப்போகிறதென்று. நமக்குத் தெரியாது அது அந்தப்
பறவையின் வாழிடம் என்று.
இதுதான் கல்வி. இந்தக்
கல்வித்திட்டத்தில் நீங்கள் தோற்கும் வாய்ப்பே இல்லை.
ஒரு கதையை வாசித்து, அதை
இன்னொருவருக்குச் சொல்லும்போது அது வேறொரு பரிமாணத்தை அடைகிறது. மேலே உள்ள இரண்டு உதாரணங்களையும்
பாருங்கள் – உங்களுக்கே புரியும்.
ஒரு குழந்தையைப்
புரிந்துகொள்வதெல்லாம் பெற்றோரின் வேலை அல்ல. உங்கள் கனவுகளுக்குள் அவர்களை அடைக்காதீர்கள்.
அவர்களுக்கான வெளியைத் திறந்து வையுங்கள். அவர்கள் யார் என்று உங்களுக்குச்
சொல்லிச் செல்வார்கள். அவர்களுடன் பயணப்படுங்கள்.
சரி. யாரை வாசிப்பது?
புனைவில்:
அழ.வள்ளியப்பா (3-5
வயதுக் குழந்தைகளுக்கு) – பழனியப்பா பிரதர்ஸ், NCBH
வாண்டுமாமா (5-15 வயதுக்
குழந்தைகளுக்கு) – கவிதா பப்ளிகேஷன்ஸ்
முல்லை தங்கராசன் (5-15
வயதுக் குழந்தைகளுக்கு) – பாக்கெட் நாவல் அசோகன்
விழியன் (5-10 வயதுக்
குழந்தைகளுக்கு) – புக் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், வானம்
யெஸ்.பாலபாரதி (5-15
வயதுக் குழந்தைகளுக்கு) புக் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், வானம்
ஆயிஷா நடராஜன் (5-15
வயதுக் குழந்தைகளுக்கு) புக் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்
ஜெயமோகன் (15 வயதுக்
குழந்தைகளுக்கு) – பனிமனிதன் – கிழக்கு பதிப்பகம்
கல்கி (15 வயதுக்
குழந்தைகளுக்கு)
கி.ரா (5-15 வயதுக்
குழந்தைகளுக்கு) – அகரம்
எஸ்.ராமகிருஷ்ணன் (5-15
வயதுக் குழந்தைகளுக்கு) – உயிர்மை
யுமா வாசுகி (5-15 வயதுக்
குழந்தைகளுக்கு) - புக் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், NCBH, NBT
அபுனைவில்:
வாண்டுமாமா (5-15 வயதுக்
குழந்தைகளுக்கு) - கவிதா பப்ளிகேஷன்ஸ்
பிலோ இருதயநாத் (10-17
வயதுக் குழந்தைகளுக்கு) – வானதி பதிப்பகம்
மா.கிருஷ்ணன் (10-17
வயதுக் குழந்தைகளுக்கு) – காலச்சுவடு
தியடோர் பாஸ்கரன் (10-17
வயதுக் குழந்தைகளுக்கு) – உயிர்மை, காலச்சுவடு
கிருஷ்ணா டாவின்சி (10-17
வயதுக் குழந்தைகளுக்கு) – உயிர்மை – சூழலியல் கட்டுரைகள்
பெரியசாமி தூரன் (10-17
வயதுக் குழந்தைகளுக்கு) – கலைக்களஞ்சியம் – தமிழ்நாடு அரசு
முன்னோடிகள் நிறையப்பேர்
இருக்கிறார்கள். அவர்களின் புத்தகங்கள் கிடைப்பதில்லை. நான் சிறுவயதில் படித்த தமிழ்
புத்தகங்கள் இப்போது எங்குமே இல்லை. இன்றைய நிலையில் பிலோ இருதயநாத் புத்தகங்கள்
கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
இப்போது சிறார்
இலக்கியத்தில் இயங்கிவருவோரில், மிகமிக முக்கியமானவர் என்று யுமாவாசுகியைச்
சொல்வேன். கிட்டத்தட்ட ஒரு அரசு நிறுவனம் செய்யவேண்டிய வேலையை அவர் ஒரே நபராகச்
செய்து வந்திருக்கிறார்/வருகிறார். எங்களைப்போன்ற நபர்களுக்கு பெஞ்ச் மார்க் ஒன்று
வேண்டும் அல்லவா? அப்படி ஒன்றை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றால் யோசிக்கவே
வேண்டாம் - அது யூமாவாசுகியின் படைப்புகள்தான்.
நீங்கள் எங்காவது
யூமாவாசுகி என்ற பெயருடன் புத்தகம் இருந்தால், யோசிக்கவே வேண்டாம். உங்கள் குழந்தை
வாசிக்க நீங்கள் அதை வாங்கிவிடலாம். எழுத்தாளர்கள் இடையே அவருடைய மேற்கோள் ஒன்று மிகப்
பிரசித்தம் – “தோழர், வாசிக்காம எழுத வராதீங்க.” மிகமென்மையான குரலில் பேசும் கறாரான
விமர்சகர்.
யெஸ்.பாலபாரதி – சிறப்புக்குழந்தைகள்
குறித்த செயல்பாட்டாளர், எழுத்தாளர், ஊடகவியலாளர், கல்வி சார்ந்த ஊடகப்பணியில் இருப்பவர்.
ஆமை காட்டிய அற்புத உலகம் மற்றும் சுண்டைக்காய் இளவரசன் என்ற இரு புத்தகங்களை
எழுதியிருக்கிறார். இரண்டுமே மிகக்குறுகிய காலத்தில் இரண்டாம் பதிப்பைக்
கண்டிருக்கின்றன.
முல்லை தங்கராசன் –
மிகச்சிறந்த படைப்பாளி. இவருடைய புத்தகங்களுக்கான பதிப்புரிமையை பாக்கெட் நாவல்
அசோகன் வாங்கியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட எனக்கு மிக்க மகிழ்ச்சி. திரு.அசோகன்
குறைந்த விலையில் இலக்கியப்புத்தகங்களை வெளியிட்டு நிறையப் பேரிடம் கொண்டு சேர்க்கக்கூடியவர்.
(உதா: புளியமரத்தின் கதை, ஸீரோ டிகிரி) விரைவில் இதற்கான அறிவிப்புகள்
வெளியிடப்படும் என்று தெரிகிறது.
வாண்டுமாமா – புத்தகங்களை
வாங்குங்கள். வேறென்ன சொல்ல? புனைவுகள், அபுனைவுகள் தவிரவும், கௌசிகனாக அவர்
தன்னைப்பற்றி எழுதியிருக்கும் புத்தகம் – மிக முக்கியமான ஆவணம்.
கல்கி, தமிழ்வாணன் –
பதின் பருவத்தில் இருப்போர் வாசிக்க நம்மிடம் நிறையப் புத்தகங்கள் இல்லை. இந்த
இடைவெளியை நிறைக்க இன்றும் இவர்கள் தேவைப்படுகிறார்கள்.
எஸ்.ராமகிருஷ்ணன் –
குழந்தைகளுக்கான புத்தகங்கள் நிறைய எழுதியிருக்கிறார். கதை சொல்லும் நிகழ்வுகள்
நடத்துகிறார். வாய்ப்பிருப்பின், தவறாமல் கலந்து கொள்ளுங்கள். நிறைய புதுப்புத்தகங்களை
அறிமுகம் செய்வார்.
ஜெயமோகன் – பனி மனிதன் –
குழந்தைகள், பதின் பருவத்தினருக்காக என்று தமிழில் எழுதப்பட்ட பெரிய நாவல். பெரும்
வாசிப்புகளின் துவக்கப்புள்ளியாக இதைச் சொல்லலாம்.
வாசிப்பு நுகர்வைக்
கூட்டுவதில் வேட்டை இலக்கியங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. அவ்வகையில்,
குமாவும் புலிகள் – ஜிம் கார்பெட் (காலச்சுவடு), எனது இந்தியா - ஜிம் கார்பெட் (காலச்சுவடு),
ஏலகிரியில் சிறுத்தைவேட்டை – ஆண்டர்சன் - (பாரதி புத்தகாலயம்), ஒரு
வேட்டைக்காரனின் நினைவலைகள்(NBT) – கேடம்பாடி ஜட்டப்ப ராய் முக்கியமான நூல்கள்.
வானம் பதிப்பகம் கொண்டு
வந்திருக்கும் உலக கிளாசிக்குகளின் சுருக்க வடிவம், குழந்தைகள் உலக
இலக்கியத்திற்குள் நுழைய நல்லதொரு தொடக்கமாக அமையும்.
அபுனைவுகளில் தியடோர்
பாஸ்கரன் எழுதியிருக்கும் அத்தனை சூழலியல் புத்தகங்களும் மிக முக்கியமானவை.
வாங்க வேண்டிய
புத்தகங்கள் சில:
கிரா – தாத்தா சொன்ன
கதைகள் – அகரம்
தமிழ்வாணன் – சங்கர்லால்
துப்பறிகிறார் – (அனைத்தும்) – மணிமேகலை பிரசுரம்
ஆயிஷா - புக் ஃபார்
சில்ரன் – ஆயிஷா நடராஜன்
பென்சில்களின் அட்டகாசம்
- புக் ஃபார் சில்ரன் – விழியன்
எனது கணவரும் ஏனைய
விலங்குகளும் - புக் ஃபார் சில்ரன் - ஜானகி லெனின்
குழந்தைகளுக்கு லெனின்
கதை – ஆதி.வள்ளியப்பன் - புக் ஃபார் சில்ரன்
ஆங்கிலத்தில்,
Andersen Hans Christian Stories
Robinson
crusoe
Treasure Island
Swiss family
robinson
Around the world in 80
days
Alice in
wonderland
Gulliver's
travels
Heiti
Jungle book
The call of wild
James herriot
books
The
Lion, the Witch and the Wardrobe
Moby-Dick
The Old
Man and the Sea
The Jim
corbett omnibus
Kenneth
anderson omnibus
செயல்பாட்டாளர்கள்:
பவா செல்லத்துரை – எழுத்தாளர்
- இவருடைய “கதை சொல்லும் நிகழ்வு” தமிழ் இலக்கிய உலகின் முக்கிய பண்பாட்டு
செயல்பாடு. ஒரு கதையை யாராவது சொல்லி கேட்க வேண்டும் என்றால் – பவா'தான் என் முதல்
விருப்பத்தேர்வு. கதைகளை நிகழ்த்திக்காட்டுவார் – ஒரு தேர்ந்த மந்திரவாதியைபோல.
இதில் 10% உங்களால் செய்ய முடிந்தால் உங்கள் குழந்தைக்கு வாசிப்பின் ருசியை
நீங்கள் திகட்டத் திகட்ட வழங்கிவிட முடியும்.
இனியன் – தொடர்ந்து சிறார்களுக்கான
நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார். கதை சொல்வது, நாடகம் போடுவது, புத்தகங்களை வசிக்க
வைப்பது என்று எப்போதும் குழந்தைகள் உலகத்திலேயே வாழும் செயல்பாட்டாளர். ஃபேஸ்புக்கில்
இவரைப் பின்தொடர்ந்தால், குழந்தைகளுக்கான நிகழ்வுகள் பற்றி அறியலாம். விருப்பமும்
வாய்ப்புகளும் இருப்பின், உங்கள் ஊரிலேயே அத்தகைய நிகழ்வுகளை ஒருங்கிணைக்க
உதவுவார்.
பிற இதழ்கள்:
புத்தகம் பேசுது –
வண்ணநதி – சிறார் இதழ்
மின்மினி
பெரியார் பிஞ்சு
தும்பி
சுட்டி விகடன்
லயன் காமிக்ஸ்
தமிழ் ஹிந்து – மாயா
பஜார்
என்னைத் தொடர்ந்து
ஊக்குவிக்கும் பாரதி புத்தகாலயம் – தோழர்கள் நாகராஜ், ப.கு.ராஜன் ஆகியோருக்கு
நன்றியும் அன்பும்.
22/07/2017
புத்தகக்கண்காட்சியில் நிகழ்ந்த எழுத்தாளர் முற்றம் நிகழ்வில் நான் பேசியவற்றின்
தொகுப்பு.